நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 19
19
தமிழரசி சட்டென எழுந்தாள். அவள் பஸ்சில் இருந்து இறங்கிய வேகத்தில், பஸ் படிக்கட்டில் ஏறிய ஒருத்தி மேல் இடித்துக் கொண்டாள். வேகமாய் கீழே இறங்கியதால், பஸ் கதவின் இடுக்கில் சிக்கிய அவள் முந்தானை கசங்கியும், நைந்தும், அவள் மனதைப்போல் கிழிந்தும், அவளிடம் மீண்டு வந்தது.
எதிர் திசை பஸ்ஸருகே வந்து நின்ற தமிழரசி, ‘வினை தீர்த்தான்’ என்று அவனை விளிக்கலாமா என்று நினைத்தாள். ‘இவனா...வினை தீர்த்தான்? இல்லை, இவன் தீர்த்தவன் அல்ல, கொடுத்தவன்,’ அவனாக தன்னைப் பார்க்கட்டும் என்று நினைத்து, அவன் பார்வையில் படும்படி நிற்கலாமா என்று நினைத்தவள், அப்படி நிற்கவில்லை; இவனுக்குப் பார்வை கிடைத்திருப்பதே, மற்றவர்களை எரிப்பதற்குத்தான், ஏறிட்டுப் பார்க்க அல்ல. இவன் கண்ணில் உள்ள ஒளி, உஷ்ணத்தால் ஏற்பட்டது. ஒளியில் ஏற்பட்ட உஷ்ணமல்ல.
வினை தீர்த்தான் பஸ்ஸில் ஏறி இறங்கி, உருட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பால் கேனும், ஒரு கலாவதி, ஒரு சித்தப்பா, ஒரு தாமோதரன், ஒரு தமிழரசி!
‘தமிழரசிக்கு, முதுகைக் காட்டிக் கொண்டிருந்த வினைதீர்த்தான், வேலை முடிந்ததும், தலையில் கட்டிய முண்டாசை எடுத்து உதறி விட்டு, உடம்பெங்கும் பொங்கிய வியர்வையைத் துடைத்தபடியே திரும்பினான். திரும்பியவன், மேலும் திரும்ப முடியாமல் நின்றான், பார்வையில் பட்டது தமிழரசிதானா என்று வாய்பிளக்க அவளைப் பார்த்தான். பிறகு தான் இந்த தமிழரசியின் சித்தப்பா மகனா என்று தன்னைத்தானே சோதனைப் பார்வையால் வீசிக் கொண்டான். தன்னை அறியாமலே அப்பாவி மாணவன் போல் தார் பாய்ந்த வேட்டியை இறக்கிக் கொண்டான்.
அவளை நோக்கி, “தமிழு!” என்று சொல்லியபடியே இரண்டடி நடந்தவன், அவள் பார்வைத் தீயில் முகம் எரிந்து சாம்பலானவன் போல், கவிழ்ந்த தலையில் தும்பும் துரும்புமாய், பஞ்சுகளுமாய் இருந்த தலைமுடி சாட்சியம் கூறியது. அவன் கைகளைப் பிசைந்து, கால் பாதங்களைத் தேய்த்தபடி அவளை அரைக் கண்ணால் பார்த்த போது, தமிழரசி அவனை நோக்கி நடந்தாள். அவள் நெருங்க நெருங்க அவன், மனநெடி தாங்க முடியாமல் குப்புறச் சாயப்போனான். தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உடம்பை பின்னால் இழுத்ததால் பின்னால் விழப்போனான். வினை தீர்த்தானை வெறுத்தும், வெகுண்டும், சிலிர்த்தும், சினந்தும் பல்வேறு பார்வைகளால் பாய்ந்த தமிழரசி, இறுதியில் அரை நிமிடம் செலவழித்து உதடுகளைப் பிரித்து “நீ மனிதன் தானாப்பா?” என்றாள், ஒரு வினாடிக்குள்.
வினை தீர்த்தான் பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்தான். பெருவிரலால் தரையில் வட்டம் போட்டான். தமிழரசி கேள்வியை தொடர்ந்தாள்.
“ஊர்ல எத்தனையோ பேரை இப்படிக் கேட்ட ஒன்னைப் பார்த்துத் தான் இந்தக் கேள்வியை கேட்கிறேன். ஒன்னோட பெரியப்பா மகள் என்கிற உரிமையிலயோ, கடமையிலயோ கேட்கல. ஒன்னால நாசமாய்ப் போன ஒரு பெண் என்கிற நிலைமையில் கேட்கிறேன். சொல்லு. ஒருவேளை ஒரு காலத்துல மனிதனாய் இருந்து, அப்புறம் மிருகமாய் போனதால, ஒனக்கு பேச்சும் போயிட்டா? நீ மிருகமில்லன்னா, எனக்குப் பதில் சொல்லு. நீ மனுஷன் தானா?”
வினை தீர்த்தான் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான் நாசமாய் போயிட்டதாய் சொல்றாளே; எதையோ கேட்கப் போனவன், கண்களை மூடியபடியே கைகள் இரண்டையும் கோர்த்து, அவற்றைப் பிடரிக்குப் பின்புறமாய் கொண்டு போய் அதில் தலையைச் சாய்த்தான். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். தமிழரசி கேட்க வேண்டியதை, கேட்கத் தகாதபடி கேட்டாள்.“சொல்லு, பொன்மணியை இன்னும் வச்சுருக்கியா, இல்ல யார்கிட்டேயும் வித்துட்டியா?”
வினை தீர்த்தான், தமிழரசியை நேருக்கு நேராய் பார்க்கப் போனான். -முடியவில்லை. அவள் ஏன் தன் கண்களுக்குக் கோடு கோடாய் தெரிகிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. கண்களில் ஏன் அவள் கரைந்து போகிறாள் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. பார்த்தவனின் கண்களை மறைத்த நீர், பார்க்கப்பட்டவளை கோடு கோடாக்கி, கேடு கேடாக்கி விட்டது. புரியாமலே, அவன் தலை கால் புரியாமல் ஓடினான். அவளைத் திரும்பிப் பார்க்காமலே, தென்புறமாக ஓடினான்.
குழம்பிப்போன தமிழரசி குமைந்தாள். ஏன் ஓடுகிறான்? ஒரு வேளை பொன்மணியை நான் சொன்னது மாதிரியே, அய்யோ ...
தமிழரசி, வினை தீர்த்தான் போன திசையைப் பார்த்து ஓடினாள். வெட்டவெளிக்குள் வந்தவள், அவன் எந்தப் பக்கமும் இல்லாதது கண்டு திகைத்தாள். இதற்குள் அவன் ஓடி முடித்து, அந்த நிலப்பரப்பைக் கடந்திருக்க முடியாதே என்று நாலா பக்கமும் திரும்பியபோது, பஸ் நிலையத்தின் புறமுதுகுப் பகுதியைப் பார்த்தாள்.
வினை தீர்த்தான், கூனிக் குறுகி, குழந்தை போல் ஏங்கி ஏங்கி, அழுது கொண்டிருந்தான். தலையை அவ்வப் போது அடித்துக் கொண்டான், தமிழரசி தாயானாள். படபடப்போடும், பரபரப்போடும் ஓடிப்போய் நின்றாள். அப்படியும் ஆவேசம் தணியாமல், “பொன்மணியை எங்கே?” என்றாள். வினை தீர்த்தான் அவளை ஏறிட்டு நோக்கினான். பிறகு “என்கிட்டேயே நல்லாத்தான் இருக்காள்” என்றான். அவனே பேசட்டும் என்பது போல் தமிழரசி பேசாது நின்றாள். இரண்டு நிமிட மவுனத்தில் கண்ணீரைக் கரைத்த வினை தீர்த்தான், அவளைப் பார்க்காமலே பஸ் நிலைய தூணைப் பார்த்தபடியே கேவிக் கேவிப் பேசினான்.
“ஒன் காலுல கிடக்கிற செருப்பைக் கழட்டி என்னை நீ அடித்தாலும் தகும். அவ்வளவு பெரிய பாவத்த செய்துட்டேன். நான் அயோக்கியன்தான். அற்பன்தான். நான் செய்தது நம்பிக்கை துரோகந்தான். இவ்வளவையும் தெரிஞ்சுகிட்டுத்தான் செய்தேன். ஆனால் ஒண்ணு; நான் மனுஷன் என்கிறதாலதான் செய்தேன். என் அப்பாவும், தங்கச்சியும், எல்லாருக்கும் மேலே... என்னோட தமிழும் துடிச்சுப் போவாங்கன்னு தெரிஞ்சுதான் செய்திட்டேன், நீ இனிமேல் என்ன பண்ணனுமின்னாலும் பண்ணு. அதுக்கு முன்னால ஒரே ஒரு பிச்சைக் கேக்கேன். அப்பாவும், தங்கச்சியும் ஊர்ல எப்டி இருக்காங்கன்னு கூட சொல்லாண்டாம். நீ நாசமாய் போயிட்டதாய் சொன்னியே, அதையாவது என்கிட்ட சொல்லு. ஒனக்கு ஒண்ணுன்னா, அது எனக்கும், பொன்மணிக்கும், அப்பாவுக்கும், கலாவதிக்கும், ரெட்டிப்பாயும் மொத்தமாயும் வந்ததாய் அர்த்தம். தமிழு, என் கூடப் பிறவா தங்கச்சியே! என் பத்தரைமாத்துத் தங்கமே! சொந்த அண்ணனைவிட இந்த அண்ணனை தலையில வச்சு கூத்தாடுன என் தமிழு! சொல்லும்மா. ஒன்கிட்ட, தாமு மச்சான் பேசலியா? அண்ணன்னு நினைச்சால், பேச்சு வராது. இப்போ என்னை அக்காள்னு நினைச்சு சொல்லும்மா.”
வினைதீர்த்தான், மீண்டும் ஏங்கி ஏங்கி அழுதான், தமிழரசியும், தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இரு துருவ உணர்வுகளுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேர இடைவெளியில் வினை தீர்த்தான் துண்டாலும், தமிழரசி முந்தானையாலும் துடைத்துக் கொண்டார்கள். இதற்குள் பஸ் ஹாரன் சத்த அலைகளுக்கிடையே, அங்கிங்குமாய் ஓடிக் களைத்த அறைத் தோழி, அவர்கள் பக்கம் ஓடிவந்து மூச்சு விட்டாள். வினை தீர்த்
தானைப் பார்த்துப் பயந்தவள்போல், தமிழரசியின் கையைப்பிடித்துக் கொண்டாள்.
‘ என்னடி இது? ஒன் ஒருத்திக்காக நாற்பது பேர் காத்து இருக்காங்க. எதைத் திருடுனாலும் நேரத்தைத் திருடப்படாது. எதை சமமாய் பங்கிட முடியாட்டாலும் நேரத்தையாவது சமமாய் பங்கிடணுமுன்னு மேடையின் முன்னால அறுக்கிற பேச்சாளரை இடிச்சுப் பேசுற நீயா இப்படி?’ என்றாள்.
தமிழரசி, சிறிது பரபரப்பாகி பத்... இதுதான் வினை தீர்த்தான்...’ என்றாள்.
பத்மா, வினைதீர்த்தானை இழிவாகப் பார்த்தாள். ஐ ஸீ...’ என்று சொல்லியபடியே, அவனை நகர்ந்து நகர்ந்து பார்த்தாள். பிறகு “ஏய்யா பெரிய மனுஷா, ஒனக்கு நீ குழி வெட்டிக்கோ, வேண்டாங்கல. பட், அடுத்தவங்களுக்கு ஏய்யா வெட்டுற? ஒன்னால இவள் பட்ட... வாயை மூடாதடி இந்த மாதிரி தராதரம்...’
பத்மாவால் மேலும் பேச முடியவில்லை. தமிழரசி அவள் வாயை, பிரஷ்ஷர் குக்கர் மாதிரி கெட்டியாக மூடிக் கொண்டாள். பிறகு கையை எடுத்து பத்மாவின் அன்பில் கட்டுண்டு, அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள். கழுத்தில் ஆரம் போல் விழுந்த நீர், தன் கழுத்தில் பட, நிமிர்ந்த பத்மா, தமிழரசியின் கண்களைத் துடைத்தாள். இதற்குள் பஸ்சில் இருந்த பெண்கள் தமிழரசியைப் பார்க்க நாலாபக்கமும் சிதறி ஓடி, அவர்களும் அங்கே வந்து கூடிவிட்டார்கள். சில பெண்கள், திரைப்படங்கள் பலவற்றில் வரும் பிளாக் மெயில் வில்லனாக வினைதீர்த்தானை கற்பித்து, அந்த முரடனிடம் தமிழரசி எப்படியோ ஒரு வகையில் மாட்டிக் கொண்டிருக்கலாம் என்றும் பாவித்துக் கொண்டார்கள். தமிழரசி, பொதுப்படையாகப் பேசினாள்.
“இவர் என் சொந்த சித்தப்பா மகன். இவரோடு குடும்ப விவகாரங்களைப் பேசவேண்டியதிருக்கு. நீங்க போங்க, நான் பஸ்ல வந்துடுறேன்!’’
ஒரு முன்னாள் மாணவி, தனக்குள்ளே தமிழரசிக்காய் பயந்து ‘ஒங்களுக்காக எவ்வளவு நேரமானாலும் நாங்க காத்திருக்கோம் மேடம். தனியா வரவேண்டாம், பிளீஸ் மேடம்!’ என்றாள்.
நோ, தேங்க்ஸ்! இவர் என் கஸின் பிரதர்தான். நீங்க போங்க. எனக்கு எதுவும் ஆகல. ஆகாது. ஏய் பத்மா! அவங்களுக்குச் சொல்லேண்டி.’’
“சொல்றேன். முதல்ல நானும் ஒன்னோட இருக்கணுமான்னு சொல்லு.’
வேண்டாம். நீயும் அவங்களோட போ. நான் பின்னாலேயே வந்துடுறேன்.” -
எல்லாப் பெண்களும் தயங்கியபோது, தமிழரசி சாலையை நோக்கி நடந்தாள். எல்லோரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள், பஸ்சுக்குள் ஏறி கையோடு கொண்டு வந்திருந்த சின்னஞ்சிறு சூட்கேசை எடுத்துக்கொண்டு இறங்கினாள். பிறகு தோழிகளைப் பார்த்துக் கையாட்டினாள். அவர்கள் பதிலுக்குக் கைகளை ஆட்டியபோது டிரைவர் கீரை ஆட்டினார். பஸ் கிழக்கு நோக்கியும், தமிழரசியும் வினைதீர்த்தானும், மேற்கு நோக்கியும் பாய்ந்து நடந்தார்கள்.
பிச்சாட்டுர் ஏரிக்கரையில், வினைதீர்த்தானும், தமிழரசியும் மவுனமாக நடந்தார்கள். வினைதீர்த்தான் அவளிடம் பேசப்போனான். ஆனால் அவள் முகம் இறுகியிருப்பதைப் பார்த்ததும் உள்ளடங்கிப் போனான். அவளோ அந்த ஏரியின் அடித்தளத்தையே பார்த்தபடி நடந்தாள். குறுக்கும் நெடுக்குமாய் ஆங்காங்கே வெள்ளைக் கோடுகள் போன்ற படிக்கட்டுகளால் அகல நெடுகத்
தோன்றும் இந்தக் கரையைத் தொலைவில் பார்த்து, ஏதோ அணைக்கட்டு என்று நினைத்தாள். கரைக்கு வந்த பிறகு தான், முன் பக்கமும், பக்க பக்கங்களும் மொட்டையாய்கட்டாந்தரையாய் போன ஏரி என்று புரிந்தாள். வாழ்க்கை என்பதும் இந்த ஏரிக்கரை மாதிரி தானே? எதிர்பார்ப்பின் வெளிமுனை இந்த ஏரிக்கரையென்றால், அதன் உள்முனைதான் அனுபவம் என்ற கொதிதரையோ? இன்பம் என்பது, அனுபவிக்காதவனுக்கு நீர்த்தேக்கம் மாதிரி. அனுபவித்தவனுக்கு அதன் கரை மாதிரியோ? இந்த உதாரணம் கூட சரியல்ல. என் காதலை மட்டுமே இதனோடு ஒப்பிடலாம்!
இருவரும் மறுமையின் ஞானபீடம் போல் தோன்றிய ஒரு ஆலய மடத்தைத் தாண்டி, இம்மையின் ஞான வாசஸ்தலமான ஒரு சாராயக் கடையைக் கடந்து, ஊரின் வால் பகுதிக்கு வந்தார்கள். சந்து பொந்துகளால் சலனப் பட்ட தெருவில் நடந்து, குடிசைப் பகுதிக்குள் வந்தார்கள். ஆங்காங்கே மக்கள், அந்தக காலத்து மணிப்பிரவாள தமிழ் நடைபோல், தெலுங்கையும், தமிழையும் கலந்து, குதப்பிப் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழரசி, ஊரில் நடந்தவற்றை வினைதீர்த்தானிடம் சொல்லலாமா வேண்டாமா என்று வழி நெடுக சிந்தித்தபடியே நடந்தாள்.
குடிசைகளிலேயே படு குடிசை ஒன்றில், அடுப்புக்குள் கண்ணிர் புகை விட்ட நெருப்பை ஊதிக் கொண்டிருந்த பொன்மணி, காலடிச் சத்தம் கேட்டுக் கண்களைத் துடைத்தபடி எழுந்தாள். தமிழரசியின் கண்கள், அவளை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும்போதே, “அண்ணியா? அடிடா சக்கே!’ என்று சொன்னபடியே, தமிழரசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் தோளில், தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
பிறகு அவளிடமிருந்து மெல்ல விலகி, “ஏன் குத்துக்கல் மாதிரி நிக்கீங்க? நாற்காலியை எடும்’ என்று வினை
தீர்த்தானை அதட்டினாள். தமிழரசி, பொன்மணியை மலைத்துப் பார்த்தாள். மயங்கிப் பார்த்தாள். அவள் முகத்தில் எந்த குற்ற உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊருக்குச் செல்லும்போதெல்லாம் தன்னை முன்பு எப்படிப் பார்ப்பாளோ, அதே மாதிரி, ஈரப்பசை உதடுகள், புன்னகையால் பிரிக்கப்பட்ட பொங்கல் பானை கண்களோடே, தன்னைப் பார்ப்பவளை, தமிழரசியால் மேலும் வெறுக்க முடியவில்லை. இதழோரம் நகரப்போன புன்னகையை, வலுக்கட்டாயமாகக் கடித்தாள்.
பொன்மணியோ, அடுப்போடு போராடினாள். காணாமல் கண்டவளுடன் பேச முடியாது என்று நினைத்து, அடுப்பு விறகை வெளியே இழுத்து, அனல் கங்கை காலால் மிதித்தாள். இதற்குள், முக்காலியோடு வந்து நின்ற வினைதீர்த்தானிடம் இருந்து அதைப் பிடுங்கி, பள்ளமும் மேடுமற்ற சமதளப் பரப்பைத் தேடிக் கண்டுபிடித்து முக்காலியை அதில் போட்டுவிட்டு, தமிழரசியை கட்டிப் பிடித்துக் குண்டுக்கட்டாய் தூக்கி அதில் உட்கார வைத்தாள்.
பிறகு அண்ணி முகத்தைப் பார்த்தால், வயிறுல பசி தெரியுது. சீக்கிரமாய் ஒரு மசால் தோசையும், சுடச்சுட மசால் வடையும் வாங்கிட்டு வாங்க’’ என்றாள். அவன் சிறிது நகர்ந்தான்.
பிறகு ‘தமிழு, நீ வாரது பொன்னுக்குத் தெரியாது. அதனால் நான் சொல்லிக் கொடுத்து, அவள் எதையும் சொல்ல முடியாது. எந்த சந்தர்ப்பத்துல இது நடந்ததுன்னு அவள் கிட்டயே கேளு,’’ என்று பயபக்தியோடு சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.
முக்காலியில் உட்கார்ந்த தமிழரசியையே, சிறிது நேரம் லயித்துப் பார்த்த பொன்மணி, திடீரென்று அவள் மீது பாய்ந்து, அவள் கன்னங்களில் மாறிமாறி முத்த,மிட்டாள். மரக்கிளைபோல் கிடந்த தமிழரசியின் கரங்கள்
இரண்டையும், தன் முதுகைச் சுற்றிப் போட்டபடியே “ஊர்ல எல்லாரும் சவுக்கியமா அண்ணி?’ என்றாள். பிறகு, நீங்க ஏன் ஆளே அடையாளம் தெரியாம போயிட்டீங்க?’ என்று சொல்லிக் கொண்டே, தமிழின் கால்மாட்டில் உட்கார்ந்தாள். தன் மோவாயை, அவள் மடியில் போட்டபடியே கனவில் பேசுபவள் போல் பேசினாள்.
“நீங்க பேசாமல் இருக்கதுல இருந்தே, ஒங்க கோபம் புரியுது அண்ணி. அதே சமயம் ஊர்லயும், சொந்தக் காரங்க மத்தியிலயும் ஒரு வாரம் நடக்கிற அமளிக்குப் பயந்து, எந்த பெண்ணும் தன்னோட இஷ்டத்துக்கு விரோதமான கல்யாணத்துக்கு சம்மதிக்கதை விட, அவள் தூக்குப் போட்டு சாகலாம். நான் என்ன அண்ணி செய்ய முடியும்? எப்படியோ, இவரு மேல ஒரு இது வச்சிட்டேன். எனக்கு கல்யாணமுன்னு பேச்சு அடிபட்ட பிறகுதான், இவர் இல்லாமல் என்னால வாழ முடியாதுன்னு எனக்கே தெரிஞ்சுது. ஒங்களால என் கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு சொன்னதும், இவர் கிட்ட ஒடிப் போயிடலாமுன்னு சொன்னேன். ஒடனே, இந்த மரக் கட்டை, ஒனக்கும், எனக்கும் என்ன பிள்ளே சம்பந்த முன்னு கூசாம சொல்விச்சுது. என் தலையில இது குட்டுன குட்டை அம்பலப்படுத் துனால், இந்தப் பைத்தியக்கார மனுஷர் சும்மா விகற்பம் இல்லாமல் குட்டுனேன்’னு சத்யம் போட்டாரு. என்னை குழந்தை மாதிரி நினைச் சேன்னாரு அப்போ ஏய்யா எனக்கு முத்தம் கொடுக்கத் தோணல? இதுல இருந்தே நான் வயசுப் பொண்ணுன்னு தெரிஞ்சுக்கும் போது, தலையில ஏன் கை போட்டீர்னு திருப்பிக் கேட்டேன்?
‘ஏன் அண்ணி அப்டி பாக்கீங்க? நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது, முத்துமாரிப் பாட்டி, நான் கன்னத்துல “கன்னம்’ போட்டதைச் சொன்னதும், நான் ஒடுங்கிப் போயிட்டேனேன்னு கேட்காமல் கேட்கிறீங்களா? இவரு
எப்படில்லாம் என்கிட்ட நடக்கணுமுன்னு நினைச்சேனோ, அதையே நடந்ததாய் பாட்டிகிட்டே ரசிச்சு சொன்னேன். அவள் அதையே திருப்பிச் சொன்னாள். அவ்வளவு தான். சரி, நடக்காத கதையை விட்டுட்டு, நடந்த கதைக்கு வருவோம். ஒங்க அண்ணன் முடியாதுன்னார். உடனே இடுப்புல இருந்த ஒரு விஷப் பாட்டலைக் காட்டி, நான் அதோட போயிடுவேன். என்னை நீரு ஏமாத்துன பாவம், ஒம்மைப் பிடிக்காட்டாலும், ஒம்ம தங்கச்சி கலாவதியையும் தமிழரசியையும் பிடிச்சே தீருமுன்னு சொன்னேன். இப்படிச் சொல்லி வாய மூடு முன்னாலயே, சட்டுன்னு என்னை அடிச்சுட்டார். அடிக்கிற கை என்ன செய்யும்? அதைத்தான் அவரும் செய்தார். மொத்தத்துல அவரு என்னை கூட்டிக்கிட்டு வந்தார்னு சொல்றதை விட, அவரை நான் கூட்டிகிட்டு வந்துட்டேன்னு சொல்லலாம்.’’
அப்போது மசால் தோசையோடு வந்த வினைதீர்த்தான், ‘இவள் பிடிச்சால் பிடிதான். ஒரு தடவை முத்துலிங்கம் மச்சானும், அவரு சம்சாரமும் திட்டு னாங்கன்னு, என்கிட்ட தோட்டத்துல தூக்குப் போட்டுச் சாகப் போறதாய் சொன்னாள். நான் பெரிசா எடுத்துக்கல. தற்செயலாய் தோட்டத்துக்குப் போனால், குத்துக்காலு சட்டத்துல வால் கயிற்றை கட்டிக்கிட்டு இருக்காள். அப்போ கோபத்துல அடிச்சேன் பாரு அடி, நான் இவள் கூட வராட்டால் நிச்சயம் செத்துத் தொலைஞ்சிருப்பாள். அதனால்தான் நானும்...”
தமிழரசி சிறிது நேரம் மவுணித்தாள். வினைதீர்த் தானும் பொன்மணியும், அவள் முகத்தையே பார்த்தார்கள். பிறகு ‘நல்லதோ, கெட்டதோ, நம்பிக்கைத் துரோகமோ, நயவஞ்சகமோ, நடந்தது நடந்து போச்சு. நான் யார் ஒங்களைக் கேட்கதுக்கு?’ என்றாள்.
“தமிழு, நான் யோக்கியன்னு வாதாட வர்ல. என்னை உன் காலுல கிடக்குறதை கழட்டி வேணுமுன்னாலும் அடி. ஆனால், ஒனக்கும் எனக்கும் சம்பந்தமில்லன்னு மட்டும் சொல்லாத தமிழு. என்னால தாங்க முடியாது. நான் ஊருக்கு முரடன்; ஆனால் ஒனக்கு, ஒன் காலுல கிடக்கிற செருப்பு மாதிரி.
‘இவ்வளவு பேசுறியே, ஊர்ல அப்பா தங்கச்சி எப்படி இருக்காங்கன்னு ஒரு வார்த்தை கேட்டியா?”
“அதை கேக்குறதுக்கு எனக்கு எங்கே தமிழு யோக்கியதை இருக்கு? அதோட அவங்களுக்கு ஒண்ணுன்னால், நீ எங்க இருந்தாலும் ஆண்டவன் ஒன் உடம்பை துடிக்க வச்சுட மாட்டாரா...? பிச்சாண்டியை நேற்று பஸ்ல பார்த்தேன். அடுத்த வாரம் அம்மங்கொடைக்கு ஊருக்குப் போறானாம். நாங்க இங்கே சுகமாய் இருந்ததை ஊர்ல சொல்லுவான். அப்பாவும், தங்கச்சியும் சந்தோஷப் படாமலா போவாங்க?’’
“இவரு ஒருத்தரு சாப்பிட விடமாட்டாரு. சாப்பிடுங்க அண்ணி.’’
பொன்மணி மசால் தோசையைப் பிய்த்து தமிழரசி வாயில் ஊட்டினாள். அந்த அன்பின் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டவளாய் தமிழரசி வாயைத் திறந்தாள். வினை தீர்த்தான் தலையைச் சொறிந்தபடியே நின்றான், பொன்மணி, மசால் தோசையோடு மசாலாவாக, ஒரு கோரிக்கையைப் போட்டாள்.
- எத்தனை நாளைக்கு அண்ணி இப்படி கழுத்துல ஒண்ணு மில்லாமல் இருக்கது? தாலி கட்டணுமுன்னால் தமிழு வந்து தான் கட்டணுமுன்னு சொல்லிட்டார். நீங்க லீவ் முடிஞ்சு மெட்ராஸ் வாரது வரைக்கும் சும்மா இருப்போ முன்னாரு. இவர் வேலை பார்க்கிற லாரி ஷெட் ஒனர், சிக்கிரமாய் பஞ்சாயத்தார் முன்னால கல்யாணத்தை செய்துக்கங்க. நான் சப்ரிஜிஸ்டிராரை கூட்டிவாரேன். இல்லன்னா, ஓங்க ஊர்ல யாரும் கம்ப்ளெயின்ட் கொடுத்திருந்தால், ஒங்களை எப்போ வேணுமுன்னலும் போலீஸ் பிடிச்சுட்டுப் போகலா
முன்னு சொல்றார். எனக்குப் பயமாய் இருக்கு. இந்த ஊருக்கு வந்து ஒரு மாசமாகுது. கோவிலுல கல்யாணம் செய்து, பஞ்சாயத்தார் சப்ரிஜிஸ்டிரார் முன்னால ரிஜிஸ்டர்ல கையெழுத்துப் போட்டுட்ட்டால், சட்டப் படியான கல்யாணமாம். நாளைக்கு நல்ல நாள் அண்ணி. நீங்களே முன்னால நின்னு நடத்தி வச்சுடுங்க அண்ணி, பிளிஸ்: ‘
தமிழரசி திடுக்கிட்டாள். இதுவரை, இவர்கள் காதலில் தலையிடாத கம்பீரத்தோட நிற்கேன், கல்யாணத்தை நடத்தி வச்சால், ஊர்ல என்ன நினைப்பாங்க? தாமு என்ன நினைப்பார்? அதோட இந்த பிளஸ்டு’ பொன்மணியால படிப்பில மைனஸான இவனோடு தொடர்ந்து வாழ முடியுமா? இப்படிப்பட்ட பெண்கள், அப்புறம் சிதைஞ்சு போனதை பார்த்திருக்கேனே. வினைதிர்த்தான் கிட்ட பக்குவமாய் பேசி, சினிமாவுல வாரது மாதிரி, பொன்மணியை வெறுக்கது மாதிரி அவனை நடிக்கச் சொல்லி, அப்புறம் பொன்மணியை தாமு கிட்ட ஒப்படைச்சுடலாமா? எப்டி முடியும்? ஏன் முடியாது? இந்தக் காலத்துல எத்தனையோ குடும்பத்துல பிற ஆண்களோட டுர்’ போன இளம் பெண்கள். அப்புறம் மற்றவங்களை கல்யாணம் செய்து, கண்ணகி மாதிரி பார்க்கிறதை பார்த்திருக்கேனே.