உள்ளடக்கத்துக்குச் செல்

நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 22

விக்கிமூலம் இலிருந்து

22

ஒலிபெருக்கிச் சத்தம் – அதுவும் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற அசம்பாவித பாடல், ஊருக்கு வெளியேயும், மேளச் சத்தம் ஊருக்கு உள்ளேயும் ஒலித்துக் கொண்டிருந்தன. மேளச் சத்தமும், சினிமாப் பாட்டும் இரண்டறக் கலக்கும் தொலைவிற்கு, நெருங்கிவிட்டான் தாமோதரன்.

சூரியன், இளஞ்சூட்டிலிருந்து, தலையை இளக வைக்கும் தூரத்திற்குப் போய்விட்ட நேரம். தலைமுடி, மனம்போல் சிதறிக் கிடக்க, கால்கள் பதறிப் பதறி நடந்து கொண்டிருந்தான். நாகர்கோவிலில் இருந்து, உறவுச் சத்தம் கேட்கமுடியாத, ரத்தத் தொடர்புகள் அறுபட்டுப் போகும் தொலைவிற்குப் போகத்தான் நினைத்தான். ஆனாலும், பாசம் அவனைப் பார்த்து விட்டது.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அறைக்குத் திரும்பியவன், அண்ணன், அவசர அவசரமாய் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தான். விஜயாவுக்கும், தமிழரசியின் அண்ணன் ராஜதுரைக்கும், அவசரக் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றும், நாளை மறுநாளே கல்யாணம் என்றும், உடனடியாக, கையில் முடியுமானால் கொஞ்சம் பணத்தோடு வரவேண்டும் என்றும் முத்துலிங்கம் தெரிவித்திருந்தார். விரைவில் அவனுக்கும், தமிழரசிக்கும் ஏற்பாடு செய்துவிடப் போவதாகவும் வாக்களித்திருந்தார்.

அவனுக்கு மனசு கேட்கவில்லை. வாங்கிப் போட்டிருந்த கட்டிலையும், இதரப் பொருட்களையும், ஆற அமர அனுப்பி வைக்கும்படி ரைட்டரிடம் கூறிவிட்டு, ஆறாமல், அமராமல் கையில் ஒரு சூட்கேஸோடு, அவன் புறப்பட்டு விட்டான். ஏட்டு பொன்னுச்சாமி தவிர, அத்தனை போலீஸ்காரர்களும், மற்றும் பல நண்பர்களும், அவனை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார்கள்.

தாமோதரன், நடையை வேகப்படுத்தினான். கல்யாண நேரம் கழிந்து விட்டதோ என்னமோ... விஜயாவுக்கு, நானென்றால் உயிர்... 'ஷ

கல்யாண நாயகியான விஜயாவை, மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற பந்தத்தில் அவன் பந்து போல் எம்பி நடந்தான். திடீரென்று, வேலியோர கற்றாழை புதருக்கு அருகே, ஊனையும் உருக்கும் சத்தம் ஒன்று கேட்டது.

"எய்யோ ...ஓ...ஓ...ஓ .. எங்கேய்யா போயிட்டூரு?"

தாமோதரன், குதிகால்களை உயர்த்தி எட்டிப் பார்த்தான். இழவுக்கு நாயகியாகிப் போனவளை, அவனால் நேருக்கு நேராய் பார்க்க முடியவில்லை. அதே சமயம், அந்த இடத்தை விட்டு அவனால் அகலவும் இயலவில்லை. கண்ணடங்க, நாவடங்க, அவளை அவன் பார்த்தபோது-

சுண்ணாம்புச் சாந்து திட்டுத் திட்டாய் கிடக்க, தூள் தூளான வெள்ளைக் கலசம் ஓடு ஓடாய் சிதறிக் கிடக்க, உறை கழண்ட அழுக்குத் தலையணை போன்ற மண் சமாதியில், கலாவதி, சம்மணம் போட்டு உட்கார்ந்து, தலையை சமாதியில் சாய்த்துச் சாய்த்து எடுத்தாள். பிறகு மல்லாந்து பார்த்து வானத்தைப் பார்த்தாள். "எம்மோ...எம்மோ" என்று சொல்லிக் கொண்டாள்.

அந்தப் பிண மகளுக்கு, ஆகாயத்தில் அம்மாவின் குரல் கேட்டதோ என்னவோ, அம்மாவைப் பிடித்து, அவள் மூலம் அப்பாவைப் பிடிக்க நினைத்தவள் போல், வெண்குஷ்டம் வந்தது போன்ற வெந்துபோன உடம்பை ஆட்டி ஆட்டி, தோலுரித்த வள்ளிக்கிழங்கு போன்ற வாயை அகல விரித்து, அதல பாதாளத்தையும், ஆகாய வெளியையும் புலம்பல் குரலால் புடம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்தபடி நின்ற தாமோதரன் 'மணமகளே...மணமகளே...வா...வா' என்ற தன் வீட்டுப் பாட்டைக் கேட்டு, பல்லைக் கடித்தான். இதற்குள் எங்கிருந்தோ வந்ததுபோல் வந்த முத்துமாரிப் பாட்டி கலாவதியை தூக்கி நிறுத்தி, இடுப்போடு சேர்த்து இழுத்தபடி நடந்தாள்.

தாமோதரன், ஆறு தலுக்காக அங்கே நின்ற பனைமரத்தைப் பற்றிக் கொண்டு அதன்மேல் சாய்ந்தான். அந்த மரமே சுழல்வது போலிருந்தது. என்னிடம் வராதே வராதே என்று விலகுவது போலிருந்தது. சின்ன வயதில், வேண்டுமென்றே வட்ட வட்டமாய் பம்பரம் போல் உடம்பைச் சுற்றி, அப்புறம் பொத்தென்று தரையில் விழும் போது, பூமி சுற்றுவது போலிருக்குமே. அதுபோல் இருந்தது அவனுக்கு இப்போது. அவன் வட்ட வட்டமாய் சுற்றாமலே, பூமி சுற்றியது. பனைமரம் சுழன்றது. நினைவுகள் நெஞ்சில் சுற்றின. நெஞ்சமோ தலையில் சுற்றியது. தாமோதரன் வந்த வழியாய் திரும்பப்போனான். முடிய வில்லை. கீழே விழாமல் இருக்க, எங்கேயாவது இளைப்பாற வேண்டும் போலிருந்தது. தள்ளாடி, அல்லாடி நடந்தான்.

அவனுக்கு முன்னால், முத்துமாரிப் பாட்டி, கலாவதியை உடலோடு சேர்த்துத் தூக்கியபடி போய்க் கொண்டிருந்தாள். ஊர் முனையில், கும்பல் கும்பலாக நின்றவர்களிடம், கலாவதியைக் காட்டிக் காட்டி, எதையோ பேசிக் கொண்டிருந்தாள், தாமோதரன் அவர்களை நெருங்கியபோது, பாட்டிக்குக் காது கொடுத்தவர்கள், இன்ஸ்பெக்டரைப் பார்த்து விட்டு, முகங்களைத் திருப்பிக் கொண்டார்கள். போலீஸ்காரனுக்கு-அதுவும் அதிகாரிக்கு உடம்பைக் காட்டலாம். முகத்தைக் காட்ட லாமோ? தங்களை அடையாளப் படுத்திக் கொண்டால், அப்புறம் அடையாளம் இல்லாமல் போக வேண்டியது வருமே,

பேச, முகம் கிடைக்காமல் நின்ற முத்துமாரிப் பாட்டி, உடம்பைத் திருப்பினாள். தாமோதரனைப் பார்த்து விட்டு, ஆச்சரியப்பட்டு மோவாயில் கை வைத்தாள். இதுவரை பேசாமல் வந்த கலாவதியோ, அவனைப் பார்த்ததும், "எய்யோ ...எய்யோ ..." என்று சொல்லியபடியே ஓடப் போனாள். பாட்டி, அவளை இழுத்துப் பிடித்தபடியே, தாமோதரனை வழிமறித்துக் கத்தினாள்.

"இவள நல்லா பாரு ராசா! இப்போ ஒனக்கு திருப்தி தானே? நீ துப்பாக்கியால சுட்டாக்கூட இப்டி சுட்டிருக்க முடியாது. ஆயிரந்தான் இருந்தாலும், ஒண்ணன் முத்துலிங்கம் ஒனக்குப் பெரியவன் பாரு; ஒன்னைப் பார்க்கும் போதெல்லாம் 'வாங்கத்தான்னு' வாய் நிறைய கேட்ட இவளோட வாயைப் பாரு ராசா! என் ராசா! என் சீமைத் துரையே! இவளுக்கு நீ ஒரு சின்ன ஒத்தாசை பண்ணனும். ஒய்யா இவள் பேர்ல கொடுத்த பணத்துக்கு, ஒன்னோட தங்கச்சிக்கு மாமனாராய் போன மனுஷன் தன்னோட வயலுக்குப் பக்கத்துல கிடந்த ரெண்டு மரக்கால் நிலத்தை வாங்கிப் போட்டுட்டாரு. இந்தக் கிழவிக்குப் பிறகு இவளைக் கவனிக்க நாதியில்ல. அதனால், நீ ஒரு உதவி செய்யணும். ஒன்னோட அண்ணன் இவளோட உடம்புக்குத்தான் சூடுபோட்டான். நீ இவள் உயிருக்கு சூடு போட்டுடு ராசா... சீக்கிரம் ராசா... துப்பாக்கி இல்லியோ ?..."

தாமோதரன், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்டவன் போல் உள்ளூறத் துடிதுடித்து, வெளிப்படையாய் குன்றிப்போய் நின்றான். ஆங்காங்கே பீடிகளை உறிஞ்சியபடி, வெற்றிலைப் பாக்கைக் குதப்பியபடி நின்றவர்களை, இருந்தவர்களை, நடந்தவர்களைப் பார்த்தான், எவரும் பாட்டியை அதட்டவில்லை. இறுதியில், கேட்கும் தூரத்தில் மண்டையனோடும், இதர வகையறாக்களுடனும் சீட்டாடிக் கொண்டிருந்த கில்லாடியார், பிடித்த சீட்டுகளைப் போடாமலே, பாட்டியைப் பார்த்துக் கத்தினார்:

"ஏய் சித்தி, ஒனக்கு என்ன வந்துட்டு! ஒனக்கும் சூடு போட்டுட்டால், இந்தப் பைத்தியாரத் தர்மர் மகள யாருழா கவனிக்கது?"

முத்துமாரிப் பாட்டி, திருப்பிக் கொடுத்தாள்:

"நேரம் காலம் தெரியாமல் வேல பார்க் சவங்களுக்கு நேரம் சரியில்ல; வசதியும் இல்ல. வசதியும், நேரமும் இருக்கிற ஒனக்கு சீட்டு விளையாட்டே பொழைப்பாய் போயிட்டு. ஒன்னை மாதிரி ஆம்புளைங்க சரியாய் இருந்தால், இந்த பைத்தியக்காரி முத்துமாரி எதுக்குப் புலம்பணும்?"

"நீ புலம்புனால், அது ஒன்னோடதான் முடியும், நான் புலம்புனால், என் பெண்டாட்டி பிள்ளைகுட்டி வரைக்கும் போகுமே, ஊமை கண்ட கனவு மாதிரி, போ சித்தி. டேய் மண்டையா, துருப்புச் சீட்டு ஆட்டியன் ரெண்டா, கிளாவர் ரெண்டா?"

கில்லாடியார் பேச்சை முடித்ததும், ஓரளவு தைரியமான ஒரு இளைஞன், இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்த தாமோதரனை நோட்டம் விட்டபடியே "கவலப்படாத பாட்டி, நமக்கும் காலம் வரும்" என்றான்.

முத்துமாரி, பயங்கரமாய் கத்தினாள்.

"நீங்கெல்லாம் எதுக்குடா இந்த உடம்பை வச்சிக்கிட்டு இருக்கணும்? அறுத்துப் போட்டாலும் அறுபது கிலோ தேறும். கடவுளே.... கடவுளே... இந்தப் பங்காளிப் பயலுவ சும்மா இருக்கது மாதிரி, என்னால் இருக்க முடியலியே. போலீஸ்காரன் அடிச்ச அடியில பழையபடியும் பைத்தியமாய் போனவள் அப்படியே இருந்துருக்கப் படாதா? நடம்மா கலா, ஒன்னத்தான் வா.. கூழோ, கஞ்சோ காய்ச்தித் தாரேன்."

முத்துமாரிப் பாட்டி, கீழே விழப்போன கலாவதியை, கைத்தாங்கலாய்ப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள். தாமோதரனால், அவர்கள் பின்னால் நடக்க முடியவில்லை.. அசட்டை செய்வது போல் பாவித்த ஊரார் முன்னால் நிற்கவும் முடியவில்லை. கால்களைத் தேய்த்தபடி ஆள் அரவம் இல்லாத ஒரு தெரு வழியாய் நடையை மாற்றினான். கையில் இருந்த சூட்கேஸ், கீழே விழுந்தது தெரியாமல் நடந்தான். யாரோ ஒரு பையன், அதை எடுத்துக் கொடுத்தான்.

வீட்டு வாசலுக்கு மகுடம் சூட்டப்பட்டதுபோல் வாழை மரங்கள், இரு பக்கமும் குலை தள்ளி நிற்க, வெண்பட்டுப் பரப்பும், சிவப்புக் கரையும் கொண்ட துணி கட்டிய பந்தலைத் தாண்டி, வீட்டுக்குள் நுழைந்தான். உடனே, "இன்ஸ்பெக்டர் வந்துட்டார், இன்ஸ்பெக்டர் வந்துட்டார்" என்ற சப்த அலைகள். ஜரிகை வேட்டியோடும், ஜிகினாத் துண்டோடும் பளபளத்த முத்துலிங்கம் ஓடி வந்து அவன் சூட்கேசை வாங்கிக் கொண்டார். அவர் மனைவி வந்து "சீக்கிரமாய் வரப்படாதா? தாலி கட்டியாச்சு. ஒங்களத்தான், இவங்க தன்னோட கல்யாணத்துக்காவது வருவாங்களா?" என்று தமாஷ் செய்தாள். அப்பாக்காரர் வந்து, அவனைப் பாசத்தோடு பார்த்தார்.

பந்தலிட்ட முற்றத்தில் நாற்காலிகளில் அமர்ந்திருந்த பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா, லோகல் அரசியல்வாதிகள், அதே அந்த பாதிரியார் உட்பட பல பெரிய தலைகள், அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றன. எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த ஒரு சில பெருந்தலைகளின் விலாக்களை இடித்து, "இன்ஸ்பெக்டரய்யா... இன்ஸ்பெக்டர்" என்று எழுப்பினார்கள். தாமோதரன் தங்களுக்கு வேண்டியவன் என்பதைக் காட்டும் வகையில், கூட்டத்தை ஒரு தடவையும், அவனை மறு தடவையும் பார்த்தபடி, எல்லோரும் ஒரே சமயம் பேசினார்கள்.

முத்துலிங்கம், தம்பியைப் பெருமையோடு பார்த்தபடி "சீக்கிரமாய் வரப்படாதுப்பா? ஒனக்காக எவ்வளவோ லேட் பண்ணிப் பார்த்தோம். சப்-இன்ஸ்பெக்டர் கூட, ஒனக்காகக் காத்திருந்திட்டு இப்போ தான் போறாரு..." என்றார். உடனே அவர் மனைவி "வந்ததும் வராததுமாய் அவங்கள ஏன் நச்சரிக்கிறீய? ஒங்க தம்பியை சாப்பிட வரச் சொல்லுங்க..." என்றாள்.

தாமோதரன், தன்னிடம் உபசரிப்பு வார்த்தைகளைப் பேசியவர்களைப் பார்த்து, புரிந்தும் புரியாமலும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தபோது, உள்ளறையில், கழுத்தில், மாலைகளோடு, உணவருந்திக் கொண்டிருந்த விஜயாவும், ராஜதுரையும் அவசரமாய் சாப்பாட்டை முடித்து விட்டு அவனருகே வந்தார்கள். விஜயா, தாமுவின் காலில் விழுந்தாள். ராஜதுரை, அவன் முட்டிகளைத் தொட்டு வணங்கினான். தங்கையை, தத்தளிக்கப் பார்த்தவனைப் பார்த்து "தாம்பாளத்தில் இருக்கிற விபூதியை எடுத்து அவங்க ரெண்டுபேருக்கும் பூசுப்பா" என்றார் முத்துலிங்கம். தாமோதரன், இருவர் நெற்றிகளிலும் விபூதியிட்டு விட்டு, தங்கையையே பார்த்தான். அவளோ, இன்ஸ்பெக்டர் அண்ணன் மோதிரம் போடப் போகிறான் என்று எண்ணி, தனது விரல்களை விரித்து விரித்து மடித்தாள். மடித்து மடித்து விரித்தாள். அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்து விட்டு, புதுக்கணவனை இடுப்பில் இடித்து உள்ளறைக்குள் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.

தாமோதரன், ஆண்களும், பெண்களுமாய் நிறைந்த கூட்டத்தைப் பார்த்தான். ஒரு வேளை தமிழரசி வந்திருப்பாளோ? எப்படி வருவாள்? அவள். என்னை மாதிரி மானங்கெட்டவள் இல்லியே!

பார்த்துக் கொண்டிருந்த தாமோதரன் கண்களில், கலாவதிக்கு தோட்டத்தில் சூடு போட்ட பஞ்சபாண்டவர்கள் தென்பட்டார்கள். புண்ணியத்தைத் தவிர, உலகில் வேறு எதையுமே செய்யாதவர்கள் போல, அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த கூட்டத்திற்கு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். தாமோதரன், எதேச்சையாய் கோபப்பட்டு, இடுப்பில் இல்லாத கைத்துப்பாக்கியைத் தேடினான். அண்ணனை ஆவேசமாகப் பார்த்தான்.

சாப்பாடு முடிந்ததும், கூட்டம் குறைந்து கொண்டும், தலைவர்கள் கூட்டம் கூடிக் கொண்டும் இருந்தன. இன்ஸ்பெக்டர் வந்து விட்டதால், சின்னத் தலைவர்களும், வந்து விட்டார்கள். புதுமாப்பிள்ளை ராஜதுரையும், தாமுவைப் பெருமிதமாய் பார்த்தபடியே, அவனருகே வந்து உட்கார்ந்தான். முத்துலிங்கம் மனைவி, இலையும், செம்புமாக வாசல் கதவில் சாய்ந்தபடி, கொழுந்தன் தாமுவின் பார்வை படுவதற்காகத் தவமாய் நின்றாள்.

முத்துலிங்கம், பெரிய மனிதர்களைப் பார்த்தபடியே, தம்பியிடம் 'டா' போட்டுக் கேட்டார்:

"எத்தன நாளுடா லீவு போட்டிருக்கே?"

"லீவா? நானா? ஆம்... ஆம்..."

"நான் எதுக்குச் சொல்றேன்னால், நீதான் தங்கச்சியையும், மாப்பிள்ளையையும் குற்றாலத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும். லீவு நிறைய போடாட்டால், இப்பவே 'வந்த இடத்துல உடம்புக்கு சுகமில்ல'ன்னு ஒரு தந்தி அடிக்கணும், அதுக்காகத்தான் சொன்னேன்"

தாமோதரன், அண்ணனை ஏற இறங்கப் பார்த்தான். பொங்கிய சினத்தைத் தன்னிடமே தங்க வைத்தபடி "கவலப்படாதே! இனிமேல் நான் வேலைக்குப் போனாலும் சேர்த்துக்க மாட்டாங்க" என்றான்.

"என்ன சொல்ற?"

"வேலையை ராஜினாமா செய்துட்டேன்."

"என்னப்பா சொல்ற? என்னடா சொல்றே? என்னல சொல்றே?"

"ஒரு தடவை சொன்னால் ஒனக்குக் கேட்காதா? ஒன்னோட பாவத்துக்குக் கூலியாய், என்னோட வேலையை விட்டுட்டு வந்துட்டேன்."

பெருந்தலைகள் மலைத்துப் போயின. ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்த அப்பாக்காரர் எழுந்து வந்தார். முத்துலிங்கம், கண்கள் சிவக்க தம்பியையே பார்த்தார். அவர் உடம்பு ஆடியது. பற்கள் கடியுண்டன. மலைத்த தலைகளில் மலைக்காத தலைவரான லோகல் அரசியல்வாதி மொய்தீன், முத்துலிங்கத்தைத் தொட்டபடி "கவலப் படாதே முத்து. இவர் ராஜினாமாதானே செய்திருக்கார். அதை ஏத்துக்கணுமுன்னு என்ன வந்திருக்கு. இன்னைக்கே நாகர்கோவில் எஸ். பி. க்கு டிரங்கால் போட்டு ராஜினாமாவ திருப்பி அனுப்பச் சொல்றேன். வேணுமின்னால் மினிஸ்டர்கிட்டே..." என்றார்.

தாமோதரன், கோபத்தோடும், குமுறலோடும் பேசினான்.

"நான் அரசியல் வாதியல்ல, ராஜினாமாவை வாபஸ் வாங்க."

முத்துலிங்கம், தம்பியின் பக்கம் கோபமாய் நெருங்கிக் கேட்டார்;

"யார் கிட்ட கேட்டு வேலையை விட்டே?"

"நீ யார் கிட்ட கேட்டு கலாவதிக்கு சூடு போட்டே? யார்கிட்ட கேட்டு மாடக்கண்ணு மாமாவை கிணத்துக்குள்ளே தள்ளினே?"

திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில், முத்துலிங்கம் தம்பிமேல் பாய்ந்தார். அவன் தலையைப் பிடித்து, தனது இரண்டு கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு, அவன் முதுகில் மாறி மாறிக் குத்தினார். "ஒன்னை இதுக்கா கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். அற்பப் பயலே?" என்று சொல்லுக்குச் சொல்லாய், திட்டுக்குத் திட்டாய் அடித்தார்.

தாமோதரன், சிலிர்த்தெழுந்த போது, முத்துலிங்கம் கீழே விழுந்து கிடந்தார். அவரை கொலைகாரனாய் நினைத்து அவர் கழுத்தில் இடறப்போன கால்களை, தமையனாய் நினைத்து இருத்திக் கொண்டான். இதற்குள் அங்குமிங்குமாய் நின்ற கூட்டம் அங்கே ஒன்றாய்த் திரண்டது. புதுப்பெண் விஜயா, அலறியடித்தபடி அண்ணன்களுக்கு இடையே நின்றாள். ராஜதுரை, பெரியமச்சானை அனுதாபமாகவும், சின்ன மச்சானை அசிங்கமாகவும் பார்த்தபடியே, குத்துக்கல்லாய் இருந்தான். வாசலில், இலையும் நீர்ச் சொம்புமாய் நின்ற முத்துலிங்கம் மனைவி, அவற்றை வீசியெறிந்து விட்டு, கூட்டத்துள் வந்து கூக்குரலிட்டாள். கணவனை அதட்டினாள்.

"ஒமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். தம்பி தம்பின்னு நீரு கழனில கஷ்டப்பட்டு, அவனை பல்லாக்குல வச்சீரு, நாயைக் குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும், அது காளு காளுன்னு கத்தாமல் இருக்குமா? நீரு நாகர்கோவிலுக்கு, தம்பின்னு, போலீசுக்கு தப்பிப் போன போது, ஒம்மை எந்த மாதிரில்லாம் கேட்டான்? நீரே சொல்லிச் சொல்லி என்கிட்ட அழலியா? அந்த நன்றி கெட்டத்தனத்துக்குத்தான் கடவுள் இவனுக்குக் கூலி கொடுத்திருக்காரு. எவனும் எப்படியும் போவட்டும். சொத்துல ஒம்மைதவிர எவனுக்கும் எதுவும் கிடையாதுன்னு மட்டும் சொல்லிடும்."

"நான் எதுக்குடி சொல்லணும்? சொத்துன்னு கேட்டான்னால் ஒரே வெட்டுத்தான்."

தாமோதரன், ஆறு வயதுக் குழந்தையாகி, அருகே நின்ற தந்தையைப் பார்த்தான். கண் பொங்கப் பார்த்தான். பொறுப்புக்களை மூத்த மகனிடம் விட்டு விட்டு, தானுண்டு, சாராயம் உண்டென்று இருக்கும் அந்த மனிதர், இப்போது தனக்குப் பேச அவகாசம் கிடைத்ததைப் பயன்படுத்திக் கத்தினார்.

"பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாய் கொடுத்து வாங்குன வேலையை விட்டுட்டியடா அயோக்கியப் பயலே! இனிமேல் எனக்கு ஒருவன் தான் மகன். நீ என் முகத்துல விழிக்கப்படாது. சொத்துல ஒனக்கு ஒரு துரும்பு கூடக் கிடையாது. மரியாதையாய் வீட்டை விட்டு வெளில போ. ஏல முத்துலிங்கம்! அந்த ஓடுகாலிப் பயலை கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளு. நீ தள்ளுறியா, நான் தள்ளட்டுமா?"

தாமோதரன், தந்தையையே பார்த்தான். அவர் முகத்தில், பிரகலாதனைக் கொல்லப் போன இரணியன் முகம் தென்பட்டது. பெரிய மனிதர்களைப் பார்த்தான். அவர்களோ, ஒருவரை ஒருவர் பார்த்து இளக்காரமாய் கண்ணடித்துக் கொண்டார்கள். தங்கை விஜயாவை, பார்த்தான். அவள், அவன் கைகளை, தன் கைகளில் கோர்த்தபடி விம்மிக் கொண்டிருந்தாள். கூட்டம், ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது,

தாமோதரன், தங்கையின் கையை மெல்ல விலக்கி, சுவரோடு ஒட்டிக் கிடந்த சூட்கேசைத் தூக்கியபடி, மெல்ல நடந்தான். எவரும் அவனை, 'இரு' என்று சொல்லவில்லை. ஏனென்று கேட்கவில்லை. வீட்டுக்கு வெளியே வந்தவன் காதுகளில்,"அண்ணாச்சி அண்ணாச்சி.... அய்யோ.... என்னோட அண்ணாச்சியை கூப்பிடுங்க..." என்று விஜயா கூப்பாடு போடுவது கேட்டது. தாமோதரன், தங்கைக்காக ஒரு கண்ணையும், தனக்காக இன்னொரு கண்ணையும் துடைத்துக் கொண்டான்.

ஊர் வழியாய் நடக்க மனம் கேட்காமல், காட்டுப் பாதையில் நடந்தான். தனி வழியாய் தனித்துப் போனான். தந்தை என்பதும், தமையன் என்பதும் என்ன? தங்களால், இனிமேல் சுயேச்சையாக வாழ முடியாது என்ற சுயநலத்தால் துரத்துகிறார்கள். பாசம் என்பது உறவின் கைதி. இந்த சிறைபட்ட-சிறை பிடித்த மனிதர்களுக்காக, நான் ஏன், என் இதயத்தை வீங்க வைக்க வேண்டும்? போலீஸ் அதிகாரிகளிடம் போய், இதுவரை நடந்த கொலை நிகழ்ச்சிகளுக்கு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் என்ன? அவர்களிடம் சரணடைந்தால் என்ன?

தாமோதரன், கால்போன போக்கில் நடந்தான். மனம் போன போக்கில் நினைத்தான்.