பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்னைச் சுடும் - பொய்ப்பனாயின் பின் தன் நெஞ்சுதானே தன்னைச் சுடும்.

சுடுதலாவது தான் பொய்த்ததனால், பிறர்க்கு உளதாகும் தீமையைக் கண்டு "என் செய்தோம் யாம்!" என்ன வருத்துவித்தல்.

இது, பொய்யாமை வேண்டு மென்றது. ௯௧.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

இ-ள்:- யாம்மெய்யாகக் கண்டவற்றுள் - யாம் மெய்யாகக் கண்ட அறங்களுள், வாய்மையின் நல்ல பிற எனைத்தொன்றும் இல்லை - மெய்சொல்லுதல்போல் நன்றாயிருப்பன வேறு எவையும் இல்லை.

["ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி - பன்மைக் காகு மிடனுமா ருண்டே" என்னும் தொல்காப்பியச் சூத்திரப்படி, எனைத் தொன்றும் என்னும் ஒருமைப் பெயர் எவையும் என்னும் பன்மைப் பெயர்க் காயிற்று.]

இது, வாய்மையோடு மற்றை எவ்வறமும் ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று. ௯௨.

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

இ-ள்:- வாய்மை எனப்படுவது யாது எனின் - பொய் சொல்லாமை என்று சொல்லப்படுவது யாதென்று வினவில், தீமை இலாத யாதொன்றும் சொலல் - (பிறர்க்குத்) தீமைபயவாத யாதொன்றானும் சொல்லுதல் (என்க).

[தீமைபயவாத - தீங்கைக் கொடுக்காத சொற்களை, யாதொன்றானும் - எந்தவகையானும், யாதொன்றானும் என்பது தொகுத்தலாய் யாதொன்றும் என நின்றது.]

இது, வாய்மை யாதென்றார்க்குக் கூறப்பட்டது. ௯௩.

௩௫