உள்ளடக்கத்துக்குச் செல்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/களப்பிரரின் வீழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

களப்பிரரின் வீழ்ச்சி

ளப்பிரர் தமிழகத்தை ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் அரசாண்டார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சைன மதமும் பௌத்த மதமும் நெடுகப்பரவி வளர்ந்து செல்வாக்கடைந்து பெரும்பான்மையோர் மதங்களாக இருந்தபடியாலும் களப்பிரரும் சைன சமயத்தவரானபடியாலும் அவர்களுக்கு நாட்டில் ஆதரவு இருந்தது. களப்பிரர் முக்கியமாகச் சைன சமயத்தை ஆதரித்தார்கள், சைன சமயத்துக்கு அடுத்தபடியாகப் பௌத்த மதத்துக்குச் செல்வாக்கிருந்தது. களப்பிரரை சூலவம்சம் என்னும் சிங்கள நாட்டு நூல் திகத்தர் (ஜைனர்) என்று கூறுகிறது. மொக்கல்லானன் என்னும் சிங்கள அரசகுமரன் தமிழ் நாட்டுக்கு வந்து களப்பிர அரசரை உதவி கேட்டபோது அவர்கள் அவனுக்கு சேனைத் தலைவரைக் கொடுத்து உதவினார்கள். இதைக் கூறுகிற சூலவம்சம் களப்பிரர் பெயரைக் கூறாமல் நிகந்தர் (ஜைனர்) என்று கூறுவதை முன்னமே காட்டினோம். ஆகவே களப்பிரர் நிகந்தர் என்று அழைக்கப்பட்டனர் என்பது தெரிகிறது. களப்பிரருக்குப் பெரும்பான்மை மதமான ஜைன மதத்தின் ஆதரவு இருத்த போதிலும், நாட்டில் அரசியல் ஆதரவு இல்லையென்றே தோன்றுகிறது. சேர சோழ பாண்டியர் களப்பிரரை வீழ்த்துவதற்குச் சமயம் பார்த்திருந்தார்கள். தொண்டைநாட்டிலிருந்த பல்லவ அரசர் களப்பிரரை வென்று அவர்களுடைய ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நேரத்தைப் பார்த்திருந்தனர். களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த பாண்டியர் தாங்கள் சுதந்திரம் பெறுவதற்குப் பெருமுயற்சி செய்ததாகத் தெரிகிறது. களப்பிரர் ஆட்சிக்காலத்திலேயே, பாண்டிய அரசர் குலத்தைச் சேர்ந்த ஒரு பாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்துப் போய் சிங்கள அரசனை வென்று இலங்கையை அரசாண்டான். அவனுடைய பிள்ளைகளும் பேரர்களும் அவனுக்குப் பிறகு அரசாண்டதை முன்னமே அறிந்தோம்.

கி.பி.6-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர் களப்பிரரை வென்று தங்களுடைய பாண்டிய இராச்சியத்தை மீட்டுக் கொண்டார்கள். பாண்டியன் கடுங்கோன் பாண்டு நாட்டு ஆட்சியைக் களப்பிரரிடமிருந்து மீட்டுக் கொண்டான் என்று பாண்டியர் செப்பேடுகள் கூறுகின்றன.

"அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங்கலி அரைசன் கைக் கொண்டதனை இறக்கிய பின் படுகடன் முளைத்த பரிதி போல பாண்ட்யாதி ராஜன் வெளிப்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோலோச்சி வெண்குடை நீழற் றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பாலுரிமை திறவிதி நீக்கித் தன்பாலுரிமை நன்கன மமைத்த மானம் பேர்த்த தானைவேந்தன் னொடுங்கா மன்னரொலி நிகரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற்றெள்ளான்" என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.[1]

'கற்றறிந்தோர் திறல் பரவக் களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோன் மாக்காடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்" என்று தளவாய்ப்புரச் செப்பேடு கூறுகிறது.[2]

பாண்டியன் கடுங்கோன், 'மானம்பேர்த்த தானை வேந்தன்' என்றும் 'மானம் பேர்த்தருளிய கோன்' என்றும் செப்பேடுகளின் தமிழ் வாசகம் கூறுவதைப் போலவே, சமஸ்கிருதச் கலோகமும் அவனை மானம் பேர்த்த கடுங்கோன் என்று கூறுகிறது.[3] எனவே 'மானம் பேர்த்த கடுங்கோன்' என்பது அவனுடைய சிறப்புப் பெயர் என்று தோன்றுகிறது.

பாண்டியன் கடுங்கோன் பாண்டிய நாட்டைக் களப்பிரரிடமிருந்து மீட்டுக் கொண்டபோது, ஏறக்குறைய அதே காலத்தில் தொண்டை நாட்டு அரசனான பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டான். இந்த வரலாற்றைப் பள்ளன் கோவில் செப்பேடும் வேலூர்ப்பாளையம் செப்பேடும் கூறுகின்றன.

"சிம்மவர்மனுடைய மகன் சிம்மவிஷ்ணு. அந்தச் சிம்மவிஷ்ணு, மற்றொரு சிம்மவிஷ்ணு என்னும் அரசனை வென்றான். அவன், பலத்தில் வெற்றி வீரனாகிய அர்ச்சுனனைப் போன்றவன். வில் வித்தையிலும் வீரன். போரிலே வெற்றி கொள்வதில் சமர்த்தன்" என்றும்,

"உண்மை தியாகம் வணக்கம் போன்ற பரிசுத்தமான நற்குணங்கள் யாரிடத்தில் உள்ளனவோ, வீர குணங்கள் யாரை அடைக்கலமாகக் கொண்டுள்ளனவோ (அந்தச் சிம்ம விஷ்ணு) கவேரன் மகளான காவிரி ஆற்றை மாலையாகவும் செழுமையான நெல்வயல் கரும்பு வயல்சளை ஆடையாகவும் கமுகத் தோட்டம் வாழைத் தோட்டங்களை ஒட்டியாணமாகவும் அணிந்த சோழ நாட்டைக் கைப்பற்றினான்" என்றும் பள்ளன் கோயில் செப்பேடு கூறுகிறது.[4]

"புகழ்வாய்ந்த திறலையுடையவனும் பகைவர்களின் ஆற்றலையடக்கும் பலமுள்ளவனுமான சிம்மவர்மனுக்கு வெற்றி வீரனான சிம்மவிஷ்ணு மகனாகப் பிறந்தான். அவன், கமுகத் தோட்டங்களும் நெல்வயல்களும் நிறைந்துள்ள கவேரன் மகளான காவிரி ஆற்றினால் அலங்கரிக்கப்பட்ட சோழ நாட்டைக் கைப்பற்றினான்" என்று வேலூர்ப்பாளையச் செப்பேடு கூறுகிறது.[5]

இவ்வாறு பல்லவ அரசருடைய செப்பேடுகள் கூறுகின்றன. இவற்றிலிருந்து சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசனுடைய மகனான சிம்மவிஷ்ணு, சோழ நாட்டையாண்ட சிம்ம விஷ்ணு என்னும் அரசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்றும் அறிகிறோம். சிம்மவிஷ்ணு பல்லவன் சோழ நாட்டைச் சோழரிடமிருந்து வென்று கொண்டானா, களப்பிரரிடமிருந்து வென்று கொண்டானா என்று செப்பேடுகள் கூறவில்லை. களப்பிரரிடமிருந்து சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுவது முற்றிலும் உண்மை . அக்காலத்தில் சோழ நாட்டைச் சோழ மன்னர் ஆளவில்லை. சங்க காலத்தின் இறுதியில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டபோது சோழர் அவருக்குக் கீழடங்கியிருந்தார்கள். ஆகவே சிம்ம விஷ்ணு களப்பிரரிடமிருத்துதான் சோழ நாட்டை வென்றான் என்பது வெளிப்படை. களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த சோழர், பல்லவர் சோழ நாட்டை வென்ற பிறகு பல்லவருக்குக் கீழடங்கினார்கள்.

பாண்டியன் கடுங்கோனும் பல்லவ சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வென்று வீழ்த்தியது ஏறத்தாழ கி.பி. 575 என்று கருதப்படுகிறது. கி.பி.575ல் அல்லது அதற்குச் சற்று முன் பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்றிருக்க வேண்டும் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.[6] கி.பி. 590-ல் களப்பிரர் வெல்லப்பட்டனர் என்று திரு. நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார்.[7] கி.பி.575-ல் களப்பிரர் வீழ்ச்சியடைந்தனர் என்று கொள்வதே சரி என்று தோன்றுகிறது.

கி.பி. 450-க்கும் 550-க்கும் இடையில் களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் இருந்தது என்று திரு.பி.தி. சீனிவாச அய்யங்கார் கூறுகிறார். பிறகு கி.பி. 5-ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர் களப்பிரரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்று கூறுகிறார்.[8] அதாவது கி.பி.450 முதல் 600 வரையில் 150 ஆண்டு களப்பிரர் ஆட்சி இருந்ததென்று கூறுகிறார். இவர் கூற்று தவறு என்று தோன்றுகிறது. ஏறத்தாழ கி.பி. 250 முதல் 573 வரையில் தமிழ் நாட்டைக் களப்பிரர் ஆண்டனர் என்று கருதுவது தவறாகாது.

பாண்டி நாட்டைக் கடுங்கோனும் சோழ நாட்டைச் சிம்ம விஷ்ணுவும் வென்று கொண்டபோது சேர நாட்டைச் சேர அரசன் களப்பிரரிடமிருந்து வென்று கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்தச் சேரனது பெயர் தெரியவில்லை. களப்பிரர் தங்கள் இராச்சியத்தைச் சேர பல்லவ பாண்டியர்களுக்கு இழந்துவிட்ட பிறகு அவர்கள் பேரரசர் நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து சிற்றரசர் நிலையை அடைந்தனர். அவர்கள் சோழ நாட்டிலே தஞ்சாவூர், செந்தலை முதலான ஊர்களில் தங்கிச் சிற்றரசர்களாகப் பல்லவ அரசருக்கு அடங்கிவிட்டனர்.

மாமல்லன் (முதலாம் நரசிம்மவர்மன்) இரண்டாம் நந்திவர்மன் ஆகிய பல்லவ அரசர்களப்பிரரை வென்றதாகக் கூறிக் கொள்கின்றனர்.[9] சாளுக்கிய அரசர்களான முதலாம் விக்கிரமாதித்தன், விசயாதித்தன் முதலான அரசர்கள் களப்பிரரை வென்றதாகக் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் வென்ற களப்பிரர் பேரரசாகத் தமிழ் நாட்டையாண்ட களப்பிரர் அல்லர், அரசை இழந்து சிற்றரசர் நிலையையடைந்த பிற்காலத்துக் களப்பிரர் ஆவார்.

பிற்காலத்தில் களப்பிரர் முத்தரையர் என்று பெயர் பெற்றிருந்தனர் என்று அறிகிறோம். முத்தரையர் என்னும் பெயர் சேர, சோழ, பாண்டியம் என்றும் மூன்று தரைகளை அரசாண்டவர் என்னும் பொருளுள்ள சொல்லாக இருக்கலாம். முத்தரையர், செந்தலை தஞ்சாவூர் நாடுகளை யரசாண்டார்கள், முத்தரையர் களப்பிரர் அல்ல என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். "அன்றியும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரே யாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று.[10]

செந்தலைத் தூண் சாசனங்களிலிருந்து முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று அறிகிறோம். திருக்காட்டு பள்ளிக்கு (தஞ்சை மாவட்டம்) இரண்டு கல் தொலைவில் செந்தலைக் கிராமத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மண்டபத் தூண்களில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை செந்தலைத் தூண் கல்வெட்டுகள் என்று கூறப்படுகின்றன. இந்தச் சாசனங்களைத் திரு.டி.ஏ. கோபிதாத ராவ் செந்தமிழ் ஆறாம் தொகுதியில் வெளியிட்டுள்ளார். திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்தத் தமிழ்ச் சாசனங்களை ஆங்கில எழுத்தில் 'எபிகிறாபியா இத்திகா' என்னும் இதழில் வெளியிட்டுள்ளார்.[11] இந்தச் சாசனத்தில்

பெரும்பிடுகு முத்தரைய னாயின குவாவன் மாறன்
அவன் மானிளங் கோ வதியரைய னாயின மாறன்பரமேஸ்வரன்
அவன்மகன் பெரும்பிடுகு முத்தரைய னாயின சுவரன் மாறன்
அவன் எடுப்பித்த படாரிகோயில் அவன் எறிந்த ஊர்களும்
அவன் பேர்களும் அவனைப் பாடினார் பேர்களுமித் தூண்கண்மே
லெழுதின இவை

என்று காணப்படுகிறது.

நான்கு தூண்களிலும் பெரும் பிடுகு முத்தரையனுடைய சிறப்புப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அப்பெயர்களில் ஸ்ரீகள்வர கள்வன் என்று நான்கு தூண்களிலும் எழுதப்பட்டுள்ளது. கள்வர கள்வன் என்பதைக் களவர கள்வன் என்றும் படிக்கலாம். இதிலிருந்து முத்தரையரும் களவர கள்வரும் (களப்பிரரும்) ஒருவரே என்பது தெரிகிறது. முத்தரையரை நாலடியார் கூறுகிறது.[12]

விடேல் விடுகு முத்தரையன், சத்துருபயங்கர முத்தரையன் என்னும் முத்தரையர் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

களப்பிரரின் பின் சந்ததியார் களப்பாளர் என்னும் பெயர் பெற்றிருந்தனர். சிவஞான போதத்தை எழுதிய மெய்கண்ட தேவருடைய தந்தையாரின் பெயர் அச்சுதகளப்பாளர் என்பதாகும். நெற்குன்றம் கிழான் என்றும் ஒரு களப்பாள சிற்றரசன் ஒரு சாசனத்தில் கூறப்படுகிறான்.[13]


  1. வேள்விக்குடிச் செப்பேடு, வரி 39-16
  2. தளவாய்புரச் செப்பேடு, வரி 131 -132
  3. தளவாய்ப்புரச் செப்பேடு, சுலோகம் 23, வரி 39-40
  4. பள்ளல் கோயில் செப்பேடு, கலோகம் 4.5.
  5. வேலூர்பாளையச் செப்பேடு, சுலோகம் 10.
  6. சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு. 1969, பக்கம் 31.
  7. K.A.N.Sastry, The Pandyan Kingdom.
  8. P.T.Srinivasn Iyangar, History of the Tamils, 1929. p.534.
  9. கூரம் செப்பேடு, வரி 15; புவ்லூச் செப்பேடு, பட்டத்தால் மங்கலம் செப்பேடு, சுலோகம் 9.
  10. பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, 1969, பக்கம் 12.
  11. Epigraphia Indica Vol XIII, Sendalai Pillar inscriptions, pp 134-149
  12. நாலடியார், தாளாண்மை 10, மானம் 6.
  13. செந்தமிழ், தொகுதி 12, பக்கம், 268.