களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/பிற்சேர்க்கை - 1

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை - I

அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்”: ஒரு பார்வை.

அ.மார்க்ஸ்

“எவ்விடத்தும் சிவன் கோயில்; எவர் நெஞ்சிலும் சிவஞானம்; எவர் மொழியிலும் சிவநாமம்; எவர் மேனியிலும் சிவ வேடம்; எவர் பணியும் சிவப்பணி. எங்கும் எல்லாம் சிவமேயாய்ச் சிறந்து நின்றமையின் தென் தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது” என (ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, சிவஞான போதம் மூலமும் சிற்றுரையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1953), சைவப் பண்பாடே தமிழர் பண்பாடு என்று நம் தமிழறிஞர்கள், தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் ஒற்றைப் பரிமாணமாய், இறுக்கமாகக் கட்டமைத்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் சமணமும் பவுத்தமும் இன்றித் தமிழில்லை என்பதை அடித்து நிறுவியவர் அறிஞர் சீனி. வேங்கடசாமி அவர்கள். மறைந்து போன தமிழ் நூல்கள், களப்பிரர் காலம், முதலான தமிழ் மரபால் ஒதுக்கப்பட்டவற்றின் பால் அவர் கரிசனம் குவித்திருந்தது போற்றத் தக்கது.

தமிழாய்வுகள் என்பன பல்கலைக்கழகங்களுக்குள்ளும் சைவ மடங்களுக்குள்ளும் சிறைப்பட்டிருந்த காலம் அது. தமிழகச் சாதிப் படிநிலை வரிசையில் உச்சியிலிருந்த இரு சாதிப் பிரிவினரின் கையில் தமிழாய்வுகள் முடங்கியிருந்த உண்மையையும் இன்று நம்மால் மறந்து தொலைக்க இயலவில்லை. இந்தத் தளைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருந்ததால் தானோ என்னவோ வேங்கடசாமியவர்களின் கரிசனங்கள் ஒதுக்கப்பட்டவற்றின் பால் திரும்பின. அன்னாரின் நூற்களிலேயே முக்கியம் என எனக்குத் தோன்றுவது ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.’

வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கவலையும் துன்பமும் நோயும் தொடர்ந்து வருத்துகிற காலத்தில் இந்நூலை எழுதினேன் என அவரலால் குறிப்பிடப்படும் இந்நூல் 1975ம் ஆண்டு வெளிவந்தது. "அக்கால சமயங்களின் வரலாறு, செய்யுள் இலக்கண வரலாறு ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்த போது களப்பிரர் ஆட்சிக் காலத்தைப் பற்றிய சில செய்திகள் புதிதாய்ப் புலனாயின” என்று முகவுரையில் குறிப்பிடும் வேங்கடசாமி அவர்கள், களப்பிரரின் இருண்ட காலம் இந்த நூலில் விடியற்காலம் ஆகிறது” எனவும், மேலும் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமாயின் “களப்பிரர் காலத்தின் பகற்காலத்தைக் காணக்கூடும்” எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

களப்பிரரின் இருண்ட காலம் எவ்வாறு வேங்கடசாமி அவர்களின் முயற்சியால் விடியற்காலம் ஆகிறது என்பதை அறிய இந்நூல் வெளிவருவதற்கு முந்தைய நாட்களில் களப்பிரர் காலம் குறித்து எத்தகைய கருத்துக்கள் இங்கே கட்டமைக்கப்பட்டு வந்தன என அறிதல் அவசியம்.

2.

களப்பிரர் கால வரலாற்றைக் கட்டமைப்பதற்கு மிக அடிப்படையான ஆவணமாக விளங்கும் வேள்விக்குடிச் செப்பேடுகள் 1923ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 1935ம் ஆண்டு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரின் புகழ்பெற்ற ‘சோழர்கள்’ நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட போது களப்பிரர் காலம் குறித்த சில உறுதியான கருத்துக்களை அவர் அதில் முன் மொழிந்திருந்தார்.

பாண்டியரது வேள்விக்குடிச் சாசனமும் பல்லவரது சில ஆவணங்களும் களப்பிரர் எனப்படும் தெளிவற்ற இருண்ட (obscure) குலம் ஒன்றைக் குறிப்பிடுகின்றன. பெரும் அரசியற் சீர்குலைவிற்கு (Political Unsettlement) இவர்கள் காரணமாயிருந்தனர். ஆறாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் அவர்களை (அரசியலதிகாரத்திலிருந்து) தூக்கி எறிந்ததென்பது பாண்டிய - பல்லவரது அதிகாரங்கள் மீண்டும் அரியணை ஏறுதற்கான முதற்படியாக அமைந்தது. முற்காலச் சோழர்களின் அதிகாரம் முடிவிற்கு வருவதற்கும் கூட களப்பிரரின் காட்டுமிராண்டித்தனமான கொள்ளைக்காரச் செயற்பாடுகள் (Predatory activitles) காரணமாயின எனவும் நாம் கருதலாம் (Colas 1975 ம் ஆண்டு பதிப்பு, பக்கம் 100 - அழுத்தம் நமது)

என்று குறிப்பிடும் சாஸ்திரியார், களப்பிரர் கால பவுத்தப் பேரறிஞரான உறையூரைச் சேர்ந்த புத்ததத்தர் பற்றிச் சொல்லவரும்போது,

“சங்க இலக்கியம் பாய்ச்சுகிற ஒளி மங்கியதற்கும் மேலே குறிப்பிட்ட பாண்டிய பல்லவச் சாசனங்களின் மூலமான புதிய விடியல் (Fresh dawn) தொடங்கியதற்கும் இடைப்பட்ட இருண்ட காலத்தில் (dark period) (புத்ததத்தர்) வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதி” (பக்.100- அழுத்தம் நமது)

என்றும் கூறுவது குறிப்பிடத்தக்கது. இறுதியாக,

“... எனினும் வேள்விக்குடிச் சாசனம், களப்பிர குலத்தைக் கலியரசர் எனச் சொல்வதிலிருந்தும் பல ஆதியரசர்களைக் களைந்தெறித்தவர்கள் எனக் கூறுவதிலிருந்தும், பிரம்மதேய உரிமைகளில் கைவைத்தவர்கள் என்று உரைப்பதிலிருந்தும் அவர்களால்

தூக்கியெறியப்பட்ட இந்நிலத்திற்குரிய மக்களுக்கும் (Peoples of land) இடைமறித்துத் தொல்லையளித்த (interlopers) களப்பிரருக்கும் இடையில் பகை நிலவியது என்பது உறுதி” (பக் 101. அழுத்தம் நமது)

என்று முடிக்கிறார்.

சாஸ்திரியார் ‘இருண்ட குலம்,’ ‘இருண்ட காலம்’ என்றெல்லாம் களப்பிரரைக் குறிப்பதென்பது ஏதோ, அக்காலகட்டத்திற்கான வரலாற்றாவணங்கள் இல்லாமையைக் குறிப்பதற்காக மட்டுமன்று. அவரது ‘தென்னிந்திய வரலாறு’ நூலில்,

“சங்க காலத்திற்குப் பிறகு ஒரு நீண்ட இருள் படர்ந்த காலம் நிலவக் காண்கிறோம்..... மறுபடியும் இருள் அகன்று கி.பி.ஆறாம் நூற்றாண்டு அளவில் வரலாறு ஒளிவீசத் தொடங்குகிறது. 6ம் நூற்றாண்டில் இனங் கண்டு கொள்ள முடியாத நாகரீகத்தின் எதிரிகளான களப்பிரர் என்னும் கொடிய அரசர் வந்து நிலைகொண்டு விட்டனர். நிலைபெற்ற அரசியலமைப்பு தூக்கியெறியப்பட்டது.”

(இலங்கை அரசு வெளியீடு, 1966, பக். 158-அழுத்தம் நமது.) என்று குறிப்பிடுவதிலிருந்து களப்பிரர் காலத்தை நாகரீக வளர்ச்சியற்ற இருண்ட காலமாகவே கருதினாரென்பது புலப்படும்.

களப்பிரர் காலத்தைக் குறிக்கப் பேராசிரியர் பயன்படுத்திய சில சொற்கள்-interregnum, interlopers, dark age, Political unsettlement.. முதலியன பின்னாளில் களப்பிரர் கால வரலாறு எழுதுவதற்கான குறியீட்டு வழிகாட்டல்களாகவே மாறின. இச்சொற்களுக்கு அகராதிகள் அளிக்கும் விளக்கங்கள் அறியத் தக்கன.

(Kalabrha) interegunm: the time between two reigns, any breach of continuity in order, break in the continuity and norms, ஒழுங்கான அரசனில்லாக் காலம்.
interloper : தலையிடுபவர், தன் ஆதாயங்கருதிப் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தொல்லை

தருபவர், உரிமையற்ற வணிகர்

‘சேம்பர்ஸ்’ மற்றும் ஏ.சி.செட்டியார் அகராதிகள் அளிக்கும் பொருள்கள் இவை.

ஆக, நேர்ப்போக்கான ஒரு வரலாற்று வளர்ச்சியையும், சீரான ஒழுங்கையும் குலைத்துச் சிதைத்த, இம் மண்ணுக்கு உரிமையற்ற அநாகரிகர்கனாகக் களப்பிரரின் இருண்ட காலம் அமைந்தது என்கிற புரிதலை உருவாக்கி நிலைப்படுத்தியமையில் பேராசிரியர் சாஸ்திரியாரின் பங்கு கணிசமானது. இதர வரலாற்றறிஞர்களும் சளைத்தவர்களல்ல. அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்த ‘சிவஞான போதம் மூலமும் சிற்றுரையும்’ நூலின் (1953) முகப்புரையில் சைவத் தமிழறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளையவர்கள்,

“இக்களப்பிரர் தமிழரல்லர்; தமிழ் நாட்டவருமல்லர். பல்லவர்

புகுவதற்கு முன்பே தமிழகத்தில் புகுந்து சங்ககாலத் தமிழ் வாழ்வைச் சீரழித்தனர். அவர்கள் புகுவதற்கு முன் தமிழகம் நாடு புகழும் நலம் சிறந்து விளங்கிற்று. அத்தகைய தமிழகம் கல்வி, வணிகம், பொருள், அரசியல், சமயம் என்ற துறைகளில் களப்பிரர் வரவால் பெருவீழ்ச்சியுற்றது. அவ்வத் துறைகளை விளக்கும் தமிழ்நூல்கள் அழிந்தது அக்காலத்தேயாகும். சுருங்கச் சொல்லுமிடத்து தமிழர்களின் கல்வியைச் செல்வாக்கிழப்பித்துக், கடல் வாணிகத்தை உடலறக் கெடுத்துப், பொருள் விளக்கத்தை இருட்டடித்து அரசியலை அலைத்தொழித்துச், சமயத்தைக் குமைத்து நின்றது களப்பிரரின் கொடுங்கோலாட்சி என்பது அமையும்.... இக்களப்பிரர் பண்டைய வரலாற்றில் காணப்பட்ட போதிலும் அவர்கள் நிலைபெறத் தங்கி ஆட்சி நடத்தியதாக ஒரு நாளும் காணப்படவில்லை. எனவே அவர்கள் ஓரிடத்தும் நிலையாகத் தங்காமல் மக்களைச் சூறையாடுவதே தொழிலாகக் கொண்டிருந்த நாடோடிகள் எனத் தெரிகிறது.” (பக் 45, 46, அழுத்தம் நமது).

எனக் கடுஞ் சொற்களால் சாடுவதனூடாக நிலையாகத் தங்கி அரசாளுதலின் சிறப்பையும் நாடோடித் தன்மையின் கொடுங்கோன்மையையும் வலியுறுத்துவது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1972ல் வெளியிட்ட ‘தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’ நூலில் பேராசிரியர் கே.கே.பிள்ளையவர்கள்,

“தமிழகம் கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே களப்பிரர் என்ற ஒரு குலத்தாரின் படையெடுப்புக்கு உட்பட்டு அல்லலுற்றது. அவர்கள் தமிழரல்லர்; பிற மொழியினர். அவர்கள் மாபெரும் சூறாவளியைப் போல நாட்டில் நுழைத்து மக்களைக் கொன்று குவித்து உடமைகனைச் சூறையாடினார்........ அயல்நாட்டினர் வேறு ஒரு நாட்டை வென்று கைக்கொண்ட பிறகு அவர்களது மொழி, இலக்கியம், கலை, நாகரீகம் ஆகியவற்றை அழிப்பதையே தம் முதற்கடமையாகக் கொள்வர். இது வரலாறு கண்ட உண்மையாகும். ....தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்” (பக் 171,172-அழுத்தம் தமது)

என்று குறிப்பிடுவார். குழப்பம் மிகுந்த காலம் என்கிற கருத்தாக்கத்தை பேரா. என்.சுப்பிரமணியம் அவர்களும் குறிப்பிடுவார் (Sangam Polity, Asia Publishing House, 1966, பகா.) சங்கம் அழிக்கப்பட்டது களப்பிரர்களால் தான் எனவும் அவர் உறுதியாய்ச் சொல்வார்.

சுருக்கம் கருதி அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் முதலான வேறு பல வரலாற்றாசிரியர்கள் களப்பிரர் பற்றிச் சொன்ன கடுஞ் சொற்களைத் தவிர்ப்போம். சீனி.வேங்கடசாமியவர்களின் நூலுக்குப் பின்னால் வந்ததாயினும், அந்நூலின் கருத்துக்களை வெளிப்படையாக மறுக்காமல் முன்னாற் சொல்லி நிலைநிறுத்தப்பட்ட கருத்துக்களையே மீண்டும் நிலைநாட்ட முயன்ற மு.அருணாசலம் பிள்ளையவர்களின் கருத்தை (1976) மட்டும் இங்கே இறுதியாய்க் குறிப்பிடுவது அவசியம். சொல்வார்:

“களப்பிரர் எந்த அரச பாரம்பரியத்திலும் (Royalty) வந்தவர்களல்லர். தொன்மைக் காலத்தில் அரசப் பாரம்பரியத்திற்கே ஆளுமை (Personality) இருந்தது. இந்த ஆளுமை எல்லாவிதமான மத மற்றும் இலக்கிய நிறுவனங்களிலும் தனது முத்திரையைப் பதித்து வந்தது. எனவே அரசப்பாரம்பரியமற்ற களப்பிரர்கள் நமது பழம்பெருமைக்குச் சொல்லத்தக்க பங்களிப்பு எதையும் செய்ய இயலாதவராக இருந்தனர். மொழியையும் பண்பாட்டையும் அவர்களது ஆட்சி அழித்தது ஒன்றைத் தவிர வேறெதையும் செய்யவில்லை....ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் மேற்கொண்ட புனிதப் போர் (crusade) மீண்டும் சைவத்தை நியாயமான அதன் பீடத்தில் (legitimate pedestal) ஏற்றியது.”

(Kalabhras in the Pandya country, University of Madras, 1979 பக்.

35, 36- அழுத்தம் நமது)

நூறாண்டு வரிசையில், இலக்கிய வரலாற்றைத் தொகுத்தளித்த அருணாசலத்தின் மேற்கண்ட கூற்றில் பல அம்சங்கள் ஆழ்ந்து சிந்தித்தற்குரியன. களப்பிரரை அரச பாரம்பரிய மற்றவர்கள் என்கிறார். அரசபாரம்பரியம் அற்றவர்களால் பண்பாட்டுப் பெருமைக்குப் பங்களிப்பு ஏதும் செய்ய இயலாது என்கிறார். சம்பந்தரின் புனிதப் போர் எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றியது முதலானவை ‘மீண்டும்’ சைவத்தை அதன் ‘நியாயமான’ பீடத்திவேற்றியது என்கிறார்.

ஆக வேங்கடசாமிக்கு முந்திய தமிழாய்வறிஞர்கள் அனைவரும் களப்பிரர் பற்றிக் கூறிய கருத்தைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம். களப்பிரர் என்னும் அரச பாரம்பரியமும் நாகரிகமும் அற்ற அந்நியப் படையெடுப்பாளர்கள், சங்க கால இறுதியில் தமிழகத்தின் மீது படையெடுத்துச் சங்கப் பொற்காலத்தை அழித்தனர். மீண்டும் ஆறாம் நூற்றாண்டு இறுதியில் பாண்டிய பல்லவர்கள் அவர்களை அகற்றியது வரை தமிழக வரலாறு ஓர் இருண்ட காலம்; மொழியும், பண்பாடும், கலைகளும், நாகரீகமும் சீரழிக்கப்பட்ட காலம் புறச் சமயங்களான சமணமும் பவுத்தமும் கோலோச்சிய காலம். மீண்டும் ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தப் பெருமான் தோன்றி பாண்டிய, பல்லவ ஆட்சிகளின் துணையோடு புறச் சமயங்களை ஓட்டி, சைவத்தை அதற்குரிய இடத்தில் அமர்த்தினார். பிற்காலத்தில் வேளான மரபினராகச் சைவம் போற்றிய களப்பாளர், களப்பாளராயர் முதலானோருக்கும் நாடோடி அநாகரிகர்களான களப்பிரருக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

இக்கருத்துக்கள் யாவும் சென்ற நூற்றாண்டில் அதிகாரம் மிக்கவர்களாக விளங்கிய அறிஞர் பெருமக்களால் முன்மொழியப்பட்டதோடன்றி பல்கலைக்கழகங்களாலும் பாடநூல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்பட்டு அதிகாரபூர்வமான சொல்லாடல்களாக நிலை நிறுத்தப்பட்டன என்பதும் சிந்தனைக்குரியது.

இப்பிரதிகள் அனைத்தையும் நீங்கள் கூர்ந்து வாசித்தீர்களேயானால் இவர்களது முன் தீர்வுகளுக்கு (apriori judgements) முற்றிலும் பொருந்தாத தரவுகளை அவர்களே முன் வைத்திருப்பது விளங்கும். களப்பிரர் காலத்தை இருண்ட காலம் எனச் சொன்ன அடுத்த வரியிலேயே அக்கால பவுத்த ஆசிரியர் புத்ததத்தரின் 'அபிதம்மாவதார'த்தின் இறுதியில் காவேரிப் பட்டணம் குறித்துச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளதைக் குறிப்பார் நீலகண்ட சாஸ்திரி, வளம் நிறைந்த வணிகர்கள், பெரிய அரண்மனைகள், தோட்டங்கள், துரவுகள் எனக் காவிரிப் பூம்பட்டிணம் சிறந்திருந்ததையும், காவேரிக்கரையில் புத்தமங்கலத்திலிருந்த புத்த விகாரைகள் குறித்தும், மூவேந்தர்களையும் சிறை வைத்த அச்சுத களப்பாளனைப் பற்றியும் சொன்ன அடுத்த கணமே' 'எனினும்...' என இருண்ட காலக் கதையாடலைத் தொடங்குவார் சாஸ்திரியார்.

கே.கே.பிள்ளையும் அவ்வாறே களப்பிரர் காலத்தில் வச்சிரநந்தியால் உருவாக்கப்பட்ட திரமிள சங்கத்தின் சிறப்புகளைச் சொல்வார். மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி, யசோதரா காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் உருவான காலம் இது எனக் குறிப்பிடும் பிள்ளை, வஞ்சிமா நகரில் மணிமேகலை முன்பாக பல் சமய அறிஞர்கள் தத்தம் திறன்களை எடுத்துக் கூறிய காட்சியை விவரித்து, அக்காலத்து மக்களின் பண்பாட்டு மேம்பாட்டையும். அறிவின் உயர்ச்சியையும் சமயப் பொறையையும் வியப்பார். எனில் களப்பிரர் காலத்திய குழப்பமும் இழப்பும் அளவில எனத் தான் கொண்ட முடிவின் அடிப்படை யாது என அவர் விளக்க எத்தனிக்கவில்லை. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் மக்களைக் கொன்று குவித்த கொடுங்கோலர்கள் என்று களப்பிரரைச் சொன்னாரென்றும் அவர் சுட்டிக் காட்டவில்லை.

தொகுத்து நோக்கும்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. களப்பிரர் காலத்துத் தமிழக வரலாற்றை விளங்கிக் கொள்ள வினய வினிச்சயம், அபிதம்மாவதாரம் சீவக சிந்தாமணி முதலான அவைதீகப் பாரம்பரிய நூற்களை ஏற்க இவர்கள் தயாராக இல்லை. சைவத்தையும், வடக்கிலிருந்து இங்குப் போந்த வைதீக மரபையும் இந்த மண்ணுக்குரியதாக ஏற்றுக் கொண்டு வரலாறு எழுதத் துணிந்த அவர்கள் கிட்டத்தட்ட அதே கால சுட்டத்தில் (கி.மு.3ம் நூ) இங்கு நுழைத்து பரவிய சமண, பவுத்த அவைதீக மதங்களைப் புறச்சமயங்களாகக் கருதினர். சைவத்தை இம்மண்ணுக்குரிய இயல்பான ஒழுங்கு எனக் கருதியதன் விளைவாகவே சமணமும் பவுத்தமும் ஏற்றம் பெற்ற ஒரு காலகட்டத்தை ஒழுங்கு குலைத்த ஒரு தொடர்ச்சியின்மை (interregnum) யாகக் கருதினர்; சமணத்தையும் பவுத்தத்தையும் ஆதரித்த களப்பிரரை ஏதிலராகக் (அந்நியராக) கட்டமைத்தனர். கருநாடகத்திலுள்ள இன்றைய சிரவண பௌகோளாப் பகுதியிலிருந்து வந்தவர்களாகக் களப்பிரர்கள் இருக்க வேண்டும் என்பது வேங்கடசாமி உட்படப் பலரும் சொல்கிற முடிவு. சங்ககாலத்தில் அப்பகுதி எருமை நாடு என அழைக்கப்பட்டது. இன்றைய தேச எல்லைப் புவியியல் அடிப்படையில் அன்றைய எருமை நாட்டை அந்நிய தேசமாகக் கட்டமைப்பது பொருந்தாது. எருமை வெளியனார் என்கிற சங்கப்புலவர் இருந்தமையும் சங்ககாலப் புறத்திணைகளின் எருமை மறம் என்றொரு துறை வழங்கப் பட்டமையையும் தாம் இங்கு கருதிப் பார்க்க வேண்டும். எனவே கலாச்சார மையத்தின் விளிம்பாய் இருந்த மக்கட் பிரிவினரை 'அந்நிய' ராய்க் கட்டமைப்பதும் பிறகு 'அந்நியர்'களை எதிரிகளாய்க் கட்டமைப்பதும் சென்ற நூற்றாண்டு தேசிய வரலாறெழுதியலின் ஆபத்தான கூறு என்பதை தாம் இத்துடன் இணைத்துப் பார்க்கத் தவறக்கூடாது. அகில இந்தியத் தேசிய வரலாற்றாசிரியர்கள் இந்து அல்லாதோரை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைத்தனர்; தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர்கள் சைவர்களும் வைதீகர்களும் அல்லாதோரை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைத்தனர். மு.அருணாசலம் அவர்கள் களப்பிரர் காலம் பற்றிச் சொல்ல வரும் போது,

"(இது)தமிழ்க் கலாச்சாரத்தின் மிக மோசமான காலங்களில் ஒன்று. 14ம் நூற்றாண்டின் முதற் காற்பகுதியில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றியதற்கும் அடுத்த நூற்றாண்டில் முகமதியப் படைகள் விஜய நகரத்தை அழித்ததற்கும் இது சமம். யாருக்கேனும் இது பொற்காலமாய் அமைந்தது எனச் சொல்வது வரலாற்றைத்

திரிப்பதாகும் (அதே நூல் பக். 34)

எனக்கூறி களப்பிரர்களை மாலிக்காபூருடலும், விஜயநகர இந்து ராச்சியத்தை வீழ்த்திய முகமதியர்களுடனும் ஒப்பிடுவதைக் காண்க.

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூல் வெளிவருவதற்கு முன்பு ஓங்கி ஒலித்த குரல்கள் இவைதான். நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தும் இதுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த மாற்றுக்குரல்கள் மிகவும் பலவீனமாகவே அமைந்தன.

3

இனி சீனி.வேங்கடசாமி அவர்கள் தனது நூல் வாயிலாக வந்தடைந்த முடிவுகளையும் அவரால் விடைகாண இயலாமற் போன புள்ளிகளையும் தொகுத்துக் கொள்வோம். அவர் வந்தடைந்த முடிவுகளாவன:

1. காலம்:களப்பிரர் காலமென்பது கி.பி. 250 தொடங்கி கி.பி.575க்கு இடைப்பட்டதாகும்.

2. களப்பிரர் யார்: களப்பிரர் என்போர் இப்போதைய சிரவண பௌகோள என்னும் களபப்பு நாட்டுப் பகுதியிலிருந்து குடிபோந்த கன்னடரே. இப்போதைய பெங்களூர் கோலார் வரையிலும் களபப்பு நாடு பரவியிருந்தது. எனவே"களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தவரல்லர். அவர்கள் தமிழகத்திற்கு அண்மையிலிருந்த கன்னட வடுகர். எனவே அவர்கள் திராவிட இனத்தவரே" (அழுத்தம் நமது). மு. இராகவையங்காரும் கிருஷ்ணசாமி அய்யங்காரும் சொல்வது போல வேங்கடக் கள்வரும் 'கள்வர் கோமான் புல்லி' களப்பிரரும் ஒன்றன்று. இருவரும் வேறுவேறு, வேங்கடநாடு தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த தமிழகத்தின் பகுதி, எனவே கள்வர் தமிழர், களப்பிரரோ கன்னடர்.

3. களப்பிரர் சமயம்: களப்பிரர் காலத்தில் சமணமும் பவுத்தமும் மென்மேலும் சிறப்புப் பெற்று பெருகி வளர்ந்தன. சைவ, வைதீக சமயங்கள் சிறப்படையாமல் மங்கியிருந்தன. எனினும், களப்பிரர் சமணச் சார்புடையவர் என்று வரலாற்றாசிரியர் எழுதியுள்ளது தவறான கருத்து. களப்பிர அரசர் அச்சுத பரம்பரையினர் என்று கருதப்படுகிறபடியால் அவர்கள் வைணவ சமயத்தார் என்று கருதுவதே சரி.

4. சங்க கால இறுதியும் களப்பிரர் காலத்தோற்றமும் பற்றி: போர் செய்வதையே வழக்கமாகவும், குறிக்கோளாகவும், பெருமையாகவும் கொண்ட சங்க கால வீரயுகத்தின் இறுதியில் களப்பிரர் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்போர்க்களச் சூழ்நிலை (கி.பி. 2ம்நூ) தமிழ்நாட்டையும் தமிழ் அரசர்களையும் பலவீனப்படுத்தி இருந்தது. அந்நிய நாட்டைத் தடுத்து திறுத்த ஆற்றல் மிக்க பேரரசர் இல்லாத நிலை களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படக் காரணமாக இருந்தது.

5. களப்பிரர் வீழ்ச்சி பற்றி: களப்பிரருக்குப் பெரும்பான்மை மதமான ஜைன மதத்தின் ஆதரவு இருந்த போதிலும், நாட்டில் அரசியல் ஆதரவு இல்லையென்றே தோன்றுகிறது." சோழ பாண்டியர், தொண்டை மண்டலப் பல்லவர் சமயம் பார்த்திருந்தனர். கி.பி. 6ம்நூ. இறுதியில் பாண்டியர் களப்பிரரை வென்று தமது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டனர் (அழுத்தம் நமது).

6. வீழ்ச்சிக்குப் பின் களப்பிரர்: களப்பிரர்தம் இராச்சியத்தைச் சேர, பல்லவ, பாண்டியர்களுக்கு இழந்துவிட்ட பிறகு அவர்கள் பேரரசர் நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து சிற்றரசர் நிலையை அடைத்தனர். களப்பிரரும் முத்தரையரும் ஒருவரே. பண்டாரத்தார் சொல்வது போல வேறு வேறல்ல. களப்பிரரின் சந்ததியாரே களப்பாளர் என்பதும் தளவாய்புரச் செப்பேட்டிற்குப் பின் தெரிந்துவிட்டது. பண்டாரத்தாரும் ஔவையும் சொல்வது போல வேறுவேறல்ல.

7. பார்ப்பனர்களுக்கான தானங்களை இறக்கியமை குறித்து: "களப்பிரர் வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால் அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது." களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். பார்ப்பனருக்குத் தானம் கொடுத்து அவர் ஆதரித்ததை' அகலிடமும் அமருலகும்' எனத் தொடங்குகிற செய்யுள் கூறுகிறது. (அழுத்தம் நமது)

8. களப்பிரர் காலம் தமிழ் மொழியும் பண்பாடும் அழிக்கப்பட்ட இருண்ட காலம் என்பது பற்றி: இதனைக் கடுமையாக மறுக்கிறார் வேங்கடசாமி. தமிழும் இலக்கியமும் பண்பாடும் பெரிதும் வளர்ச்சியுற்ற காலமாக அவர் இதனைக் கருதுகிறார். இக்காலகட்டத்தில்தான் தமிழ் எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக வளர்ச்சியுற்றது. நால்வகைப் பாக்களோடு (ஆசிரியம், வெண்பா , கலி, வஞ்சி) முடங்காமல் தாழிசை, துறை, விருத்தம் எனப்புதிய பா வகைகள் தமிழில் கிளைத்ததும் இக்காலத்தில் தான். அகம், புறம் ஆகிய துறைகளில் புதிய கருத்துக்கள் விரிந்ததும், அவிநயம், காக்கைபாடினியம், தத்தத்தம், பல்காப்பியம், பல் காப்பியப் புறனடை, பல்காயம் முதலான இலக்கண நூற்களும், நரிலிருத்தம், எலிவிருத்தம், கிளி விருத்தம் முதலான தத்துவ நூற்களும், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலான காப்பியங்களும், கீழ்க்கணக்கு நூற்கள் பலவும் மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, கயிலை பாதி காளத்தி பாதி திருவந்தாதி முதலான பல சைவ இலக்கியங்களும் களப்பிரர் காலத்திலேயே உருவாயின. காவியக்கலை தவிர ஓவியம், சிற்பம் முதலான நுண் கலைகளும் வளர்ச்சியுற்றன. இசைக்கலை சிறந்திருந்தது காரைக்காலம்மையின் பாடல்களிலிருந்து வெளிப்படுகிறது. விளக்கத்தார் கூத்து எனப்படும் கூத்து நூலும் இக்கால கட்டத்தியதே. புத்ததத்த மகாதேரர், சங்கமித்திரர், ஜோதிபாலர், சுமதி, காஞ்சி தருமபாலர், தஞ்சை தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், புத்தமித்திரர் போன்ற உலகறித்த அறிஞர் பெருமக்கள் தமிழகத்தில் பிறந்து சிறந்ததும் களப்பிரர் காலத்தில்தான்.

9. பிற முடிவுகள்: வச்சிர நந்தியின் திரமிள சங்கமும் (கி.பி.470) கடைச் சங்கமும் வேறு வேறு, வையாபுரிப் பின்ளை சொல்வது போல இரண்டும் ஒன்றன்று. முதற் சங்கங்கள் தமிழ் வளர்ச்சிக்காகப் பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப் பட்டவை. வச்சிரநந்தியின் சங்கமோ ஜைனத் துறவிகளுக்கானது. வையாபுரியாரும் சிவராஜப் பிள்ளையும் கருதுவது போல தொல்காப்பியர் திரமிள சங்கத்தைச் சேர்ந்தவரல்லர்; பழைய அகப் பொருளில் இறைவன் மீதான காதலுக்கு இடமில்லையென்பதால் இறையனார் அகப் பொருளுரை எழுதப்பட்டது; சங்க கால நக்கீரரும் களப்பிரர் கால நக்கீர தேவ நாயனாரும் வேறு வேறு என்றாலும் பி.டி.சீனிவாசய்யங்கார் சொல்வது போல நான்கு நக்கீரர்கள் கிடையாது என்பன இந்நூலில் சீனி.வேங்கடசாமி வந்தடையும் பிற முடிவுகளாகும். தொல்காப்பியரின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிய வையாபுரிப் பிள்ளையைச் சாடுமிடத்து வேங்கடசாமி அவர்கள் தனக்கியல்பான நடை அமைதியிலிருந்து வழுவி கடுஞ்சொற்களைப் பயன்படுத்துவது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று.

வேங்கடசாமி அவர்கள் அவர் காலத்தில் எழுச்சியுற்றிருந்த திராவிடக் கருத்தியலுக்கு ஆட்பட்டவர். இளமைக்காலத்தில் நீதிக்கட்சியின் 'திராவிடன்' இதழாசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றியவர். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, வடமொழிக் கெதிரான தமிழின் தொன்மை, சைவப் பெருமை இம் மூன்று கூறுகளின் கலவையாகவே தொடக்க காலத் திராவிடக் கருத்தியல் உருவாகியது. திராவிடக் கருத்தியலிலிருந்து சைவப் பெருமையைத் துண்டித்த பணியைப் பெரியார் ஈ.வெ. ரா அவர்களே தொடங்கினார், செய்தார். இதனால் அவர் சைவப் பெருமை பேசியவர்களால் தாக்கப்பட்டது வரலாறு, பெரியாரளவிற்கு சைவத்தை மறுக்காதவராயினும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பொன்றில் தோன்றி வளர்த்த வேங்கடசாமி, இதர வேளாளத் தமிழறிஞர்கள் போல சைவப் பெருமை பாராட்டவும் அவைதீக மதங்களை இழிவு செய்யவும் தயாராக இல்லை . அதே சமயத்தில் இதர திராவிட இயக்கத்தாரைப் போல சங்கப் பெருமையைப் பேசுவதற்கும், தமிழ் இலக்கியங்களின் தொன்மையைக் குலைப்பவர்களைக் கடுஞ்சொற்களால் சாடுவதற்கும் அவர் தயங்கவில்லை. சிலம்பு, மேகலை, குறன், தொல்காப்பியம் முதலானவற்றைக் களப்பிரர் காலத்தை நோக்கிப் பின்னுக்குக் கொண்டு வருபவர்களை அவர் ஏற்கவும் தயாராக இல்லை .

மயிலை சீனி. வேங்கடசாமியவர்களின் சிறப்பு என்பது நான் முன்பே குறிப்பிட்டவாறு தமிழ் மரபிலிருந்து சமணத்தையும் பவுத்தத்தையும் ஒதுக்கி அந்நியமாக்குவது இயலாது என்பதை வற்புறுத்தியதிலும் அதன் வாயிலாகத் தமிழ்த் தொன்மையின் பன்மைத் தன்மையை வலியுறுத்தியதிலேயுமே அடங்கியுள்ளது.

வேங்கடத்தைத் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பகுதியாக ஏற்றுக் கொள்ளும் வேங்கடசாமி எடுமை நாட்டை, களபப்புப் பகுதியை தமிழிலிருந்து முற்றிலும் வேறுபடுகிற கருநாடக தேசம் என்கிறார். அதே தருணத்தில் பிற சைவத் தமிழறிஞர்களைப் போல களபப்புப் பகுதியைச் சேர்த்தவர்களான களப்பிரரை அந்நியர்களாகவும், எதிரிகளாகவும் கட்டமைக்கத் தயாராக இல்லை. அவர்களைத் தமிழகத்துக்கு அண்மையில் இருந்தவர் எனவும் திராவிட இனத்தவர் எனவும் அனைத்துக் கொள்ளும் பாங்கு குறிப்பிடத்தக்கது. களப்பிரர் காலத்தை interregnum ஆகவும் களப்பிரரை அவர் interlopers ஆகவும் அவர் கருதவில்லை. களப்பிரர் காலத்தில் சைவம் சற்றே தாழ்வுற்றிருந்திருக்கலாம். அதன் பொருட்டு தமிழ்ப் பண்பாடு அழிவுற்றது எனச் சொல்ல இயலாது என்று கருதும் அவர் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மையைக் காட்டிலும் தொடர்ச்சியையும் ஏற்றத்தையுமே காண்கிறார்.

சமூகத்தின் பன்மைத் தன்மையை ஏற்றுக் கொண்டவராயினும் வரலாற்று இயக்கத்தில் அடித்தள மக்களின் (Subalterns) பங்கிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் பார்வையை அவர் பெற்றிருந்தாரில்லை. மீண்டும் வரலாறு என்பதை அரச வமிச வரலாறாக, அணுகும் பார்வையே அவரிடமிருந்தது. வரலாற்று இயக்கத்தில் அரச நடவடிக்கைகட்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சமூக வளர்ச்சி, உற்பத்தி வடிவங்கள், சமூக உருவாக்கம் ஆகியவற்றிற்கு அளிக்கவும் இவற்றினடியான முரண்பாடுகள் ஆகியவற்றினடிப்படையில் வரலாற்று இயக்கத்தைப் பார்க்கவும் அவர் தயாராக இல்லை. எனவேதான் சங்கப் பொற்காலத்தின் வீழ்ச்சிக்கு அன்றைய போர்ச்சூழலே காரணமென்றும், ஓயாத போரின் விளைவால் பலவீனமுற்ற தமிழ் நாட்டின் மீது பிறநாட்டார் படையெடுப்பு சாத்தியமாயிற்று என்றும் களப்பிரர் காலத்தோற்றத்தை அவர் விளக்க வேண்டியதாயிற்று. சங்க காலப் போர்ச் சூழலின் பின்னணி குறித்து அவர் யோசிக்கவில்லை.

களப்பிரர் வீழ்ச்சி குறித்தும் அவரால் முழுமையாக விளக்க இயலவில்லை. சமண மத ஆதரவு இருந்த போதிலும் களப்பிரருக்கு நாட்டில் அரசியலாதரவு இல்லை என்று சொல்வதோடு முடித்துக் கொள்ள வேண்டியதாகிறது. யாருடைய அரசியலாதரவு? பாண்டிய, பல்லவ, சோழ மன்னர்களுக்குக் கிடைத்த அரசியலாதரவு களப்பிரர்க்குக் கிடைக்காமற் போனதேன் முதலான கேள்விகட்கு வேங்கடசாமியிடம் பதிலில்லை.

களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகக் குறித்த சைவ அறிஞர்கள் அனைவரும் வேள்விக்குடிச் சாசனத்தையே முழு அடிப்படையாகக் கொண்டதன் விளைவாக, இருண்ட காலம் என்பதை மறுக்கப் புகுந்த வேங்கடசாமி வேள்விக்குடி சாசனத்தை முழுமையாக ஒதுக்குகிறார். அதனை மறுவாசிப்புச் செய்யப் புகுந்தாரில்லை. களப்பிரர் காலத்தில் பார்ப்பனர்களுக்கான தானங்கள் இறக்கப்பட்டமை குறித்து வேள்விக்குடிச் செப்பேடு தெளிவாக இயம்புகிறது. இதை வேங்கடசாமி ஏற்கத் தயாராக இல்லை, எனினும் தானம் இறக்கப்பட்ட செய்தியை அவரால் மறுக்கவும் முடியவில்லை. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். என்ன காரணம் என அவர் விளக்கவில்லை. அவரது அணுகல் முறையில் அது சாத்தியமுமில்லை . எனவே இருண்ட காலம், விடியற்காலத்தோடு நின்றுவிடுகிறது; பகற் காலத்தை எட்டவில்லை.

4

களப்பிரர் கால ஆய்வை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றவர்கள் என இருவரைக் குறிப்பிடத் தோன்றுகிறது. ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி; மற்றவர் பர்ட்டன் ஸ்டெய்ன். களப்பிரர் காலத்தை ஆராய்வது இவ்விருவரின் நோக்கங்களுமில்லையாயினும் தமது ஆய்வு போக்கில் இவர்கள் தொட்டுச் சென்றுள்ள புள்ளிகள் வேங்கடசாமியவர்கள் விட்ட இடத்திலிருந்து மேற்செல்ல நமக்குப் பயன்படுகின்றன.

காலத்தால் ஓராண்டு பிற்பட்டதாயினும் முதலில் சிவத்தம்பியின் "ஆய்வை எடுத்துக் கொள்வோம். பழந் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்கிற அவரது நூலில் சங்ககாலச் சமூக உருவாக்கம் குறித்து பல முக்கிய சிந்தனைகளை அவர் முன் வைக்கிறார். விவசாயம் முதன்மை பெறாத (non-agriculture) சமூக அமைப்பிலிருந்து விவசாயச் சமூகமாக தமிழகம் உருப்பெறுதல், ஆரிய மயமாதல், வேந்துருவாக்கம் ஆகியவற்றைச் சங்க காலச் சமூகத்தின் முக்கிய கூறுகளாக அவர் காண்கிறார். வடக்கே ஆரியமயமாதல் என்பது அதிகம் அரசியற்தன்மையுடையதாக இருப்பதையும் தெற்கே அது அதிகம் கலாச்சார வடிவிலமைவதையும் சுட்டிக்காட்டும் பேராசிரியரின் கவனம் பார்ப்பனியமயமாதலுக்கும் விவசாயச் சமூக உருவாக்கத்திற்கு மிடையிலான உறவின் பால் திரும்புகிறது.

சங்க காலத்திற்குப் பிந்திய அரசியல் இருண்மையின்பால் கவனம் கொள்ளும் சிவத்தம்பி,

"சங்க காலப் பாண்டிய சோழ அரசியல் வரலாற்றின் ஒரு முக்கியமான
அம்சமாக உள்ளது எள்னவெனில் இந்தப் பாரம்பரியங்களின் இறுதியில் வரும் மிகப்பெரிய அரசனுக்குப் (வேந்தன்) பின்னால் உடனடியாக ஒரு அரசியல் இருண்மை {political darkness) தொடர்வது என்பதுதான். பாண்டியர்களைப் பொருத்தமட்டில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பின்னால் ஏதும் தெரியவில்லை. சோழ அரசியல் கரிகாலனுக்குப் பிறகு தகவலேதுமில்லை. சில காலத்திற்குப் பின் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்குமிடையிலான உன் தகராறு பற்றிய செய்தி மட்டும் விதி விலக்கு, சேரரிலும்கூட முக்கியத்துவமிக்க அரசர்கள் இருந்துள்ளனர். பரணரால் பாடப்பட்ட செங்குட்டுவன், இரும்பொறைக்குச் சம காலத்தவனாக இருந்திருக்க வேண்டும். எனவே சேரரிலும் கூட கடைசி அரசர்களாகிய செங்குட்டுவனும் யானை கட் சேய் மாந்தரன் சேரல் இரும்பொறையும் முக்கியமானவர்களாக உள்ளனர்." (Drama in Ancient Tamil society,NCBH, 1981 - பக், 169)

என்று கூறுவதன் மூலம் சங்க கால இறுதியில் சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூன்று வேந்துருவாக்கங்களும் உச்ச நிலைக்குச் சென்று முக்கிய அரசர்களின் ஆட்சி உருப்பெருவதைச் சுட்டிக் காட்டுகிறார். இந்த வேந்துருவாக்கங்கள் உச்சத்தை எட்டும் போது சங்க காலம் இறுதியெய்துகிறது.

இந்த வேந்துருவாக்கங்களோடு இணைகிற முக்கிய நிகழ்வுகளாகப் பேராசிரியர் சுட்டிக் காட்டுகிற அம்சங்களும் முக்கியமானவை. அவை:

(1) மூன்று முக்கிய அரசுகளும் தமிழகத்தின் மூன்று முக்கிய நதிக்கரைகளில் உருவாயின. இங்கு விவசாய வளர்ச்சியின் முக்கியத்துவம் சங்கப் பாடல்களில் உணர்த்தப்படுகின்றன. (புறம்.35, 184, 186, நற். 226, அய்ங்.29). இந்த மூன்று வேந்துப் பாரம்பரியங் களிலும் தோன்றிவருகிற முக்கிய அரசர்கள் விவசாய வளர்ச்சியோடு தொடர்புபடுத்தப் படுகின்றனர். இதன் விளைவாக நாட்டின் பொருளியல் ஒழுங்கில் மாற்றங்களை இவர்கள் விளைவிக்கின்றனர். எ.டு. கரிகாலன் காவிரிக்குக் கரை எடுத்தாள். என்பது.

(2). கடைசிப் பெருவேந்தர்கள் கரிகாலன் (புறம் 224, பட்டி), நெடுஞ் செழியன் (மதுரை.), இரும்பொறை (பதிற்.74) ஆகிய மூவரும் வேதச் சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.'

சங்க காலத்தில் இறுதி என்பது மூன்று வேந்துருவாக்கங்களும் உச்சம் பெறும் நிகழ்வோடும் இம் மூவேந்துகள் என்பன விவசாயமயமாக்கலுடனும், ஆரியமயமாக்கலுடனும் இணைந்துள்ளதையும் சுட்டிக் காட்டும் சிவத்தம்பி அவர்கள் இவ்வேந்துகளின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கீழ்க் கண்டவற்றைச் சுட்டிக் காட்டுவார். அவை:

(1) வலிமையான வாரிசுகள் உருவாகவில்லை .

(2) ஏற்படுத்திய மாற்றங்கள் ஒரு வலிமையான மத்திய அதிகாரம்


என்பதைத் தேவையற்றதாக்க வில்லை.

(3) புதிதாக உருவான பிரபுக்கள் (aristocrazy) பணக்காரர்கள், வணிகர்கள் ஆகியோரின் முன்பாக அரசியல் ரீதியாகப் பலவீனமடைந்த வேந்தர்கள் நிற்க முடியவில்லை. வேந்தர்கள், வேள்வி/வேதங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாயின் இந்தப் புதிய அதிகார மய்யங்கள் பவுத்த, சமண மதங்களுடன் தொடர்புடையனவாக இருந்திருக்கக் கூடும். களப்பிரர் காலத்தில் இம் மதங்கள் ஒங்கி நின்றன.

எனவே பேராசிரியரின் கருத்துப்படி களப்பிரர் காலம் என்பது விவசாய மயமாக்கலின் விளைவாக உருவான புதிய பிரபுத்துவம் எழுச்சி பெற்ற காலம் என்றாகிறது. வேந்தர்கள் வைதீக மயமானபோது இந்தப் புதிய பிரபுத்துவம் மட்டும் அவைதீக மரபில் தம்மை இனம் கண்டதேன்? வேந்துகள் பலவீனப்பட்டதால் புதிய பிரபுத்துவத்தின் கை ஓங்கியது என்பதும் பொருத்தமாய்ப்படவில்லை. அதேன் மூன்று பாரம்பரியங்களும் ஒரே சமயத்தில் பலவீனமடைந்தன? அதெப்படி வலிமையான வாரிசுகள் ஒரே நேரத்தில் உருவாகவில்லை? சிவத்தம்பியவர்களின் ஆய்வு இந்தக் கேள்விகட்கு விடையளிப்பதாயில்லை. விவசாய மயமாதலினால் உருவான புதிய பிரபுத்துவம் அவைதீக மரபைச் சார்ந்ததாக இருந்தது எனச் சொல்வது பிற ஆதாரங்களுடன் பொருந்துவதாகவும் இல்லை.

சிவத்தம்பியவர்கள் மார்க்சிய ஆய்வு முறையை ஏற்றுக் கொண்டவர். உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகளுக்கிடையிலான முரண்டாட்டில் வரலாற்று இயக்கத்தைக் காண்பவர். எனினும் மையப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் உருவாக்கம் என்பது வளர்ச்சிக்கு இன்றியமையாத நிபந்தளை என நம்புபவர். விவசாயமயமாக்கலினால் உருவான புதிய ஆதிக்க வர்க்கங்களின் பால்தான் அவர் கவனம் சாய்கிறதேயொழிய விவசாயமயமாக்கலினால் தமது மண்ணையும் வாழ்வையும் இழந்த அடித்தள மக்களின்பால் அவர் பார்வை திரும்பவில்லை.

"களப்பிரர் படை எடுப்பு (invasion) நாம் இதுகாறும் பார்த்தது போல, ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் உருவாக்கத்திற்கு (unified political entity) வழிவகுக்கலில்லை . பல்வேறு பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் சிதறுண்டு அரசமைத்ததின் மூலம் பொதுவான குழப்பம் களப்பிரர் ஆட்சியில் மேலும் அதிகமாகியது” (அதே நூல், பக் 181-அழுத்தம் நமது)

என்று அவர் கூறுவதிலிருத்து களப்பிரர் காலம் என்பது பெருங்குழப்பமான காலம் என்கிற முந்தைய ஆசிரியர்களின் கருத்துக்களிலிருந்து அவர் பெரிதும் வேறுபடவில்லை என்பது விளங்குகிறது. குழப்பத்திற்கே களப்பிரர்கள்தான் காரணம் என்று சைவ அறிஞர்கள் சொன்னார்களெனில் சிவத்தம்பியவர்கள் குழப்பத்தின் விளைவாகவே களப்பிரர் படையெடுப்பு சாத்தியமாயிற்று என்றும் களப்பிரர் வரவால் குழப்பம் மேலும் அதிகமாயிற்று என்றும் முடிக்கிறார். அரசியல் ரீதியாகக் சிதறுண்டு போதலுக்கு (Political fragmentation) எதிரான குரலை வலிமையாக ஒலிக்கும் பேராசிரியர் இத்தகைய சிதறுண்டு போதலுக்கு எதிரான கருத்தை ஒலித்து ஒரு பெரிய அரசுருவாக்கத்தின் தேவையை வற்புறுத்திய காவியமாகவே சிலப்பதிகாரத்தைக் காண்கிறார் (பக். 182).

சங்க கால வீழ்ச்சியின் பிரதான கூறுகளைச் சரியாகவே இனங்கண்ட சிவத்தம்பி, களப்பிரர் கால சமூக இயக்கத்தையும் முரண்களையும் சரியாக விளக்க இயலாமற் போனதைக் கண்டோம். பர்ட்டன் ஸ்டெய்னின் ஆய்வு (1980) இப்பகுதி ஓரளவு துலக்கம் பெறுவதற்கு தமக்கு உதவுகிறது.

வமிச பாரம்பரிய நோக்கிலிருந்து வரலாற்றை எழுதுவது ஸ்டெய்னின் நோக்கமன்று. தென்னிந்தியாவில் மத்திய காலத்தில் அமைத்த விவசாயச் சமூகம் மற்றும் விவசாயம் சார்ந்த அரசமைப்பை ஆய்வு செய்தவர் அவர். இனக்குழுச் சமூகங்களை அழித்துத்தான் உலகெங்கிலும் விவசாயச் சமூகங்கள் நிலைபெறுகின்றன. இனக்குழுச்சமூகங்களிடையே புழக்கத்தில் இருந்த நீர்ப்பாசனத்தை நம்பியிராத புராதன விதைப்பு முறை என்பது தொழில் நுட்ப ரீதியில் விவசாயச் சமூகங்களின் சாகுபடி முறையைக் காட்டிலும் மிகவும் உற்பத்தித் திறன் குறைந்த ஒன்று. ஏரி, குளம் முதலானவற்றில் நீரைத் தேக்கி ஆறுகளின் கரைகளை உயர்த்தி, பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் விவசாயச்சமூகங்களின் இன்னொரு முக்கிய பண்பு அவை ஆற்றங்கரைகளிலும் சமவெளிகளிலும் அமைந்த வளமான வண்ட ல் மண் பகுதிகளில் நிரந்தரக் குடிகளாக (Agriculture settlements) உருப்பெறுவது. இனக்குழுக்களின் புராதன விதைப்பு முறையோ இடம்விட்டு இடம் பெயரும் (swifting/shifting cultivation) தன்மையிலானது. இவ்வகையில் நிரந்தரக் குடியிருப்புகளாக உருப்பெறும் (sedantary) விவசாயச் சமூகங்களையும் சற்றே நாடோடித் தன்மையிலான (nomadic) இனக்குழுச் சமூகங்களையும் வேறுபடுத்திப் பார்த்தல் அவசியம். உற்பத்தித் திறன் வாய்ந்த விவசாயச் சமூகங்கள் உற்பத்தித் திறன் குறைந்த புராதன இனக்குழுச் சமூகங்களை அழித்தொழித்ததும், இரண்டாம் நிலைக் குடிமக்களாக விவசாயச் சமூகத்திற்குள் அவர்களை உட் செரித்துக் கொண்டதுமே உலக வரலாறாக இருந்து வந்துள்ளது. விவசாயச் சமூகம் உருப்பெற்று நிலைபெறுவதற்கு இடைப்பட்ட காலமென்பது பாசன அடிப்படையிலான விவசாயச் சமூகத்திற்கும் பாசனம் சாராத இனக்குழுச் சமூகத்திற்கும் இடையில் கடும் முரண்களும், எதிர்ப்புகளும், ஆயுதம் தாங்கிய கலவரங்களும் நிறைந்ததாகவே இருந்தது.

சங்ககால இறுதி தொடங்கி களப்பிரர் காலத்திறுடாக நடைபெற்ற இந்த எதிர்ப்புகள் மீது கவனத்தை ஈர்க்கிறார் ஸ்டெய்ன். சங்க காலத்தில் இத்தகைய விவசாய மயமாதல் தொடங்குகிறது. இனக் குழுச் சமூகங்களை அழித்து வேந்துகள் உருவாகின்றன. விவசாய மயமாதலுடன் வேத்துருவாக்கங்கள் இணைத்திருந்ததை முன்பே பார்த்தோம். சங்க காலத்தின் இறுதியில் உச்சம் பெறுகிற விவசாய உருவாக்கம் பின்னர் திடிரென வீழ்ச்சியுறுவதையும் பார்த்தோம். பல்லவர்களுக்கு முந்திய இக் கால கட்டத்திய முரண்கள் கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரி முதலானவற்றில் வெளிப்படுவதை ஸ்டெய்ன் சுட்டிக்காட்டுகிறார். இது குறித்து அவர் சொல்லுவதைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிச் சொல்லலாம்.

"பல்லவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் தமது அதிகாரங்களை அதிகரித்துக் கொண்டவர்களாக விளங்கிய தாழ்திலச் சமவெளி (low land plain) மக்களுக்கும் மலைசார்ந்த மற்றும் புன்செய் நிலங்(hilly and dry lands) களைச் சேர்ந்த அச்சத்திற்குரிய மக்களுக்குமிடையே இருந்த விரோதத்தை (hostility) இப்பாடல்கள் (வேட்டுவவரி, கலி,...) குறிக்கின்றன. சங்க இறுதியில் வளத்திலும் சனச்செறிவிலும் (populots) மிக்கவர்களாக இருந்த விவசாயச் சமூகங்கள் மேய்ச்சல் இன (ஆயர்கள்) மற்றும் மீன் பரவர் குழுக்களில் பெரும்பாலானவற்றை உட்செரிப்பதில் (assimilating) வெற்றியடைந்திருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த விவசாயச் சமூகங்களின் வளங்கள் (சமவெளி, வண்டல் நிலங்கள் முதலியன) இந்த இனக்குழு மக்களுக்குக் சுவர்ச்சிகரமாய் இருந்திருக்கும். குறிப்பிடத்தக்க நலன்களை அளிப்பதாகக் சொல்லி {substantial advantages) மலைசார்ந்த மற்றும் புன்செய் நில மக்கள் விவசாயச் சமூகங்களின் விளிம்புகளாக உட்செரிக்கப்பட்டனர். எனினும் இந்த விவசாயம் சாராத மக்களில் ஒரு குறிப்பிடத்தக்க அளவினர் ஆங்காங்கு சிதறுண்டு தனித்தனிக் குழுக்களாய்க் (Scattered isolated pockets) கிடந்தனர். இந்தத் துணைக் கண்டத்திலும் தென் கிழக்கு ஆசியாவின் ஏனைய பகுதிகளிலும் சமவெளி மக்களுக்கும் மலைசார்ந்த மற்றும் புன்செய் நில மக்களுக்குமிடையிலான இழுபறி (tension) நீண்ட காலம் நிலவியது போலவே இங்கும் இருந்தது' (Peasant state and society

in Medival South India, OUP, 1980 பக். 75)

என்று இங்குள்ள நிலையைத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளோடு ஒப்பிட்டுச் சொன்னாலும் ஒரு வேறுபாட்டையும் ஸ்டெய்ன் குறிப்பிட்டுச் சொல்வார். தென்னிந்தியாவில் இந்த இழுபறி ஒப்பீட்டளவில் அதிக காலம் நீடித்தது. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, இங்கே விவசாயம் சமூகம் ஒற்றைப் பெருஞ் சமூகமாக உருத்திரளவில்லை. தாக்குதல்களுக்கு வாய்ப்பான (vulnerable to raids) சிதறுண்ட விவசாயக் குடியிருப்புகளாகவே அவை அமைந்தன. மலைத் தொடர்கள் குறுக்காக நீளும், தென்னிந்தியப் புவியியல் இதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம். எனவே மலைசார்ந்த மற்றும் புன்செய் நிலக்குடிகள் முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட இயலாதவர்களாக இருந்தனர். தவிரவும் இவர்கள் விவசாயச் சமூகத்திலிருந்து தங்களை முற்றிலுமாய்த் துண்டித்துக் கொள்ளவுமில்லை. பௌதிக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இரு பிரிவினருக்குமிடையே ஒரு அருகாமை (Physical and cultural proximity) இருந்து வந்தது. இது மேலாண்மைக்கான ஒரு தொடர்ச்சியான போராட்டமாக நீண்ட காலம் நீடித்தது. இந்தப் பின்னணியிலேயே களப்பிரர் காலத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார் ஸ்டெய்ன்,

இது வரை வரலாற்றாசிரியர்களால் முன் வைக்கப்பட்டது போல களப்பிரர் என்போர் வெளியிலிருந்து வந்த படையெடுப்பாளர்களா? இல்லை, அது உள்நாட்டுக் குடிகளின் வெற்றியா? ஒற்றைக் குலத்தைச் சேர்ந்தவர்களா? பல்வேறு படை எடுப்பார்களா? கிடைக்கும் சான்றுகளை வைத்துக் கொண்டு உறுதியாக ஒன்றும் சொல்ல இயலவில்லை எனக் கூறும் (பக். 76) ஸ்டெய்ன், சமவெளிகளின் உள்ளூர்த் தலைமைகளும் (local chiefs) கிராமங்களில் தானங்கள் பெற்று வாழ்ந்திருந்த பார்ப்பனர்களும் இவர்களால் கீழிறக்கப்பட்டது (abused) என்பது மட்டும் தெரிகிறது என்கிறார். சமவெளிப் பகுதி மக்களிலிருந்து வேறுபட்ட இந்த வெற்றியாளர்கள் பவுத்த, சமண நிறுவனங்களைத் தவிர சில இந்து நிறுவனங்களுக்கும் ஆதரவளித்தனர் என்றும் ஸ்டெய்ன் குறிப்பிடுவார். இறுதியாக,

களப்பிரர் இடைவெளி (Kalabra Interegnun) எனச் சில நேரங்களில் குறிப்பிடப்படுகிற இக்காலகட்டம் என்பது விவசாயம் சாராத மக்கள் non-peasant people) ஒரு குறிப்பிட்ட அளவிலான விவசாயச் சமூகத்தையாவது தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சிகளின் காலமாக இருந்திருக்கலாம். தீபகற்பத்தின் தென் கோடியில் இது நிகழ்ந்திருக்கலாம். இங்குதான் பாண்டியரின் சாசனங்கள் கடுஞ் சொற்களில் களப்பிரர்களைக் குறிக்கின்றன. பாண்டிய நாடாயினும் அல்லது வேறெங்காயிலுஞ்சரி இந்தத் தாக்குதல் (Onslaught) என்பது விவசாயுச் சமூக விரிவாக்கத்திற் கெதிரான விவசாயம் சாராத மக்களின் நீண்டட கால ஆயுதத் தாங்கிய போராட்டத்தின் உச்ச இறுதியில் நிகழ்ந்திருக்க வேண்டும். சோழமண்டல விவசாயக் கலாச்சாரத்தின் முக்கியமான கூறுகளை ஏற்றுக் கொள்ளாமலே விவசாயம் சார்த்தவர்களின் மீதான தங்களின் செல்வாக்கை நீலகண்ட சாஸ்திரியால் 'தொல்லைதரும் இடைமறிப்பாளர்கள்' (interlopers) என அழைக்கப்பட்டவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும். (ஆனால்) இவர்களின் இந்த முயற்சி தோற்றது. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கிலும் மத்தியிலும் உள்ள சமவெளிகளில் பல்லவர்களும், தெற்குச் சமவெளியில் பாண்டியர்களும் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பின்பு எக்காலத்திலும் விவசாயச் சமூகத்தின் ஆதிக்கம் வீழவேயில்லை ."

(அதே நூல்.பக். 77) ,

என்று குறிப்பிடும் பர்ட்டன் ஸ்டெய்ன் களப்பிரரின் வீழ்ச்சிக்கான காரணத்தைத் தொட்டுக் காட்டுகிற புள்ளி மிக மிக முக்கியமானது. மலைசார்ந்த மற்றும் புஞ்சை நிலப்போர்ச் சமூகங்கள் தொடர்ந்து விவசாயக் குடியிருப்புகளின் விளிம்புகள் மீது தாக்குதல்கள் புரிந்த போதும், கன்னடத்தில் ஹொய்சளர்களைப் போல வெகுசில சந்தர்ப்பங்களில் மட்டுமே விவசாயச் சமூகத்தின் மீதான இந்த ஆதிக்கம் வெற்றி பெற்றது. வெற்றி பெறும் போது அது இரு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது என்கிறார் ஸ்டெய்ன் அவை:

(1) இந்து மதம், பார்ப்பன நிறுவனங்கள் ஆகியவற்றை வணங்கி ஏற்பது, ஆதரிப்பது.

(2) விவசாயச் சமூகங்களின் ஆதிக்க சக்திகளாக விளங்கிய உள்ளூர்த் தலைமைகளை (locality chiefs) அங்கீகரித்து ஏற்பது.

(அதே நூல் பக். 77)

களப்பிரர் காலத்தில் விவசாயம் சாராத மேட்டு நில மக்களின் மேலாண்மை முயற்சி தோற்றதற்குக் காரணம் இந்த இரு அம்சங்களையும் அவர்கள் ஏற்கத் தவறியதுதான் என்கிறார் ஸ்டெய்ன். பார்ப்பன நிறுவனங்களையும், இந்துப் பண்பாட்டையும், பார்ப்பன வேளாள உள்ளூர் ஆதிக்க சக்திகளையும் அவர்கள் ஏற்கவும், வணங்கவும் மறுத்ததே காரணம் என்கிற ஸ்டெய்னின் கூற்று. வேங்கடசாமி குறிப்பிடும் அரசியலாதரவு இல்லாமற் போனதற்கான காரணத்தைத் தொட்டுக் காட்டி விடுகிறது.

ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இராணுவ மேலாதிக்கத்திலும் கலாச்சார மேலாண்மையிலும் தன்னை உறுதி செய்து கொண்ட விவசாயச் சமூகம், விவசாயம் சாராத பாக்களையும் அவர்தம் வளங்களையும் சில நேரங்களில் மெதுவாகவும் சில நேரங்களில் வேகமாகவும் அபகரித்து வளர்ந்தது என முடிக்கிறார் ஸ்டெய்ன். விவசாயம் சாராத இப் போர்ச் சமூகத்தினர் சமண பவுத்த மதங்களால் ஈர்க்கப்பட்ட காரணம் என்னவெனில் இந்துப் பிரிவினருடன் பிணைத்திருந்த சமகால விவசாயப் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொள்ளாமலேயே ஆரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் இந்த (அவைதீகச்) சமயங்கள் அவர்களுக்கு வழங்கின என்கிற அவரது கருத்தும் மிக முக்கியமானது.

5

மயிலை சீனி. வேங்கடசாமி, கார்த்திகேசு சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ன் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துக் கொள்வதற்கு முன்பாக, களப்பிரர் காலம் குறித்து அறிந்து கொள்வதற்கான முக்கிய ஆவணங்களில் ஒன்றாய்த் திகழ்வதும், வேங்கடசாமியவர்களால் சற்றே ஒதுக்கி வைக்கப்பட்டதுமான வேள்விக் குடிச் சாசனத்தைச் சிறிது வாசிக்க முயல்வோம். 'செந்தமிழ்' 20ம் தொகுதி; Epigraphica India Vol XVII,1923-291/1309; 'பாண்டியர் செப்பேடுகள் பத்து', கழகம், 1967 ஆகியவற்றிலும் பாண்டியர் மற்றும் களப்பிரர் வரலாறு கூறும் வேறு சில நூற்களிலும் இதனை முழுமையாகக் காண இயலும்.

தனது களப்பிரர் குறித்த நூலில் (முன் குறிப்பிட்டது) பின்னிணைப்பாகச் சாசனத்தின் தமிழ்ப்பகுதியை முழுமையாக வெளியிட்டு, அதில் கண்ட சுமார் பதினேழு சொல்லாட்சிகட்கு விரிவாக விளக்கமெழுதுவார் மு.அருணாசலம், களப்பிரர் தமிழரல்லர் என்பதற்குரிய ஆதாரங்களில் ஒன்றாக களப்பிரர் என்னும் சொல் சாசளத்தில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளதைச் கட்டிக் காட்டுவார் அவர். களப்பிரரால் முடியிறக்கப்பட்ட தமிழ் ஆதிராசர்களையும்கூட கிரத்தத்திலேயே குறிப்பிடுவது ஏன் என்பதை அவர் விளக்கினாரில்லை . பெருவழுதி, தேர்மாறன், தற்கொற்றன், கேள்வி அந்தணாளர், நீடு புக்தி துய்த்தபின், ஆதிராஜர், கலியரசன், மானம் போர்த்த தானை வேந்தன், மதுபமல், மேல் நாள், நின்குரவர்கள், பால் முறையின் வழுவாமை, நாட்டால் நின் பழமையாதாய், நற்சிங்கள், அங்கு அப்பொழுதே முதலான சொற்களுக்கு நீண்ட விளக்கங்கள் எழுதச் சிரமம் எடுத்துக் கொள்ளும் அருணாசலம் கண்டு கொள்ளாத வேறுசில சொற்கள், வாக்கியங்களின் பால் தாம் திரும்புவோம். முக்கியமாய்ப்படுகிற சிலவற்றைப் பார்க்குமுன் இச்சாசனம் குறித்த ஒரு சிறு குறிப்பு:

பராந்தகன் நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஒரு நாள் மதுரையில் நகர் வலம் வருகையில் கொற்கைக் கிழான் நற்சிங்கன் என்றும் பார்ப்பனன் அவன்முன் வீழ்ந்து ஒரு முறையீட்டைச் சமர்ப்பிக்கின்றான். நெடுங்சடையனின் முன்னோனும் சங்க காலப் பாண்டியனுமாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் காலத்தில் நற்சிங்கனின் முன்னோனாகிய நற்கொற்றன் என்னும் பார்ப்பனன், அரசனுக்காக ஒரு வேள்வி நடத்திக் கொடுத்தான் எனவும், அதற்குப் பரிசாகப் பாண்டிய மன்னன் பாகலூர்க் கூற்றத்தைச் சேர்ந்த வேள்விக்குடி என்னும் கிராமத்தை அப்பார்ப்பனின் பரம்பரைக்கு மானியமாகத் தாரை வார்த்துக் கொடுத்தான் எனவும், அந்த மானியத்தைப் பாண்டியருக்குப் பின் வந்த களப்பிரர் என்னும் கலியரசர் பிடுங்கிக் கொண்டதாகவும், தனக்கு உரிமையான அதை மீண்டும் திருப்பித் தர வேண்டும் எனவும் தற்சிங்கன் முறையிடுகிறான். ஆவணங்களைப் பரிசீலித்த நெடுஞ்சடையன் அவ்வாறே அப்பார்ப்பனனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் வேள்விக் குடியைத் திருப்பித் தருகிறான். வடமொழியிலும் தமிழிலும் ஆக்கப்பட்ட பதினெட்டு பக்கங்களிலானது இச் செப்பேடு, இதில் களப்பிரரை வீழ்த்திய கடுங்கோன் தொடங்கி நெடுஞ்சடையன் ஈறான பாண்டிய வமிசப் பரம்பரையும் அவர் தம் பெருமைகளும் விரிவாய்ச் சொல்லப்படுகின்றன. இனி சில முக்கிய வரிகள்!

சுருதி மார்க்கம் பிழையாத கேள்வியந்தணாளர் வேள்வி முற்றுவித்து" (வரி 5,6) வேள்விக்குடியைப் பெற்றனர்.

அளவரிய ஆதிராஜரை அகல நீக்கு அகலிடத்தைக் களப்பிரன் என்னும் கலியரசன் கைக் கொண்டதனை இறக்கி" (வரி 11, 12) பாண்டியன் கடுங்கோனின் சாதனை.

"பிறர்பாலுரிமை திறவிதி நீக்கித் தன்பாலுரிமை நன்களம் அமைத்த மானம் பேர்த்த தானை வேந்தன்" (வரி 19-20-21) கடுங்கோன்.

“மகீதலம் பொதுநீக்கி" (வரி 24)...." மண்மகளை மறுக்கடித்து" (வரி 29) அரசாண்டவன் அவன்

"விரவி வத்தடையாத பரவரைப் பாழ்படுத்தும், அறுகாலினம்

புடைதிளைக்கும் குறுநாட்டவர் குலங்கெடுத்தும், கைந் நலத்த களிறுத்திச் செந்திலத்துச் செருவென்றும்” (வரி: 36, 37, 38) - பாண்டியப் பெருமைகள்

"வியன் பறம்பு மேலாமை சென்தெறித்து அழித்தும், ஹிரண்ப கர்ப்பமும் துலாபாரமும் தரணி மிசைப் பல செய்தும் அந்தணர்க்கும் அசக்தர்க்கும் வந்தணைக என்றீத்தவித்த" (வரி 43, 44, 45) - பாண்டியப் பெருமைகள்

"அறைகடல் வளாகம் பொதுமொழி அகற்றி" (வரி 11) - பாண்டியப் பெருமை

"எண்ணிறந்தன கோசசுகிரமும் இரணியகர்ப்பமும் துலாபாரமும் மண்ணின் மிசைப் பல செய்து மறை நாவினோர் குறை தீர்த்து, கூடல், வஞ்சி, கோழி, என்றும் மாடாமதில் புதுக்கி" (வரி 80, 81, 83,) அரசாண்டவர் பாண்டியன்

"கலியரசன் வலிதளரப் பொலிவினோடு வீற்றிருந்தான் (வரி 89)பாண்டியர்

"ஆய்வேளையும் குறும்பரையும் அடலமருள் அழித்தோட்டிக் காட்டுக் குறும்பு சென்றடைய நாட்டுக் குறும்பிற் செறுவென்று..." (வரி 96, 97)- அரசாண்ட பாண்டியர்.

“வேள்விக்குடி எனப்பட்டது கேள்வியிற் தரப்பட்டதனைத் துளக்கமில்லாக் கடற் தானையாய் களப்ரராலிறக்கப்பட்டது" (வரி119, 120). (அழுத்தங்கள் அனைத்தும் நமது)

இவ்வரிகளில் பலவற்றிற்கு விரிந்த விளக்கம் தேவையில்லை. பாசன விவசாயம் சாராத பல்வேறு குழுக்களை வென்றழித்து அவரது நிலங்களைக் கைப்பற்றியவர்கள் என்றும், இரண்ய கர்ப்பமும் துலாபாரமும் மண்ணின் மிசைப் பல செய்து, மறை தாவினோராகியப் பார்ப்பனர்களின் குறை தீர்த்தவர்கள் என்றும் பாண்டிய மன்னர்கள் போற்றப்படுகின்றனர். இது குறித்து எந்த விளக்கங்களையும் அருணாசலம் அளிக்க முயலவில்லை . வேங்கடசாமியும் இவற்றை ஒதுங்கிச் சென்று விட்டார். சிவத்தம்பி, ஸ்டெய்ன் ஆகியோர் சுட்டிக் காட்டிய தரவுகளைப் பரிசீலித்த நம்மால் அப்படிச் செய்ய இயலவில்லை.

வேள்விக்குடிச் சாசனத்தில் மிக முக்கியமாகக் கவனம் குவிக்க வேண்டிய ஒரு சொல் பொது (வரிகள் 24 மற்றும் 54.) "மகீதலம் பொது நீக்கியும், "அறைகடல் வளாகம் பொது மொழி அகற்றி"யும் அரசாண்டவர் பாண்டியர் என்கிறது சாசனம். விவசாயம் சாராத மக்கட் குழுக்களை வென்றதோடன்றி அங்கு நிலவிய பொது நிலையை நீக்கியும் அங்கு வழக்கத்திலிருந்த பொது என்கிற மொழியை (discourse) அகற்றியும் பாண்டியர் அரசாண்டனர் என்பது குறிப்பு. பொது என்பதன் மூலம் சாசனம் என்ள சொல்லவருகிறது? சாசனத்தை ஆதாரமாகக் கொண்ட யாரும் இதுவரை அதனை விளக்கினாரில்லை . '

மலைசார்ந்த மற்றும் பாசன வசதியற்ற நிலங்களில் வசித்த மக்கட் தொகுதியினர் மத்தியில் புழக்கத்திலிருந்த இருக்கிற சாகுபடி முறையே 'பொது' என அழைக்கப்படுகிறது. இரு சான்றுகள் கொண்டு அதனை இங்கு சந்தைக்காகவும், திருவிழாவிற்காகவும் சமவெளிக்குச் செல்லலாம்.நிறுவ இயலும். ஆந்திராவில் கோதாவரி ஆற்றையொட்டிய 'குடம் ரம்பா' மலைச் சரிவில் வாழ்கிற கோயா, மலைரெட்டி, கொண்ட பாகவதர்கள் முதலான மலையின மக்கள் மத்தியில் புழக்கத்திலுள்ள சாகுபடி முறைக்குப் 'பொது' எனப் பெயருள்ளதை வரலாற்றறிஞர் டேவிட் ஆர்னால்டு குறிப்பிடுகிறார் (Rebellious Hlimer: The Gudem, Rampa Risings 1839-1924, Subaltern Studies Vol 1, Oxford, 1982) இம் மலையின மக்கள் குறித்து கிறிஸ்தோப் வான்ப்பூரர் ஹெய்மன்டோர்ஃப் என்னும் மானுடவியலாளர் விரிவாக ஆய்வு செய்துள்ளார் (The Reddis of the Bison Hills: A study in occuturation, 1945), இச்சமூகம் குறித்து இவர்கள் சொல்வதைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிச் சொல்லலாம் (பார்க்க: கர்னால்டின் கட்டுரை! பக். 94-96, 115-123.)

"பெரும்பாலும் சுய தேவைப் பூர்த்திப் பொருளாதாரம்; இடம் பெயர் சாகுபடி (shifting cultivation); தளரக் கட்டமைக்கப்பட்ட சமூகம் சமீன்தார்களைப் போன்ற உள்ளூர்த் தலைவர்கள் முக்தாதார்கள்,/ முட்டாதார்கள் எனப்படுவர். காட்டைத் தூய்மை செய்து திணை, கிழங்கு வகைகளைச் சாகுபடி செய்யும் அவர்களது வழக்கமான விவசாய முறைக்குப் பொதுச் சாகுபடி என்று பெயர், ஒரு மலையாளி, தனது நெருக்கமான இரத்த உறவினர்களின் துணையோடு காட்டில் ஒரு சிறு துண்டு நிலத்தைத் தேர்வு செய்கிறார். கோடையில் அங்குள்ள மரம் செடி கொடிகளை வெட்டி, எரித்து சாகுபடிக்குத் தகுந்த வெளியாக்குகிறார், கலப்பை இல்லாத நிலையில் தாறுமாறாகக் குச்சி கொண்டு கிளறப்பட்ட நிலத்தில் விதைகளைத் தூவுகிறார். இரண்டு அல்லது மூன்றாண்டுகட்குப் பின்னர் அந்த நிலத்தின் உற்பத்தித் திறன் குறைந்த பின்னர் தேர்வு செய்வர். அவர்கள் மத்தியில் நிலம் என்பது வாங்க, விற்கக் கூடிய ஒரு பொருளல்ல. புளி, பலா போன்ற மரங்களின் மீது வேண்டுமானால் பாத்தியதை உரிமைகளை அவர்கள் கோரலாம். சொந்த இரத்த உறவுகளுக்கப்பால் எந்த ஒத்துழைப்பையும் கோராத (அதாவது கூலியாட்கள், குத்தகை முதலான சுரண்டல்களுக்கு வாய்ப்பில்லாத) பொதுச் சாகுபடி இது. வெளியிலுள்ளவர்களுக்கு (அதாவது சமவெளி விவசாயச் சமூகத்திற்கு) எதிரான ஒரு அடையாளத்தையும் பொது உணர்வையும் இது அவர்களுக்கு வழங்கியது .....எப்போதேனும் அவர்கள் எனிலும் பெரும்பாலும் இம்மலையாளிகள் (Hillmen) தமது பொதுச் சாகுபடியுடன் பிணைத்தே கிடந்தார்கள்"

(அழுத்தங்களும் அடைப்புக் குறிக்குள் உள்ளவையும் நம்முடையன).
என்று பொதுச் சாகுபடியை விளக்குவார் டேவிட் ஆர்னால்டு, அந்த நிலத்தை ஒதுக்கிவிட்டு வேறொரு துண்டு நிலத்தை அவர்கள்

வெள்ளை அரசு பொதுச் சாகுபடியைக் கட்டுப் படுத்தியது. காடுகளில் 'ரிசர்வ்' பகுதிகளை உருவாக்கி அவற்றில் பொதுச் சாகுபடியைத் தடை செய்தது. 'கோடரி வரி' முதலான புது வரிகளும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. 'பொது' வினிடத்தில் புதிய நில உறவுகள் உருவாக்கப்பட்டன. காடுகள் வணிகத்திற்குரிய பொருளாயின. மலையின் சாத்தியமான பகுதிகளில் குடியேற்ற விவசாயம் உருவாக்கப்பட்டது. இத்தகைய நடைமுறைகளின் விளைவாக மலையாளிகள் தம் சுதந்திர வாழ்வை இழந்து கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெறும் குத்தகைதாரர்களாகவோ, கூலி விவசாயிகளாகவோ, பணியாட்களாகவோ அவர்கள் மாற நேரிட்டது. பழைய முறையைச் சீரழித்த இப்புதிய மாற்றங்கள் அவர்களைத் திசையற்றவர்களாக்கியது; தோல்வியடைந்தவர்களாக உணரச் செய்தது. அரசு மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு முன்னால் அவர்கள் பலமிழந்து நின்றனர் என்கிறார் ஆர்னால்டு. இது 1800களின் இறுதியிலும் 1900களின் முதற் காற்பகுதியிலும் அரசுக்கு எதிரான பெருங்கலவரங்களாக உருவெடுத்தது.

கிட்டத்தட்ட ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முந்திய விவசாய மயமாக்கலையும், விவசாய மயமாக்களுக்கு (Seltled Agriculture) எதிரான எழுச்சியையும் இத்துடன் ஒப்பிடலாம்,

கேரளத்திலுள்ன வயனாடு பகுதியிலுள்ள மலைப் பகுதி விவசாயத்திற்கும் பொது என்கிற பெயரிருந்ததை அய்யப்பன் சுட்டிக் காட்டுகிறார். (A. Ayyappan, Report on the socio- Economic conditions of the Aboriginal tribes of the province of Madras - Quoted in K.Sivathambi, Op.clt.p.191)"வயநாடு பகுதியிலுள்ள குறிச்சியார்கள் எனப்படும் மலையின மக்கள் மத்தியில் நடைமுறையிலுள்ள பொதுச் சாகுபடிக்கு புனம் சாகுபடி என்று பெயர்" என அய்யப்பன் குறிப்பிடுவதைக் சுட்டிக் காட்டும் சிவத்தம்பி, "சங்க இலக்கியங்களில் குறிஞ்சிச் சாகுபடி விளக்கப் பட்டுள்ள மைக்கும் (புறம் 120) பதித் 58, அகம் 308, 368, குறிஞ்சி 100, நற்.5, 209 மலை 286-801...) அய்யப்பன் விளக்குகிற பொதுச் சாகுபடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை " எனக் குறிப்பிடுவது இங்கே கருதத்தக்கது. (முன்குறிப்பிட்ட நூல், பக். 154- அழுத்தம் நமது.)

பாசனம் என்கிற உயர் தொழில் நுட்பத்தோடு களம் புகுந்த விவசாயமயமாக்கல் என்கிற செயற்பாடு இந்திய, தமிழகச் சூழல்களைப் பொருத்தமட்டில் தனித்துப் பார்க்க இயலாத ஒன்றாக உள்ளது. அது பார்ப்பனமயமாக்கலுடனும் வேந்துருவாக்கத்துடனும் இணைந்து வருகிறது; பின்னிப் பிணைந்து கிடக்கிறது. பாசனஞ் சாராத உற்பத்தியை மேற்கொண்டிருந்த மக்கட் பகுதியின் அதிகாரங்களும் அவர்தம் நிலங்களும் பறிபோவதாகவும் விவசாயச் சமூகம் என்றழைக்கப்படுகிற பார்ப்பான - வேளாண் குடி மக்கள் அதிகாரம் பெறுவதாகவும் அது அமைகிறது. பாசனம் சாராத உற்பத்தியை மேற்கொண்டிருந்த மக்கட் பகுதியினரின் பொதுச் சாகுபடியும் அவர்கள் மத்தியில் நிலவிய பொது உணர்வும் அழிக்கப்பட்டன. பல்வேறுபட்ட தனியுரிமை உறவுகளுடன் விவசாயமயமாக்கல் இணைந்து நிற்கிறது.

வேள்விகளும் யாகங்களும் தழைத்தோங்கிய ஒரு விவசாயப் பண்பாடும் அத்தோடு உருக்கொள்கிறது. இது பின்னாளில் ஆலயம் சார்ந்த ஆகம வழிபாடுகளாகப் பரிணாமம் பெறுகிறது. விவசாயமயமாதல் என்பது இவ்வாறு வைதீகத்துடன் இணைந்த போது, இதனால் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலைக் குடிமக்களாகவும், அடிநிலைச் சாதியினராகவும் உட் செரிக்கப்பட்ட மக்கட் குழுவினர் அவைதீக மரபுகளோடு இனம் காண்பது தவிர்க்க இயலாததாயிற்று. புத்தர், மகாவீரர் இருவருமே இமயமலைச் சரிவிலுள்ள சாக்கியர் என்னும் இனக் குழுவில் உதித்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

தமிழகத்தைப் பொருத்த மட்டில் சங்க கால வேந்துருவாக்கங்களையும் அவர்தம் விவசாய விரிவாக்க முயற்சிகளையும், வேள்வி முதலான சடங்குகளில் அவர்க்கிருந்த ஈடுபாட்டையும், பார்ப்பானர்களுக்கு வழங்கப்பட்ட தானங்களையும் அதன் விளைவாக விளிம்பிற்குள் தள்ளப்பட்டவர்களுக்கும் விவசாயச் சமூகத்திற்குமிடையே விளைந்த முரண்களையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். ஸ்டெய்ன் குறிப்பிடுவது போல இந்த முரண்கள் மற்றும் தொடர்ந்த போராட்டங்களில் விவசாயம் சாராத அடி நிலை மக்கள் மேலாண்மை பெற முயற்சித்த காலமாகவே களப்பிரர் காலத்தைப் பார்ப்பது தகும். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் இறக்கப்பட்ட தென்பது இத்தகைய அடிநிலை மக்களது மேலாண்மையின் விளைவேயாகும். சிதறுண்டு கிடந்த இம் மக்கட் குழுவினர் ஒரு வலிமையான மையப்படுத்தப்பட்ட ஆட்சியொன்றை நிறுவ இயலாமற் போயிற்று, அவர்களது குறிக்கோளும் அதுவன்று.

தமிழகம், மலையாளம், தெலுங்கு நாடு, கருநாடகம் என்ற இன்றைய வரையறுக்கப்பட்ட அரசியல் புவியியல் எல்லைகளினூடாக அன்றைய அரசியலை நோக்க இயலாது என்பதை தாம் நினைவிற் கொள்ளுதல் அவசியம். இன்றைய கருநாடகத்திலுள்ள சிரவணபௌகோளாப் பகுதியிலிருந்த சற்றே வலிமை வாய்ந்த போர்ச் சமூகம் ஒன்று இச்சூழலில் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். அக்கால அரசியலில் இது மிகவும் இயல்பான ஒன்றுதான். இன்றைய தமிழகப் பகுதியில் களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்ற சம காலத்தில் இன்றைய தெலுங்கு நாட்டில் இங்கிருந்து சென்ற சோழநாட்டைச் சேர்ந்த ரேணாட்டுச் சோழர்கள் (தெலுங்குச் சோடர்கள்) ஆட்சி புரிந்ததையும் இலங்கையின் இன்றைய சிங்களப் பகுதிகளை இங்கிருந்து சென்ற பாண்டியர்கள் ஆட்சி புரிந்ததையும் நாம் மறந்துவிடக் கூடாது. எனவே களப்பிர ஆட்சிக் காலத்தை அந்திய ஆட்சிக் காலமாகவும், இருண்ட காலமாகவும், அக்காலகட்டத்தில் மேலாண்மை பெற்றவர்களை எதிரிகளாகவும் கட்டமைப்பது சைவ உயர்சாதி ஆதிக்க அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படலாமேயொழிய அன்றைய வரலாற்றைப் புரிந்து கொள்ளப்பயன்படாது,

வேளாண்மை சாராத இம் மக்களால் அரசியலதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலாததையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. தல அளவில் நிலை பெற்றுவிட்ட பார்ப்பன நிறுவனங்கள், உள்ளூர் பார்ப்பன வேளாள அதிகாரத் தலைமைகள் ஆகியனவும் வேளாண் சாராத இம் மக்களின் மேலாண்மைக்கு எதிராக இருந்தன. களப்பிரருக்கு அரசியலாதரவு இல்லாமற் போயிற்று என வேங்கடசாமியவர்கள் சொல்வதன் பொருள் இதுதான்.

களப்பிரர் காலம் குறித்து மேலும் விளக்கங்கள் பெற வேண்டுமானால் அக் காலத்தில் எழுதப் பெற்ற பாலி மற்றும் பிராகிருத மொழியிலான நூற்களை விரிவாக ஆராய வேண்டும். சங்க இலக்கியங்களை முற்றிலும் புதிய மறு வாசிப்பிற்குள்ளாக்க வேண்டும். அன்றைய சாகுபடி முறைகள், சீறூர் மன்னர்கள், இதர இனக்குழு மக்களின் வாழ்க்கைகள் முதலியன மறுபார்வைக்குள்ளாக்கப் பட வேண்டும். சைவத்தையும் வைதீகத்தையும் இயற்கையானதாகவும், உள் நாட்டினதாகவும் இவையல்லாத ஏனைய மரபுகளை, குறிப்பாக அவைதீக மரபுகளை அயல் நாட்டினதாகவும், எதிரியாகவும் கட்டமைக்கிற வரலாற்றுப் பார்வையிலிருந்து நாம் விடுபட வேண்டும். தமிழகம் போன்ற வேறுபட்ட புவியியற் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நாட்டினது பண்பாட்டின் பன்மைத் தன்மைகளைப் புறக்கணிக்கும் வன்முறைக்கு வரலாறெழுதியலில் இடமளிக்கலாகாது. அறிஞர் மயிலை. சீனி வேங்கடசாமி அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிற தலையாய பாடம் இதுவே.

'டிசம்பர் 13, 2000.'
55, ரோசரி சர்ச் இரண்டாம் சந்து,
மயிலாப்பூர் - சென்னை 600004.

அ.மார்க்ஸ்





குறிப்பு:நீலகண்ட சாஸ்திரி, மு.அருணாசவம், கா. சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ள், டேவிட் ஆர்னால்டு ஆகியோரின் மேற்கோள்கள் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை. முக்கியச் சொற்கள் அடைப்புக் குறியில் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.