அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/022-383

விக்கிமூலம் இலிருந்து

18. மநுக்கள்மீதில்லா சீவகாருண்யம் மாடுகளின் மீதுங் குதிரைகளின் மீதும் உண்டாமோ

இல்லை காரணம் - அன்பில்லாமெய், ஒற்றுமெயற்றமெய், பொறாமெயுற்ற மெய், தன்னவரை ஏற்குமெய், அன்னியரைத் தூற்றுமெய் வாய்ந்த தேகிகள் பத்து பெயர் ஒன்றுகூடி மற்றொருவனைப் பார்த்து இவன் புலையன், நீச்சன், தாழ்ந்த சாதியனென சொல்லிக்கொண்டே வருவார்களாயின் அவன் வித்தையும் புத்தியும் சன்மார்க்கமும் கெட்டு நாணடைந்து சீர்கெட்டுப்போகின்றான்.

இத்தகைய பொறாமெய்க்கொண்ட தேகிகள் மாடுகள் மீதுங் குதிரைகளின்மீதும் கருணைவைத்துள்ளார்கள் என்னில் நம்பத்தக்கதோ, இல்லை வாக்குக் கருணையே ஆகும்.

தன்னையொத்த மக்கள்மீது கருணையும் இதக்கமுமில்லா பாவிகள் தனக்கன்னியரூப மிருக சீவன்கள்மீது கருணையுள்ளார் என்பதைக் கனவிலும் காண்டல் அரிதேயாம்.

சுயசாதிக் கருணை சுயப்பிரயோசனக்கருணை மட்டிலும் மிக்கக் கொண்டாடுவார்கள். எவ்வகைத்தென்னில்:-

இருப்புப்பாதை இரண்டாம் வகுப்பு வண்டியில் ஓர் ஐரோப்பியர் ஏறிக்கொண்டிருக்க அதே வண்டியில் ஓர் சுதேசி ஏற அவர் தடுப்பாராயின், வெள்ளையர் ஏறியுள்ள வண்டியில் நம்மை ஏறக்கூடாதென்று தடுக்கின்றார்களே இது நியாயமாமோ, இது கருணையாமோவென்றும் இவரைப்போல் நாங்களும் இரண்டாம் வகுப்புக் கட்டணம் செலுத்தவில்லையோ என்றும் கூச்சலிடுவதுடன் பத்திரிகைகளுக்கும் பரக்க எழுதி பிரசுரிக்கின்றார்கள்.

இவ்வகை மறக்கருணை வாய்த்த மக்களேறியுள்ள மூன்றாவது வகுப்பு வண்டியில் இவனை ஒத்த கட்டணஞ் செலுத்திய ஓர் எழியமனிதன் வந்து ஏறவருவானாயின் அவனை சுதேசி என்று பாராது, தள்ளு தள்ளு வெளியில் என்று கூச்சலிடுவதுடன் தன்னையொத்த இஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிவித்து அவ்வண்டியைவிட்டு அவனை இறக்கி வேறுவண்டியில் கொண்டுபோய் ஏற்றி அல்லடையச் செய்கின்றார்கள்.

இவ்வநீதச்செயல்களை எவரும் கேட்பாரில்லை மேய்ப்பாரில்லை போலும். ஆயினுந் தன்வினைத் தன்னை சுடுமென்னும் பழமொழிக்கிணங்க,

இருப்புப்பாதை உத்தியோகஸ்தர்கள் யாவரும் யீரோஷியராக வந்துவிடுங்கால் முன்வினை பின்னே சுட்டு முதுகு பிளப்புண்பது முழு நம்பிக்கையேயாம்.

- 2:7: சூலை 28, 1908 -