கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 23

விக்கிமூலம் இலிருந்து

23


செவந்தி சின்னம்மாளை வீட்டுக்கு வரும்படி வருந்தி அழைக்கிறாள். ஆனால் அவள் வீட்டுப் பக்கம் திரும்பாமலே போய் விட்டாள். “நீங்கள் எல்லோரும் முன்னேற்றமாக வந்ததைப் பார்க்க ஆசை இருந்தது; இருக்கட்டும் அம்மா...” என்று மட்டும் சொன்னாள்.

இதைக் கேள்விப்பட்ட பிறகு அப்பன் மிகவும் தளர்ந்து போனார். அம்மாவைக் காணுந்தோறும் சண்டை. கத்தல்கள். வண்டியோட்டிக் கொண்டு எருவடிப்பார். வேலைக்குப் போவார். மாலையில் நன்றாகக் குடித்து விட்டு வருவார்.

சரோதான் அவரைத் திருத்த அன்றாடம் மல்லுக்கு நிற்பவள். “தாத்தா உங்களுக்கு அப்படி என்னக் கஷ்டம். நீங்கள் இப்படி குடிச்சுக்கிட்டே இருந்தால், குடல் வெந்து போகும். நீங்கள் நினைக்கிறாப்பல சீக்கிரம் செத்துப் போக மாட்டீங்க. யமன் தூண்டில மாட்டி இந்த சாராயத்தால சித்திரவதை பண்ணுவா, நாங்க வீட்டைக் கவனிப்பமா? மாட்டைப் பாப்பமா, பயிரைப் பாப்பமா? நாங்க சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறீங்களா இல்லையா?”

“நா... ராசாத்திய ஒருக்க பாக்கணும், எத்தனை கொதிச்சிருந்தா அவ மேடையில பேசிப்பிட்டு இங்க வராம போயிருக்கா.”

“ஐய, அவங்களுக்கு அப்படி விரோதமில்ல தாத்தா, இன்னும் இங்க இருகிற பொம்பிளங்க சாதிக் கெட்டு சாங்கியம்னு அசிங்கமெல்லாம் பண்ணக் கூடாது. அதனால நாமதான் கட்டுக் குலைஞ்சு போகிறோம்னு சொன்னாங்க. அப்பிடிச் சொன்னாத்தா இந்த மரமண்டைகளில் உரைக்கும். அவங்க அன்னைக்கு லாவண்யா அம்மா கூடக் காரில் வந்திருந்தாங்க. சோத்துப் பொட்டலமெல்லாம்.அவங்கதான் ஏற்பாடு செய்திருந்தாங்க. அதெல்லாம் எடுத்து வச்சிக் குடுக்க ஒத்தாசையா இவங்க வந்திருந்தாங்க. அப்படியே திரும்பி போயிட்டாங்க. நா அழச்சிட்டு வாரேன். நீங்க இனி இந்தச் சனியன் பக்கம் போறதில்லன்னு ஏங்கிட்ட சத்தியம் வுடுங்க...”

“அவ வரமாட்டாம்மா. நாங்க அத்தினி கொடும செஞ்சிருக்கோம். புள்ளயக் கொண்டு வந்து ஒரு சமயம்ன்னு விட்டப்ப என்ன செஞ்சோம். அத்த வெரட்டி அடிச்சோம். அவ மனசு எரிஞ்சி சாபமிட்டத எப்படி மறக்க முடியும்? முருகனுக்கு என்னமோ வராத நோவு வந்திருக்காம். சோறு தண்ணி இறங்காம குச்சியாப் போயிட்டானாம்.”

‘பாவம் ... பாவம் செஞ்சவங்க... அனுபவிக்கிறம்... யம்மா கண்ணு அவனுக்கு ஏதானும் ஆச்சின்னா அந்தப்புள்ள கழுத்து நிறைய தங்கமும் பட்டுமா லட்சணமா வந்து நின்னிச்சே அது கதி...” மார்பில் அறைந்து கொள்கிறார். கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. செவந்தி திடுக்கிட்டுப் போகிறாள்.

“அப்பா அப்பா... அதெல்லாம் ஒண்னுமில்ல. முருகனுக்கு அப்படி ஒண்னுமில்ல. கம்மா சிகரெட் குடிக்கிறா. அது அல்சர் வந்திருக்கு. அதுக்கு ரொம்ப பவுரா அமெரிக்காவிலிருந்து மருந்து தருவிச்சி குடுக்கறாங்களாம். ஒண்ணுமே பயமில்லைப்பா...” என்று தேற்றுகிறாள்.

“செங்கண்ணு பொஞ்சாதி சொன்னாளாம். இப்ப இவ எதுக்கு வந்தா? கொம்பேறி மூக்கம் பாம்பு கடிச்சிட்டு மரத்து மேல ஏறி நின்னு செத்தவம் புகையிறானான்னு பாக்குமாம். அப்படி வந்து மீட்டிங்கி பேசுனாளாம். அவளப் பாம்பு புடுங்கன்னு சொல்றா, எங்கிட்டியே!”

“இந்தப் போக்கத்தவங்க பேச்ச நீங்க நம்புறீங்களப்பா? இத பாருங்க, முருகனுக்கு நல்லபடியாயிடும். அப்படில்லாம் நமக்கு வாராது. கோழி மிதிச்சிக் குஞ்சி சாவுமா? சின்னம்மா அப்படி நிச்சயம் நினைக்கறவங்க இல்ல...” என்று சமாதானம் செய்ய முயலுகிறாள்.

கரும்பாயி அம்மன் கோயில் புதுப்பிக்கப்படுகிறது. சித்திரை மாசத்தில் குட முழுக்குச் செய்ய வேண்டும் என்று ஊரில் எல்லோரும் கூடித் தீர்மானிக்கிறார்கள். தைப் பொங்கல் கழிந்து மாசி மாசத்தில் ஒர் அந்தி நேரம்... கோயில் முகப்பில், தோளில் தொங்கிய மூட்டையுடன் கோயில் சாமியார் வந்து உட்காருகிறார். அப்போது கோயில் கமிட்டிக்காரர்கள் அங்கிருக்கிறார்கள். சொந்தமான சாமியாரைக் கண்ட சந்தோசம் ரங்கனுக்குப் பிடிபடவில்லை, வீட்டுக்கு ஓடி வருகிறான்.

“செவந்தி... நம்ம ஊருக்கு நல்ல காலம் பிறந்திட்டது”

“எனக்கு உடம்பு புல்லரிச்சி போச்சி. அந்தப் போலிச்சாமி, என்ன திமிரில சாமி ஜல சமாதியாயிட்டாருன்னு சொன்னா!... பச்சில மூட்ட தொங்குது. அதே முகம். தாடி முடி அதே மாதிரி இருக்கு. வந்திட்டாங்க. ‘சாமி உங்கள நினைக்காத நாளில்ல.. இந்த அம்மாதா உங்கள இப்பக் கொண்டு விட்டான்'னு சொல்லி அப்படியே வுழுந்தே. வாங்க போய்க் கும்புட்டு வரலாம். அப்பா எங்கே?”

“சரோ கதவடச்சி உள்ள போட்டிருக்கு.”

“அவுரயும் கூட்டிட்டுப் போவோம் வா....”

செவந்திக்கு ஆறுதலாக இருக்கிறது.

வீட்டிலுள்ள அனைவருமே, சாமியைக் கண்டு வணங்கப் புறப்பட்டு விடுகிறார்கள். அம்மா மட்டும் வீட்டில் இல்லை.

கதவைப் பூட்டிக் கொண்டு சரோ, சரவணன் செவந்தி ரங்கன் அப்பா எல்லாரும் முகம் தெரியாத இருட்டில் செல்வதை சுந்தரி பார்க்கிறாள். “கோயிலுக்குப்போறம்...” என்று சுருக்கமாகச் செவந்தி தெரிவிக்கிறாள்.

கோயிலின் முன்மண்டபம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. வாயிலிலேயே பெரிய வாழைத்தண்டு விளக்குகள் சாமியார் வந்து விட்டார் என்று வந்திருக்கும் சிலரை இனம் காட்டுகிறது. வரதராஜன், சிவலிங்கம், நாச்சப்பன் இவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். சாமியார் கிணற்றடியில் நீரிறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்.

“நிறையப் பச்சிலைக் கொண்டாந்து இந்நேரம் அங்கே வச்சிட்டிருந்தாரு" என்று பூசாரி தெரிவிக்கிறான். நீராடி முடிந்து திருநீரு பூசிக் கொண்டு வேம்படியில் வந்து உட்காருகிறார்.

ரங்கன் அருகில் செல்லுமுன் சாமியே கையசைக்கிறார். அவன் பணிவுடன் அருகில் செல்கிறான்.

சாமி அவனை அழைக்கவில்லை. அப்பனைத்தான் கையசைத்து அழைக்கிறார்.

‘சாமி. ... f”

குரல் தழு தழுக்க அப்பா அவர் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுகிறார்.

அவர் எழுந்து அவரை எழுப்புகிறார். அப்பாவுக்கு நிற்க முடியவில்லை.

அவர் பிடித்து அருகில் உட்கார வைத்துக் கொள்கிறார். “எத்தனை நாளா இப்படி...?” அப்பா பதில் சொல்லவில்லை. தேம்பித் தேம்பி அழுகிறார். "நாளக்குக் காலம, சுத்தமா ஒண்ணும் சாப்புடாம வெறும் வயிற்றோட இங்க வாங்க... ஒரு பச்சிலைக் கசாயம் தாரேன். மொத்தம் நாலு வேளை. ரெண்டு நா... எல்லாம் சரியாப் போயிடும்... அந்தத் தண்ணி நெனவே வராது...” முதலில் எல்லோருக்கும் என்னதென்று புரியவில்லை.

மூடிக்கிடந்த கண் திறந்தாற்போல் ஒரு பிரகாசம்...

இரண்டு நாட்களும் காலையிலும் மாலையிலும் அவரே பயபக்தியுடன் சென்று அந்த பச்சிலைக் கசாயத்தை வாங்கிக் குடிக்கிறார். வெறும் தயிர் சோறுதான் உணவு.

இரண்டாம் நாள் கசாயம் கொடுத்ததும், “நாளைக்குக் காலம எண்ணெய் தேச்சுத் தலை முழுகிடுங்க. உங்களைப் பிடிச்ச வேதனை நமைச்சல் எல்லாம் போய் மன அமைதி வரும்..."

“பிறகு, இஞ்சி நூறு கிராம் வாங்கிக் கழுவித் தோல் சீவித் துண்டு துண்டா நறுக்கி நிழல் உலர்த்தலாகக் காய வையுங்க. சுத்தமான தேன் கால் லிட்டர் வாங்கி அதில் அதைப் போடுங்க.. காலம வெறும் வயிற்றில் ஆறுதுண்டு இஞ்சியும் ஒரு ஸ்பூன் தேனும் சாப்பிடுங்க. சாராயம் யாரேனும் குடிச்சிட்டு வந்தால் கூடப் பிடிக்காது. காத தூரம் ஒடி வருவீங்க.”

ஊர் முழுதும் சாமியாரின் இந்த வைத்தியம் பற்றிப் பரவுகிறது. சரோ அவசரமாக மகளிர் சங்கத்தில் ஒரு கூட்டம் கூட்டுகிறாள். "சாமியார் பச்சிலை மருந்து கொடுக்கிறார். எல்லாரும் அவவ புருசன அண்ணன் தம்பி அப்பான்னு கூப்பிட்டு வாங்க...” என்று விளம்பரம் செய்கிறாள்.

பிறகு சாமியாரிடம் சென்று பணிகிறாள் "சாமி இந்த ஊரு சனங்கள் நல்லவர்கள். உழைப்பாளிகள். சாராயம் ஒன்னுதான் கெடுக்கிறது. ஆந்திரத்தில் பெண்கள் போராடினார்களாம். அது போல் இங்கு வராதான்னு ரொம்பவும் ஆசைப்பட்டேன். சாமி நீங்க இங்கேயே இருக்கணும். எங்க ஊருல ஒராள் கூட அந்தக் கண்ராவி பாட்டில இங்க வரவுடக்கூடாது. உங்களுக்கு நாங்க என்ன உதவின்னாலும் செய்யிறோம்.”

“இஞ்சி நார் இஞ்சிதான் கிடைக்கிறது. காஞ்சிபுரம் போயி சுத்தத் தேனும் இஞ்சியும் வாங்கிட்டு வந்தாங்க. ஏங்க்கா தண்ணி இருக்கயில் நாம ஏன் இஞ்சி மஞ்சா போடக்கூடாது.”

"லட்சுமியா சொல்கிறாள்? என் லட்சுமி கன்னியப்ப அவனுக்கு இந்தப் பழக்கம் உண்டா?”

லட்சுமி புருசனைக் காட்டிக் கொடுத்துவிட்டதை எண்ணி நாணத்தால் குனிகிறாள்.

"நெதியும் இல்லன்னாலும் என்னிக்கின்னாலும் குசியா இருக்கறச்ச வாங்கி ஊத்திக்கும். எங்க மாமா பட்டாளத்துல முன்ன குடிப்பாராம், ஆனா அங்கேந்து வந்த பிறகு அதும் குடிச்சு குடிச்சே புத்தி கெட்டு மகன் போன பிறகு வெறுத்துப்போனவர். மாமாக்குத் தெரிஞ்சி அவர் இங்க இருக்கும் போது இவருக்குப் பயம். அதான் சாமிக்கிட்ட கூட்டியாந்திட்டே” என்றாள். அன்று பால் எடுத்துக் கொண்டு சொசைட்டிக்கு வந்தவனைச் சரோ பிடித்துக் கொள்கிறாள்.

“மருந்து குடிச்சப்புறம் அந்தப்பக்கம் போகவே கூடாது. தெரியுமில்ல. அப்படிப் போனா ஆளு போகமாட்டா. கை கால் விழுந்திடும்.”

“இல்ல சரோ நிச்சயமா இல்ல. இந்த வேல்ச்சாமி பழனி இவனுவதா என்னிக்கானும். சத்தியமா இனி மாட்டே சாமி கிட்ட சத்தியம் வுட்டிருக்கே... எல்லாம் ஃபுல் ஸ்டாப். தெரியுமில்ல. அப்படின்னா முற்றுப்புள்ளி. பொண்ணிருக்கு ஆணிருக்கு. அடுத்த வருசம் பவர் டில்லர் வாங்கணும்!” அவன் நாணிக் குறுகுகிறான்.

“அது சரி எங்களயெல்லாம் நீ வெரட்டிட்ருக்க. நீ எப்ப கல்யாணச் சீலை உடுத்தி, தலைப்பட்டம் கட்டி, மூக்குத்தி செயின் போட்டுகிட்டு மாப்புள கூட வரப்போற? ஏன் சரோ?”

“அதெல்லாங் கிடையாது. மூக்குத்தி, செயின் சரிகைச் சேலை எதும் கிடையாது. நீங்க லட்சுமிய கட்டிட்டபுலதா, சாமி முன் மால மாத்திட்டு போயி ரிஜிஸ்தார் ஆபீசில பதிவு பண்ணுவோம்.”

"விருந்து?”

“போட்டுட்டாப் போச்சி!”

“அப்ப... மாப்புள ஆரு சரோ? அறிவொளி இயக்கத்துல செவுப்பா ஒல்லியா அரும்பு மீசை வச்சிகிட்டு ஒருத்தர் இருந்தாரே... அவருதானா?”

சரோ இடி இடி எனச் சிரிக்கிறாள்.

“அவருக்குக் கலியாணம் கட்டி ஒரு புள்ள இருக்கு. இப்ப நீங்க அதும் இதும் வம்படிக்காம வூட்டுக்குப் போங்க.”

அறிவொளி இயக்கம் என்று ஆண்பிள்ளைகள் உள்ள குழுக்களில் அவள் தீவிரமாக ஈடுபட்டு அங்கே இங்கே கற்போம், கற்பிப்போம் என்று பாட்டுப் பாடிக் கொண்டு போவதைச் செவந்தியால் தடை செய்ய முடியவில்லை. குடியை ஒழிக்க இந்தச் சாமியாரிடம் பச்சிலை மருந்து கொள்ள, ஓர் இயக்கம் போல் ஆட்களை அந்த இயக்கமே கொண்டு வருகிறது. சாமியார் பச்சிலை கொண்டு வருவதற்காக அடிக்கடி கண்ணப்பர் மலைக்குப் போக வேண்டியிருக்கிறது.

"பத்திரிகை ரேடியோ பேட்டி எதுவும் வரக்கூடாது. இது வியாபாரம் இல்ல. உள் மனசோடு குடியை விட்டு நல்ல மனிதராக வேண்டும் என்ற உறுதி இருந்தாலே இங்கு வரவேண்டும்...” என்று சரோவுக்கும் அவள் சகாக்களுக்கும் அவர் எச்சரித்திருக்கிறார்.

சரவணன் படித்து ஊன்றும் வரையிலும் சரோ கல்யாணம் என்று கட்டிக் கொண்டு இடம் பெயர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்ற உள்ளுர வேண்டிக் கொள்கிறாள் செவந்தி.

நிறைய வெளி உலகில் பழகுவதனால், கீழ் மட்டத்தில், இருந்து மேல் மட்டம் வரையிலும் ஒரு திறந்த மனதுடன் தொடர்பு கொள்வதால் சரோ ஒர் அச்சமற்ற துணிவுடன் தலையெடுத்திருப்பது செவந்திக்குப் புரிகிறது.

பழைய கோடுகளை அழிக்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே அவை அழிந்து போனதைக் காண்கிறாள். தெருவில் இருக்கும் இளம் குருத்துகள், சரோ அக்கா போலப் படிப்போம் என்று ஆதரிசம் கொள்ளும்படி அவள் முன்னோடியாக இருக்கிறாள். அவள் நிச்சயமாக பண்ட பாத்திரம் தட்சணை என்று பெண்மக்களை விட்டுக் கிடுக்கிப்பிடி போட அனுமதிக்க மாட்டாள். மேலும் அவள் மனதுக்குப் பிடித்தவன் என்று வரும் போது அவன் அவள் சுதந்தரங்களைக் கட்டுப் படுத்தாதவனாகத்தான் இருப்பான். அவன் இவர்கள் சாதி சமூகத்தைச் சாராமலிருந்து இருவரும் விரும்பினால் இவர்கள் முட்டுக்கட்டை போடக்கூடாது.

இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒரு புறமும் சாத்தியமாகும், அவள் நல்லது கெட்டது தரம் பிரிக்கும் பக்குவம் பெற்றிருக்கிறாள் என்ற தைரியமும் அவள் மனதில் அவ்வப்போது தோன்றாமல் இல்லை.

ஒரு நாள் ராமையா சரோவுக்கு ஒரு நல்ல வரன் இருப்பதாக வந்து சொன்னார்.

“பங்களுரில் பையன் வங்கியில் வேலை செய்கிறானாம். தகப்பனார் இல்லை. தாயார் மட்டும் இருக்கிறாள். நல்ல குணம். பெண் படித்து நல்ல மாதிரியாக இருந்தால் போதும். ரொக்கம் இது அது வேண்டாம் என்று சொல்கிறார்கள். சொந்தத்தில் சிறு வீடு இருக்கிறது. சரோவுக்கு பங்களுரில் சிரமமில்லாமல் வேலையும் கிடைக்கும்...” என்று சொன்னார்.

“இப்ப பேசக் கூடாது. என் லட்சியம்... இங்க காளை மாடெல்லாம் பசுக்களாக மாறணும். பணம் பண்ணணும். பவர் டில்லர் வாங்கணும். இங்க விட்டு நகர மாட்டேன். அந்தம்மா.. ‘நா வேல கொடுப்பானே? நீயே வேலை கொடுக்கும்படி ஏதேனும் காம்பொனன்ட் செய்யும்படி முதலாளியாகு...’ன்னாங்க. செஞ்சி காட்டணும். ஒரு அஞ்சு வருசம்... அதற்குள், யாரேனும் என் காரியத்தில் கை கொடுக்கும் வாழ்க்கைத் துணை வந்தால்... ஓ.கே.!” என்று முடித்து விட்டாள்.

“அந்தப் பையன் கிட்டச் சொல்றேன்” என்று போனார்