அசோகனுடைய சாஸனங்கள்/ஸ்மாரக லிகிதங்கள்

விக்கிமூலம் இலிருந்து

VII. ஸ்மாரக லிகிதங்கள்
நிக்லீவா லிகிதம்

இந்த ஸ்தம்பம் உடைந்துபோனது ; லிகிதமும் பல சிதைவுகளுடையது. ஸ்தம்பம் அதன் பூர்வ ஸ்தா னத்திலிருந்து மாற்றப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. விகிதத்தில் கூறப்படும் ஸ்தூபம் தேடியும் இன்னும் கிடைக்கவில்லை. கொனாக முனிவர் பூர்வ புத்தர்களில் ஒருவர். மொத்தம் புத்தர்கள் இருபத்தைவர் என்பர். அவருள் எழுவர் பிரதானமான வெரென்று பௌத்த நூல்கள் கூறும். அவர், விபஸ்ஸி, சிகீ, வெஸ்ஸபூ, ககுஸந்தர், கொனாகமனர், காச்யபர், கௌதம சாக்கிய முனிவர். புத்தவம்சம் என்ற நூலில் பூர்வ புத்தரின் கதைகளிருக்கின்றன.

அசோகன் பூர்வபுத்தர்களைச் சேர்ந்த மற்ற க்ஷேத்திரங்களையும் தரிசனஞ்செய்து அங்கும் பூஜைமரியாதைகளைச் செய்திருக்கலாம். காலத்தைக் காட்டும் சொற்கள் மாய்ந்திருக்கின்றபோதிலும், நிக்லீவா லிகிதம் ரும்மின் தேயீ லிகிதத்துடனே எழுதப்பட்டிருக்கவேண்டுமென்று வாசக ரீதியிலிருந்து அனுமானிக்கலாம்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் முடிசூடிய பதினான்கு வருஷங்களுக்குப் பின் கொனாகமன புத்தரின் ஸ்தூபத்தை இரண்டாந்தரம் விசாலமாகக் கட்டினார். தான் முடிசூடி (இருபது வருஷங்கள்) ஆனபின் அவர் நேராக வந்து இந்த புத்தருக்குப் பூசைசெய்து (கல் ஸ்தம்பத்தையும்) நாட்டினார்.



ரும்மின்தேயீ லிகிதம்.

இது வெகுகாலம் பூமியில் புதைந்து கிடந்து 1896 ௵ல் தெரியவந்தது. ஸ்தம்பம் உடைந்திருக்கிற போதிலும் அதிலுள்ள லிகிதம் சிறிதும் சிதைவின்றி இன்றைக்கு எழுதியது போல மிகத் தெளிவாயிருக்கிறது. அசோக லிபியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புவோருக்கு இந்த லிகிதம் இப்பக்கத்துக்கு எதிரில் அச்சிட்டிருப்பது உபகாரமாயிருக்கும். அசோகன் காலத்தில் இவ்வூருக்கு லும்பினிக் கிராமம் என்று பெயர். அவன் இந்த ஸ்தம்பத்தை ஸ்தாபித்ததும் லிகிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் இருபத்தொன்றாம் ஆண்டிலிருக்கலாம்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் முடிசூடிய இருபது வருடங்களுக்குப் பின் நேராகவே இங்கே வந்து வணங்கி, சாக்கிய முனிவராகிய புத்தர் பிறந்தது இங்கே1 யாதலால், இங்கு ஒரு கல்வேலியும் 2 ஒரு கல்ஸ்தம்பமும் கட்டினான். பகவான் பிறந்தது இவ்விடத்திலாதலால் லும்பினிக் கிராமம் ஒருவித வரியின்றியும்3 விளைவில் எட்டில் ஒரு பங்குக்கு 4 தீர்வையுடையதாகவும் செய்யப்பட்டிருக்கிறது.

(1) “சாக்கிய முனிவராகிய புத்தர் பிறந்தது இங்கே” என்ற வாசகம் உபகுப்தன் அரசனிடம் சொன்ன வாக்கியமென்று திவ்யாவதானத்திலுள்ள கதையில் சொல்லியிருக்கிறது.

(2) சிலாவி மடஜீவா என்ற சொற்றொடருக்கு கல்சுவர் அல்லது கல்வேலி என்று பொருள் கூறப்படுகிறது. பர்ஹீத் ஸாஞ்சி முதலிய இடங்களில் உள்ள கல்வேலிபோல இங்கும் ஒன்றிருந்தது போலும். குதிரை யுருவம் அமைந்த சிலை என்றும் இதற்குப் பொருள் கூறப்படுகிறது.

(3) உவலிகே - தீர்வையின்றி.

(4) அஷலுாரம், கௌடல்யனது அர்த்த சாஸ்திரத்தில் பாகம் என்ற சொல்லுக்கு நிலத்தீர்வை என்று கருத்து. அதனால் அஷ்டபாகமாவது விளைவில் எட்டில் ஒருபங்கு அரசனுக்குக் கொடுத்தல்.