அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/035-383
31. சென்னை கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களும் புதுவை கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களும்
சென்னையிலுள்ள ஓர் கத்தோலிக்குக் கிறீஸ்தவர்கள் ஆலையத்தில் பிரேதத்தை அடக்கம் செய்ய சில கிறிஸ்தவர்கள் குருவானவர் உத்திரவைப் பெறாமல் சென்றதாகவும், அதைக்கண்ட கபடற்ற குருவானவர் கையமர்த்தி நிறுத்தும்படி செய்ததாகவும், அக்கிறிஸ்த்தவர்கள் குருவின் முகத்தில் குத்தி உதிரம் வடியச் செய்ததுமன்றி மற்றுமுள்ளோர் தடியாலும், குடையாலும் அடித்துவிட்டு பிரேதத்தையும் அடக்கஞ்செய்து, குருவின்பேரில் பிரையாதும் செய்துவிட்டதாகவும் விசாரிணை நடந்துவருவதாகவும் கேழ்வியுற்று மிக்க விசனிக்கின்றோம்.
அதுபோல் புதுவையிலுள்ள ஓர் கத்தோலிக்கு கிறீஸ்தவர்கள் ஆலையத்தில் சாதிபேதமற்ற தமிழ் கிறிஸ்தவர்கள் வழக்கம்போல் அவ்வாலயத்திற்குச் சென்று பூசைக்காணுங்கால் அக்கோவிலுக்கு நூதனமாக வந்துள்ள குருவானவர் சாதிபேதமற்றத் தமிழ்க்கிறிஸ்தவர்களை நோக்கி நீங்களெல்லோரும் தாழ்ந்த சாதியார், உயர்ந்த சாதி கிறீஸ்தவர்களுடன் உழ்க்காரலாகா என்றாராம்.
அதனை வினவியக் கிறீஸ்தவர்கள் குருவை வணங்கி இக்கோவிலில் எப்போதும் இல்லாத வழக்கத்தை நீங்கள் ஏற்படுத்துவது நியாயமல்லவே என்றார்களாம். அதை வினவிய குருவானவருக்கு மிக்கக் கோபம் பிறந்து உங்கள் பெண்ணை சக்கிலிக்குக் கொடுப்பீர்களா என்று சம்மந்தமும் கோறினாராம். அவ்வார்த்தைக்கும் ஏழைக் கிறிஸ்தவர்கள் கோபிக்காமல் தாழ்ந்த உத்திரவைக் கொடுத்தும் குருவின் கோபம் அடங்காமல் கோவிலுள் செபஞ்செய்துக் கொண்டிருந்த ஓர் பெண்பிள்ளையின் முதுகில் வலுவாகத்தட்டி அழைத்துக் கொண்டுபோய் வெளியில் விட்டுவிட்டாராம் இவைகள் யாவற்றையும் கண்ணாறப் பார்த்திருந்த ஏழைக் கிறீஸ்தவர்கள் குருவின் பேரில் சினங்கொள்ளாது அதிகாரிகளிடம் பிரையாது கொடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது.
கத்தோலிக்குப் பாதிரிமார்களே இவைகளை சற்றுக் கண்ணோக்கிக் கவனியுங்கள். சென்னையில் பாதிரியாரை அடித்துக் கோர்ட்டுவழக்கில் இருப்பவர்களும் கிறிஸ்தவர்களே. புதுவையில் பாதிரியாரால் அவமானப்பட்டு கோர்ட்டிற்குப் போயிருப்பவர்களுங் கிறீஸ்தவர்களே. ஆதலின் இவ்விரு கிறீஸ்தவர்களுள் குருவை அடித்தவர்கள் யதார்த்தக் கிறீஸ்தவர்களா குருவுக்கு அடங்கினவர்கள் யதார்த்த கிறீஸ்தவர்களா. இவர்களுள் யாரால் கிறீஸ்துமார்க்கம் சிறப்படையும், பாதிரிகளே, பணவரவைப் பாராதீர்கள். ஞானவாட்களாம் குணவரவைப் பாருங்கள் - குணவரவைப்பாருங்கள்.
- 2:28; டிசம்பர் 23, 1908 -