அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/034-383

விக்கிமூலம் இலிருந்து

30. பாதிரிகளுக்கோர் விண்ணப்பம்

பாதிரிகளென்பவர்களுள் கத்தோலிக்குப் பாதிரிகளென்றும், பிரோட்டெஸ்டன்ட் பாதிரிகளென்றும் இருவகுப்பார் உண்டு.

அவற்றுள் பாதிரியென்னும் மொழியானது பாதர், பிதா, தந்தை என்னும் சிறப்புப்பொருள் பெற்று பாதிரி, பாதிரியென்னும் மொழி மயங்கி திரிகின்றது.

ஆயினும் அப்பாதிரியென்னும் மொழியை எமது பாதர், தந்தையென்றே கொண்டு யாமோர் மைந்தனாக நின்று விளக்கும் இவ்விண்ணப்பத்தை விரோதமாகக்கொள்ளாது அவிரோதத்தில் நோக்கி ஆதரிக்கும்படி கோருகிறோம்.

இவற்றுள் முதலாவது கத்தோலிக்குப் பாதிரிகளுக்கு விண்ணப்பிக்கின்றோம். போதியின் சார்பாய் தோன்றிய பாதர்களே, கிறீஸ்து பிறந்த நூற்றாண்டுகளுக்குப்பின்பு நூதனமாக குடியேறி தங்களுக்குத் தாங்களே பிராமணன் என்று சொல்லிக்கொண்டு வஞ்சக சீவனம் செய்துவந்த காலத்தில் அவர்களைக் கண்டித்தும், வேஷபிராமணச் செய்கைகளை விளக்கி ஊரைவிட்டுத் துறத்தியும் வந்த சுதேசிகளான சாதிபேதமற்ற திராவிடர்களை வேஷபிராமணர்கள் விரோதிகளாகவே உள்ளத்தில் மேற்கொண்டதிலிருந்து கல்விக்குறைவு, விசாரிணைக் குறைவும் உள்ள சிற்றரசர்களையும், பெருங் குடிகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டு தங்கள் வேஷ செயலுக்கும், பொய்க் கதைகளுக்கும் இசையாமல் பராயர்களாயிருந்து வேஷ பிராமணச் செயல்களையும், குடியேறிய காலங்களையும் நாணமற்ற நடைகளையும் மற்றக் குடிகளுக்கு பறைந்து தெளிவுண்டாக்கி வந்தவர்களைப் பறையர்கள் என்றும், சாம்பான்கள் என்றும், வலங்கையர்கள் என்றும், தாழ்ந்தசாதிகள் என்றும் கூறி பழைய விரோத சிந்தையைப் பதியவைத்து கொண்டு தங்களுக்கு அதிகாரமும் பொருளும் செல்வாக்கும் மிகுந்தவுடன் நாடுகளிலும், நகரங்களிலும் இவர்களைத் தங்கவிடாமலும் தரிக்கவிடாமலுந் துறத்திப் பலவகைத் துன்பங்களால் கொன்றும், வதைத்தும் வந்தார்கள்.

திராவிடர்களோ, யாதோர் ஆதரவும் அற்று பலவகை இடுக்கங்களாலும் நூதனமாக ஏற்படுத்திக்கொண்ட சாதிபேதச் செய்கைகளினாலும் தாழ்த்தப்பட்டு நசுங்குண்டு சிந்தை நைந்து சீரழிந்து வருங்காலத்தில்,

கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றி மழையின்றி வாடிமடியும் பயிறுக்கு தேதிமழைபெய்து தலைநிமிர்ந்ததுபோல் சாதிபேதமற்ற திராவிடர்களுக்கோர் தெளிவுறுதலும் பிறந்தது.

- 2:27; டிசம்பர் 18, 1908 -

சத்துருக்களின் இடுக்கங்கள் கிஞ்சித்து நீங்கி கல்விவிருத்தியும், செல்வவிருத்தியும் உண்டாகி அவரவர்கள் வாசஞ்செய்துவந்த கிராமங்களில் வீடும், வயலும், தோப்புந் துறவுந் தாங்கள் ஊழியஞ்செய்யும் துரைமக்களின் கருணையால் பெற்று நாளுக்குநாள் சீர்பெற்று வந்தார்கள்.

இவற்றுள் போச்சுகீயர் 1,498 இங்கிலீஷ் 1,591 உலாந்தா 1,594 பிரன்ச்சி 1,638 வருடங்களில் இவ்விடம் வந்து குடியேறியவற்றுள் 1,541 வருடம் சவேரியாரென்னும் பெரியோர் இவ்விடம் வந்து கத்தோலிக்கு மார்க்கத்தைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் 1,697 வருடத்தில் பிஸ்க்கி என்னும் பேருடைய பெரியவர் கோணாக்குப்பத்தில் ஓர் கோவிலைக் கட்டிமுடித்து, மயிலாப்பூர் மேற்றாணியார் உத்திரவு பெற்று, குழந்தையைக் கையிலேந்தி இருப்பதுபோல் மாதாவின் படமொன்று எழுதிவந்து பெரியநாயகி என்னும் பெயரளித்து மயிலாப்பூரில் இஸ்தாபித்தார்.

இதன் காட்சிகளைக் கண்டிருந்த சாதிபேதமற்ற திராவிடர்கள் ஆயிரத்தி ஐந்நூறு வருடங்களாக தங்கள் சத்துருக்களின் இடுக்கங்களால் நசுங்குண்டு குலகுருவாம் ஞானசூரியனையும் குலதேவதையாம் ஞானாம்பிகையையும் அவர்கள் போதித்துள்ள நல்லொழுக்கங்களையும் நழுவவிட்டு தங்கள் சொந்த மடங்களையுஞ் சத்துருக்களிடம் ஒப்படைத்துவிட்டு பராயர்கள் திரிமூர்த்தி கோவில்களுக்குள்ளும் நுழையவிடாமல் தடுக்கப்பட்டு தாய்தகப்பனை திசைதப்பி விட்டு தவிக்கும் மைந்தர்களைப்போல் கலக்கமுற்று ஆங்கிலேயர்களின் ஆதரவைப் பெற்று சற்று சுகித்திருந்தவர்களாதலின் இப்பாதிரிகளும் ஆங்கிலேயர்போல் காண்கின்றபடியால் அவர்கள் மதத்தில் நாம் பிரவேசிப்போமாயின் இன்னும் சீருஞ் சிறப்பும் பெருவதுடன் அவர்கள் கோவிலுக்குள் யாதோர் தடையுமின்றி போக்குவருத்திலிருக்கலாம் என்னும் ஆசைகொண்டும் உங்கள் அடைக்கலம் புகுந்தார்கள். சத்துருக்களின் இடுக்கத்தினாலும் கோவிலில்லாக் குறைகளினாலும் ஆங்கிலேயர்களைப் போல் தங்களை ஆதரிப்பார்கள் என்னும் அன்பினாலும் சுகத்திலிருந்த யாவரும் கத்தோலிக்கு மார்க்கத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள். அவர்களின் நோக்கங்களை அறிந்த கத்தோலிக்குப் பாதிரிமார்களும் அவர்கள் வாசஞ்செய்யும் சேரிகளின் மத்தியிலும், பக்கங்களிலும் பூமிகளை வாங்கி ஐயாயிரம், ஆறாயிரம் ரூபாயில் ஒவ்வோர் கோவில்களைக் கட்டி சுற்றுமதில்களை எழுப்பி அதற்குள்ளாகவே பிணங்களைப் புதைக்கத் தக்க இடங்களும் நிருமித்துக்கொண்டார்கள்.

சாதிபேதம் உள்ளவர்களோ கிறீஸ்த்து மார்க்கத்தில் பிரவேசித்தால் தங்கள் சாதி கெட்டுப் போமென்று பயந்து யாரும் சேராமல் விலகி நின்றார்கள்.

ஆங்கிலேய துரைமக்களால் சுகம்பெற்றிருந்த சாதிபேதமற்ற திராவிடர்கள் கத்தோலிக்கு மார்க்கத்தைச்சேர்ந்து கண்டபலன் யாதெனில்.

- 2:28; டிசம்பர் 23, 1908 -

ஒருமனிதன் தங்களை வந்தடுத்து தங்கள் கூட்டத்தில் சேர்ந்தவுடன் பிள்ளைப் பெறுமாயின் அதற்கு ஞானஸ்னானக் கட்டணத் தொகை, ஆதிவாரந்தோரும் உண்டித்தொகை, அர்ச்சயசிரேஷ்டர்களின் உற்சாகத் தொகை, புதுநன்மெய், பழயநன்மெய்த்தொகை, விவாகத்தின் தொகை, பிள்ளையோ, பெரியோரோ இறந்தார்களாயின் குழிக்குத்தொகை, குழித்தோண்டுந்தொகை, மணியடிக்குந் தொகை, தூம்பாகுருசுத்தொகை, மீன் மெழுகுவர்த்திகளுதவாது

தேன்மெழுகுவர்த்திகள் தொகை மற்றுமுள்ளத் தொகைகளையும், கட்டணங்களையும் விவரங்கண்டெழுதின் விரியுமென்றஞ்சி விடுத்துள்ளோம்.

துரைமக்கள் வீடுகளில் ஊழியஞ்செய்யும் அரண்மனை வுத்தியோ கஸ்தர்களாகுந் திராவிடர்கள் தேகசக்த்தியிலிருந்து ஊழியஞ் செய்யுமளவும் அவர்களிடத்தில் மேற்கண்டபடி தொகைகளை வசூல் செய்துக்கொண்டுவந்து அவர்கள் தேகசக்த்தி ஒடுங்கியவுடன் ஓடுகளைக் கையில் கொடுத்து பிச்சையேற்க விட்டுவிடுகிறீர்கள்.

அந்தோ! இத்திராவிடர்கள் கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் அஞ்சாதவர்கள். கிழவன் கிழவியானபோதிலும் ஒருவரிடஞ்சென்று உதவியென்று, கேழ்க்காமல் விறகுவிற்றேனும், புல்விற்றேனும் ஓரணா சம்பாதித்து சீவிக்கும் ரோஷமுடையவர்கள். இத்தகைய ரோஷமுடையோர் உங்களை அடுத்துக் கண்டபலன் கைகளில் கப்பரையும், கழுத்தில் மணிகளுமேயானார்கள்.

துரைகள் வீட்டு உத்தியோகங்களைக் கற்றுக் கொள்ளாமல் கைத்தொழிலையேனும், வியாபாரத்தையேனும் கற்றுக்கொண்டிருப்பார்களாயின் உங்களுக்கு செலுத்தவேண்டிய தொகைகளை மரணபரியந்தஞ் செலுத்தி தங்களைப் புதைக்குங் குழிக்குந் தொகையை செலுத்திவிடுவார்கள்.

சேரிகளின் மத்தியில் ஒவ்வோர் கோவில்களைக் கட்டி எழிய பேதை மக்களின் கைப்பொருட்களை வேண்டியவரையுங் கவர்ந்து இதக்கமின்றி ஒவ்வொருவர் கைகளிலும் ஓடுகளைக் கொடுத்துவருவதுமன்றி அம்மட்டிலும் விட்டுவிடாமல் இவர்களுக்கு ஆயிரத்தி ஐந்நூறு வருடமாக சத்துருக்களாயிருந்து நசித்துவந்த சாதிபேதம் உள்ளோர்களை சேர்த்துக் கொண்டு, நீங்கள் கிறீஸ்துவக் கூட்டத்தில் சேர்ந்தபோதிலும் முதலியார் முதலியாராயிருக்கலாம், நாயகர் நாயகராயிருக்கலாம், செட்டியார் செட்டியாராயிருக்கலாம், சந்தனப்பொட்டு வைக்கவேண்டுமானால் சந்தனக்கட்டையை விஞ்சாரித்துக் கொடுத்துவிடுவோம். குங்குமப் பொட்டு வைக்க வேண்டுமானால் குங்குமம் விஞ்சாரித்துக் கொடுத்துவிடுவோம். எங்களுக்குச் சேரவேண்டிய தொகைகள் மட்டிலும் சரிவரச் சேர்த்து விட்டால் போதும் என்று உயர்த்திக்கொண்டு ஆதியில் கிறீஸ்துமதத்தை அடுத்து எங்கும் பரவச்செய்த ஏழைமக்களை எதிரிகளிடம் இதக்கமில்லாமல் காட்டிக்கொடுத்து இவர்கள் பழயக் கிறீஸ்தவர்கள் அல்ல, பறைக்கிறீஸ்தவர்கள் என்றுத் தாழ்த்தி மனங்குன்றி நாணமடையச்செய்துவிட்டீர்கள். இதுதானே உங்களை நம்பிய பலன், இதுதானே உங்களை அடுத்த பிரயோசனம், இதுதானே துக்கநிவர்த்திப் பெற்று மோட்சத்திற்குப்போகும் வழி, இது தானே. கிறீஸ்துமதப் போதகர்களின் அன்பு. இங்கிலீஷ் துரைத்தனம் இதுவரையில் இல்லாமல் இருக்குமாயின் சத்துருக்களால் முக்கால்பாகம் நசிந்து உள்ளக் கால்பாகமும் உங்களால் ஓடெடுத்துக் கொண்டே நசிந்திருப்பார்கள்.

அந்தோ! மனுக்களை ரட்சிக்க ஏற்பட்டக் கிறீஸ்துவும் அவருடைய சீஷர்களுந் தங்கள் ஞானபோதங்களை இவ்வகையாகவா பொருள் சம்பாதித்துப் போதித்தார்கள். இவ்வகையாகவா தங்கள் சுயப்பிரயோசனங்களைப் பார்த்துக் கொண்டு தங்களை அடுத்தோர்களை கண்கலங்க விட்டார்கள்.

- 2:29, டிசம்பர் 30, 1908 -

இல்லை. தங்களுக்கு இரண்டு அங்கிகளிருக்குமாயின் ஒன்றை தாரித்திரர்களுக்கும், ஏழைகளுக்குக் கொடுத்து ஆதரிக்கும்படி போதித்திருக்கின்றார்களே,

பணவாசைக்காரனும், செல்வமிகுத்தோனும் மோட்சராட்சியத்தில் பிரவேசிக்கமுடியாதென்று கூறியிருக்கின்றார்களே,

அத்தகைய சத்திய ஞானங்களைப் போதிக்குங் குருக்களாக நீங்கள் இத்தேசத்திற்கு வந்து மகாஞானிகளின் போதகத்திற்கு மாறுதலாக பணஞ்சம்பாதிக்கக்கூடிய மதக்கடைகளைப் பரப்பி இரவும் பகலும் ஓய்வின்றி

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஏழைகளின் பணங்களைக் கவர்ந்து தங்கள் சுயதேசங்களாகும் ரோமைநகர முதலியவிடங்களுக்கு அநுப்பிக்கொண்டு இவ்வேழைத் தமிழ் கிறிஸ்தவர்கள் கைகளில் ஓடும், அவர்கள் வாசஞ்செய்யும் சேரிகளை மூதேவியடையவுஞ் செய்துவிட்டீர்கள்.

இவ்வகையாக ஏழைத்தமிழ் கிறிஸ்தவர்களின் மீது இதக்கமின்றி பணங்களை வசூல்செய்து அநுப்பிவரும் ரோமைநகரின் தற்கால நிலையைக் கவனித்துப்பாருங்கள்.

உலகத்தில் அதிக சிறப்பும், நாகரீகமும், செல்வமும் மிகுந்திருந்த ரோமை நகர் நாளுக்குநாள் க்ஷீணமடைந்து ஈனஸ்திதிக்கு வருங் காரணம் ஏழைகளின் கஷ்டார்த்த சொத்துக்களை இதக்கமின்றி கொண்டுபோய் அத்தேசத்தில் சேர்ப்பதின் கர்ம்மமேயாம்.

அத்தகைய மதக்கடை பரப்பி பொருள் சம்பாதிக்கும் செயல்களை மகாஞானிகள் என்றும், தேவர்கள் என்றும் கொண்டாடப்பெற்ற மோசேயும், எலியாவும், கிறீஸ்துவும், மற்றுமுள்ளோரும் பார்க்கமாட்டார்கள், நம்முடையச் செயல்கள் அவர்களுக்குத் தெரியவும் மாட்டாதென்று நடத்தி வருகின்றீர்கள் போலும்.

அந்தோ! முக்காலும் உணர்ந்த மகாஞானிகள் இக்காலுமிருந்தே தங்கள் சத்தியதன்மங்களையும் அவற்றைப் போதிக்கும் போதகங்களின் செயல்களையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

இதை சத்தியம் என்றே நம்புங்கள். அசத்தியம் என்று விட்டு ஏழைக் கிறீஸ்தவர்களை வஞ்சிக்காதீர்கள்.

“நீங்கள் அளந்தபடியினாலேயே உங்களுக்கும் அளக்கப்படும் உங்களுக்குள்ள இதக்கமற்றச் செய்கைகளே உங்களுக்குஞ் செய்யப்படும்”

ஆதலின் பாதர்களென்னும் பெரியோர்களே, இவ்வேழைக் கிறீஸ்தவர்களிடம் பணம் சம்பாதிக்கும் எண்ணங்களை ஓர்புறம் அகற்றி நீங்கள் சேர்த்து வைத்துள்ளத் தொகைகளில் கல்வி சாலைகளும் கைத்தொழிற்சாலைகளும் ஏற்படுத்தி இவ்வேழை பேதை மக்களுக்கு இலவசமாகக் கற்பித்து கல்வியிலும், கைத்தொழிலிலும் முன்னுக்குக் கொண்டு வருவீர்களாயின் நீங்கள் சிறப்படைவதுமன்றி உங்கள் கத்தோலிக்கு மார்க்கமும் சிறப்பைப்பெறும்.

நீதியிலும், அன்பிலும், ஒழுக்கத்திலும் பரம்பரையாக பயந்து நடக்கும் ஏழைக்கிறீஸ்தவர்களைப் பறையர்கள் என்று தாழ்த்தி பக்கத்தில் ஒதுக்கிவிடாதீர்கள். கிறிஸ்துவின் மார்க்கத்தை இத்தேசத்துள் எங்கும் ஆதியில் பரவச்செய்த பரம்பரையோர் இவர்கள் என்று அன்பு பாராட்டுங்கள், அன்பு பாராட்டுங்கள்.

இதுவரையில் கத்தோலிக்குமார்க்கப் பாதர்களின் விண்ணப்பத்தை முடித்துவிட்டோம்.

இனிப் புரோடிஸ்டென்ட் பாதர்களுக்கு எமது விண்ணப்பத்தை விடுகின்றோம்.

பூவுலகெங்கும் பிரபலமிகுத்தப் புரோட்டிஸ்டென்டென்னும் மார்க்க பாதர்களே, எமது விண்ணப்பத்தின்மீது சற்று கண்ணோக்கம் வையுங்கள்.

- 2:30; சனவரி 6, 1909 -

கத்தோலிக்கு மார்க்கத்தோர்களுக்குப் பின்பு இத்தென்னிந்தியாவில் குடியேறி கிறீஸ்துவின் மார்க்கத்தைப் பரவச்செய்வதற்காய் சகல மக்களுக்கும் உபகாரமாகும் கல்விசாலைகளை விருத்தி செய்தீர்கள்.

அக்கால் சாதித்தலைவர்களின் கொடுஞ்செயலால் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்திருந்த திராவிட பௌத்தர்கள் யாவரும் தங்கள் பிள்ளைகளை ஆனந்தமாகக் கல்விசாலைகளுக்கு அனுப்பி கற்பிப்பதுடன் கிறீஸ்து மதத்தையும் தழுவி பி.ஏ., எம்.ஏ. முதலிய கெளரதாபட்டங்களையும் பெற்று பாதிரிகளாகவும், உபதேசிகளாகவும், உபாத்திமார்களாகவும் உத்தியோகங்களில் அமர்ந்து பட்டினங்களிலும், கிராமங்களிலும் கிறிஸ்துவின் போதகங்களையும்

போதித்துவருங்கால் சாதித் தலைவர்களின் போதனைகளுக்குட்பட்ட பராய மதஸ்தர்களும், பராய சாதியோர்களும் வெகுண்டு கற்களாலும், சாணங்களாலும், தடிகளாலும் அடித்துத் துரத்தப் பல பாடுகளும் பட்டு கிறீஸ்துவின் மார்க்கத்தைப் பரவச் செய்துவந்தார்கள்.

சாதித்தலைவர்களோ நீதிநெறியமைந்த பௌத்ததன்மத்தை பாழ்படுத்தி பௌத்தர்கள் யாவரையும் பறையரென்றும் தாழ்த்தி தலையெடுக்கவிடாமல் செய்துவந்தவர்களாதலின் அவர்களின் முன்பு கிறீஸ்துமார்க்கத்தைத் தழுவி கல்வியிலும், நாகரீகத்திலும் மிகுத்து பொய்ச்சாதி, பொய்மதங்களைத் தழுவியுள்ள அஞ்ஞான செயல்களைக் கண்டித்து வந்ததினால் இன்னும் அதிக பொறாமெய் கொண்டு மேலுமேலும் துன்பங்களைச் செய்துக்கொண்டு வந்தார்கள்.

அத்தகையத் துன்பங்கள் யாவையும் உங்களுடைய அன்பின் மிகுத்த ஆதரவினாலும், பிரிட்டிஷ் ராஜாங்க செங்கோலின் சார்பினாலும் சகித்து நாளுக்குநாள் தாங்களும், முன்னேறிக்கொண்டு கிறீஸ்து மார்க்கத்தையும் பரவச் செய்துவந்தார்கள்.

இவர்கள் விருத்தியை நாளுக்குநாள் கண்ணுற்று வந்த சாதித் தலைவர்களுக்கு மனஞ்சகியாது இவர்களை முன்போல் கெடுப்பதற்கு சாத்தியப்படாது இராஜாங்கத்தோரும் கிறிஸ்தவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலின் நாமும் கிறீஸ்து மதத்தைத் தழுவி அவர்கள் கூட்டத்தில் பிரவேசித்து சாதிக் கிறீஸ்தவர்கள் என்று எப்போதும்போல் நம்மை உயர்த்திக் கொண்டு முன் சேர்ந்த கிறீஸ்தவர்களை பறைக் கிறீஸ்தவர்கள் என்று தாழ்த்திப் பழையபடி பதிகுலையச் செய்ய ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அவர்களுடைய - வஞ்சகக் கூத்துகளை அறியா தாங்களும் பெரியசாதிகளெல்லாம் கிறிஸ்தவர்களாகி விடுகின்றார்கள் என்னும் பெருஞ் சந்தோஷத்தாலும், பெரியசாதியோரைக் கிறீஸ்தவர்களாக்கி விட்டார்கள் என்னும் பெரும்பேர் கிடைக்கும் என்று எண்ணி நூதனக் கிறீஸ்தவர்களின் மீது அன்புவைத்து அவர்களுக்கே பாதிரி உத்தியோகங்களையும், உபதேசிகள் உத்தியோகங்களையும், உபாத்திமார் உத்தியோகங்களையுங் கொடுத்து விருத்தி செய்துக் கொண்டு இக்கிறீஸ்து மதத்தைப் பரவச் செய்வதற்காய் கல்லடிகளும் சாணத்தினடிகளும், தடிகளினடிகளும் பட்டுப் பரவச்செய்தப் பழயக் கிறீஸ்தவர்களை பறைக் கிறீஸ்தவர்கள் என்று சொல்லுதற்காய் தாங்களும் தாழ்ந்த எண்ணத்தை விருத்தி செய்துக் கொண்டு ஏழைத் தமிழ் கிறிஸ்தவர்களை நடுத்தெருவில் விட்டு நங்குசெய்யவைத்தீர்கள்.

- 2:31; சனவரி 13, 1909 -

கிறீஸ்தவர்களென்னும் பெயரும் வேண்டும், வேஷபிராமணக் கட்டுக்குள் அடங்கிய சாதியும் வேண்டும் என்னும் ஆயிரம் கிறீஸ்தவர்கள் உங்கள் சங்கத்தில் கணக்காகச் சேர்ந்தபோதிலும் சாதிபேதமில்லாமல் பொருளாசையற்று புண்ணியபலனைக் கருதும் ஓர் கிறீஸ்தவன் உங்கள் சங்கத்திலிருப்பானாயின் கிறீஸ்துவின் மகத்துவமும் அவரது போதகமும் எங்கும் பரவி சகலரும் நித்தியசீவனின் வழியைக் கண்டடைவார்கள்.

அத்தகைய நித்தியசீவனை அடையும் வழியைக் கண்டவுடன் விசுவாசத்தில் நிலைத்து ஞானத்தானத்தையும் பெறுவார்கள்.

ஞானத்தானம் பெற்றவுடன் பாபத்தின் சம்பளமாகும் மரணத்தை ஜெயித்து உலகப்பற்றுக்கள் யாவையும் விடுத்து சகலருக்கும் உபகாரியாக விளங்குவார்கள்.

அவ்வகை உபகாரமே கிறீஸ்துவின் நாமத்தையும், அவரது போதகங்களையும் பரிமளிக்கச் செய்யும்.

அங்ஙனமின்றி சாதியாசாரமும் பெருக்கவேண்டும். உத்தியோகங்களும் உயரவேண்டும். பொருளாசையும் வளரவேண்டும், கிறீஸ்தவர்கள் என்னும் கூட்டமும் அதிகரிக்க வேண்டும் என்பதாயின் கிறிஸ்துவின் நீதிபோதங்கள் ஒருக்காலும் பரிமளிக்கமாட்டாது. அவரது போதபரிமளம் எக்காலத்தில் மறைகின்றதோ அப்போதே கிறீஸ்துவின் மார்க்கமும் மறைவதற்கு வழியாகும்.

ஆதலின் ஐரோப்பாகண்டத்தினின்று இவ்விடம் வந்து கிறிஸ்துவின் மார்க்கத்தைப்பரவச் செய்ய ஆரம்பித்த பாதர்மார்கள் ஒவ்வொருவரும் அடியில் குறித்துள்ள அரியவாக்கியத்தை அன்புகூர்ந்து பாருங்கள்,

மத்தேயு 20-ம் அதிகாரம், 29-ம் வசனம் : “கிறீஸ்துவானவர் தனது மாணாக்கர்களையும், அவ்விடம் வந்துள்ள மக்களையும் நோக்கி என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ அவன் அதற்கு நூறத்தனையான பலனை அடைந்து நித்தியசீவனையும் பெறுவானென்று திட்டமாகக் கூறியிருக்கின்றார்” இத்தகைய சத்தியவாக்கியத்தை சாதிக் கிறீஸ்தவர்களுக்குத் தாங்கள் போதித்தும், அவர்களே வாசித்துக் கொண்டும் மேற்கூறியுள்ள சகல பாக்கியங்களை விட்டாலும் விடுவோம் சாதியை மட்டிலும் விடமாட்டோம் என்பார்களாயின், கிறீஸ்துவுக்கும் அவர் போதகங்களுக்கும் பொருந்துமோ. நித்தியசீவனாம் மோட்சபாக்கியம் அடைவார்களோ, ஒருக்காலும் அடையார்கள். ஆதலின் பிரோட்டிஸ்டான்ட் மார்க்கப்பாதர்கள் ஒவ்வொருவர்களும் அவற்றை சீர் தூக்கி இந்து தேசப்பழயக் கிறிஸ்தவர்களைப் பறைக் கிறீஸ்தவர்கள் என்று தாழ்த்திப் பாழ்படுத்தாமல் அவர்கள் விருத்தியில் அன்புகூர்ந்து முன்போல் கல்வி விருத்திச் செய்து பாதிரிகள் உத்தியோகங்களும், உபதேசிகள் உத்தியோகங்களும், உபாத்திமார்கள் உத்தியோகங்களையும் அளித்து நீதியின் பாதையில் விடுத்து நித்தியசீவனுக்கு ஆளாக்குவதுடன் சாதிக்கிறீஸ்தவர்களின் போர்வைகளையும் அகற்றிவிடச் செய்து அவர்களுக்கும் சுத்தயிதயம் உண்டாக்கி தேவனை தரிசிக்கச்செய்யுங்கள். பிராமணமதத்தர் ஏற்படுத்திக் கொண்ட சாதிப் போர்வையை முக்கால் பாகமும், சிறீஸ்தவனெனும் போர்வை கால்பாகமும் அணைத்துக்கொண்டு நான் - கிறீஸ்து, அவன்-எனுமொழிக்கு அவன் கிறீஸ்தவனாகான், நான் கிறீஸ்தவனென்னும் மொழியும், பொய்ம்மொழியாகி கற்பனைக்கு மாறுபட்டுக் கவலைக்குள்ளாக்கிவிடும். பெரும்பாலும் இவற்றை பாதர்கள் கவனிக்கவேண்டுமென்று எமது விண்ணப்பத்தை முடிக்கின்றோம்.

“கிறீஸ்தவன் எனுஞ்சிறந்தமொழியானது
அவன் கிறீஸ்து எனும் பொருளைத்தரும்”

அதாவது - கிறிஸ்துவின் நடையுடை பாவனை ஒழுக்கங்களைப் பின்பற்றியவன் எவனோ அவனே கிறீஸ்து அவனாவானென்பதாம்.

- 2:33; சனவரி 27, 1909 -