உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/075-383

விக்கிமூலம் இலிருந்து

71. தமிழன் பத்திரிகை சுதேசிகளுக்காகப் பேசுகிறதில்லையாம்

அந்தோ! நாம் சுதேசிகளை தூற்றுவதற்கும், பரதேசிகளை போற்றுவதற்கும் வந்தோமில்லை. சகலமக்களின் சுகங்களைக்கருதி தங்களது நீதியை செலுத்துகிறவர்கள் யாரோ அவர்களைப் போற்றியும், ஏற்றியும் கொண்டாடுவோம். இதுவே எமது சத்தியதன்மமாகும்.

அங்ஙனமின்றி சுதேசி சுதேசியென தம்பட்டம் அடித்துக்கொண்டு சுயப்பிரயோசனங் கருதோம். அதாவது தற்காலம் சென்னையில் நிறைவேறிவரும் கோவில் வழக்குகளில் வாதிகளும், சுதேசிகளாயிருக்கின்றார்கள். பிரதிவாதிகளும் சுதேசிகளாய் இருக்கின்றார்கள். வாதிகளின் லாயர்களும் சுதேசிகளாய் இருக்கின்றார்கள். பிரதிவாதிகளின் லாயர்களும் சுதேசிகளாயிருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுதேசக்கோவில் சொத்தை அழியவிடாது சீர்திருத்தக்கூடாதோ அல்லது தாங்களே ஒருவர் முதன்மெயாயிருந்து நியாயவாயலானத் தீர்ப்பளிக்கலாகாதோ.

இல்லை அதன் காரணமோ சுயப்பிரயோசனத்தைக் கருதுவோர் கதேசிகளென்று ஏற்பட்டுள்ளபடியால் சுதேசிகளுக்கு சுதேசிகளே நம்பிக்கையற்று பரதேசிகளை அடுத்து நியாயங்கேட்கின்றார்கள்.

பரதேசிகளோ தன்சாதி புறசாதி என்னும் சாதியற்றவர்களும், தன்மதம் புறமதமென்னும் மதமற்றவர்களுமாதலின் சகலருக்கும் பொதுவாய் நியாயங்கூறி சீர்படுத்திவருகின்றார்கள்.

ஆதலின் சுதேசிகளுக்கு சுதேசிகளே நம்பாமல் பரதேசிகளிடம் முறையிட்டு தங்கள் நியாயங்களைப் பெற்று வருகின்றார்கள்.

சுதேசமென்றாலென்னை, சுதேசிகளென்றால் யாவர், சுதேசக் கிருத்தியமென்றால் யாது, சுதேசிய பலன்களென்றால் யாவையென்று உணராதோர் யாவரும் தமிழன் பத்திரிகை சுதேசிகளுக்காக பேசுகிறதில்லை என்பது வீண் வாக்கியங்களேயாகும்.

பல அரசர்களிடம் சண்டையிட்டு தங்கள் உதிரங்களைச்சிந்தி கைப்பற்றி ஆண்டுவருகிறவர்களுக்கு இத்தேசம் சுதேசமா அன்றேல் அவர்களிடம் ஊழியஞ்செய்பவர்களுக்கும், அவர்களது ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கும் இத்தேசம் சுதேசமா என்பதை உசாவி உணர்வார்களாயின் தமிழன் பத்திரிகையிற் கூறிவரும் திருத்தங்கள் யாவும் சுதேச சீர்திருத்தங்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும்.

- 3:10; ஆகஸ்டு 18, 1909 -