உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/077-383

விக்கிமூலம் இலிருந்து

73. சட்ட நிரூபண சங்கத்தார் நியமனம்

தற்காலம் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் செய்திருக்கும் சட்ட நிரூபண ஆலோசனை சங்கத்திற்காக அங்கங்களை நியமிப்பான் வேண்டி, ஒவ்வொரங்கங்களையும் குடிகளின் சம்மதத்தின்பேரிலும் நியமிப்பதா அன்றேல் கவர்ன்மெண்டாரே தெரிந்தெடுத்து நியமித்து விடுவதாவென்னும் இருகருத்தையும் ஆலோசிப்போம்.

குடிகளே ஒவ்வொரங்கங்களைத் தெரிந்தெடுத்து சட்டசபைக்கு அதுப்புவதே நியாயமென்பாராயின் தற்கால முநிசிபாலிட்டியில் நிறைவேறிவரும் அங்கங்களின் நியமிப்பை ஆராய்வோமாக.

முநிசபில் பிரசிடெண்டும், மற்றவங்கங்களும் சேர்ந்து அந்த டிவிஷனிலுள்ள இரண்டு மூன்று பெயர்களைத் தெரிந்துதெடுத்து இவர்களுக்குள் யாரை டிவிஷன் கமிஷனராக நியமிக்கலாமென்று குடிகளிடம் ஒப்படைக்கின்றார்கள்.

குடிகளுக்கு விளக்கிக் கேட்டிருக்கும் சம்மதம் நூற்றிற்கு ஒருவருக்குத் தெரிந்திருக்குமோ தெரியாதோ விளங்கவில்லை, ஈதன்றி ஒவ்வோர்

டிவிஷன்களுக்கும் ஒவ்வோர் கமிஷனர்களை நியமிப்பது யாதுக்கென்று பெருந்தொகைக் குடிகளுக்கு தெரியவே மாட்டாது.

இவற்றுள் முநிசிபாலிட்டியாரே தெரிந்தெடுத்துள்ள அங்கங்களில் ஒவ்வொருவரும் கோச்சு வண்டிகளையும் பீட்டன் வண்டிகளையும் அழைத்துக் கொண்டு அந்தந்த டிவிஷனிலுள்ள குடிகளின் வீட்டண்டை வந்து என் பெயருக்கு ஓட்டுக் கொடுக்க வாருங்கள் என்றால், ஓட்டு வாங்குவதற்கு இவ்வளவு பெரிய ஐயர் வந்தால் எப்படி மாட்டேனென்று சொல்லுகிறது. இவ்வளவு பெரிய முதலியார் வந்தால் எப்படி மாட்டேனென்று சொல்கிறதெனப் பேசிக்கொண்டே கோச்சு வண்டியிலேறிக் கொண்டு ஓட்டு வாங்கிக் கொள்ளுகின்றவர்கள் எவ்வகை எழுதிப் பெட்டியில் போடும்படிச் சொல்லுகின்றார்களோ அம்மேறையே நடந்துவருவது இக்குடிகளின் அநுபவமாயிருக்கின்றது.

இத்தகையாய் முநிசபில் கமிஷனர் நியமனங்களே இன்னவையாயது இனியவையாதென்றறியாதப் பெருந்தொகைக் குடிகளுக்கு சட்டநிரூபண சங்க நியமனம் யாது விளங்கி அங்கங்களை நியமிக்கப் போகின்றார்கள். குடிகளே நியமிப்பார்களென்பது வீண் முயற்சியேயாகும்.

சட்டநிரூபண சபைக்குக் குடிகளே அங்கங்களை நியமிப்பதைப் பார்க்கினும் கருணைத் தங்கிய கவர்ன்மெண்டாரே ஒவ்வோர் அங்கங்களைத் தெரிந்தெடுத்து சங்கத்திற்கு சேர்த்துவிடுவது அழகாகும்.

அங்ஙனமின்றி கவர்ன்மெண்டார் ஒவ்வொருவரை தெரிந்தெடுத்து மறுபடியும் அவற்றை நிலைக்கச் செய்ய குடிகளின் சம்மதத்திற்கு விடுவது வீண் முயற்சியாகும்.

சாதிபேதமற்றதும், சமய பேதமற்றதும், தன்னவ ரன்னியரென்னும் பட்சபாத மற்றதுமாகிய பிரிட்டிஷ் துரைத்தனமானது இன்னும் நூறுவருடம் அங்கு ராட்சியபாரஞ்செய்யுமாயின் அப்போதுதான் குடிகள் ஒவ்வொருவரும் இவற்றை சீர்தூக்கி ஆலோசித்து தங்கள் அறிவுக்கு கெட்டிய வரையில் அறிவாளிகளைத் தெரிந்தெடுத்து அங்கங்களை நியமிப்பார்கள்.

இதற்கு மத்தியில் குடிகள் யாவரும் விவேகமிகுந்து இன்னாரை நியமிக்கலாம், இன்னாரை நியமிக்கலாகாதென்னும் பகுத்தறிவு உண்டாயிருக்கின்றனரென்று எண்ணி குடிகள் சம்மதத்தை நோக்குவது வீணேயாகும்.

ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோரே சட்டநிரூபண சபைக்கு அங்கங்களைத் தெரிந்தெடுத்து நியமித்து இராஜ காரியாதிகளை சீர்படுத்தி வைக்கும்படி வேண்டுகிறோம்.

- 3:11; ஆகஸ்டு 25, 1909 -