உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/091-383

விக்கிமூலம் இலிருந்து

87. பிராமணனென்று பெயர்வைத்துள்ளானில் ஒருவன் கொலை செய்வானாயின் அவனுக்கு தூக்குதெண்டனை இல்லையாம்

அந்தோ ஆட்சரியம், ஆட்சரியம், தன்னவரன்னியரென்னும் பட்சபாதமின்றி நீதி செலுத்தும் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட திருவனந்தபுறமென்னும் ஓர் தேசத்தில் பிராமணனென்னும் பெயர் வைத்துக் கொண்டிருந்தவனொருவன் தனக்கிசைந்த சூதாட்டத்திற்குப் பொருளுதவி செய்யாத தனது மனைவியை தேக முழுவதும் கத்தியால் வெட்டி வதைத்து கொலை செய்துவிட்டானாம். இத்தகைய கொலைபாதகனை அதிகாரிகளின் முன்விடுத்து குற்றத்தை ரூபித்தும் அவனைத்தூக்கிலிட்டால் தீபாந்திர சிட்சை செய்துவிட்டார்களாம்.

காரணம், பூர்வ இந்து சட்டத்தின்படி பிராமணனைக் கொலைச் செய்யப் போகாதென்று வரைந்துள்ளபடியால் திருவனந்தபுற ராஜாங்கத்தார் அச்சட்டத்தை அநுசரித்து கொலைக்குற்றத்தைத் தள்ளிவிட்டார்களென்று கூறுகின்றார்கள். இது யாதுநீதியோ விளங்கவில்லை. வடமொழியில் பிராமணன் என்றும், தென் மொழியில் அந்தணனென்றும் வழங்கி வந்தப் பெயருள் தன்னுயிர்போல் மன்னுயிர்களைப் பாதுகாக்கும் சாந்த குணமுள்ளவன் எவனோ அவனையோ பிராமணனென்று சாஸ்திரங்கள் முறையிடுகின்றது.

திரிக்குறள்

அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மெய்ப் பூண்டொழுகலால்

பாரதம்

நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் நிறுத்தினோன் வேதியனன்றி
வேதியனேனு மிழுக்குறி வவனை விளம்பும் சூத்திரனெ வேத
மாதவர்புகன்றா ராதலாலுடல மாய்ந்தபின் பாவதோர் பொருளோ
கோதிலாவிந்தப் பிறவியில் வேதக் குரவனீயல்லையோ குறியாய்.

அத்தகைய நீதிசாஸ்திரங்களுக்கு மாறுதலாக கொலை, சூது மிகுத்த துற்கருமியாம் பாபியும், இல்லாளை வதைத்த இடும்பனுமாகிய கொடும்பாபியை பிராமணனென்று ஏற்றுக்கொண்டது எந்தசாஸ்திரவிதியோ விளங்கவில்லை.

இத்தகைய சட்டத்தை சுயராட்சியம்வேண்டுவோர் சீர்தூக்கி ஆலோசிக்கவேண்டியதாகும். ஏனென்பீரேல், கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சிக்குள் அடங்கியவோர் சுதேசசிற்றரசுக்குள் இவ்வகையான சட்டமும் நீதியும் நிறைவேறுவருமாயின் நீதிநிறைந்த பிரிட்டிஷ் ராட்சியபாரம் அகன்று சுயராட்சியம் நிலைக்குமாயின் தங்களுக்கு இசையாத சூத்திரனையும், தங்களுக்கு இசையாத வைசியனையும் தங்களுக்கு இசையாத க்ஷத்திரியனையும் ஓர் பிராமணனென்னும் பெயர் வைத்துள்ளோன் கொன்றுவிடுவானாயின் அவனைக் கொலைக்குற்றவாளி அல்லவென்று இந்து சட்டத்தின்படி நீக்கிவிடப்போகின்றார்கள்.

அவ்வகையாக நீங்கினோனும் மற்றுமுள்ள பிராமணர்களென்போரும் என்னவதிகாரச் செயலை நடத்துவார்களென்பதையும் அவர்களுக்கு அடங்கியுள்ள சாதியோர் என்ன என்ன துன்பத்திற்கு ஆளாவார்களென்பதையும் சுயராட்சியங் கேழ்ப்போர் சீர்தூக்கி ஆலோசிக்க வேண்டியதேயாம்.

அவர்கள் ஆலோசிக்கினும் ஆலோசிக்காது விட்டுவிடினும் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் இத்தகைய அநீதி சட்டங்களைக் கண்ணோக்கி அவைகளை என்றுமில்லாது நீக்கி சகலகுடிகளுக்கும் பொதுவாயுள்ள சட்டத்தை நிருமிக்கவேண்டுகிறோம்.

நீதியில்லா சட்டம் நிலைத்துப்போமாயின் அத்தேசத்திற்கு ஓர் ஆங்கில துரை மகனேனும், ஓர் மகமதியக் கனவானேனும், உத்தியோக விஷயமாகச் சென்று தங்கள் நீதியைச் சரிவரச்செய்து வருவார்களாயின் அவர்கள் மீது பொறாமெய் கொண்ட பிராமணர்களென்போர் கொலைத் தொழிலை அஞ்சாது செய்வார்கள்.

அவ்வகை செய்தபின் சட்டங்களை நோக்குவதினும் தற்காலம் மனையாளைக் கொன்ற மாபாதகனைவிடாது தூக்கிலிட்டுக் கொல்லும் பொதுச் சட்டத்தை அத்தேசத்திலும் நடவடிக்கைக்குக் கொண்டுவந்து அவர்களது அநீதியுள்ள சட்டத்தை அகற்றுவதே அழகாகும்.

- 3:21; நவம்பர் 3, 1909 -