அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/135-383
131. பறைச்சேரிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் வைக்கும்படி பெரியசாதி என்றழைத்துக்கொள்ளுவோருக்கு விண்ணப்பம் வந்திருக்கின்றதாமே
அந்தோ! ஆட்டுமந்தைகள் புலிகளை அடைக்கலம் புகுந்ததுபோல் 1910ளு ஏப்ரல் மீ 18உ வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகை 5-வது பக்கம் முதற்கலம் 52-ம் வரியில் “தாழ்ந்த வகுப்பாரை ஈடேற்றுஞ் சங்கம் சென்னைக்கிளை” என முகப்பிட்டு அதனுள் இச்சங்கத்தோருக்கு பள்ளிக்கூடங்கள் வைத்துக்கொடுக்கும்படி பறைச்சேரியிலுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வந்துக்கொண்டிருப்பதாக வரைந்து அவைகளுக்காய்ப் பொருளுதவி வேண்டுமென்று குறிப்பிட்டுள்ள விந்தையான சங்கதியைக் கண்டு மிக்க வியப்படைந்தோம்.
அதாவது தாய்தந்தையரினும் மிக்க அன்பு பாராட்டி ஏழைகளின் வீட்டுக்குள் நுழைந்து பாடங்கள் கற்பித்துவருவதுடன் கலாசாலைகளும் வகுத்து அன்னமும் ஊட்டி ஆதரித்துவரும் மிஷநெரி துரைமக்களுக்கும், லேடிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பி பள்ளிக்கூடம் வேண்டுமென்று கேழ்க்காதவர்கள் சுத்தசலத்தை கொண்டு குடிக்கவிடாதவர்களும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாதவர்களும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாதவர்களும் நன்கு உண்டு உடுத்தி உலாவக் கண்டு பொறுக்காதவர்களுமானோர் சில கூட்டங்கள் கூடியிருப்பதும் தாழ்த்தப்பட்ட சாதியோரை ஈடேற்றுவதுமாகத் தோன்றியுள்ளார்பால் பறைச்சேரியிலுள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ளாரென்பது விந்தையிலும் விந்தையேயாம்.
எந்த வழியால் ஓர் மனிதனை ஏற்றினரோ அந்தவழியால் இறக்குவதாயின் சுகமாகும். அங்ஙனமின்றி வேறுவழியால் இறக்குவோமென்பது வீண் வார்த்தையேயாம். உயர்ந்த வகுப்போரென்று சிலர் தங்களை உயர்த்திக்கொண்டு அவர்களே சிலரை தாழ்ந்தவகுப்போரெனத் தாழ்த்தி தாழ்ச்சியடையச் செய்துவந்தார்களோ அச்செயல்களை மட்டிலும் மாற்றிவிடுவார்களாயின் அதுவே தாழ்ந்த வகுப்போரை ஈடேற்ற வழியாகும். உயர்ந்த வகுப்போரென்று சொல்லிக் கொள்ளுவோர் தாழ்ந்தவகுப்போரை ஈடேற்றுவது முன் தாழ்த்தியவழியே உயர்த்துவதாகும்.
- 3:46 ஏப்ரல் 27, 1910 -