அந்தி நிலாச் சதுரங்கம்/கண்ணீர் நிவேதனம்

விக்கிமூலம் இலிருந்து
 
அந்தி நிலாச் சதுரங்கம்

2. கண்ணீர் நிவேதனம்


ஒமேகா பூஞ்சிட்டுக்குப் பொய் பேசத் தெரியாது. காலத்தைப் பேச வைக்கத்தான் தெரியும். மணி ஒன்பது ஆகிவிட்டதாம்!

கவர்க் கடிகாரம் நேரத்தை அறிவித்ததோ இல்லையோ, ரஞ்சித்தின் ஒரு சாண் வயிறு, தமது பசியான பசியை இரண்டு சாண் நீளத்துக்குச் சாங்கோபாங்கமாக அறிவித்தது.

தன் உயிருக்கு ஒரு மங்கலச் சின்னமாகத் திகழும் ஆருயிர் அத்தானை முழுமனத்தோடு நம்புகின்ற மிஸஸ் ரஞ்சித், அவர் நாகேஷ் பாணியில் வெளிப்படுத்திய பசியின் தத்ரூபமான உணர்ச்சிக் குறியீடுகளை மாத்திரம் நம்பாமல் இருப்பாளா என்ன? அன்புத் துணைவரின்மெளனக் கூத்தைக் கண்டதும், அவளுக்கு வாயெல்லாம் பல்; முழுசான முப்பத்திமூன்று பல் சிரிப்பு: அதாகப்பட்டது. தெற்றுப் பல்லையும் சேர்த்து! சிரிப்பின் நிறம்; வெள்ளை; அது வெள்ளச் சிரிப்பும்கூட. வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த அத்தானைச் சிரிக்கச் சிரிக்கப் பார்வையிட்டவளாக, “டிபன் சாப்பிடலாம், வாங்க,” என்று அழைத்தாள். ரஞ்சனி.

பாங்கருக்கு ஆறுதலான ஆறுதல் கனியத் தொடங்கியது. கொண்டவளை விழுங்கிவிடுகிற மாதிரி பார்த்தார். பசியைப் போக்கிக்கொள்ளவா? இல்லை: பசியைத் தூண்டி விட! மணிமேகலை தன்னுடைய அமுதசுரபியை என் ரஞ்சனியிடம்தான் கொடுத்துவிட்டுப் போயிருக்கவேண்டும்! பிடிபடாத பெருமிதத்தைப் பிடிக்குள் நிறுத்தியவராக, மெல்லிய ஊதா நிற ஜிப்பாவில் சாண் வயிறு அண்டி ஒண்டிக் கிடந்த இடத்தைக் கனகச்சிதமாக அளந்தறிந்து தட்டிக் கொடுத்துக்கொண்டே ரஞ்சனியின் சிரிப்பைத் தொடர்ந்தவர், ரஞ்சனியையும் தொடர வேண்டியவர் ஆனார்.

ரவி வர்மா முதல் கே. மாதவன் வரை கொலு அமைத்துக் கொலு வீற்றிருந்த அந்த உணவுக்கூடம், ரஞ்சித்-ரஞ்சனி தம்பதியின் மிக அந்தியோன்யமான குடும்பச் சிநேகிதரான மகேஷின் மிகப் பெரிய பாராட்டுதலுக்கும் இலக்காகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நான்கு பக்கத்துச் சுவர்களிலும் திறந்து கிடந்த கண்ணாடி ஜன்னல்கள்: அந்த ஜன்னல்களின் அழகுக்கு அழகு செய்வதுபோல் இழுத்து விரித்து மறைத்துத் தொங்கவிடப்பட்டிருந்த பூத்திரைகள்.

கூடத்தில் சன்னமான நீலப் பாதரச ஒளி சிந்தியும் சிதறியும் கிடக்கிறது.

இளமையைக் கடந்திருந்த காற்று பனி வாடையையும் கடந்திருந்தது.

மேலே, ‘ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ பூக்கோலங்களுக்கும் மாக்கோலங்களுக்கும் இடைநடுவில், விஷப்பல் பிடுங்கி வீசப்பட்ட நாகமாக மின்காற்று ஒங்கார உறுமலைக் கக்கிக் கொண்டிருப்பதும் இயற்கைதான்.

பாங்கர் ரஞ்சித்துக்கு இந்த நந்தினி விலாசத்தில் மிக மிகப்பிடித்தமானது இந்த உணவுக்கூடம் ஒன்றேதான்!...

அதோ, ஊதுவத்தியின் இன்பச் சுகந்தம் அழகாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் மணம் சிந்திக்கொண்டே இருக்கிறது!.

ரஞ்சித் அழகை ரசிப்பவர் மட்டுந்தானா?-ஊஹூம்!-- அவர் அழகை ஆராதிப்பவரும் அல்லவா?

“உங்க டைனிங் ஹாலை வெள்ளம் ஒண்ணும் கொண்டு போயிடாதுங்க, அத்தான்; இட்டிலி ஆறிடப் போகுது; சாப்பிடுங்க!”

“உத்தரவு, டியர்!” மான் விழிகள் மருள்வதோடு, மயங்கவும் செய்கின்றன;

சின்னச் சின்ன இட்டிலி; கைப்பதமான சூடு; பச்சைக் கொத்தமல்லித் தளைகள் துணை இருந்த தக்காளிப்பழச் சட்டினி. அவர் சுவைத்தும் ருசித்தும் சாப்பிட்டார். ஆக, மொத்தம் சாப்பிட்டது பன்னிரண்டுதான். இது ஒன்றும் அதிகம் இல்லை. இன்னும் ஒன்றிரண்டு கூடுதலாகச் சாப்பிடத்தான் ஆசை. தீராத ஆசையுடன் ஆசை மனைவியை ஏறிட்டார்.

ரஞ்சனிக்கு என்னதான் அப்படி மாளாத-மீளாத சிந்தனையோ?

அவர் வாயைத் திறக்கவில்லை. நாக்கை நப்புக் கொட்டினார். ரஞ்சனி எங்கே இருக்கிறாளோ?

உறைப்பு சற்றே தூக்கலாக இருந்துவிட்டால், அத்தானுக்குக் கொண்டாட்டம் வந்துவிடும் அந்தரங்கத்தை அந்தரங்க சுத்தியோடு உணர்ந்தவள் ரஞ்சனி. அத்தான் இம்மாதிரி ருசி பார்த்து, சுவை பார்த்து, ஓய்வாகச் சாப்பிட வேண்டுமென்பதற்காகத்தானே, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே தக்காளிச் சட்டினியை ஸ்பெஷலாகத் தயாரிக்கிறாள் அவள்!-- ‘அ...த்... தான்!’--உள்ளத்தின் உள்ளம் உருகுகிறது.

ரஞ்சித்தின் பார்வை முகப்பு மண்டபத்திற்கு நாலு கால் பாய்ச்சலில் ஒடியது. என்னவோ சத்தம் கேட்டது. மகேஷையும் காணவில்லை; பாபுவையும் காணோம். சோமையா எதையாவது சீராக்கிக்கொண்டிருக்கலாம். அன்றிருந்த சுறுசுறுப்பு இன்றும்கூட தேய்ந்து விடவில்லை. மனக் குதிரைக்கு ‘லகான்’ போடவில்லையென்றால், அது கண்மண் தெரியாமல், கிண்டி ஞாபகத்தில் ஒடிக்கொண்டு தான் இருக்கும். நிதானம் பரப்பிக் கண் பார்வையை எதிர்வசமாகப் பரப்பினார் அவர். தெளிவாகவே நின்றிருந்த மனைவியை ஆழமாக நோக்கினார். “ரஞ், என் பசி இன்னமும் அடங்கவில்லையே?” என்றார்.

அவள் உணர்ச்சி எதையும் வெளிக்காட்ட விரும்பாதவள் போன்று காணப்பட்டாள்; அமுதசுரபியாகக் காட்சி கொடுத்த இட்டிலிப் பாத்திரத்தை நிதானமாக நகர்த்தினாள்; அம்பாரமாகக் குவிந்திருந்த இட்டிலியில் ஒன்றை எடுத்துக் கணவரின் எச்சில் பிளேட்டில் போட்டாள்; “இதோட உங்க கணக்குச் சரி!” என்றாள் ரஞ்சனி. .

ரஞ்சித் திகைத்துத் திடுக்கிட்டுத் தடுமாறினார்: “என்ன சொல்றே, ரஞ்சனி” என்று பதற்றத்தோடு கேட்டார். குரல் பொருமிற்று. பற்பல மாதங்களுக்கு முந்தின சோதனை மிகுந்த, துரதிர்ஷ்டவசமானதோர் அந்தி மாலை நேரத்திலே நடந்த அந்தச் சோகச் சம்பவம்-‘விதி’ முன்னே நின்று நடத்தி வைத்துவிட்டுச் சிரித்துத் தீர்த்த அந்தப் பயங்கர நிகழ்ச்சி அவரையும் திமிறிக்கொண்டு அவரது நெஞ்சில் ஊடுருவிப் புகுந்து, நச்சு வண்டாகத் துளைத்தது: ஐயையோ!-கடுப்பு தாங்கவில்லை!-‘ரஞ்...!’, நேத்திரங்களிலும் ரத்தம் கரைகிறது.

ரஞ்சித் அடைந்த பதற்றத்திற்கு லவலேசமும் குறைவுபடாமல் கேட்டாள் ரஞ்சனி- “அழறீங்களா, அ...த்...தான் .”

“ஆமா!” ஒப்புக்கொண்டார் ரஞ்சித்.

“நிஜமாகவேதான் அழறீங்களா?”

“பிறகு, பொய்யாகவா அழுவேன்?”

“நீங்க ஏன் அழவேணும்?”

“அதை என்னைக் கேட்டால்.. ?”

“பின்னே, யாரைக் கேட்கணும் நான்?”

“உன்னையே நீ கேட்டுக்க!”

“என்னையே நான் கேட்டுக்கிடவா?”

“ஆமா!”

“ஆமாவா?”

“ஊம்!”

“........”

“புரியலையா இன்னம்?”

“புரியும்படியாவோ, இல்லே, புஞ்சுக்கும்படியாவோ சொன்னால்தானுங்களே புரியும்?”

“அப்படியா?”

“ஊம்!”

“சொல்றேன்.”

“சொல்லுங்க.”

“என்னமோ கணக்குப் போட்டடீயே கொஞ்சம் முந்தி? அது என்னவாம்?”

“கணக்குப் போடலேங்க கணக்குச் சொன்னேன்.”

“என்ன கணக்கு?”

“இட்லிக் கணக்கு!”

“மெய்யாவா?”

“பின்னே, பொய்யா?”

“ரஞ்...!”

“அத்...!”

அவர் அழுதுகொண்டே சிரிக்கிறார்.

அவளோ சிரித்துக்கொண்டே அழுகிறாள்.

அவள் கண்ணீரை அவர் துடைத்தார்.

அவரது கண்ணீரை அவள் துடைத்தாள்.

ரஞ்சனியின் அன்பினாலும் தயவினாலும் கிட்டிய பதின்மூன்றாவது இட்டிலியை ஒரே வாயில் போட்டுக் கொண்டு விழுங்கினார்; விழுங்கின ஆத்திர அவசரத்தில் விக்கல் எடுத்தது. தேடி வந்த தண்ணீரை ஒரே வாயாகக் குடித்தார்; ஒவல்டின் ஓடிவரவே, அதை இரண்டு வாயாகப் பருகினார். இத்தனை ஆர்ப்பாட்டங்களும் யாதொரு விக்கினமும் இல்லாமல் சுபமாக நிறைவெய்தியது தான் தாமதம்: ஏப்பம் ஒன்று தாமதமின்றிப் பறிந்தது. லாலி பாட வேண்டாமோ?

வானொலியில் சலசலப்பு.

மனம் கொண்ட மகிழ்வு, வாய் கொள்ளாமல் சிரிப்பாக வெடித்தது. குறும்புத்தனம் விகிதாசார அளவில் கூடி நின்றது.

‘ஆனாலும் , ரஞ்சனிக்கு இத்தனை குறும்பு உதவாது. ரஞ்சனி இதயத்தால் சிரித்து விட்டால், எனக்கு எல்லாமே மறந்து போய் விடுகிறதே?’- அவளை ஏற இறங்கப் பார்த்தார் ரஞ்சித்; இறங்க ஏறவும் பார்வையிட்டார் அவர் . ‘இதோட உங்க கணக்குச் சரி!’ என்று இட்டிலிக் கணக்குத்தான் போட்டிருப்பாள் ரஞ்சனி, என் ரஞ்சனி! உண்மையை மறைக்கத் தெரியாத புண்ணியவதியாக்கும்! -மெய்ம்மறந்தார். வீம்பு படித்துக் காற்றிலே வம்பு பிடித்த புடவையைச் சரிசெய்து கொண்டிருந்தவளை நெருங்கி, மார்பகத்திலே அலங்கோலமாகக் கிடந்த இரட்டை வடத் தென்னம்பாளைத் தாலிச் சங்கிலியைச் சரிசெய்து சோளியின் இருமருங்கிற்கும் மையமாக அதைப் பதிய வைத்தபோது, தேள் கொட்டினாற்போன்று ஏனோ ஒர் அரைக்கணம் திடுக்கிட்டுப் போனார். ‘மாங்காட்டுத் தாயே!’--மனம் ஒன்றின பிரார்த்தனையில், மனம் தெளிந்து வருகிறது; நிம்மதியும் தெளிந்து வருகிறது. ஓ!-ரஞ்சனிக்கு இன்னமும்கூட வெட்கம் தெளியவில்லை. அதுவும் நல்லதற்குத்தான். நிதானம் அடைந்துவிட வேண்டும். பசித்தவன்தான் பழங்கணக்கைப் பார்ப்பான். இப்போதைக்கு எதையும் நினைக்கக் கூடாது. நினைப்பதற்கும் மறப்பதற்கும்தான் வாழ்க்கைத் தவமோ?

பால்கனியில் இசைத் தட்டுக்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. ‘ரெகார்ட் ப்ளேயர்’!

மேலைநாட்டுச் சங்கீதத்துடன் விளையாடுவதென்றால், நந்தினிக்கு மிகவும் இஷ்டம்.

காலைச் சிற்றுண்டிக்காக அருமைத் திருமகளை அன்புடன் தேடிக் கொண்டிருந்த தாய்க்கு இப்போது ‘உளவு’ புரிந்திருக்க வேண்டும்.

தந்தையின் நெஞ்சக்கரையிலும் ‘பாப் இசை’யின் நாத அலைகள் மோதிக் கொண்டிருக்கின்றன. ஊடாக, பழைய நினைவலைகளும் சங்கமம் ஆகிக் கரை சேருகின்றன.

ஒரு நடப்பு:

பாபு இதே மாதிரியான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஹாஸ்டலிலிருந்து இங்கே வந்திருந்தான். துரைசாமி ரோடிலிருந்து மடங்கி, பனகல் பார்க்கைக் கடந்து, முப்பாத்தம்மனுக்கும் ஒரு கும்பிடு கொடுத்துவிட்டு, வடக்கு உஸ்மான் சாலை நெடுகிலும் கால் நடையாக நடந்தே வந்திருந்தான்!-அவன் ஓர் அபூர்வரகம்!-- அபூர்வ ராகம் மாதிரி! கால் தூசு போக, பங்களாவின் பூந்தோட்டக் குழாயைத் திருகி மூடிவிட்டு, கனிந்து வரும் பசுவின் கன்றாகப் பாய்ந்து வந்து, முகப்பு மண்டபத்தில் இளையராஜாவாக நின்றான்; சீரணி உடுப்புக்களைச் சீராக்கிக் கொண்டான். “அப்பா!”

ரஞ்சித் ஓடி வந்தார்.

“அம்மா!” என்று கூவினான் பாபு.

ரஞ்சனி தேடி வந்தாள்.

இருவருக்கும் ஆளுக்கொரு முத்தம் கிடைத்தது.

இருவரும் ஆளுக்கொரு முத்தம் கொடுத்தார்கள்,

பாசத்திற்குச் சிரிக்கத் தெரிந்தது போலவே, அழவும் தெரிந்திருந்தது. பாசத்தின் முதலுக்கு உண்டான வட்டியைக் கணக்குப் பார்த்து நேர் செய்து விடுவதென்பது அவ்வளவு லகு இல்லை என்பதற்கு அடையாளங்களா இந்தச் சிரிப்பும் அழுகையும்?

பெற்றவர்கள் இருவரும் தங்களது ஆஸ்திக்கு ஒரு பிள்ளையான பாபுவின் அன்புப் பிடிப்பினின்றும் இப்போது தான் விடுதலை பெற்றனர்.

“அக்காவை எங்கே காணோம்?” விசாரணை செய்தான் சிறுவன். மரியாதையுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மரியாதையாகப் பதில் சொல்லப்படுவதைப் போன்று, “பாப் ம்யூஸிக்” மாடிப்படிகளில் அன்னநடை பயின்று வந்ததைக் கேட்டான்: கண்டான்; சிரித்தான்; சிரித்துக் கொண்டான். ஒரு தேக்கரண்டி ஊத்துக்குளி நெய்யில் அரைக் கரண்டி ஜீனியைக் கொட்டிப் பிசைந்த மல்லிகைப் பூ இட்டலியைச் சின்னச் சின்ன உருண்டையாக உருட்டி அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி-மாற்றி மாற்றி ஊட்டவே, பையன் பாடு கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், திண்டாட்டமாகவும் போய்விட்டது.

முக்கோணப் பாசம் மூன்று தனித் தனிப் புள்ளிகளில் நின்று திக்குமுக்காடிக் கொண்டிருந்த இப்படிப்பட்ட வேளையிலேதான், மகேஷ் அனுமதி இல்லாமலேயே, உரிமையுடன் உள்ளே நுழைந்தார்: நந்தினி விலாசம் பங்களாவில் நுழைவதற்கு அவருக்கு இல்லாத உரிமையா?-அன்பும் பாசமும் புதுப் புனலாகப் பொங்கிட, முகப்பு மண்டபத்தில் அடியெடுத்து வைத்திட்ட அவர், படிகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று கடக்கக் கடக்க, திடுதிப்பெனப் புனல் சுழியில் அகப்பட்டுக் கொண்டவர் போலே, சஞ்சலமும் திகிலும் அடைந்திட, அப்படியே செயலிழந்து கடைசிப் படியிலேயே நின்றுவிட்டார்!

“ஒ, மகேஷ்!...வாங்க, வாங்க!” இன்பப் பூஞ்சிட்டாக, இன்பமயமான குதூகலத்துடன் வரவேற்றாள், நந்தினி விலாசம் குடும்பத்தின் தலைவி ரஞ்சனி.

மகேஷ் தன்னுணர்வு பெற்றார்; இறுகிச் சில்லிட்டிருந்த உதடுகளில் பற்கள் தெரிய, மாம்பழக் கீற்றாகப் புன்னகை ஒன்று வாய் பிளந்தது.

“வாங்க, மிஸ்டர் மகேஷ்!” என்று குடும்பத்தின் தலைவர் ரஞ்சித் தம் தம் பங்கிற்கும் முகமன் மொழிந்தார்.

ஆறுதல் சுவீகாரம் எடுத்துக்கொண்ட அமைதியில், மகேஷின் முறுவல் வாய் கொண்ட மட்டிலும் விரிந்தது: பெருக்கெடுத்த வேர்வையில் ‘ஜோஸ்’டவல் நனைகிறது!---- எர்ணாகுளத்தில் ஜோஸ் ஜங்க்ஷன் ஸ்தலத்தில், கன்னி இளமானாகக் கண்ணடித்துக் கொண்டிருக்குமே ஜோஸ் துணிக்கடை, அக்கடையின் முதலாளியான எம்.எம்.மேனோன் இவருக்கு ரொம்ப வேண்டப்பட்ட புள்ளி; ஆப்த சிநேகம். ஒரு திருவோணச் சமயத்திலே, மேனோன் சிநேகம் ரஞ்சித் தம்பதியருக்கும் கிட்டியது: பாபுவுக்கு மலையாளம் ஒட்டியது!

“மகேஷ் ஸாரே! சுகம்தன்னே? எந்தா விசேஷம்?” என்று குரலை நீட்டி இழுத்துக் குசலம் விசாரித்தான் வாண்டுப் பயல் பாபு; வாயெல்லாம் நெய் மணக்க, அன்பும் மணக்க விசாரணை செய்தான்.

மகேஷூக்கு வாயெல்லாம் பல்!--இப்போதெல்லாம் பாபு தன்னை ‘அங்கிள்’ என்று விளிக்காதது அவர் மனத்தை என்னவோ பண்ணியது. ஆக, தன் நெஞ்சுக்குத் தற்போது ஓர் உணர்வு மாற்றம் தேவை என்பதைப் புரிந்துகொண்டார் அவர் கவர்ச்சியான உதடுகளில் கவர்ச்சியான புன்முறுவல் ஒன்றை நெளியவிட்டார். மாடியினின்றும் சிதறிய இசை அலைகளில் கண்கள் சொக்கின. மாடியை அண்ணாந்து பார்த்த பிறகு, “நம்ம நந்தினிக் குட்டிக்குப் ‘பாப் ம்யூஸிக்’ என்றால், பசிக்கவே பசிக்காது போலிருக்குதே! நான் சொல்றது சரிதானே, ரஞ்சனி?” என்று வினவினர். மலையாள வாடை அடிக்காமல் பேசியதில் அவருக்குத் திருப்தி. இல்லாவிட்டால், அதற்கு வேறு கிண்டல் செய்து விடுவானே பாபு?-ஊம், சுட்டிப் பயல்!

மகேஷ் அபிப்பிராயம் கேட்டதற்கு ரஞ்சனி சொல்கிறாள்: “மகேஷ், நீங்க சொல்றது பொதுவாச் சரியாய்த் தான் இருக்கும், ஆனா, இப்ப நிலைமை வேறே. நம்ப நந்தினிக்குட்டி இப்போ பசியாறிட்டுத்தான் பாப்ம்யூஸிக்கை ரசிச்சுக்கிட்டு இருக்குதுங்க”. நமட்டுச் சிரிப்பு வசீகரப் பாவனையில் நழுவுகிறது.

“ஒஹோ? அப்படியா சங்கதி”-மகேஷ் ஆர்ப்பாட்டமாகவே சிரித்து வைத்தார்; ஆனால், கடுகத்தனை அசடாவது வழிய வேண்டுமே!...மூச்!...

உயிர் வாழ்க்கைக்குத் துணையாக இருப்பவளின் மெல்லியதான நகைச்சுவைப் பண்பைச் சிரித்து அனுபவிக்க ரஞ்சித் ஒருநாளும் தவறியதே கிடையாது.

அந்தப்புரத்தில் வேலைக்காரச் சிறுமி கைதவறிப் போட்டுவிட்ட பாத்திரத்தின் ஒலி நாலுடிறத்திலும் எதிரொலிக்கிறது. செவகி அசமந்தம்!...

ரஞ்சனியும் ரஞ்சித்தும் சொல்லி வைத்த மாதிரி ஒரே தருணத்தில் சிந்தனை விழிப்புப் பெற்றனர். இருவரும் ஒரே சமயத்தில் அண்ணாந்து பார்தத பின், ஒருவரையொருவர் ஆழமாகப் பார்த்துக் கொள்ளவும் தொடங்கினர். அர்த்தமுள்ள இளநகை இருதரப்பிலும் மலர்ந்தது.

மேற்கத்தியச் சங்கீதம் நந்தினியுடன் இன்னுமா விளையாடிக் கொண்டிருக்கவேண்டும்?

நந்தினியின் மேலை நாட்டு இசை மோகம் பற்றி ஒரு சமயம் மகேஷ் விமர்சனம் செய்த பழைய சம்பவத்தை இருவருமே அசை போட்டிருக்கிறார்கள் என்பதற்கு விநயமான இளநகை ஆர்த்தம் சொல்வியிருக்கலாம்.

வெய்யலின் சூடு சாளரத்திலே கள்ளத்தனமாய் எட்டிப் பார்த்தது.

“நந்தினிப் பெண் இன்னம் டிஃபன் சாப்பிடவில்லை தானே?” என்று கேட்டார் ரஞ்சித்.

“ஆமாங்க,” என்றாள் துணை.

“திர்க்கதரிசியாக்கும் நம்ப மகேஷ், பாப் மியூஸிக் என்றால், நந்தினிக்குப் பசிகூடத் தோணாது போலிருக்கேன்னு அவர் அன்றைக்குக் சொன்னது இன்றைக்கு நூற்றுக்கு நூறு பலித்திருக்கிறதே?”

அத்தானின் பேச்சை ஆமோதிக்கிற பாவனையில், தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மையாக இயங்குவதோடு நின்றுவிட்டாள் ரஞ்சனி,

ரஞ்சித்துக்கு முகம் மேலும் கறுத்தது. இந்த ரஞ்சனி வாயைத் திறந்தால் என்னவாம்? அவருக்குப் பொறுக்கவில்லை. “என்னடி ஆம்மா ரஞ், நான் சொல்றது சரி தானே?” என்று ‘நிமிண்டி’ விடலானர்.

ரஞ்சனியா சுதாரித்துக்கொள்ளாமல் இருப்பவள்?---“ரொம்ப ரொம்பச் சரிதானுங்க. மகேஷ் சொல்றது பொதுவாச் சரியாத்தான் இருக்கும்னு அவர்கிட்டவே அன்றைக்கே நானும் தீர்க்கதரிசனத்தோடே சொல்லலீங்களா, அத்தான்?” என்பதாக மடக்கினாள்.

“உன்கிட்டேயிருந்து நான் எப்பவுமே தப்பமுடியாது தான்!”

“அப்படி, வாங்க வழிக்கு!”

“உன் வழிக்குத்தானே?”

“ஆமாம்; என் வழிக்கேதான்!” சொற்கள் அழுத்தமாகவும் அமர்த்தலாகவும் விழுந்தன. அவளுக்கு அவள் கவலை. அட்சயப் பாத்திரத்தில் இருந்த இட்டிலிகளைச் சரிப்படுத்தும் கருமத்தில் கண் ஆனாள். என்னவோ மனக் கணக்குப் போட்டுப் பார்த்ததில், ஒர் இட்டிலி மாத்திரமே மிச்சக் கணக்குக் காண்பிக்கவே, “அத்தான், உங்களுக்கு இட்லி போதுமா? இல்லே...” என்று இழுத்தாள்.

அதற்குள் ஒரு தடுமாற்றம்: “இட்லி மீதம் இருக்குமா?” என்று கேட்டார். இட்டிலிக் கணக்கில், மகேஷை மறந்திருப்பாளோ? “நினைத்தீர்கள்; வந்துவிட்டேன்!” என்கிற போக்கில் மனிதர் பிரசன்னமாகிவிட்டால், கதை எப்படி முடியுமாம்? “ரஞ், கேட்டேனே?”

“ஒண்ணே ஒண்ணு மிச்சப்படலாமுங்க!”

“புள்ளி போட்டுப் பார்த்தியாக்கும்?”

“ஊம்”

“என்ன கணக்கு?”

“அடுக்கிலே அடுக்கி வச்சிருக்கக்கூடிய இட்லி பதினேழு, இதிலே, நந்தினிக்கு அஞ்சும், எனக்கு நாலும் போனால், பாக்கி எட்டு. பாபு மூணுக்கு மேலே சாப்பிடமாட்டான். மகேஷ் வந்திட்டா, அவருக்கும் நாலு இட்லி வேணும். இந்தக் கணக்குப் பிரகாரம் பார்க்கையிலே, ஒரேயொரு இட்லிதான் மிஞ்சும்; ஆதுதான் உங்களைக் கேட்டேன்!”

அவரது ஜீவன், தீக்கணப்பில் எதிர்பாராமல் கால் தடுக்கி விழுந்துவிட்டதெனத் துடித்தது. “ரஞ்! கொஞ்ச நேரமாய் நான் உன்னை ரொம்பவும் சோதிச்சிட்டேன்!” என்று நா தழதழக்க வருந்தினர் ரஞ்சித்.

ரஞ்சனி உருகினாள்: “தெய்வம் சோதிக்கிறதுதாங்க தருமம்! ...தெய்வம் சோதிக்கவேண்டியதுதானுங்க நியாயம்! ஆமாங்க, அத்தான்!” நன்றியறிவின் கண்ணீர் முத்தங்கள் தாலிப்பொட்டில் ‘நிவேதனம்’ ஆகிக்கொண்டிருக்கின்றன!

டக்-டிக்-டக் ...!

“அழாதே, ரஞ், அழாதே! நீ அழுதால், நான் செத்துப் போயிடுவேன்!”

சுடர் விளக்கானாள் ரஞ்சனி. “ஐயைய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க, அத்தான்!” மனம் பதற, கைகளும் பதற, மங்கலத் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களிலே ஒற்றிக்கொண்டாள். “என்னோட அன்புத் தெய்வமே அநியாயமாய்ச் செத்துப்போயிட்டா, அப்புறம் நான் எந்தக் கோயிலிலே போய் விழுந்தழுவேன்?” தாய் முலைப் பாலுக்காக ஏங்கித் தவித்து, ‘அரைமூடி’ப் பாப்பா வீரிடுமே, அந்தப் பாங்கிலே வீரிட்டாள் ரஞ்சனி. “உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுங்க, அசந்து மறந்துங் கூட, செத்துப் போயிடாதீங்க, அத்தான்! நீங்க உயிரும் உடம்புமாய் இருந்தால்தானுங்களே, நீங்கள் பாசத்தோட கட்டிக் காத்துப் பரிவோட காபந்து பண்ணி வச்சுக்கிட்டு இருக்கிற இந்தப் பாவியோட உயிருக்குத் தாலிப்பாக்கியம் கிட்டமுடியும்? அத்தான்...அத்தான்!” கையெடுத்துக் கும்பிட்டாள் ரஞ்சனி.

பொற்கரங்களைக் கண்களில் ஒற்றிக்கொண்டார் ரஞ்சித். விம்மல் வெடிக்க, நெஞ்சும் வெடித்துவிடும் போலிருந்தது.

“அழாதீங்க, அத்தான், அழாதீங்க; நீங்க அழுதால் எந்தத் தெய்வத்துக்குமே பொறுக்காதுங்க!” கெஞ்சினாள் ரஞ்சனி. அன்புக் கண்ணீரைச் செருமிக்கொண்டே துடைத்துவிட்டாள்.

திடீரென்று மாடியில் நிசப்தம்.

மனைவியின் கண்ணீரை அவசரம் அவசரமாகத் துடைத்துவிட்ட பாங்கர், “ரஞ்சனி, நம்ப ஸி. ஐ. டி. பொண்ணு ஓடிவந்து பார்த்திடப் போகுது; ஒடிப்போய் முகத்தைக் கழுவிக்கிட்டு வந்திடு.” என்று உஷார்ப்படுத்தினார்; சவரன் மார்க் வேட்டியின் ஒரு தலைப்பைப் பிரித்துத் தம் முகத்தை வேகம் வேகமாகத் துடைத்துக் கொள்ளலானார்.

ரஞ்சனியின் கண்கள் பளிச்சென்று இருந்தன; நிர்மலமாகவும் இருந்தன. “நந்தினி” என்று குரல் கொடுத்தாள்.

மாடிப் படிகளை எண்ணிக் கணக்கெடுத்தவளாக, ஆடி அசைந்து ‘அம்மானை’ பாடிக்கொண்டே இறங்கி வந்து கொண்டிருந்தாள் குமாரி நந்தினி, ஷிஃபான் ஸில்க் பாவாடை, தாவணியில் அவள் அழகு ஓங்கியிருந்தது. சந்திரப்பிறைச் சாந்துப் பொட்டில் ஒச்சம் சொன்னால் பாவம். இப்போதெல்லாம் நெற்றிக்கு இட்டுக்கொள்ளப் பழகிவிட்டாள். அம்மாவின் தயவு தேவை இல்லை. பெற்றவளின் அழைப்பு காதில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. உதடுகளுக்குள்ளே புன்சிரிப்பு ஒளிந்து கொண்டிருக்கிறது! வெளிப்புறத்திலே டால்கம் பவுடரின் இனிய மணம் வீசும், படிகளைத் தாண்டி வந்த அயர்வில் வேர்வை மின்னுகிறது; சற்றுமுன் மிதந்து வந்த இசை வெள்ளத்தில் சாமர்த்தியமாக மிதந்து வந்திருக்கக் கூடாதோ இந்தப் பெண்?

ரஞ்சனியை முந்திக்கொண்டு, “வா, மகளே”, என்று வரவேற்றதில் ரஞ்சித்துக்குத் திருப்தி ஏற்படவே செய்தது.

‘உம்’ மென்று முகத்தை வைத்துக்கொண்டு தந்தையை மட்டும் பார்த்த நந்தினி, “நாடக பாணியிலே வசனம் பேசக்கூடத்தான் உங்களுக்குத் தெரியுமே?- என்னை வரவேற்கையிலே, ‘வா, மகளே, வா’ அப்படின்னு அழைச்சால் என்னாங்க, அப்பா?” என்று கேட்டாள்.

ரஞ்சித்துக்குச் ‘சுரீர்’ என்றது. கொஞ்சம் முந்தி தமக்கும் ரஞ்சனிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகவே ஒட்டுக்கேட்டிருப்பாள் போலிருக்கிறதே இந்தப் பொல்லாத பெண்? இந்தக் கைங்கர்யத்திலும் பால்கனி இசை இவளுக்குக் கை கொடுத்திருக்கத்தான்வேண்டும். “நந்தினி, உன் ஆசை நியாயமானது; அதை நியாயப்படுத்திடுறேன். ஒரு காரியம் செய்யேன். பெரிய மனசு பண்ணி மறுபடி ஒரு வாட்டி மாடிக்கு ஒடித் திரும்பி வந்திடு; நீ வந்து சேர்ந்தானதும், நீ ஆசைப்பட்ட விதத்திலே, நீ கேட்டு ரசிக்கிற மாதிரி, நேருக்கு நேர் நான் டயலாக் பேசிடுறேன். என்ன, சரி தானே?”

நந்தினியின் முகப் பருக்கள் தோன்றியிருந்த கன்னங்களில் குழி விழும் இடங்கள் ‘சோ’ வென்று வெறிச் சோடிக்கிடக்கின்றன. ஒரு விஷயம் மாத்திரம் அவளுக்குப் புரிந்தது. அப்பா யதார்த்தமாகப் பேசவில்லை; நெஞ்சுக்குள்ளே என்னவோ குறுகுறுக்கிறதே!- “எனக்கு இப்ப டைம் இல்லை: உங்க வசனங்களை இனிமேல்தான் நான் ரசிக்கணும் என்கிறதும் இல்லேங்க, டாடி!”

பாபு தப்பிப் பிறந்ததிலிருந்துதான் நந்தினியின் இளவரசித் தர்பார் ஓரளவிற்கு ஆட்டம் காணத் தொடங்கியது: மகேஷ்கூட அறிவார், “அப்படியா ஆல்ரைட், மை டியர் மகளே!” என்று துளியும் சிரிக்காமல், கண்டிப்பான ---அழுத்தமான குரலெடுத்துச் சொன்னார் ரஞ்சித்.

ஆனால்---

திருமதி ரஞ்சித்துக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. “அம்மாடி, உனக்குப் பசியெடுக்கிறதுக்காச்சும் டைம் இருக்குமா?” என்று விசாரித்தாள்.

கைந்நொடிப் பொழுதுக்கு மட்டுமே பற்கள் வெளியே தெரிந்தன. “எனக்குப் பசி எடுத்து ரொம்ப ரொம்ப டைம் ஆச்சு" என்றாள் நந்தினி விலாசத்தின் செல்லச் குமாரி, செல்வக்குமரி . பின்னே, நீ இறங்கி வர வேண்டியதுதானே?’’ என்று குறுக்கிட்டார் தந்தை.

"நீங்களோ, அம்மாவோ இரங்கிக் கூப்பிட்டால் என்னவாம்?”

ரஞ்சித்திற்குச் சிரிப்புப் பீறிட்டது.

“ஏங்க! நம்ப ராசாத்திக் குட்டிக்கு 'றகர'- 'ரகர’ வித்தியாசம் இப்ப நல்லாத் தெரிஞ்சு போச்சுங்க!”

"இரங்கி என்கிறதை நைஸாகவும், லாகவமாகவும் நந்தினி சொன்னப்பவே, நான் கவனிச்சிட்டேன். நம்ப மனசிலே பால் வார்த்திருச்சு நம்ம பொண்ணு. ஆமா, ரஞ்...!"

பெற்றவள் சேலை முந்தானையைக் கொய்து வாயில் அமுக்கிக் கொண்டாள்.

எத்தனை நாழிகைதான் அசடு வழியாமல் இருக்கும்? “நான் ஒண்னும் உங்க மனசிலே பால் வார்க்கலே: நிஜமாகவே பாலே வார்த்தது உங்க பாபுவாகத் தான் இருப்பான்! ஏன்ன, அவன் அதிசயப் பிள்ளையாச்சே? அதிசயமான பிள்ளையும் ஆச்சுதே' என்று பொரிந்து தள்ளினாள் குமரிப்பெண்.

மின்னாமல் முழங்காமல் இடிச் சத்தம் கேட்டால், யாருக்கும் திகைப்பாகவே இருக்கும்.

பெற்றவர்கள் திடுக்கிட்டனர்.

ரஞ்சித் தவிப்பை மறைத்தவராக, ‘நந்தினித் தங்கமே! நம்ப பாபு அதிசயப் பிள்ளைதான்; அதிசயமான பிள்ளையுந்தான். அதிலே சந்தேகமே இல்லை!-அது மாதிரியே. நீயும் அதிசயப் பெண்தான்: அதிசயமான பெண்ணும் தான்!” என்று நறுக்குத் தறித்தாற் போன்று விடை கூறினார் ரஞ்சனியின் கணவர்.

ரஞ்சித்தின் மனைவியும் ஊம் போட தவறிவிடவில்லை.

தொட்டால் சிணுங்கிப் பெண் மறுபேச்சுப் பேசவில்லை. சிறை வைத்திருந்த மென்சிரிப்பிற்கு விடுதலை தர இப்போதாவது நந்திணிக்கு மனம் இறங்கியும், இரங்கியும் வந்ததே?

தாய்க்கும் தந்தைக்கும் இப்பொழுதுதான் நல்ல மூச்சு வெளிவாங்கியது போலும்!

"பசியெடுத்து ரொம்ப டைம் ஆச்சுதின்னு தம்ப பொண்ணு சொன்னிச்சில்லே?”

"பசி போயும் ரொம்ப டைம் ஆச்சின்னு உங்க பொண்னேதான் சொல்லுது!" என்று கோபாவேசத்தோடு குறுக்கிட்டாள் நந்தினி.

“அப்படி யெல்லாம் நீ கோபிச்சுக்கிட்டா, அப்புறம் தாங்க என்ன ஆகிறதாம்:

“ஆமாடி, ராசாத்தி!"

‘தரிசனத்தைப் பாரு தரிசனத்தை! நீங்க ஒண்ணும் ஆகமாட்டீங்க: என்னோட டாடியாவும் மம்மியாவும்தான் இருப்பீங்க!’

‘சரி, சரி. வார்த்தையாடாம, இட்டிலியை எடுத்துவை. ரஞ்சனி. ஒரு சங்கதியைக் காரசாரமாவே சொல்லிட்றேன். இங்கிட்டு நம்ப நந்தினிப் பெண் எழுந்தருளிடுச்சின்னா, நீ ஒட்டமா ஓடிப் போய்ப் பின்கட்டுக் கதவைத் திறந்து வச்சுக்கிட்டு, நம்ப முருங்கை மரத்தையும் ஒரு பார்வை பார்த்துக்கிட்டிருக்கிறது நல்லது. சரி, சரி, நீ போய் உன்னோட எதாஸ்தானமான ஊதாநிறக் குஷன் சோடாவிலே உட்காரம்மா!’

“நான் வேதாளம் ஒன்னும் கிடையாது. அப்பா ஆர்டர்ப்படி, என்னோட ஊதா நீலச் சோபாவிலேயே தான் உட்காரப் போறேன். அப்பாவுக்குத்தான் ஊதா நிறம்னா, ரொம்பப் பிடிக்குமே?”

மறுபடி, ஒரு “சுருக்! பூஜைக்குப் புறப்படுவதற்கு முன் சுவைத்துக்கொண்டிருந்த ஊதாநிற அந்தரங்கடயசியையும் ஒண்டியிருந்து பார்த்திருப்பாளோ நந்தினி?-அதைப்பத்திரப் படுத்தியதை ஒரு முறைக்கு இரு முறையாக ஞாபகப் படுத்தி ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பின்னர்தான், அவருக்குத் தவிப்பு நீங்கியிருக்கலாம். அப்புதமா நாம வாயாடலாம். முதலிலே நீ சாப்பிடேன்’ என்றார் ரஞ்சித். ‘அந்தக் காலத்திலே நான் சின்னவனா நம்: பாபு மாதிரி இருந்த நாளையிலே, குந்திச் சாப்பிடுறதுக்கு எனக்கு வெறும் மன் தரைதான் கிடைச்சுது: என் தாய் தகப்பளுலே முடிஞ்சது அவ்வளவு தான் என்னமோ, விதி. திசையைத் திருப்பின தாலே, சீதேவியான உன் அம்மாக்காரி எனக்குக் கிடைச்சாள்: சீதேவியான மஹாலஷ்மியும் எங்களைத் தேடிவந்தா: ஜாம் ஜாம்னு உட்காருறதுக்கு பட்டு மெத்தை போட்ட சோபா கிடைச்சிருக்கையிலே, நீ ஏன் முருங்கை மரத்திலே ஏறிக்கிடுற வேதாளமாய் உன்னைப் பாவிச்சுத் கிடனும்? விழுந்திடப் போறே நல்லா உட்கார்த்துக்க, மகளே! பேச்சை நிறுத்தினார், குடும்பத்தின் தலைப்புள்ளி.

அப்பாவின் விநயபூர்வமான இயகான பேச்சை ஏற்றுக் கொள்ளத் தவற வில்லை நந்தினி. மிக லேசாய் நாணப்பூ மொட்டவிழ்ந்தது. நாணம் மணக்காமல் இருந்து விட இயலுமா?-ஆகவே தான், அவள் கம்பீரமான க்வீன் மேரிஸ் மாணவியாகச் சாய்மான இருக்கையில் கால்மேல் கால் போட்டுச் சாய்ந்து கொண்டிருக்கிறாள். போட்டுக் காட்டிய புள்ளிப்படி அன்னை நீட்டிய வெள்ளி இட்டிலிப் பிளேட்டை அதாவது, இட்டிலி நிரம்பிய வெள்ளிப் பிளேட்டைப் பத்திரமாக ஏந்திக்கொண்டு நர்ஸ்ரி சிறுமி மாதிரி ‘ஒன், டு, த்ரீ’ போட்டு எண்ணி முடித்ததும் தான், தக்காளிச் சட்டினி கண்ணிலே பட்டது முகத்தைச் சுளித்துக் கொண்டாள். உறைப்பு தூக்கலான பச்சைக் கொத்தமல்லித் துகையல் என்றால் தான் அவளுக்கு நாக்கில் நீர் சொட்டும். ஆனால், அம்மாவுக்கும் பாபு பையனுக்கும் பிடிக்கக்கூடிய மிளகாய்ப் பொடி, அப்பாவுக்குப் பிடிக்காதது போலவே, இவளுக்கும் பிடிக்காது. துகையல் கிடைக்காத ஏமாற்றத்தை அவளால் ஒதுக்கி விட முடியவில்லை. நாற்காலியில் வீற்றிருந்த தந்தையை ஒட்டி உரசிக் கொண்டு, ஒற்றைக் கால் தவம் இயற்றிய பார்வதிதேவியாக நின்றிருந்த தாயின் பக்கம் திரும்பினாள்.“ டிஃபன் நேரத்திலே உங்களிலே யாருமே என்னைக் கூப்பிடவேணும்னு நினைக்கல்லே; அது உங்க சொந்த விருப்பு வெறுப்புசம்பந்தமான சொந்த விஷயம். பாப் ம்யூஸிக்னா எனக்குப் பசிக்கக் கூட பசிக்காது போலிருக்கேன்னு கம்மா ஒரு பேச்சுக்கு எப்போதோ திருவாளர் மகேஷ் சொன்னது ஒண்ணும் வேதவாக்கா ஆகிட முடியாது. அது போகட்டும். இன்னொரு விஷயம்!-என்னை யாருமே அத்தனை சுலபமாய் அவாய்ட் பண்ணிட இயலாது; அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்; பொறுத்துக்கவும் மாட்டேன்! எனக்கு ‘எல்லாம் தெரியும்!’ ஆமாம்!” ஆவேசத்தில் ஆரம்பித்த பிரசங்கம் ஆத்திரத்தில் முடிந்தது.

நேற்று இந்நேரம் பருவமழை.

இன்று இந்நேரம் பேச்சு மழை.

ஆசைக்கு ஒரு பெணணாக வாய்த்திட்ட புதல்வியின் சிடுமூஞ்சிக் குணத்தைக் கண்டு ரஞ்சனிக்குச சிரிக்கத் தான் தோன்றியது. ஆனால், ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று ஏன் அப்படி முத்தாய்ப்பு வைத்தாள்? இந்தப் பேச்சு அவளை அழவைத்துவிடும் போலிருந்தது.

ரஞ்சித்துக்குக் கோபம் வீரிட்டது. ‘எனக்கு எல்லாம் தெரியும்!’-பெற்ற மகளே பெற்ற அப்பனிடம் பூச்சாண்டி காட்டுவதா? சே!... ஆத்திரம் பீறிட்டது. “ஏ, நந்தினி” என்று சிம்ம கர்ஜனை செய்தார்; வீரபாண்டியன் மீசை கோபாவேசமாகத் துடிதுடித்தது!

நந்தினியின் ஈரல் குலை நடுங்கி விட்டது!- “அப்பா, உங்க மகள் ஏதாச்சும் தப்பாய்ப் பேசிட்டாளா?” சுடு நீர் மடை கட்டியது.

ரஞ்சித்தின் விழிகள் விரிந்து விரிந்து உருண்டன; உருண்டு உருண்டு விரிந்தன. “என் மகள் தப்பாகப் பேசுவாளா?... நீதான் தப்பாகப் பேசிட்டே!” கருமணிகளுக்குக் கரை கட்டி நின்ற ரத்தம், அவரது பேச்சுக்குக் கரை காட்டிற்று.

“அ...ப்...பா!”

நந்தினி கதறினாள்.

ரஞ்சனியின் நீலநயனங்களில் ஆடிப்புனல் ஓடுகிறது.

முகப்பு மண்டபத்தில், காவற்காரரின் தலை தெரிந்தது.

சூட்டோடு சூடாக, ரஞ்சித் எட்டிப் பார்த்தார். அவரது பார்வையிலே, அவருடைய ‘இம்பாலா’வுக்கு அருகில் வந்து நின்ற ‘செவர்லே’ பட்டுத் தெறிக்கிறது. ஒர் அதிசயம்!---செவர்லே ஒ-கே--விடிந்ததும் பணம் கிடைத்தால்தான், தன் வாழ்க்கை விடியுமென்று ராத்திரி கெஞ்சிக் கூத்தாடினார் படத் தயாரிப்பாளர் கைலாசம். சொன்ன சொல்படி வந்து குதித்துவிட்டார்!-அவருடைய கால்கள் பத்திரமாகவே இருக்கவேண்டும்!-வரவேற்புக் கூடத்திற்குச் செல்ல ஆயத்தப்பட்டார் பாங்கர் ரஞ்சித். நந்தினி தவித்தாள்.

தடுமாறினாள் நந்தினி. ‘அ...ப்...பா!’

இந் நியிைல்:

தொலைபேசி, மணி அடித்தது.

ரஞ்சனி விரைந்தாள். “நம்ம பாபுவாகத்தானுங்க இருக்கும்!”

“ஏன், நம்ம மகேஷாகவும் இருக்கலாமே?...”

“பேஷாக அப்படியும் இருக்கலாமுங்க!”

“ஒஹோ?”

“ஆனால்...?”

“சொல், ரஞ்சனி, சொல்!”

“அது நம்ப பாபுவாகவும் இருக்கலாம்தானே, அத்தான்?”

“ஓ! அப்படியும் இருக்கலாம்தான்!”

“அப்படியே இருந்திடட்டுமே!”

“ஆஹா! அப்படியே இருந்திடட்டும், ரஞ்சனி! ” பாசம் பந்தயக்குதிரை ஆயிற்று...!