அந்தி நிலாச் சதுரங்கம்/பாபு ஒரு பிரச்சினை

விக்கிமூலம் இலிருந்து

 
அந்தி நிலாச் சதுரங்கம்

3.பாபு! --- ஒரு பிரச்சினை!


பிரச்னைதான்!....

தொலைபேசியில் அழைப்பது யாராக இருக்கும்?

ரஞ்சித்தின் சிந்தனைகள் தாயம் ஆடுகின்றன.

‘கண்மணி பாபுவா?-விடுமுறை தினங்களில் ஹாஸ்டலிலிருந்து நேராக வீட்டுக்கு வருவதானால், இந்நேரம் வந்திருப்பான்: இம்பாலாவில் ஏறமாட்டான்: வினோபாஜி மாதிரி நடந்துதான் வருவான் நடந்துதான் போவான்: இந்தச் சின்ன வயதிலேயே, பற்றற்ற-பற்றறுத்த நிலை ஏன்தான் ஏற்பட்டதோ? எப்படியும் வந்துவிடுவான்; வாரத்திலே, ஆறு நாட்களில் சுமக்க முடியாமல் சுமந்து வைத்திருக்கும் பாசத்தையும் அன்பையும் ஒரு வீவு நாளில் எங்கள் முன்னிலையில் கொட்டி அளக்காமற் போனல், அவனுக்கு உறக்கம் பிடிக்காது; ஊண் பிடிக்காது: நல்லபடியாக வந்து சேர்ந்து விடவேண்டும். அம்மாக்காரிக்கு இப்போதே இருப்புக்கொள்ளவில்ல; வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள், பாவம்!...பாபு!...

‘ஒருவேளை, எங்கள் குடும்ப நண்பரான மிஸ்டர் மகேஷ்தான் கூப்பிட்டிருப்பாரோ? இரண்டு, இரண்டரை நாழிகைக்கு முன்னதாக, அந்த ஊதாப்பூ நிற நாட்குறிப்பில் நான் மூழ்கிப்போயிருந்த, நெருக்கடியானதும் சோதனையானதுமான வேளையில்-என் ரஞ்சனியும் காணாமற் போய்விட்ட சமயத்தில், என்னை நிர்ப்பந்தப்படுத்திக் காதுக்கும் காதுக்குமாகப் பேசித் தன் உள்ளத்தின் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய உயிர் நண்பர் மகேஷ் பேசிக் கொண்டிருக்கையில், தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. அது சரி; அது இயற்கை; செயற்கைச் சக்தியின் விதிகூட சோதிப்புக்கு ஆளாவதும் இயற்கையாகத் தான் இருக்குமோ?-அவர் விரும்பியிருக்கும் பட்சத்தில், எத்தனையோ தரம் கூப்பிட்டிருக்கலாம்; கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள். அவரோ, பட்டணத்தைத் துறந்து ஒடிப்போனவர்; இப்போது திரும்பியிருக்கிறார் . அவருக்குத் தொலைபேசிக்கா பஞ்சம்? ...ம்... என்னவோ, பேசவில்லை. வாழ்க்கையிலே ஒரு பற்று, பற்றுதல் இருக்கவேண்டாமோ? ---அசல் சாமியார்தான்!---சாமியாரிலும் சாமியார், ஒண்ணாம் நம்பர் நவநாகரிகச் சாமியாராக்கும்!...’

டங் ... !

சிந்தனை நமைச்சல் ஒய்ந்தது; மனம் விழித்துக் கொண்டது. உயிருக்கு இனியவள் நின்ற திசைக்குப் பார்வையைத் திசை திருப்பியபோது, செய்திகளை வாங்கிக் கொடுக்கும் உபகரணத்தை ஆத்திரத்துடன் ‘டங்’ என்று ‘ரெஸ்’டில் வைத்துவிட்டு, நிச்சலனமாக ரஞ்சனி திரும்பி விட்டதைக் காண நேர்ந்தது. ரஞ்சித் புழுங்கினார்!

“பேச்சு மூச்சைக் காணல்லே; ரெண்டு செகண்ட் பார்த்தேன்; பேச்சுமூச்சுக் காட்டாம , வச்சிட்டேன். ராங் நம்பரோ, என்னமோ?-ஊம்...அவசிய அவசரம் உள்ளவங்க, முறையோட கூப்பிடுவாங்க; நீங்க கிளம்புங்க, அத்தான்,” என்று சொல்லி, புருஷனை வழிகூட்டி வைத்து விட்டு, உணவுக் கூடத்துக்கு விரைந்தாள். ‘முசுட்டுப் பொண்ணு பலகாரத்தைத் தின்னுதோ, என்னமோ?’-- அத்தானுக்கு வராத கோபம் வந்துவிட்டால், அகப்பட்டவர்கள் பாடு சந்தி!-‘ என் மகள் தப்பாகப் பேசமாட்டாள்; நீதான் தப்பாகப் பேசிட்டே!’-எவ்வளவு நிர்த்தாட்சண்யமாகப் பேசிவிட்டார். இவர்? ஆனாலும், என்னுடைய நந்தினிப் பெண்ணுக்கு இப்படி வாய் நீளக்கூடாது. ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று நந்தினி போட்ட குண்டு அவள் மனத்தில் வெடிக்கவில்லை; உறுத்தியது: கனத்தது; நீள்மூச்சில் தவித்தாள் ரஞ்சனி.

வேடிக்கைதான்!

சுவரிலும் காலம் ஓடுகிறது.

மணி பத்து ஆகப் போகிறது.

ரஞ்சனிக்குத் ‘திக்’கென்றது. பாபுவைக் காணோமே!---பெற்ற மனம் பித்து; ஆனால், பிள்ளை பாபுவின் மனம் கல்லா என்ன? சூன்யத்தில் ஆளுகின்றவனை நம்புபவள் அவள்: கை குவிக்கிறாள்: கண்கள் குவிகின்றன. எப்படியோ, மகளின் பக்கத்தில் வந்து நின்றிருக்கிறாள். ஸ்லிப்பர்களில் தடுமாறியவள் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் முகத்தில் ஈயாடவில்லை; எதிரில் நின்ற கண்ணாடியிலிருந்து விலகி நின்றாள்.

ஆனால், நந்தினியின் பவுடர் வதனத்தில் ஈக்கள் ஆடின. அவை, விலக்கி வைக்கப்பட்டிருந்த இட்டிலிகளைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்திருக்கலாம்.

“நந்தினி...”

“....”

“நந்தினி! - ஒருதரம், ரெண்டு தரம், மூணு தரம்...!”

அவ்வளவுதான்.

மறு இமைப்பில்...

கோபக் கனல் தெறித்திட வந்து நின்ற ரஞ்சனியின் கழலடியில் நெடுஞ்சாண்கிடையாக வந்து வீழ்ந்த நந்தினி, “தாயே! நான் உங்களோட மகள்தானே?...உங்க அன்பான கணவரோட பொண்ணுதானே நான்?...ம்...சொல்லுங்க!ஒன்...டு...த்ரீ!...” என்று ஓலம் பரப்பினாள்.

பெற்ற மகளின் உணர்ச்சிகள் இப்படிக் கிளர்ச்சி செய்யுமென்று பெற்ற அன்னை சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது. நெஞ்சு பதை பதைத்தது. “நந்தினி, நீ எங்களோட மகளேதாண்டி, தாயே!” என்று விம்மி வெடித்தவளாக, நந்தினியின் இரண்டு கைகளையும் பற்றிப் பிடித்துத் தூக்கியெடுத்து, அவள் விளையாடிய மார்பகத்தில் அவள் முகத்தைப் பதித்து அணைத்துக்கொண்டாள் ரஞ்சனி.

பாசத்திற்குச் சிறை புகத் தெரிவதுபோலவே, விடுதலை பெறவும் தெரியுமோ?

“அம்மா...அம்மா...நான் செத்துப் பிழைச்சிட்டேனே. அம்மா!” என்று அந்த நாளில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பானே பாபு, அப்படிக் குதித்துக் கும்மாளம் போட்டாள் அந்தப்பெண். அத்துடன் திருப்தி அடையாமல், தாய்க்குக் கன்னத்துக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டு முத்தங்களையும் வழங்கினாள்.

ரஞ்சனியின் மேனி புல்லரிக்கிறது. பாபுவின் முத்தம் கிடைத்து எத்தனை வருஷம் ஆகிவிட்டது?-பரிதாபமாகச் சுற்றுமுற்றும் நோக்கினாள். பாபு இன்னமும் ஏன் வரவில்லை? பாசம் உயிர்க்கழுவில் துடித்தது: 'கடவுளே!...'

“நான் இட்டிலி சாப்பிட்றேன், அம்மா.”

"ஊம்.’’

“ஏம்மா, என்னமோபோலே இருக்கே?"

"ஒண்ணுமில்லே, நந்தினி."

“நீ பொய் சொல்லுறே!’

"நான் ஏம்மா பொய் சொல்லப் போறேன்?”

"அதை என்னைக் கேட்டா?-பொய் என்கிறது என்ன? உண்மையை மறைக்கிறதுக்குப் பேர்தான் பொய். பொய் பேசித்தான் தீரணுமென்கிற ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தை உயிர்போற நிலைமையிலோ, இல்லே, மானம் போற நிலைமையிலோ, விதி உண்டாக்கினலொழிய,பொய் பேசவே கூடாதின்னு நீயே எனக்குப் பாடம் படிச்சுக் கொடுத்திருக் கியே, அம்மா?-பின்னே, ஒரு அற்பமான பொய்யை ஏம்மா நீ சொல்றே?’’

"நீ என்னம்மா சொல்லுறே, நந்தினி?”

"உன்னோட கண்ணு கலங்கிக்கிணே இருக்குது; நீயானா, ஒண்னுமில்லேன்னு பொய் பேசி மழுப்பித் தப்பிக்கிறியே, அம்மா?” -

ரஞ்சனிக்கு அழுகையைத் தவிர்க்கும் உபாயம் விளங்க வில்லை ‘பாபுவை நினைச்சேன்; கண் கலங்கிருச்சு: அவ்வளவுதான்," என்று உயிரும் உள்ளமும் உருகித் துடிக்க விம்மினாள்.

“இந்தச் சின்னத் துப்புக்கூட எனக்குத் தெரியாமல் போயிடுச்சே!-நான் சுத்த மக்கு. இந்த லட்சணத்திலே, எனக்கு எல்லாம் தெரியும்னு கொஞ்சம் முந்தி, நான் சம்பமும் சவடாலும் பேசினேனே?-பைத்தியக்காரி நான்!... அது போகட்டும். நீ கண் கலங்காதே, அம்மா. பாபு வந்திடுவான்; அவன் ரோசக்காரன் மாத்திரம் இல்லே; கெட்டிக்காரனும்கூட. இத்தனை நேரமாகியும், இன்னம் பாபுவைக் காளுேமேன்னு நானும்தான் உள்ளுக்குள்ளே கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன்!” என்று தாழ்.குரலில் சொன்னாள் நந்தினி. பாசத்தின் சோகம் முகத்திலும் அப்பிக் கிடந்தது.

"சாப்பிடேன், தந்தினி.”

“நீயும் வாம்மா, சாப்பிடுவோம்."

“நான் வரல்லே.”

"ஏனம்மா?”

"எனக்குப் பசி, இல்லே; நீ சாப்பிடு.”

“எனக்கும் பசிக்கல்லே!"

"உனக்குப் பசியெடுத்து ரொம்ப டைம் ஆச்சின்னு அப்பவே சொன்னியே?’’

“அது ஒண்னும் பொய் கிடையாது. தம்பிப் பயல் வந்தானதும், நானும் உன் கூடவேதான் சாப்பிடப் போறேன். ஆம்மா!’

“உன் பிரியம்!" கண் மூடிக் கண் திறப்பதற்குள்ளே, எப்படி இத்தனை சமர்த்துக்காரியாக ஆனளாம். இந்த நந்தினிப் பெண்? தம்பி என்றால், அக்காள்காரிக்கு ஏழாம் பொருத்தம் ஆயிற்றே? அவள் மனம் மாறியிருக்கிறதா? இல்லை, மாற்றப்பட்டிருக்கிறதா? தனக்குத் தானே பெருமைப்பட்ட பாவனையிலேயே, முகம் களை கட்டியது. தன்னுடைய அன்புச் செல்வங்கள் புடைசூழ, காலைச் சிற்றுண்டியைத் தொடங்கி வைக்கப்போகும் நல்ல பொழுதுக்காகவே தவித்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனி. சோதித்தது போதுமென்று இனிமேலாவது பாபு பிரசன்னமாகித் தரிசனம் கொடுக்கலாகாதா?-விழிகளிலே பணிச் சிதறல்,

அழைக்கும் குரல், காற்றில் அழைக்கப்பட்டு வருகிறது.

உயிர்கொண்டவர், உயிர்கொண்டு அழைக்கிறாரென்றால் கட்டாயம் அவராகவேதான் இருக்கவேண்டும். ஆமாம்; அத்தான்தான் !-தயாரிப்பாளரைச் சந்திக்கத் தயாராகி இப்போதுதான் போனார்!

"ரஞ்...ரஞ்...! இங்கிட்டுப் பாரேன்!”

பாபு!...

பெற்ற மனம் பித்து ஆயிற்றே?- ஆனந்தம் முரசு கொட்டியது. பாதங்கள் பூமியில் நிலைக்கவில்லை. "பாபு, ஏம்ப்பா இத்தனை நேரமாயிடுச்சு?’ உள்ளம் தவித்த தவிப்பில், பாசமும் தவித்தது; தாய்மையும் தவித்தது.

பாபு ஏன் இப்படி ‘உம்மணாமூஞ்சி' ஆகிவிட்டான்?

பாபுவைச் சுமந்தவளால், பாபுவின் பயங்கரமான மெனனத்தைச் சுமக்க முடியவில்லை. ‘பாபு!’ என்று மறுபடி, கூவினுள் ரஞ்சனி.

பாபு: “......**

"நம்ம பாபுவுக்கு நம்ம பேரிலே கோபமாக்கும்!”

"ஏனுங்க?-நாம தப்பு கிப்பு பண்ணலீங்களே, அத்தான்?’’

"நாம தப்பு பண்ணாமல் இருந்திருந்தால், அவன் எதுக்குக் கோபப்படப்போறான்?-தங்கக் கம்பி ஆச்சே நம்ப பாபு?’’

இவர் என்ன புதிர் போடுகிறார்?

'ஐயையோ-நெருஞ்சி முள், நெஞ்சிலேகூட தைத்து விடுவது உண்டோ?

விடுகதை என்றால், அதற்கு விடை இருக்கத்தான் இருக்கும்.

ரஞ்சித் சொல்கிறார், "பாபு காலம்பற எட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் விடுதியிலிருந்து புறப்பட்டு இங்கே வந்திட்றது வழக்கம். மணி பத்தாகப் டோகுது; இப்பத் தான் அவன் அவளோட வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கான்; இல்லியா? இடைப்பட்ட இத்தனை நேரத்துக்கும் அவன் வந்து சேரலேயே என்கிற கவலை நமக்குக் கொஞ்சத்துக்குக் கொஞ்சமானும் இருந்திருந்தால், கடைசிப்பட்சம், ஹாஸ்டல் நம்பருக்குப் ஃபோன் அடிச்சு அவனைக் கூப்பிட்டு, “அவசரக் கூட்டம் நடக்கிறதாலேதான் இத்தனே லேட்: முடிஞ்சதும் வந்திடுவேன்’ என்கிற நடப்பை அவன் வாக்குமூலமாவே கேட்டுக்கிட்டு, நாம நிம்மதியோட தப்பிச்சுக்கவும் முடிஞ்சிருக்கும். இப்ப நாம வகையாய் அவன் கையிலே அகப்பட்டுக்கிட்டோம்!- பாபுவோட குற்றச்சாட்டுக்கு நாம ரெண்டு பேரும் எப்படிப் பொறுப்பு ஆகிறோமோ, அதே விகிதாசாரத்திலேயேதான், அந்தக் குற்றத்துக்கு அவன் கொடுக்கக்கூடிய தண்டனையை ஆளுக்குப் பேர் பாதியாய்ப் பாகம் போட்டுக்கிடவும் பொறுப்பு ஆகவேணும். என்னோட பாதிக் குற்றத்துக்குக் கெஞ்சிக் கூத்தாடி, அவன்கிட்டேயிருந்து மன்னிப்பு வாங்கில் கிட்டேன் நான். உன்னோட பாதித் தப்புக்குப் பரிகாரம் தேடிக்கிடுறது உன்னுேட சாமர்த்தியத்தைப் பொறுத்த சங்கதி; அப்பறம், அம்மா பாடு, பிள்ளை பாடு! என்ன, புரிஞ்சுதா, ரஞ்சனி’ அவர் பிரசங்கம் காரசாரமாகவே அமைந்தது.

ரஞ்சித்தின் கெடுபிடிப் பேச்சு, ரஞ்சனியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. கலவரம் சூழ்ந்திட, இம்மிக் கணக்கில் விழிகளைப் படிப்படியாக உயர்த்தி, ஒரு நம்பிக்கையோடு, அருமையான பிள்ளை பாபுவை அருமையாகப் பார்த்தாள்.

பாபுவா, கொக்கா?-அவன் அசையவும் இல்லை; அசைந்து கொடுக்கவும் இல்லை.

பாபுவின் இந்தச் சோதிப்பிலும் எப்படியாகிலும் தப்பி விட்டால் தேவலாம்:- ரஞ்சனியின் பெண் உள்ளம் தடு மாறியது; பொட்டுப் பொழுதுதான்; நிலையை உணர்ந்தாள்: பாபுவை நோக்கி நடந்தாள்; நடந்தவள், நின்முள்; நின்றவளின் பார்வையில் பாபுவும் ஆண்டியாகவே தரிசனம் கொடுத்தபின், அந்த நிகழ்ச்சி அவள் நெஞ்சில் மின்னலடிக்காமல் எப்படித் தப்பமுடியும்?

இடம்: பக்திச்சுவை சொட்டும் பழனிமலை ஆண்டியின் திருச்சந்நிதானம்.

நேரம்: மனம் கவரும் ரம்மியமான இளங்காலப் பொழுது.

“அப்பனே!" ரஞ்சனியின் குரல் தழதழத்தது. தரிசனம் முடிந்து, குருக்கள் நீட்டிய விபூதியைப் பூசிக்கொண்டு, பிரசாதமும் கையுமாக கணவர்மற்றும் குழந்தைகளோடும், குடும்ப நண்பர் மகேஷோடும் கோயிலைச் சுற்றி வலம் வந்த போது, நெற்றியில் பூசப்பட்டிருந்த திருநீற்றின் துகள்கள் காற்றில் சிதறி அவள் கண்களில் வீழ்ந்தன; எரிவும் கரிப்பும் மிஞ்சின; சுடுநீர் புரண்டது: தடம் மாறிஞள்: தடுமாறினாள ரஞ்சனி.

மகேஷ் கவனித்துவிட்டார். ‘ஆ’ என்று பதறிப் போனார்; பின்னுக்குத் திரும்பினர்; ரஞ்சனியை நெருங்கினார்; அவளது நெற்றியில் அப்பிக் கிடந்த விபூதியை உவவினால் பதனமாக ஒற்றிவிட்டார்: அப்புறம், வாயைக் குவித்து, அவள் கண்களிலே ஊதிவிட்டார்.

நடந்தது ஆவ்வளவேதான்!

மறுகணம்:

பதுங்காத புலிக்குட்டியாகப் பாய்ந்த பாபு, ஆவேசமாக மகேஷின் மார்பில் கையைக் கொடுத்து நெட்டித் தள்ளிவிட்டான்.

மகேஷ் கதி கலங்கினார்; கீழே சாயாமல் தப்பினார்; அவமானத்தால் கூனிக் குறுகி நின்றவர், நீலவானத்தை வெதுப்புடனும் விரக்தியுடனும் நோக்கினார்; அங்கே என்ன படம் ஒடியதோ? விழிகள் தளும்பி வந்தன: சமாளித்தார்.

"மகேஷ் ஸார்! நீங்க எங்க குடும்ப நண்பர் மட்டுமே தான்!”

பாபுவா இவ்வாறு பேசினான்? -

மகேஷின் உள்மனம் வெடித்துவிடும் போலிருந்தது.

ரஞ்சனி சிலை ஆனாள். ஆகவேதான், அவள் வாய் அடைத்திருக்கவேண்டும்.

"டேய், பாபு!”

ஒரே சீறலாகச் சீறித்திட்டி,பாடிவைத் தமது பற்களுக்கு இடையிலே போட்டுக் கடித்ததோடு அமைதியடையாத ரஞ்சித், ஒரே எட்டில் தாவிப் பாய்ந்து அவனுடைய பிஞ்சுக் கன்னங்களில் பளார். பளார்” என்று ஓங்கி அறைந்தார்!

பாபு அப்போது மட்டும் அசைந்தானா?-இல்லை, அசைந்து கொடுத்தானா? ஊஹஅம்! எங்கேயோ சூன்யத்தை வெறித்து நோக்கிய நிலையில் நின்றுவிட்ட ஆவன், தன் இடது கன்னத்திலே திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொண்டிருந்த பொல்லாத கறுப்பு மருவை வேண்டா வெறுப்புடன் நெருடிக் கொண்டே, எதுவுமே நடக்காத பாவனையிலும், கைப்பிடியாகப் பிடித்து நிறுத்தி வைக்கப் பட்ட மாதிரியிலும் நின்முன். அவன் ரோஷக்காரன்!-- அதனால்தான், வெறும் மெளனப் பிள்ளையாராகவே காட்சி தர முடிந்தது.

தாய் கலங்கினாள் .

தந்தை வருந்தினர்.

தமக்கை தவித்தாள்.

விடிந்ததும் விடியாததுமாக, வெறும் வயிற்றாேடு வீட்டுக்கு வந்த பாபு, "நான் ஏதாச்சும் ஒரு ஹாஸ்டலிலே போய்ச் சேர்ந்திடப் போறேன்", என்று வெடிகுண்டு ஒன்றை வீசினான்.

வெடிகுண்டு வெடிக்காமல் தப்புமா?

ரஞ்சித் பதறினர்; துடித்தார். ‘பாபு...பாபு.’’ என்று விம்மிப் பொருமினார்; "பாபு, எங்களையெல்லாம் தனியே விட்டுட்டு நீ ஏண்டாப்பா தனியா ஹாஸ்டலுக்குப் போகவேனும்?" என்று மன்றாடினர்.

பாபுவோ பழநி ஆண்டியாகவே சிரித்தான்! அவன் தான் சிரித்தானே? இல்லை, விதியேதான் அவன் உருவில் சிரித்ததோ?-"நிஜம்மாவே நீங்க என்னோட அப்பாவாக இருந்திருந்தா, அப்படி வன்மத்தோடே என்னே அறைஞ்சிருக்கவே மாட்டீங்க!" என்று நீதியின் தேவனாகத் தீர்ப்பு வழங்கினான்.

“ஐயையோ...தெய்வமே!'’ என்று கூப்பாடு போட்டு அலறிவிட்டார் ரஞ்சித்.

பாபு இப்பொழுது மெளனப் புன்னகை சிந்தினான்.

கெஞ்சிக் கூத்தாடினார் பாங்கர்: "பாபு நீ என்னோட பிள்ளையாய் இருந்ததாலேதான், உன்னை என்னலே அறைய முடிஞ்சுது!" என்று கதறினார்.

பாபுவா மசிபவன்?-"சேர்ந்தா, ஹாஸ்டலிலேதான் சேருவேன்: இல்லாட்டி, செத்துப் போயிடுவேன்!” வெட்டு ஒன்று, துண்டம் இரண்டாகச் சொல்லிவிட்டான்.

“ஐயையோ!" என்று ஓலமிட்டாள் ரஞ்சனி. பாபு: எங்க தெய்வமே! உன் இஷ்டப் பிரகாரம் நீ ஹாஸ்டலிலேயே சேர்ந்திடலாம். ஆளு. அசந்து மறந்துகூட நீ செத்துப் போயிடாதேப்பா!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

“ஆமாப்பா: உன்னைப் பெற்ற புன்னியவதியோட பேச்சையாச்சும் மதிச்சு நடப்பா, பாபு! விக்கலுக்கும் விம்மலுக்கும் ஊடாக, ரஞ்சித் பேசியதென்னவோ ஆச்சரியம்தான்!

விதியைப் போலவே, அச்சுக்குல்ேயாமல் மறுபடியும் சிரிப்பதற்குப் பாபுவால் எப்படித்தான் முடிந்ததோ?அவன் தன்னுடைய வைராக்கியப்படி, எப்படியோ ஹாஸ்டவில் சேர்ந்துவிட்டான்!-பாபு ரோஷக்காரன்!...

மணி: பதினென்று:

நெஞ்சத்திலே புரண்ட கண்ணிர் விழிகளிலும் புரளவே. சிலிர்ப்படைந்த ரஞ்சனி விழிப்பும் அடைந்தாள்: இனம் புரிந்தும், இனம் புரியாமலும் ஆட்டிப்படைத்திட்ட ஒரு பயங்கரப் பயத்தின் ஊடாக மறுபடி பாபுவை ஏறிட்டு ஊடுருவினாள். மைந்தனின் கோபமும் ஆத்திரமும் ஆதங்கமும் இன்னமும் தணியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட நேரத்தில், பாபு-மகேஷ் சம்பந்தப்பட்ட வேறு சில நிகழ்ச்சிகளும் இதுதான் சமயமென்று நினைவில் படமெடுக்கத் தலைப்பட்டன. பயங்கரமான பயம் மேலும் பயங்கரமடைந்தது. நெஞ்சு வலித்தது. பாபுவைச் சமாதானப் படுத்திவிட்டால், எல்லாமே சரியாகிவிடும்; சரிப்பட்டுவிடும்!-பாவுக்குப் பசிக்கும்:- பாவம்: மெளனத் தைக் காலில் போட்டு மிதித்தவளாக, அடிமேல் அடி எடுத்து வைத்தாள். அன்புப் பிள்ளையின் பால் வழியும் வதனத்தை அன்புடன் நிமிர்த்திவிட்டாள்; பாபு, முன்னேயெல்லாம் நீ வர்ரதுக்குத் தாமதமானல், அப்பவே ஹாஸ்டலுக்கு ஃபோன்’ பண்ணி விசாரிக்கலையா? என்னமோ, இன்னிக்குத் தவறிட்டேன்!-தப்புத்தான்! உன் அப்பாவை நீ மன்னிச்சிருக்க, உன்னைப் பெற்ற அம்மாவை மட்டிலும் நீ மன்னிக்காமல் இருக்கலாமா? வாப்பா, இட்டிலி சாப்பிடலாம்,’ என்று கெஞ்சிள்ை; கொஞ்சினாள்.

பாபுவுக்குச் சிரிப்பதற்கு மறந்து போய்விட்டது: அவன் என்ன செய்வான்?- பாவும்!

டக்..டிச்.டக்.

“ டேய் பாபு என்னை மன்னிக்கிறதுக்கு உனக்கு இஷ்டம் இல்லேன்ன, உன்னுேட ஆத்திரம் தீர, இப்பவே உன் கையாலே என் கழுத்தை நெறிச்சுப் போட்டுடா!... ஊம்...ஒன்..டு.,த்ரி!’ என்று உத்தரவு போட்டாள் ரஞ்சனி.

“த்ரீ என்னும் அந்த ஆணைச் சொல் எதிரொலித்துத் தேய்வதற்குள்:

‘அம்மா!...அம்மா!...’

கதறிவிட்டான் பாபு. செருமல் தொடர, அன்னையின் கழுத்தைத் தடவித் தடவிப் பார்த்தான் அவன். தங்கக் கழுத்திலே பாம்பெனச் சுற்றிக் கிடந்த தங்கத் தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். நிம்மதிப் பெருமூச்சுடன், தாய் வடித்துக் கொண்டிருந்த ஆனந்தக் கண்ணீரை வடித்துவிட்டான். அம்மாவின் அழகான புன்னகையைக் கண்டதும்தான் அவனுக்கும் நிம்மதி கனிந்திருக்கவேண்டும். ஏற்றிவிட்ட விழிகளைச் சற்றே தாழ்த்தியவனாக, ‘அம்மா, அம்மா!...பசிக்குதம்மா எனக்கு!’ என்று குழைந்தான்.

எனக்கும்தான்,’ என்று குறுக்கிட்டாள் நந்தினி.

‘எனக்கும் கூடத்தான்!” என்று பெருமிதத்தோடு சிரித்தான் ரஞ்சனி.

“எங்கேம்மா உனக்குப் பசிக்குது?-நான் பத்துமாசம் குடியிருந்தேனே, இங்கேதானே? என்று விசாரணை நடத்திய சூட்டோடு சூடாக, தாயின் மணி வயிற்றிலே “கிசு, கிக மூட்டினான் குறும்புப் பையன்,

வெட்கத்தில் பெருமை சுரந்திட, பெருமையில் மகிழ்ச்சி சுரந்து வழிகிறது.

ரஞ்சித் நல்ல மூச்சுவிட்டார்; அதோடு நிற்கவில்லை; ‘எனக்கு மாத்திரம் பசிக்காமல் இருக்குமாக்கும்?’ என்று சிரிப்பைக் காட்டாமல், கெஞ்சுதலைக் காட்டினார்.

“நீங்க முன்குடியே சாப்பிட்டாச்சுங்களே, அத்தான்?”

“உன் மகன் மட்டும் ஹாஸ்டலிலே சாப்பிட்டிருக்க மாட்டானே?”

‘நான் சாப்பிடல்லே’ என்று விடை சொன்னன்'

‘நானும் சாப்பிடல்லேதான்!” என்று அடம் பிடித் தார் பாங்கர்,

‘பொய்!. சுத்தப் பொய்!” என்று தர்க்கம் பண்ணினாள் வீட்டுத் தலைவி. இப்படியும் குதர்க்கம் பேசுவாரன் வீட்டுத் தலைவர்?-அவளுக்குச் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்ல. பாபுவின் கள்ளம் கவடு இல்லாத செக்கச் சிவந்த கன்னத்தில் கரும்புள்ளி குத்தியிருந்த அந்தப் பொல்லாத மருவை நடுங்கும் விரல்களால் அன்போடு தடவிக் கொடுத்தபடி, ஏம்ப்பா, இவ்வளவு நேரத்துக்கு நீ காலை டிபன் சாப்பிடாமலா இருந்தாய்?’ என்று கவலையுடன் கேட்டாள் ரஞ்சனி.

நயம் கலந்த விசயத்தோடு புன்னகை புரிந்த பாபு சொன்னன்: ‘நான் சாப்பிடல்லேன்னு சொன்னது வாஸ்த வந்தான். எங்க ஹாஸ்டலிலே நான் சாப்பிட்டது தோசை தான்; ஆன. எனக்கு இட்லின்னத்தான் பிரியம். இட்டிலி சாப்பிடலையேன்னு மனசிலே நினைச்சுக்கிட்டு, நான் சாப்பிடல்லே அப்படின்னு பொத்தாம் பொதுவிலே ஒரு போடு போட்டேன். அப்பாவாலே நான் இப்ப அகப்பட்டுக் கினு முழிக்க வேண்டிய தாச்சு!”

‘'சாமி, சாமி! என்னை வம்புக்கு இழுத்திடாதேப்பா,’’ என்று பாபுவிடம் கேட்டுக் கொண்டபின், தமது இனிய பாதியிடம் முழு வடிவத்தில் திரும்பி, ‘ரஞ்...நம்ம பாபுவுக்கு டிஃபன் கொடுத்திடு சீக்கிரம்; இல்லாட்டா, முருங்கை மரத்திலே மறுபடியும் ஏறிக்கிடுவான்,’ என்று அபாய அறிவிப்புக் காட்டினார் ரஞ்சித்.

‘'நான் ஒண்ணும் வேதாளம் கிடையாதுங்க, டாடி!” “அத்தான். நீங்க சும்மா இருக்க மாட்டீங்க?... என்னோட மகன் பாபுவை என்ன்ைனு நினைச்சிட்டீங்க? பாபுவா ...இல்லே?”

“மம்மி நான் கொக்கும் இல்லேயாக்கும்!”

‘சபாஷ்டா, தம்பி!” என்று கை தட்டினுள் நந்தினி. ‘பாபுன்ன பாபுதான்!”

‘பலே! அப்படிச் சொல்லு, அக்கா!’

"சரி, சரி வாங்க, சாப்பிடலாம். இட்டிலியெல்லாம் இந்நேரத்துக்குக் காஞ்க கருவாடாய்ப் போயிருக்கும்!” என்றாள் ரஞ்சனி.

“கருவாடுனாலுத்தான் எனக்கு ரொம்பப்பிடிக்குமே!’ என்றார் ரஞ்சித்.

‘இட்லிதான் அங்கே இருக்கும்; இஷ்டம்னு வாங்க, அத்தான்!”

‘உன் இஷ்டம் தானே என் பாக்கியம், ரஞ்!’

அத்தான் வசனம் பேசுவதைக் கை கொட்டி ரசித்து உற்சாகப்படுத்தலாமென்று அவள் எண்ணிக் கொண்டிருக் கையில், முகப்பிலிருந்து ஹாலேக் கடந்து இரண்டாம் கட்டின் வழியாகச் சாப்பாட்டுக் கூடத்துக்கு வழி அமைத்த நிலைப்படியை அலங்கரித்த பூந்திரை கண்களின் சிமிட்டலாக அசைவதைக் கண்டு கொண்ட ரஞ்சினி, யாரோ அந்நியர்கள் வருகிரு.ர்கள் என்பதை உணர்ந்து, அத்தானை உஷார்ப்படுத்தக் கைகளால் ஜாடை காட்டினாள்.

அதற்குள்

படாதிபதி அங்கே தோன்றிவிட்டார்.

ரஞ்சனி கல் தூணுக்குப் பின்னே ஒதுங்கினாள், முன் அறிவிப்பின்றித் திரையை விலக்கியவர் மகேஷாக இருக்க முடியாதென்று அவள் நம்பினாள்.நினைத்தது சரி;மகேஷால்லை முகப்பிலிருந்தே அட்டகாசமாகக் குரலெழுப்பிக் கொண்டல்லவா கம்பீரமாக வந்து நிற்பார்! இந்தக் கைலாசத்துக்குத் தெரித்த இங்கிதம் இவ்வளவுதான்!-ஊம்:

ரஞ்சித் சுதாரித்துக் கொண்டார். ‘புறப்பட்டாச் சுங்களா, கைலாசம்?” என்று வினவினர்.

‘ஐயா கையிலே சொல்லிக்கினு கிளம்பலாம்னுதான், வெளியிலே காத்திருந்தேன். நீங்க வராததினலே, நானே வந்திட்டேன். வந்ததும் ஒரு விதத்திலே நல்ல தாயிட்டுதுங்க. நீங்களும் உங்க சம்சாரமும் உங்க குழந்தைங்களும் ஆள் மாற்றி ஆள் காரமாகவும் சாரமாகவும் டயலாக் பேசினதை யெல்லாம் நானும் திரை மறைவிலேருந்து ரொம்பவும் ரசித்தேனுங்க, பாங்கர் ஸார்! வாழ்க்கையை நாடகம்னு சொல்லக் கேட்டிருக்கேன்; ரிலீஸ் ஆகப்போற என் படத்திலே கூட இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கார் எங்க வசனகர்த்தா. அந்த வசனம் உண்மைதான் என்கிற உண்மையை இப்பத்தான் என்னாலே அனுபவ பூர்வ மாக உணர்ந்து கொள்ள முடிஞ்சதுங்க, எப்படியோ, எல்லாருமாய்ச் சேர்ந்து, பாபுவைச் சமதானப்படுத்திட்டிங்க. அந்த மட்டிலே, பருத்தி காஞ்சிக் கண்டாங்கியாய்க் காய்ச்சிட்ட மாதிரிதானுங்க, ஐயா! என்று சொல்லி, நாவற்பழச் சிவப்பில் இருந்த தடிமனை உதடுகளில் மெல்லி சான புன்னகையை மலரவிட்டார் கைலாசம். பாங்கா யதார்த்தமான கலகலப்போடு இல்லா ததைக் கண்டு, அவருக்கு உறுத்தல் எடுத்தது. ரஞ்சித்தின் சொந்தப் பிரச்சினையில் உரிமை எடுத்துக் கொண்டு குறுக்கிட்டதை அவர் விரும்பவில்லை போலிருக்கிறது. ஐயா,எல்லாருமாகச் சாப்பிடுங்க; டிபன் வேளையிலே பிச்சைக்காரனாட்டம் நான் வேறே குறுக்கிட்டிட்டேன்" என்றார்.

அப்படி யெல்லாம் சொல்லப்படாதுங்க, கைலாசம். உங்க தர்ம சிந்தை எனக்குத் தெரியும்: நீங்களும் எங்க குடும்ப நண்பர் மாதிரிதான், வாங்களேன்; நீங்களும் இருக்கிற இட்டிலியை ஈவு போட்டுச் சாப்பிட்டுட்டுப் போகலாமே?

கைலாசத்துக்கு வாயெல்லாம் தங்கப்பல்; வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார்; அது பத்திரமாகத் தப் பியதில் பரம திருப்தி; ரொம்ப நன்றிங்க. ஐயா. என் வயிற்றிலே 'கொக்கரக்கோ' ஓசை இன்னம் கூட அடங்கல் லேங்க, என்றார்.

ஓஹோ ! புஹாரி விருந்தோ ?

"கச்சிதமாய்ச் சொல்லிட்டீங்களே? ஆமாங்க! என்னோட படத்துக் கதாநாயகி குமாரி சாருகேசி விருந்து கொடுத்தாங்க!”

"அப்படியா? விருந்து கொடுத்தது சரி; ஆனா, பில் யார் கொடுத்தது?"

"பில் நான்தானுங்களே கொடுத்தாகணும்?”

ரஞ்சனிக்கு எரிச்சலான எரிச்சல்.

குமரிப் பெண்ணைப் பசி புரட்டி எடுக்கிறது.

"கோழி விருந்துக்கு நீங்க உங்க புது மனைவி கோகிலத் தையும் அழைச்சிட்டுப் போயிருக்க வேணும், கைலாஷ்!”

பாபு வேடிக்கை பார்க்கத் தயாரானான்.

"ஸார், எல்லாக் கதையும் தெரிஞ்சிருந்தும், என்னே இப்படி மடக்கறிங்களே? இந்தக் கோகிலம் நான் மன சொப்பிக் கொடுக்கக் கூடிய விருந்தை ஏற்கக் கூடிய அளவுக்கு எனக்கு உண்மையுள்ளவளாக இருந்திருந்தா, நான் ஏனுங்க குமாரி சாருகேசியோட துணையை விருந்துக்கு நாடப் போறேன்? என் முதல் பெண்டாட்டி நீலாட்சி யோடே என்னோட மன நிம்மதியும் காலமாயிடுச்சுதுங்க; அவ புண்யவதி; அவளுக்குச் சாகத் தெரிஞ்சிட்டுது:எனக்குத் தெரியல்லே: நான் பாவி!...”கைலாசத்தின் குரலில் சோகம் ஓங்கியிருந்தது.

ரஞ்சித்தின் மனிதாபிமான உணர்ச்சிகள் கைலாசத்திற்காக அனுதாபப்பட்டன; கண்ணீரை மறைத்துக் கொள்ளத் தலையை இறக்கிக் கொண்டார்.

ரஞ்சனி உருக்குலைந்தாள்: உருகினாள்; தவித்தாள்.

‘பாவம்'- இது பாபு.

படத் தயாரிப்பாளர் இனிமேல் புறப்பட்டுத்தான் ஆக வேண்டும்!-அவருக்குப் பணப் பிரச்னை தீர்ந்தது; படம் ‘ரிலிஸ்' ஆகிவிடும். இங்கே பசிப் பிரச்சினை இனியாகிலும் தீர்வு காண வேண்டாமா?

"பாங்கர் ஸார், உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க.”

“செக் பத்திரம், கைலாசம்!”

"உங்க பணத்தை எப்படிப் பத்திரமாகக் காபந்து பண்ணிக்கிடுவேனோ, அதே மாதிரி, என் நாணயத்தையும் காபந்து பண்ணிக் காப்பாற்றிக்கிடுவேனுங்க, ஐயா!’

“சரி, புறப்படுங்க!”

கைலாசம் ஏனே தயங்கினார்; கன்னங் கறுத்த கண்களை நிமிர்த்தி, தூண் மறைவில் நின்றிருந்த ரஞ்சனியின் திசைக்குத் திசைமாற்றி விட்டார். பிறகு, பாங்கரைப் பார்வை யிட்டார். "ரஞ்சித் ஸார், அண்ணியை ஒரு நிமிஷம் இப்படி வரச் சொல்ங்களா?” என்று வேண்டினர்.

எடுக்கப்பட்டுவிட்ட முள்ளின் முனை எப்படியோ தங்கியிருந்து குத்துவது போல வேதனைப் படலானார் ரஞ்சித். நெஞ்சப் பிசைந்து கொண்டார்: முதுகைத் திருப்பி 'ரஞ்’ என்று விளித்தார்.

தயங்கித் தயங்கி வந்து நின்றாள் ரஞ்சனி,

நிமிர்ந்தார் கைலாசம், "பெண்ணாகப் பிறக்கிறத்துக்குத் தவம் செய்யவேணும்னு படிச்சிருக்கேன். அது. உங்கவரை, நூற்றுக்கு நூறு அர்த்தமுள்ள வாக்குத்தானுங்க. உண்மை யான, நம்பிக்கையான, நாணயமான, விசுவாசமான உங்களை மனைவியாக அடைஞ்சிருக்கிற எங்க அண்ணன் ரொம்ப ரொம்புப் பாக்கியவானுங்க, அண்ணி!உங்களை நமஸ்காரம் பண்றேனாங்க! என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசி, ரஞ்சனியின் கால்களைத் தொட்டு வணங்கிக் கண்களிலே ஒற்றிக் கொண்டபோது, தன் கைகளில் கண்ணின் சொட்டுக்கள் சிதறித் தெறிக்கவே. பதட்டத்துடன் எழுந்த கைலாசம், அதே பதட்டத்துடனே ஏறிட்டுப் பார்த்து, "பாவி, நான் உங்களையும் கண்கலங்கிட வச்சிட்டேனே?" என்றார்.


ரஞ்சனியும் பேசத்தான் நினைத்தாள். ஆனல் பேச்சு வந்தால்தானே? -

படபடத்து அடங்கியமழைத் தூற்றலில் புறப்பட்ட மண் வாசனை அடங்கவில்லை தை மேகக் கறுப்பும்கூட அடங்கவில்லைதான்.

ரஞ்சித்தின் மனத்தை என்னவோ செய்தது!

கைலாசம் விடைபெற்ற சமயத்தில், பாபுவை நெருங்கி அவன் தோளில் தட்டி, ‘பாபு, நீ தாம்ப்பா நிஜமான ஹீரோ!’ என்று புகழவும் தவறிவிடவில்லை.

பாபு தோளைத் தடவி விட்டவகை, மீண்டும் சூன்யத்தை வெறித்து நோக்கினான்.

ஒமேகா கூவுகிறது.

வேளை கெட்ட வேளையிலே, நந்தினி விலாசம் பங்களா வின் உணவுக் கூடத்தில் மணி பதினென்றுக்குக் காலைச் சிற்றுண்டிக்கான சந்தடிகள் திரும்பவும் திரும்பின.

ரஞ்சனி சகஜ நிலையில் இயங்கினாள்: வெள்ளித் தட்டுக்களே ஒவ்வொன்றாக நகர்த்தி, தான் போட்டு வைத்திருந்த கணக்குப் பிரகார்ம், இட்டிலிகளை எண்ணிச் சரி பார்த்து நிரப்பினாள்; பாபு, நந்தினி என்று பெயர் சொல் லிக் கூப்பிட்டு அவரவர்க்குரிய தட்டை நீட்டினுள். பீரோவிலிருந்து எடுத்த புதுப் பிளேட்டைச் சேலைத் தொங்கலால் துப்புரவாகத் துடைத்து, அதில் நான்கு இட்டிலி வைத்தான்: இது மகேஷ-க்கு! எந்நேரத்துக்கு வத்தாலும், அவருக்காவே காத்திருக்கும்!-அடுத்த தட்டை நகர்த்தினாள்: அது அவளுடையது; அதில் மூன்றே மூன்றைப் போட்டாள்: அத்தானுக்குரிய பிளேட்டில் ஒரேயொரு இட்டிலியை வைத்து, ‘இந்தாங்க,’ என்று கொடுத்தாள்.

“ஆடடே, எனக்கா? என் இணக்குத்தான் எப்பவோ தீர்ந்தாச்சே?" என்று மனைவியிடம் இடைமறித்தார் ரஞ்சித்.

“கணக்குத் தீர்த்தா என்னாங்க? என்னுடையதிலே ஒண்ணைக் கொடுக்கிறேன். பரவாயில்வீங்க. அத்தான்; இத்தாங்க! கணக்கிண்ணா, ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் சகஜத்தானே?”

"ஓ! அப்படியா? வித் ப்ளஷர்!...” என்று விஷமப்புன்னகை ஒன்றைத் துவி விட்டு, மனேவி கை கடுக்க நீட்டிக் கொண்டேயிருந்த தட்டைக் கை தோகாமல் வாங்கிக் கொண்டாரி பாங்கர். பிறகு, ரஞ்சனியின் காதோடு காதாக ‘என்ளுேட கணக்கு பதினைஞ்சு இட்லி ஆயிடுச்சு; அம் காடியோ!’ என்று கிசுகிசுத்தார்.

"சரி, சரி; இட்லியைத் தின்னுங்க!’' என்று பச்சைக் கொடி காட்டினாள் ரஞ்சனி.

"நாங்களும் சாப்பிடலாமில்லையா?"

‘ஓ!’ என்று உத்தரவு கொடுத்தாள், ஆதற்கான உரிமையும் உறவும் பெற்றவள்.

“நீயும் சாப்பிடம்மா.” என்று பாபு சொல்வி, இட்டிலியைப் பிட்டுத் தக்காளிச் சட்டினியில் தொட்டு வாயில் போட்டுக் கொள்ள முனைந்த நேரத்தில், புதிய வெள்ளித் தட்டு பாபுவின் கழுகுக் கண்களிலே பட்டுவிடவே ‘அந்தப் புதுப் பிளேட் யாருக்காம், அம்மா?’ என்று: விசாரித்தான்.

"மகேஷுக்கு” என்று ஒர் அழுத்தமான தொனியில் விடை கூறினாள் ரஞ்சனி.

"மகேஷ-க்கா?” -

“ஆமாம், மகேஷாக்கேதான்!-உன் அன்புமகேஷாக்கேதான்!" என்று ஒரு படி கூடுதலான அழுத்தத்துடன் தெரியப்படுத்தினார் ரஞ்சித்.

இட்டிலியும் கையுமாகவும் மெளனப் பிண்டமாகவும் காட்சியளித்த பாபுவின் இடது கை, அவனது கன்னங்கள் இரண்டையும் தடவிப் பார்த்துக் கொண்டபோது, அவன் கண்கள் தளும்பத் தொடங்கிவிட்டன.

ரஞ்சனிக்கு மனம் பொறுக்கவில்லை; “சரி, சரி: சாப்பிடுப்பா, பாபு’ என்று குரல் கம்மச் சொன்னாள்; அன்பு கம்மாமல் வேண்டினாள்.

‘பஸ்ஸர்’ ஒலிக்கிறது.

ரஞ்சித் கிளம்பினர்.

ரஞ்சனி முந்திக் கொண்டாள்.

அங்கே-

மகேஷ் காட்சி கொடுத்தார்!

தனியாக அல்ல!-

பெண் ஒருத்தியோடு!...