அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/259-383
255. சகலரும் படிப்பது விவேக விருத்திக்கா இராஜாங்க உத்தியோகத்திற்கா
தற்காலம் நமதுதேசத்துள் வாசிப்பவர் எல்லவரும் இராஜாங்க உத்தியோகத்தை நாடி வாசிக்கின்றார்களன்றி விவேகவிருத்தியை நாடி வாசிப்பதைக்காணோம். பெரும்பாலும் வாசித்தவர்கள் யாவரும் இராஜாங்க உத்தியோகம் பெறவேண்டுமென்னும் அவாக்கொண்டே அங்கங்கு பெருங்கூட்டங்களிட்டு அந்த சீர்திருத்தம் பேசவேண்டும். இந்த சீர்திருத்தம் பேசவேண்டுமென்பதும் அந்த உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டும் இந்த உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமெனக் கூச்சலிட்டு வருவதைப் பலப் பத்திரிகையால் அறிந்துவருகின்றோமன்றி வாசித்தவர்கள் எல்லவரும் ஒன்றுகூடி தங்கள் தங்கள் விவேகவிருத்தியால் அத்தகைத் தொழிலை விருத்தி செய்தார்கள். இந்த விவசாயத்தை விருத்திசெய்தார்களென்று ஓர் வதந்தியும் பிறந்தது கிடையாது, ஓர் பத்திரிகையில் வாசித்ததுங்கிடையாது. இதனால் நன்குவிளங்குவது யாதெனில், தற்காலம் வாசிப்போரெல்லவரும் இராஜாங்க உத்தியோகத்தை நாடி இராஜாங்கத்தையே செய்ய வேண்டியவர்களாக விளங்குகின்றது. எல்லவரும் பல்லக்கேற எத்தனித்துக் கொண்டால் எடுப்பவர்கள் யாரென்பதை ஆலோசிக்க வேண்டியதேயாம்.
இத்தகைய ஆலோசினையில் படிப்பதெல்லாங் கண்டுபடிக்கா படிப்பென்னிலோ அஃது படிப்பவர் குற்றமேயாகும். காரணம் படிக்கும்போதே இராஜாவாகிவிட வேண்டுமென்னும் எண்ணம் இருக்குமாயின் படிப்பவர் குற்றமாகும். ஆதலின் படிப்பவர் படிப்பு வித்தையிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் நோக்குமாயின் வித்தியாவிருத்தி மேலும் மேலும் பெருகி கைத்தொழிற்சாலைகளும் அமைந்து கனமடையச் செய்யும். அங்ஙனம் படிக்கும் போதே வித்தியாவிருத்தியை நோக்காதபடியால் பழைய ஏற்றங்களுக்குமேல் வேறேற்றம் செய்ய விதியில்லை பழய கவலைக்குமேல் கவலையில்லாமல் இரைப்பதற்கு விதியில்லை. பழய சம்பாங்குடைக்குமேல் வேறு குடை செய்ய புத்தியில்லை. பழய எலிகத்திரிக்குமேல் வேறு கத்திரி செய்யும் படிப்பில்லை. ஆதியில் கண்டுபிடித்த தானியங்களைவிட வேறு தானியங் கண்டுபிடிக்க வழியில்லை, பழய கனி வர்க்கங்களுக்குமேல் வேறு கனிகளை விருத்தி செய்ய விதியில்லை. பழய தைலங்களைவிட வேறு தைலங்களைக் கண்டுபிடிக்குங் கலையில்லை.
இத்தகையக் கைத்தொழில் சீர்கேட்டிற்கும் வித்தியா குறைவிற்குக் காரணம் படிப்பவர்களின் கேடுபாடுகளேயாம். பிரிட்டிஷ் ஆட்சியின் துரை மக்கள் படிப்பின் விருத்தியைப்பாருங்கள் போட்டகிறாப்பிற்கு மேல் லெத்தகிறாப், லெத்தகிறாப்பிற்கு மேல் டெல்லகிறாப், டெல்லகிறாப்பிற்குமேல் ஒயர்லெஸ் டெல்லிகிறாப் முதலிய அரியவித்தைகளை மேலும் மேலும் விருத்திச்செய்து வருகின்றார்கள். இவர்களன்றோ பெரியசாதிகள், இவர்களன்றோ மேன்மக்கள், இவர்களன்றோவிவேக விருத்திப்பெற்ற மகான்கள்.
இத்தகைய வித்தை புத்தி, ஈகை, சன்மார்க்கமற்று, தேச விருத்தியுங்கெட்டு, வித்தியா விருத்தியும் பட்டுப்போவதற்காய் சாதிவிருத்தியும் சமாத்துவிருத்தியும், சாமிவிருத்தியும், கோமியவிருத்தியும் குறுக்குபூசுவிருத்தியும் நெடுக்குபூசு விருத்தியும் வடகலை நாமவிருத்தியுந் தென்கலை நாமவிருத்தியும் பெருகிக் கொண்டே வருமாயின் நந்தேயஞ் சீர்கெடுவதுடன் தேசத்தோருஞ் சீரழிவார்களென்பது திண்ணம்.
ஈதன்றி பெரிய சாதிப் பொய்கட்டுபாடுகளும் இருத்தல் வேண்டும். பொய்ச்சாமிக் கதைகளும் பெருகவேண்டும். இராஜாங்க உத்தியோகங்களையும் அநுபவிக்கவேண்டுமென படிப்பதாயின் அப்படிப்பு அவலப்படிப்பேயாம்.
- 5:50; மே 22, 1912 -