உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/260-383

விக்கிமூலம் இலிருந்து

256. தற்கால இந்தியர்கள் பெற்றுள்ள சீர்திருத்தங்களென்னை

பெரியப்பெரிய சாதிகளையுஞ் சிறியசிறிய சாதிகளையும் சிறக்க ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறிய சிறிய சாமிகளையும் பெரிய பெரிய சாமிகளையும் பெருக்க சிருட்டித்துக்கொண்டார்கள். இவைகளுக்காதரவாக ஏதொரு வஸ்திரமுமின்றி கோமணமென்றும் கெளபீனமென்றும் வழங்கும் துண்டு சீலையைக் கட்டிக்கொண்டு உலாவுவதோராச்சாரம், பூணுநூலைக் காதிற் சொருகிக்கொண்டு மலோபாதைக்கு போவதோராச்சாரம், குளிக்கப் போகுங்குளங்களில் முழுகி ழுமுகி முண முணப்பதோராச்சாரம், குளத்து நீரை செம்பு பாத்திரமோ பித்தளை பாத்திரமோ ஒன்றில் மொண்டுக்கொண்டு வீட்டிற்கு வருங்கால் மாட்டைக் கண்டால் ஒதுங்குவதில்லை, குதிரையைக் கண்டால் ஒதுங்குவதில்லை, நாயைக் கண்டால் ஒதுங்குவதில்லை தன்மெய்ப் போன்ற மனிதர்கள் எதிரில்வருவார்களாயின் துள்ளித் துள்ளி தூரவோடி விடுவதோராச்சாரம், தான் செய்யும் மந்திரம் வெளியோருக்குக் கேழ்க்காது மணியாட்டிக் கொள்ளுவதோர் ஆச்சாரம், சாம்பலைப்பூசுவதில் குழைத்துப் பூசுவதோர் ஆச்சாரம், வெறுமனே பூசுவதோர் ஆச்சாரம், (பொருளற்ற) நாமம் போடுவதில் பெரிய பெரிய நாமங்கள் போடுவதோர் ஆச்சாரம், அவற்றைக் கண்டதுண்டங்களிற் போடுவதோர் ஆச்சாரம், (பொருளற்ற) வடகலை நாமமென்பதோர் ஆச்சாரம், தென்கலை நாமம் என்பதோர் ஆச்சாரம், வீட்டிற்கு விருந்தினர்வந்து விட்டால் சுக்கிரவார விரதம், சோமவாரவிரதமென சோறு சமைக்காமல் இருப்பதோர் ஆச்சாரம்.

ஒருபொழுது புசிப்பதென்று சோறு சமைத்துண்டு மறுபொழுது பலவகைப் பலகாரங்களும் பாயசமும் புசிப்பதோர் விரதம், அதிரசமென்னும் பலகாரஞ் சுட்டுப்புசித்துக் கைகளில் கயிறு கட்டிக்கொள்ளுவதோர் விரதம், கோழி மாமிஷம் சமைத்து சாராயத்துடன் புசித்து கைகோர்த்துக் கூத்தாடுவதோர் விரதம், விக்கிரகங்களுக்கு அன்னாபிஷேகஞ் செய்வதோர் பூசை, கடலை சுண்டல் படைப்பதோர் பூசை, வடை பாயாசம் படைப்பதோர் பூசை, வாழைக்கனி தோசை வட்டிப்பதோர் பூசை இவைகள் யாவும் ஜீரணிப்பதற்கு சாமிக்கு சுக்கு நீர் கொடுப்பதோர் பூசை, ஜாமத்தில் சாமியைத் தூங்கவைப்பதோர் பூசை.

இத்தகைய தூங்குமூஞ்சு சாமிகளும் விடிந்தெழுந்து பல்லுவிளக்குஞ் சாமிகளும் ஆனோரை சிருட்டித்துக்கொண்டோர் வரவுகள் குன்றுமாயின் என்சாமி பெரிது உன்சாமி சிறிதென்னுஞ் சண்டை, நீங்கள் போடும் நாமம் பொய்நாமம், யாங்கள் போடும் நாமம் மெய்நாமமென்னுஞ் சண்டை, சிவன்சாமி பெரியசாமி, விஷ்ணுசாமி சின்னசாமியென்னும் ஓர் சண்டை, அந்தசாமி உச்சியைக் காணவில்லை இந்தசாமி பாதத்தைக் காணவில்லை என்பதோர் சண்டை ஆகிய சாதிபேதச் சண்டைகளாலும், சமயபேதச் சண்டைகளாலும், சாமிபேதச் சண்டைகளாலும், ஒற்றுமெய்க் கெட்டு மானுஷீக தன்மகாருண்யம்விட்டு ஒருவர் முகச்சின்னங்களை மற்றவர்கள் கண்டவுடன் ஒருவருக்கொருவர் சீறிச் சினந்துத் தடிகளைக்கொண்டு மண்டை உடைவதுடம் அதிகாரிகளால் தண்டனை அடைவதும், அப்போதைக்கப்போது தலபுராணங்கள் எழுதுவதும், தங்கள் மதமே மதம் தங்கள் சாமியே சாமியெனக் கூறித்திரிவதும், அந்த சாதியோர் ஆச்சாரமது இந்தசாதியோராச்சாரம் மீதென்னுங் கட்டுக்கதைகளை வரைவதும், அதற்கான முற்றும் பொய்களை முட்டுக்கொடுக்குஞ் செயல் இவர்களது சீர்திருத்தங்களேயன்றி மக்கள் சீர்திருத்தம் தேசசீர்திருத்தங்கள் ஒன்றுங் கிடையாவாம்.

இவர்களது விருத்திக் குறைவுகளுக்குக் காரணம் ஒற்றுமெக்குக் கேடாய சீர்குறைகளும், இவர்களது விவசாயத்துக்கு கேடாய சோம்பல்களும், வித்தைக்குக் கேடாய முயற்சிக் குறைகளும், சாதிப்பிரிவினை, சமயப்பிரிவினை, சாமிப்பிரிவினையால் உண்டான கேடுகளென்று உணர்ந்த கருணைவல்ல பிரிட்டிஷ் ஆட்சியார் கல்விவிருத்திக்காய் ஆதாரங்களையும், கைத்தொழில் விருத்திக்கான ஆதாரங்களையும், விவசாய விருத்திக்கான ஆதாரங்களையும், ஒற்றுமெய் அடைவதற்கு ஏதுவாயச் செயல்களையும் விருத்திசெய்து வருகின்றார்கள். அத்தகைய சீர்திருத்தங்களை சரிவர நோக்காது பழயக்குருடியே குருடியென சாதிசம்பந்தத்தை விடப்படாது சமயசம்மந்தத்தை விடப்படாதென்னும் விசாரிணையற்ற வீணர்கள் தோன்றி இராஜாங்கத்தோர் செய்துவரும் சீர்திருத்தங்களையும், பெரியோர்கள் பிரசங்கங்களில் பேசிவரும் நீதி நெறிகளையும் உணராது வீண்வாது கூறி வருகின்றனர். இவர்களது வாதமும் போதமும் அவலமேயாம்.

- 5:51: மே 29, 1912 -