அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/341-383

விக்கிமூலம் இலிருந்து

12. பறையரென்று இழிவு படுத்தல்

வினா : பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும்படியான யாவரேனும் க்ஷத்திரியர், வைசியரை பறையரென்று கூறி இழிவுபடுத்தியிருக்கின்றார்களா, அவ்வகை கூறியுள்ள பழைய நூலாதாரங்களிலேனும், செப்பேடு, சிலாசாசனங்களேனும் உண்டா, உண்டாயின் எமக்கும் எமது நேயருக்கும் உண்டாய சந்தேகம் தெளிய தனது சிறந்த தமிழன் பத்திரிகையில் வெளியிடவேண்டுகிறேன்.

பி. சேஷகிரிராவ், சேலம்.

விடை : பெரும்பாலும் பௌத்தர்களின் கொள்கையானது தங்களது அனுபவத்திற்குங் காட்சிக்குத் தெரிந்தவரையில் கூறுவார்கள். தெரியாதனவற்றைத் தெரியாதென்பார்கள்.

ஆயினும் தாம் வினவிய வினாவிற்குத் தெரிந்தவரையில் விடை பகர்வோமாக.

சிலகாலங்களுக்கு முன்பு அதாவது இத்தேசம் எங்கும் பெளத்தவரசர்கள் ஆளுகையும் பௌத்தகுடிகள் நிறைந்துள்ள காலமும் வேஷபிராமணர்கள் தோன்றிய காலமுமாகும்.

அக்காலத்தில் சீயமாபுரமென்னுந் தேசத்தில் சீயமாசேனனென்னும் அரசனும், இராமதத்தையென்னும் இராக்கினியும் இருந்தார்கள்.

பெளத்தவரசர்கள் யாவரும் புத்தசங்கங்களில் சேர்ந்து நீதியொழுக்கமும் விவேகமிகுதியும் உள்ளவர்களை தெரிந்தெடுத்து தங்களுக்கு மந்திரிகளாகச் சேர்த்துக் கொள்ளுவது வழக்கமாகும்.

அதுபோல் வேதியசாதியென்னும் சத்தியகோடனென்பவனை அவன்மாறு வேடமறியாமல் சீயமாசேனனென்னும் அரயன் மந்திரியாக எடுத்துக் கொண்டிருந்தான்.

மந்திரியும் பஞ்சசீலமாம் நீதிமார்க்கங்களைக் குடிகளுக்குப் போதித்து தானுமோர் பெளத்த குருபோலவே நடித்தும் வந்தான்.

இத்தகைய நடிப்பால் அரசனும் இவனை நீதிமான் என்று எண்ணி சகலகாரியாதிகளிலும் நம்பிக்கை வைத்திருந்தான்.

அக்காலத்தில் பத்திரமித்திரன் என்னும் ஓர் வணிகன், நவரத்தின வியாபாரஞ்செய்துக் கொண்டு சீயமாபுரஞ் சேர்ந்து தன் காலைக்கடன் கழித்து புசிப்பெடுத்துக் கொண்டு வருவதற்காய் இத்தேசமந்திரி சத்தியகோடனை நீதியானென்று எண்ணி அவனை அடுத்து தன்னிடமுள்ள இரத்தின கரண்டகமாஞ் செப்பை அவனிடம் ஒப்பிவைத்து நான் மறுபடியும் இதைவந்து கேட்கும்போது என்னிடம் கொடுக்கவேண்டும் நீதிமானேயென்று வேண்டினான்,

மந்திரியும் வேண்டிய நீதிகளைச் சொல்லி செப்பை வாங்கி வைத்துக் கொண்டான்.

வணிகன் பத்திரமித்திரனும் ஆற்றங்கரை சென்று தனது காலைக்கடனை முடித்துவிட்டு அன்னசத்திரஞ் சென்று புசிப்பெடுத்துக் கொண்டு மறுபடியும் மந்திரியிடம் வந்துசேர்ந்து தனது இரத்தினச் செப்பைக் கொடுங்கோளென்று கேட்டான்.

மந்திரி வணிகனைநோக்கி (இங்கு பத்து வரிகள் தெளிவில்லை)

வேதங்களை வாசித்தவனும், மெய்யுரையாட வேண்டியவனும் சகலவிருதுகளமைந்தவனும், அமைச்சனானவனும் வெண்குடைப்பெற்ற சீயவனின் காயமரையுற்றவனும் நீதிநெறிகளை ஆராய்ந்து மற்றவர்களுக்குப் போதிக்கும் மதியூகியுமாகிய நீர் நம்பி வைத்த பொருளை அபகரிக்கலாமோ அவ்வகை அபகரித்தலாகியச் செயலால் உம்மிடம் அமைந்துள்ள திருவாகிய கருணைநிதி நீங்கிவிடுவாளேயென்று கதரினான்.

வணிகன் மரத்தின் மீதேறிக்கொண்டும் கூறிய நீதிவாக்கியங்கள் யாவையும் கேட்டிருந்த ராணியானவள் வேவுகரை அழைத்து மரத்தின் மீதேறியுள்ள வணிகனை வரச்செய்து சங்கதிகள் யாவையும் ஆழ்ந்து விசாரித்து அரயனுக்கு விளித்து மந்திரியையும் வரவழைத்து சூதுக்களையும் வஞ்சகத்தையும் அறியக்கூடிய வழிகளால் விசாரித்தபோது மெய்விளங்கி மந்திரி அபகரித்திருந்த செப்பையுங் கொண்டுவந்து அரணியிடம் கொடுத்துவிட்டான்.

அரணியும் அரயனைவிளித்து செப்பை பார்த்தீர்களா என்றாள்?

அரயனும் சற்று நிதானித்து மந்திரியின் மணிகள் சிலதையும், வணிகனது மணிகளையும் அவன் செப்பிலிட்டு வணிகனை வரவழைத்து இம்மணிகள் உம்முடையவைகளோ என்றான்.

வணிகனும் செப்பிலிலுள்ள மணிகள் யாவையும் வெளியிலிட்டு தன்னுடைய மணிகள் ஒன்று தவிராமல் எடுத்துக் கொண்டு மற்றமணிகளை நீக்கிவிட்டான்.

இவைகளைக் கண்ணுற்ற அரசனும் அரணியும், வணிகன் செப்பிய வார்த்தைகள் யாவும் மெய், மந்திரியானவன் அன்னியன் பொருளை அபகரிக்கவேண்டிய இத்தியாதி பொய்களையுஞ் சொல்லி வணிகனை வஞ்சித்துவிட்டான்.

இத்தகைய வஞ்சகனை கொலைகளம் அனுப்பி குற்றமுள்ளோரை தெண்டிக்கத்தக்க ஏதுவை செய்துவிட்டு வணிகனாகிய பத்திரமித்திரனுக்கு மந்திரிபட்டம் அளித்துவிட்டு தாங்கள் துறவடைந்து புத்தசங்கஞ் சேர்ந்து விட்டார்கள்.

இக்கதையினால் வேதியனென்னும் வேஷம் பூண்டும் அவனுக்குள்ள பொருளாசை அவனை விட்டு நீங்காது வணிகன் பொருளை அபகரித்துக் கொண்டும் அவனையே பறையனென்று இழிவுகூறியுள்ளதை,

மேருமந்திரபுராணம் பத்திரமித்திரன் கேள்விச் சருக்கத்தில் பரக்கக் காணலாம்.

227-வது பாடம்

செப்பிய நகர்க்குநாதன் சீயமாசேன் னென்பான்
வெப்பயனின் றறாதவேலான் வேந்தரைவென்ற வெற்றிக்
கொப்பமெ யின்றிநின்றா னாதலிற் கற்பகத்தை யொப்பான்
துப்புரம் தொண்டைவாயார் தொழுதெழு காமன் கண்டாய்

228

ஊனுமிழ்ந்திலங்கும் வைவேல் மன்னவனுள்ளத்துள்ளா
டேனுமிழ்ந் திலங்குழைம்பாற் றேவிதானிராமதத்தை
வானுமிழ்த் திலங்குமின்போல் வருந்துதுண்ணிடையாள் வாரி
தானுமிழ்ந் தமிழ்தம் பெய்த கலசம்போல் முலையினாளே.


229

வேதனான கங்குமாறும் புராணமும் விரிக்குஞ் சொல்லில்
தீதிலா சத்தியகோப னாமஞ்சீ பூதியென்பான்
போதிலர் முடியுனானுக் கமச்சனாய் புணர்ந்துபின்னை
தீதெலா மகற்றிவையுஞ் செவ்வியாற் காக்குநாளில்

வேறு

233

சுரந்த கார்முகில்போல் சுதத்தனன் / றிரந்தவாக்குயர் நீரவளித்தவன்
பரந்துலாம்பெயர் பத்திரயித்தனெம் / மரந்தை தீர்த்தலி னாமென வோதினார்

239

மணியு முத்தும் வைரமுஞ் சந்தனத் / துணியும் நல்லமிலுந் துகிலும்புர
மணயுந் தூரியுங் கொண்டு வரும் வி / சாரிணையில் சீயபுரம் துறவெய்தினான்.

351
(ஐந்து பாட்டுகள் தெளிவில்லை)

260

பிறர்பொருள் வைத்தல் கேட்டல் பிறர்தமக் கீய்தன்மாற்றன்
மறமென வன்றுசொன்ன வாய்மொழி மறந்திட்டீரோ
திறமல துரைக்கல் வேண்டாஞ் செப்புக்கொண் டிருப்பதன்றி
முறைமுறை பித்தராகி முடிந்தன மோகத்தாலே.
என்றலு மெழுந்துகோபத் தெறியெறி யென்னவோடிப்
பொன்றுமா ரடித்துநின்றார் புறப்படத் தள்ளப்போந்திட்
டன்றவ னடிந்துச்செப்புக் கொண்டதற் கவலமுற்றுச்
சென்றவன் றெருவுதோருஞ் சிலபகல் பூசலிட்டான்.
சத்தியகோட னென்னுஞ் சாதியால் வேதியன்றான்
வித்தத்தாற் பெரியன்றூய னென்றியான் மிகவுந்தேறி
வைத்தவென் மணியைக்கொண்டு தருகிலன் மன்னகேண்மோ
பித்தனு மாக்குமென்னைப் பெருபொருளடக்குவானே.

இவ்வகையாக வணிகன் அரயனிடம் முறையிட்டபோது மந்திரி இவ்விடம் வந்து ஐயா, இவனோர் பறையன் மறையவன்போல் வேடமிட்டுக் கொண்டு பொய்யைச் சொல்லுகிறானென்று கூறி அரயனை அனுப்பிவிட்டான்.

267

பறையனிக் கள்வன்றன்னைப் பார்த்திப னென்னைப்போல
மறையவனென்று கொண்டான்சபதத்தால் வஞ்சிப்புண்டு
பிறரவன் செய்கை யோரா னென்னையே பித்தனென்னக்
குறையுண்டோ வென்றுபின்னுங் கூப்பிட்டான் நீதியோதி.

மந்திரி வார்த்தையை மெய்யென்று நம்பி அரசன் சென்றவுடன் வெறி நாய்களையும், மதயானைகளையும் விட்டு வணிகனை துறத்த ஆரம்பித்தான். வணிகனும் பயந்து மரத்திலேறிக் கொண்டு நீதிகளை ஓத ஆரம்பித்தான்.

269

படுமத யானைவிட்டும் பாசத்தி னாயைவிட்டுங்
கொடிக்கரப் பேயன்றன்னைக் கடிக்கவென் றமைச்சன்கூறி

கடியவர் படியிற்கண்டு செய்தவற் கஞ்சிக்காவை
நெடியதோர் மரத்தினேறி நித்தமா யழைத்திட்டானே.

270

தூயநல் வேதநான்குஞ் சொல்லிய சாதியாதி
மேயநல் லமைச்சனென்னும் விருதுமெய் யுரைத்தலென்னுந்
தீயிலாத் தொழில்னென்றுந் தேறியான் வைத்தசெப்பை
மாயநீ செய்து கொண்டால் வரும்பழி பாவமன்றோ.

271

கொற்றவெண் குடையுஞ்சீ வனையுஞ்சாய மரையுமுற்றால்
வெற்றிவேல் வேந்தனென்ன நீயென்ன வேறிலாதாய்
குற்றமென் றறிந்துமென்ன குறையிலென் செப்பைகொண்டாய்
மற்றிதோ பூதிமாய மாகுமிவ் வையத்தையா.

272

மறம்பழி வருமேநிந்தை வந்தெய்த மணியைவவ்வி
அறம்புகழ் பெருமெய் கீர்த்தி யறிவொடு செறிவிலாய்க்கும்
பிறந்துவைத்தூறுதொட்டு வைப்பினை வவ்வுவாரை
துறந்திடுந் திருவென்றோதுஞ் சுருதியும் விருதுமாய்த்தே.

நாய்களுக்கும் யானைகளுக்கும் பயந்து மரத்தேறி அவ்வணிகன் கூறிவந்த நீதிவாக்கியங்களை இராணியார் செவ்வனே உணர்ந்து வேவு கரை விட்டு வணிகனை அழைத்து அவன் மெய்வாக்கையும் வேஷவேதியனாம் மந்திரியின் பொய் வாக்கையும் கண்டறிந்து செப்பைக் கொண்டு வரும்படியான ஏதுவைத் தேடி மந்திரியை தண்டித்துவிட்டு பறைபானென்று கூறப்பட்ட வணிகனுக்கே மந்திரிபட்டம் கொடுத்துள்ள சங்கதிகள் யாவையும் மேருமந்திர புராணத்தில் தெளிவாகத் தெரிந்துக் கொள்ளலாம்.

- 2:49; மே 19, 1909 -