அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/346-383
17. புரபசர் ஆன்கினும் சாதியும்
பிரபசர் இ.எச். ஆன்கின் என்பவர் இந்தியர் ஏற்படுத்தியிருக்கும் சாதி வித்தியாசப் பிரிவினையானது மிக்க மேலானதென்றும் அதினால் அனந்த சுகாதாரங்கள் உண்டென்றுங் கூறியுள்ளதாய் சென்னை இஸ்டாண்டார்ட் பத்திராதிபர் வெளியிட்டிருக்கின்றார்.
அங்ஙனம் பிரபசர் கூறியுள்ளது யாது சுகாதாரமென்று விளங்கவில்லை, இத்தேசமெங்கும் பௌத்ததன்மம் பரவியிருந்தகாலத்தில் சாதிபேதமென்னும் வஞ்சகச்செயலின்றி வேறுவகை சுகாதாரங்களை விளக்கியுள்ளார்கள்.
அவைகள் யாதெனில்:- குஷ்டரோகிகளையும், வைசூரி கண்டவர் களையும், விஷபேதி கண்டவர்களையும், வஞ்சம், பொருளாசை, குடி கெடுப்பு, கொலை, களவு முதலிய துற்கிருத்தியம் அமைந்த தீயர்களையும் தீண்டலாகாது. அவர்களை நெருங்கி நேசிக்கவுமாகாதென்று சுகாதாரம் விளக்கியிருக்கின்றார்கள்.
அத்தகைய சுகாதாரங்களை விடுத்து நமது பிரபசர் சாதிபேதமிருப்பது சுகாதாரத்திற்கு ஓரேதுவென்று கூறியுள்ளது விந்தையேயாம்.
அதாவது, பிரபசர் பிறந்து வளர்ந்த தேசத்தில் சக்கிலிவேலைச் செய்பவர்களின் புத்திரர்கள் கௌன்சல் மெம்பர்களாகவும், அந்தஸ்துள்ள உத்தியோகஸ்தர்களாகவும் இருப்பதாக விளங்குகின்றது.
சக்கிலித்தொழில் செய்யுங்கால் சுகாதாரத்திற் கிடங்கொடாது கிருமிகள் சேர்ந்து ரோகோற்பத்திக்கு ஆதாரமாகின்றதாயின். அதே சக்கிலியன்மகன் அத்தொழிலைவிட்டு நீங்கி அந்தஸ்தான உத்தியோகம் பெற்றிருக்குங்கால் சக்கிலியைப் பற்றியிருந்த கிருமி அந்தஸ்துள்ள உத்தியோகம் பெற்ற அவன் மகனைவிடாமல் தொடர்ந்துநிற்குமோ.
அன்றேல் சக்கிலியன் மகன் சக்கிலி வேலைதான் செய்யவேண்டுமோ. நமது பிரபசர் விளக்கிய சாதிவிஷயம் விளங்கவில்லை.
பிராமண சாதியென்று சொல்லிக்கொள்பவனை உயர்ந்த சாதியென்றும், சக்கிலித் தொழில் செய்வோனை தாழ்ந்தசாதி என்றும் ஏற்றுக்கொள்ளுவதாயின் ஓர் சக்கிலியன் குஷ்டம்பிடித்த பிராமணனிடம் புசிக்கப்போமோ, அவனைத் தீண்டலாமோ. அங்ஙனம் அவனிடம் புசிக்கினுந், தீண்டினும் உயர்ந்தசாதி பிராமணனாதலின் சுகக்கேட்டைத் தரும் கிருமிகள் அவனிடத்தில் அணுகாதென்று கூறுவரோ. தோல் தைக்கும் மற்றுமோர் சக்கிலியன் தோல் ஷாப்பிற்குத் தலைவனாயுள்ள பிராமணனிடஞ் செல்லுவானாயின் சக்கிலியனிடமுள்ளக் கிருமிகள் பிராமணனைமட்டிலும் பற்றிக்கொள்ளும், தோல் ஷாப்பு பிராமணனிடமுள்ளக் கிருமிகள் சக்கிலியனை பற்றாதென்று கூறுவரோ.
ஒருவன் பிராமணனென்னும் பெயரை வைத்துக் கொண்டிருந்த போதினும் துற்குணமும், துற்பிணியும் பெற்றிருப்பானாயின் அவனை அணுகுவோர் சகல சுகாதாரங்கெட்டு அழிவார்கள்.
ஒரு சக்கிலியன் நற்றேகமும், நற்குணமும் பெற்றிருப்பானாயின் அவனை அணுகுவோர் நற்சுகமும், நற்குணமும் வாய்த்து சுகமடைவார்களென்பது திண்ணம்.
இவைகளே சகல சுகாதாரங்களுக்கும் பொதுவழியும், முதுமொழியு மென்று கூறப்படும்.
அங்ஙனமின்றி பொய்யனாயிருந்தாலும் பிராமணன், களவாளியாய் இருந்தாலும் பிராமணன், விபச்சாரியாயிருந்தாலும் பிராமணன், குடியனாய் இருந்தாலும் பிராமணன், கொலைஞனாயிருந்தாலும் பிராமணன். உயர்ந்த சாதியினனென்று சொல்லிக்கொள்ளுவதும் பஞ்சபாதகங்கள் அற்றிருப் போனைத் தாழ்ந்தசாதியானென்று கூறுவதுமாகிய இத்தேசத்தின் சாதி வித்தியாசங்களை சுகாதாரத்திற்கு முக்கியமானதென்று பிரபசர் இ.எச்.ஆன்கின் துரையவர்கள் கூறியுள்ள விஷயம் விளங்கவில்லை.
ஆதலின் நமது பிரபசரவர்கள் அடியிற் குறித்துள்ள சுகாதார வினாக்களுக்கு விடைபகர்வாராக.
தேகசுத்தம், மனோசுத்தமுடையவன் சுகாதாரமடைவானா அன்றேல் தேக அசுத்தன், மனோ அசுத்தன் சுகாதாரமடைவானா. பிராமணனென்று சொல்லிக்கொள்ளுவோனுக்குக் குஷ்டம் பிடித்திருந்திருக்குமாயின் சுகக்கேட்டைத் தருங் கிருமிகளவனை அணுகாதா, சுகதேகமும், சுகாதாரமும் விரும்பும் சக்கிலியனை சுகக்கேட்டைத்தருங் கிருமிகளணுகுமோ என்பதேயாம்.
- 3:18; அக்டோபர் 13, 1909 -