அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/353-383

விக்கிமூலம் இலிருந்து

24. மழையில்லாதக்காரணமோ மக்கள் அதன்மமேயாம்

அதன்மத்திற்குக் காரணமோ, சாதியாசாரமாகும். சாதியாசாரத்திற்குக் காரணமோ தங்களைப் பெரியசாதிகளென்று உயர்த்திக்கொண்டு பெருஞ் சோம்பேரிகளாயுலாவி எளியோர்களை ஏய்த்து வேலை வாங்குவதற்கேயாம். இத்தகையோர் வஞ்சக வரட்சி ஏய்ப்பினால் வானஞ் சுருங்கி பூமி வரண்டு போகின்ற காரணங்கொண்டே அதன்மமேயென்று கூறியுள்ளோம். எங்கும் தன்மம் நிறைந்திருக்கின்றது. சிலக்கனவான்கள் தன்மசத்திரங்கட்டிவேண்டிய வரையில் அன்னதானஞ் செய்து வருகின்றார்களென்று கூறினுங்கூறுவர். அஃது சத்தியதன்ம மார்க்கத்தை அறிந்து செய்யா அசத்திய தன்ம மார்க்கமேயாகும்.

சத்தியதன்ம மார்க்கமானது ஏழைகளுக்கு இதங்கி அவர்கள் பசிதீர அன்னமளிப்பதும் ஞானவிசாரிணைப் புருஷர்களாகும் துறவிகளுக்கும் இல்லந் துறந்தவர்களுக்கும் பெண் பிள்ளைகளை வெறுத்துப் பேரின்பந் தேடும் பெரியோர்களுக்கு அன்னமளிப்பதுமாகும். அசத்திய தன்ம மார்க்கமோவென்னில் தடிச் சோம்பேறிகளுக்கு அன்னமளிப்பதும் பெண்டு பிள்ளைகளை வளர்க்கும் பேராசையால் தங்களைப் பெரியோர்களென்றும் மேலார்களென்றும் பொய்யைச்சொல்லி பொருள்பரிப்போருக்கு அன்னமளிப்பதுவேயாம்.

இத்தகைய தன்மத்தை சத்தியதன்ம வழியிற் செய்வதாயின் வானம் மும்மாரிபெய்து வரப்புயர்ந்து பயிறுகளோங்கி குடிகள் செழித்து அரசரும் ஆறுதலடைவர். அங்ஙனமின்றி பொருளாசை மிகுத்த அசத்தியர்களுக்குச் செய்யுந் தன்மத்தினால் மழைபெய்யாது பூமியும் வரண்டு காருண்யமற்ற பாபிகள் பார்வையால் பயிறுகளுந் தீய்ந்து தானியங் கிடையாது குடிகளும் நசிந்து அரசர்களும் ஆறுதலற்றிருக்கின்றார்கள்.

வானத்தை நோக்கி மழைப் பெய்யவில்லையென்பதினும் பூமியில் வாழும் ஏழைகளைநோக்கி இதக்கம் வைப்பரேல் மாதம் மும்மாரி பெய்யும். தங்களைப் பார்த்து நிற்கும் ஏழைகளைப்பாராதவர்கள் வானத்தை நோக்கிப்பார்ப்பதால் தாங்கள் பயனடைவார்களோ, ஒருக்காலும் அடையார்கள். அளந்ததே அளக்கப்படும், கொடுத்ததே கொடுக்கப்படுமாதலின் ஒவ்வொரு கனவான்களும் பணத்தை வளர்ப்பது போல் ஏழைகள்மீது தங்கள் கருணையையும் ஈகையையும் வளர்ப்பரேல் தாங்களும் சுகச்சீர்பெற்று ஏழைகளும் ஆனந்தமுற்று அரசும் ஆறுதல் பெற்று சுகமுண்டாகும். கற்புமிகுந்தோரும் காருண்யம் அமைந்தோரும் வானத்தை நோக்கி பெய்யென்றால் பெய்யுமழை என்பது சத்தியமொழியேயாம்.

- 4:6; சூலை 20, 1910 -