அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/379-383
50. இந்திய தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிகளாலும் மதங்களாலும் மநுக்களுக்கு சீர்திருத்த சுகம் ஏதேனும் உண்டோ
ஏதுங்கிடையாவாம், சீர்கேடும் அசுகமும் என்றே கூறல் வேண்டும். தற்காலமுள்ள நாகரீகமும் சுகமும் எவற்றால் உண்டாயது என்னில் நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் ராஜரீகத்தின் செயல்களினாலேயாம். நூதனமாய பெரிய சாதியென்போர் பெரிய பெரிய மாடமாளிகைகள் கட்டி வாழ்வதும் பிரிட்டிஷ் அருளேயாம். பெரிய சாதியென்போர் வண்டி குதிரைகள் ஏறிவுலாவுவதும் பிரிட்டிஷ் அருளேயாம். நாகரீகமாய உடைகள் தரித்து வீதி உலாவுவதும் பிரிட்டிஷ் அருளேயாம். குல்லாக்களிட்டு மூக்குக்கண்ணாடி பூண்டு கையில் தடி கொண்டு உலாவுவதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம். கம்பஞ்சோறு சோளச் சோறு தின்போனல்லாம் நெல்லஞ்சோறு தின்ன நேர்ந்ததெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம். பலவகை துன்னாற்றமடைந்துள்ள குட்டை நீர் குளத்து நீரைக் குடித்திருந்தோரெல்லாம் சுத்தநீரை மொண்டு குடிக்க நேர்ந்ததும் பிரிட்டிஷ் அருளேயாம். அவரவர்கள் சுயபாஷைகளையே சரிவரக்கற்காதவர்களுக்கெல்லாம் பலபாஷைகளையும் நன்கு வாசித்து சங்கங்களிலஞ்சாது பேசச்செய்வதும் பிரிட்டிஷ் அருளேயாம். பலவகை வியாதிகளால் பீடிக்கப்பட்டும் காலுடைந்து கையுடைந்தும் அங்கங்கு பாழடைவோரல்லவரையுங் கொண்டுவந்து சுகமளித்தாதரிப்பதும் பிரிட்டிஷ் அருளேயாம். கருப்புமணி கழுத்தில் அணைந்தோரை கண்டசரம் காசிமாலை அணையவைத்து வருவதும் (காஜில்போ) என்னுங் கறுப்பு வளையல்களைக் கையிலிட்டிருந்தோரெல்லாம் பொன்காப்பு கொலுசுகளணிந்து வருவதும் பிரிட்டிஷ் அருளேயாம். மண்கிண்ணியில் சோறும் மட்கலையத்தில் நீரும் அருந்தினோரெல்லாம் வெள்ளிக்கிண்ணியில் சோறும் வெள்ளி பாத்திரத்தில் நீரும் அருந்தவைத்து வருவதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம், காடாசீலை வெள்ளை சேலைகளைக் கட்டித் திரிந்தோரெல்லாம் காசிச்சீலை காம்பரச் சீலைக் கட்டும்படி செய்துவருதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம்.
இத்தியாதி மேடமாளிகைகளையுங் கூட கோபுரங்களையும் பொன்னாணயம் வெள்ளி நாணயம் பொன்னகைகள் வெள்ளி நகைகள் பட்டு வஸ்திரம் சரிகை வஸ்திரம் யாவையும் பயமின்றி வைத்துக்கொண்டு சுகமாய் அநுபவித்து வருவதற்குக் கள்ளர் பயமின்றி காப்பாற்றி வருவதும் பிரிட்டிஷ் அருளேயாம்.
நூதனமதக் கோவில்களுக்கோ எட்டு நாளைய உற்சவம், பத்துநாளய உற்சவம், யானை ஏற்ற உற்சவம், குதிரை ஏற்ற உற்சவம், ரத உற்சவம், காளஸ்திரி உற்சவமென்னும் போக்குவருத்துக்கும் அதனதன் செலவுகளுக்கும் பீடமாகவும் ஆதரவாகவும் உதவியாகவும் நின்று விளங்குவதும் பிரிட்டிஷ் அருளேயாம். சாமிகளுக்குப் பாலபிஷேகஞ் செய்வதும், அன்னாபிஷேகஞ் செய்வதும், பஞ்சாமுர்தம் பெய்வதும், வடையபிஷேகஞ் செய்வதும், சுண்டலபிஷேகஞ் செய்வதும் இவைகள் யாவையும் சேர்த்துப்பார்த்து உருண்டை பிடித்து பாகம் போட்டுண்பதுமாகிய செயல்கள் யாவற்றின் பணவிருத்திக்கே ஆதாரபீடமாக விளங்குவதும் பிரிட்டிஷ் அருளேயாம்.
ஈதன்றி நூதனமாயப் பெரிய பெரிய சாதிவேஷக்காரராலும் பெரிய பெரிய மதக்கோஷக்காரராலும் இத்தேசத்திற்கு யாதாமோர் சீர்திருத்தமேனும் சுகாதாரமேனுங் கிடையாதென்றே துணிந்து கூறுவோம். நூதன சாதித்தலைவர்களால் இத்தேசத் தோருக்குண்டாய கேடுபாடுகள் யாதென்னிலோ, சகல பாஷைக்காரரும் ஒற்றுமெyற்றும் அன்புபாராட்டியும் சுகசீவிகளாக வாழ்ந்துவந்தவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமெயற்றும் அன்புகெட்டும் அவன் பெரிய சாதி இவன் சின்ன சாதியென்னும் மானுஷீகச் செயலற்றும் பொறாமெயுற்றும் ஒருவனைக்கண்டால் மற்றொருவன் சீறிச் சினந்துக் கடிக்குஞ் செயலே விருத்தி பெற்று வந்தபடியால் ஒருவர் கற்றுள்ள வித்தைகளை மற்றவருக்குக் கற்பியாமலும் ஒருவர் கற்றுள்ள கல்வியை மற்றவருக்கு கற்பியாமலும் ஒருவர் கற்றுள்ள விவசாயத்தை மற்றவருணர்ந்து செய்யாமலும் பாழடையச்செய்ததே சாதி வேஷங்களின் பயனாம் நூதன மதங்களின் கேடுபாடுகளோ வென்னின் பாரதத்தைப் பரக்கப்படித்து துரோபதைக்கு கலியாணங் கட்டிவிடுவதே கல்வி விருத்தியென்றெண்ணி படிப்போருஞ் சோம்பேறி, கேட்போருஞ் சோம்பேறி யேங்கித்திரிவதோர் பயன். இராமாயணத்தைச் சிறக்கப் படித்து சீதைக்கும் ராமருக்குங் கலியாணங் கட்டிவிடுவதே வித்தியாவிருத்தியென்றெண்ணி படிப்போருஞ் சோம்பேறி கேட்போருஞ் சோம்பேறிக் கெட்டலைவதோர் பயன். பெரிய புராணத்தைப் பெருக்கப்படித்து முள்ளுச்செடிக்கு மோட்சங் கொடுப்பதையும் கழுதைக்கு மோட்சங்கொடுப்பதையும் உறுக்கக் கேட்டு ஆனந்திப்பதே விவசாய விருத்திபோலெண்ணி படிப்போருஞ் சோம்பேறி கேட்போருஞ் சோம்பேறி அறிவே கெட்டழிவதோர் பயன். இத்தகைய அறிவின் குறைவின் பயனாலும் சோம்பாற் செயலாலும் தங்கள் தங்கள் சாமிகள் இருட்டறையில் வெறுமனே வீற்றிருக்கிறார்கள், அவர்களை உற்சாகஞ் செய்யவேண்டுமென்று பத்துநாளய உச்சவஞ் செய்யப்பணம் வேண்டி புராணங்கேட்குஞ் சோம்பேறிகளை வஞ்சித்து பறித்து ஏஜன்ட்டுகள் இடுப்புக் கட்டிக்கொண்டு சாமிகளை வாகனங்களில் இருக்கக்கட்டி, சாத்துபடி செய், சாத்துபடி செய் என்று எடுப்பதற்கு ஆட்களை பிடிபிடி என்றும், தீவட்டி மத்தாப்பு புருசுகளைக் கொளுத்துங்கோள் என்றும், சாமிக்கு சரியான வெளிச்சமில்லை காஸ் லையிட்டுகள் போடுங்களென்று சுற்றி சுற்றி ஓடிவருவதே, டெல்லகிராப் வித்தை, போனகிராப் வித்தை, இரயில்வே வித்தை, டிராம்வே வித்தை, என்று எண்ணி விடிந்து வேலைக்குப் போகாமலும் விவசாயம் பாராமலும் வித்தை விரும்பாமலும் உறங்கிக் கிடப்பதோர் பயன். இத்தியாதி சோம்பலேறி பெரியாச்சாரியே பிச்சையிரந்து உண்பதைக் காணும் அவர்கள் சாதிமதத்தைத் தழுவிய மாணாக்கர்களுக்குஞ் சோம்பலேறி கொட்டை கட்டும் வித்தை, பட்டை பூசும் வித்தை, குடுமியில் பூமுடியும் வித்தை இடுப்பில் பட்டுகுட்டை கட்டும் வித்தை, காலில் கெச்சை கட்டும் வித்தை முதலியவற்றை பெருக்கிக்கொண்டு தம்பூரைக் கையிலேந்தி வீடுவீடாகச் சென்று, “இராமா யென்னைக் கையை விடலாமா” என்று பாடித்திரிவோனும், முருகாவுன்னைத் தேடித் தேடி முழிகளுருளுதே என்று பாடித்திரிவோனும் அவரவர்களுக்கு மேலும் மேலும் சோம்பலை ஊட்டிவிக்கும் பாவலர்களும் நாவலர்களும் சபாபிரசங்கிகளுந் தோன்றி அரோகரா போடுங்கோ, கோவிந்தோம் போடுங்கோ, குறுக்குப்பூச்சை விடாதேயுங்கள். நெடுக்குப் பூச்சை மறவாதேயுங்கள், எங்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்தொகையை குறைக்காதேயுங்கோள், உங்கள் கையை நாங்கள் பார்த்திருக்கின்றோம் எங்கள் வாயை நீங்கள் பார்த்திருங்கோள் என்னும் பெருஞ்சோம்பேறிகளைப் பெருக்கி விட்டதன்றி தாய் தந்தை சுற்றத்தோரைக் காப்பாற்றும் வித்தையற்று வேதாந்திகள் என்னும் வீண் சோம்பேறிகளும் பலுகிப்பெருகி கட்டுக்கழுத்திகள் பால் புஞ்சித்தும் கைம்பெண்களை வஞ்சித்தும் அவர்களை அடுப்போர்யாவரும் சாமியார் சாமியாரென்று கூறவும் சாமியென்னும் மொழிக்கே பொருளறியா போலிவேதாந்த குரு உலகம் பொய் யாவும் பொய், எனக்குக் கொடுக்கவேண்டிய தொகைகள் மட்டிலும் மெய், அதை மட்டிலும் ஆளுக்குக் கொஞ்சங் கொடுத்து வந்தால் போதுமென மூன்று வேளையுங் கொழுக்கத்தின்று உலகமும் பொய், விதத்தையும் பொய், புத்தியும் பொய்யென மயக்கி தேசவிருத்தியையும் மநுக்கள் விருத்தியையுங் கெடுத்துவருவது அநுபவமுங் காட்சியுமே யாதலின், நூதன சாதிச்செயல்களையும் நூதன மதப்போதகங்களையும் நம்பி வீண் மோசமடைந்து சோம்பேறிகளாகி சோம்பித்திரியாமல் விசாரிணை ஊக்கமென்னும் உறைக்கல் கொண்டறிந்து வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் முயன்று தற்காலம் இந்தியதேசத்தையும் இந்தியர்களையும் சீர்பெறச்செய்து சுகமளித்துவரும் பிரிட்டிஷ் சாமிகள் மீது விசுவாசத்தை வளர்த்து அவர்கள் செய்துவரும் நன்றியை மறவாது அவர்கள் மீது அன்பை வளர்ப்பதே அழகாம். அங்ஙனமின்றி பொய்சாதி வேஷங்களையும் பொய்ம்மதக்கோஷ்டங்களையும் பின்பற்றி அன்னமிட்டோர் வீட்டில் கன்னமிடுவது போல் இராஜ துரோகங்கொள்ளுவதாயின் தோன்றியுள்ள சீருங் கெட்டு நாசமடைவோமென்பது சத்தியம், சத்தியமேயாம்.
- 7:36; பிப்ரவரி 11,1914 -