அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/378-383
49. ஓர் மனிதன் தான் சுகம்பெற வேண்டுமாயின் பிறர் சுகத்தை முன்பு கருதல் வேண்டும்
ஓர் மனிதன் தம்மெப்போன்ற மனிதனை மனிதனாக பாவிக்காதவன் மனிதன் என்றெண்ணப்படமாட்டான். அவனை மிருகசீவர்களோடு ஒப்பினும் பொருந்தாவாம். எங்ஙனமென்பரேல் மாட்டினது கூட்டங்களில் சிவப்பு மாடேனும் கறுப்பு மாடேனும் வெளுப்பு மாடேனும் ஒன்றாகப் பொருந்தி வாழ்குமேயன்றி அவைகளிலொன்று போய் யானைக்கூட்டங்களிலேனும் குதிரைக் கூட்டங்களிலேனும் கலவாவாம். ஆதலின் மனித கூட்டங்களை மனிதர்களாக பாவிக்காதவன் மிருகத்தினுந் தாட்சியாய மிருகக் கூட்டமென்றே ஒப்பிடலாகும். அத்தகையக் கூட்டத்தோர் வாழும் தேசத்தில் விவசாய விருத்தி பெறுமோ, வித்தைகள் விருத்திபெறுமோ, நாகரீகம் விருத்தி பெறுமோ, சகல மனுக்களும் சீர்பெறுவார்களோ, தேசம் சிறப்படையுமோ, அவர்களெடுக்கும் முயற்சிகள் யாவும் முட்டின்றி முடியுமோ, ஒருக்காலும் ஆகாவாம்.
மனிதர்களை மனிதர்களாக பாவிக்காதவர்களும் கருணை என்பதே கனவிலுமில்லாதவர்களும் அன்பு என்பதே ஜென்மத்திலில்லாதவர்களும் ஆதரிப்பு என்பதே சாதனத்திலில்லாதவர்களுமாகிய மனுக்கள் எடுக்கும் முயற்சியும் தொடுக்கும் வேலையும் முடிவதுபோல் தோன்றி, உள்ளதும் நாசமடைந்து போமேயன்றி சுகவிருத்தியைக் கொடுக்காதென்பது சத்தியம், சத்தியமேயாம். இதன் சுருக்கம் அறிந்த இத்தேசத்திய பூர்வ பௌத்தர்கள் நீதியையும் நெறியையுங் கருணையுமே பெருக்கி சருவ சீவர்களின் மீதும் அன்பு பாராட்டி வந்ததனால் மாதம் மும்மாரி பெய்யவும் விவசாய விருத்திகள் பெறவும் வித்தியா விருத்திகள் அதிகரிக்கவும் மநுக்கள் யாவரும் சுகசீவிகளாக வாழ்கவும் நாடு நகரமென்னும் பெயரால் தேசஞ் சிறப்படையவும் அரசர்கள் ஆனந்த வாழ்க்கைப் பெறவுமாயிருந்தது. அத்தகைய நீதியென்பதும் அற்று நெறியென்பதும் தவறி கருணையென்னும் மொழியே மறைந்தும் சீவகாருண்யமென்னும் செயலே அற்றும் பொய் பொறாமெ வஞ்சினஞ் சூது குடிகெடுப்பு முதலியத் தீயச் செயல்களே அதிகரித்து விட்டபடியால் பஞ்சமும் பெருவாரி நோய்களுந் தோன்றி மநுமக்களும் மாடு கன்றுகளும் சுகக்கேடுற்றுவருவதே போதுஞ் சான்றாம். இல்லை, தேசமெங்கும் சிறப்புற்று மக்களும் சிறப்படைந்திருக்கின்றார்கள் என்று கூறுவோரும் உண்டு. அத்தகைய சிறப்புகள் யாவும் தற்கால மநுமக்கள் கொண்டாடும் தெய்வச் செயல்களும் அன்று அவர்கள் செயல்களும் அன்றாம். “நல்லாரொருவருளரேல் அவர்பொருட்டெல்லோர்க்கும் பெய்யுமழை” என்னு முதுமொழிபோல் நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் ராஜரீக துரைக்களாம் சாமிகளின் செயல்களாலேயாம் அவர்களுக்குள்ள குணமும் செயலும் முயற்சியும் இத்தேசத்தோருக்கும் இருக்குமாயின் தேசமும் தேச மக்களும் ஆனந்த சுகச்சிரீலிருப்பார்களன்றோ. பிரிட்டிஷ் துரை மக்கள் சாமிகளால் ஏற்படுத்தியுள்ள மில்ஸ் முதலிய இயந்திர சாலைகளும், ஷாப்புகளும், அவுஸ்களும், கப்பல் துறைகளும், இரயில்வே துறைகளும், அச்சியந்திரசாலைகளும், கோர்ட்டுகளுங் கொத்தலங்களும் இல்லாமற் போய்விடுமாயின் நான்குபடி அரிசி விற்பனையில் தேச மக்கள் யாவரும் நாசமுற்றே போயிருப்பார்களென்பது. திண்ணம் திண்ணமாமன்றோ. இஃது அநுபவமுங் காட்சியுமன்றோ.
ஆதலின் ஓர் மனிதன் சுகச்சீர் பெற வேண்டுமாயின் அவன் பிறர் சுகத்தை கருதல் வேண்டும். எவ்வகையாலென்னில் வண்டியேறி சுகமனுபவிக்க வேண்டுமாயின் ஓர் மாடையேனும் குதிரையையேனும் தேடல் வேண்டும். அவை வசதியாக வீற்றிருக்கக் கொட்டகையேனும் லயமேனும் நியமித்தல் வேண்டும் அவைகள் சீவிக்க ஆகாரத்தைக் காலமறிந்து ஊட்டி வளர்த்தல் வேண்டும். அப்போதே வண்டியேறுஞ் சுகத்தை இவனனுபவிக்கக்கூடும். அங்ஙனமாய மாட்டிற்குக் கொட்டகையின்றியுங் காலப்புசிப்பின்றியும் வண்டிகட்டி சுகமனுபவிக்க வேண்டுமாயின் நடுவழியில் மாடு விழுந்து ஏறிவந்த வண்டியை இவனே இழுத்துச் செல்லல்வேண்டும் அதுபோலவே சகல வித்தைகளிலும் சகல விவசாயங்களிலும் தான் சுகம்பெற வேண்டுமென்று கருதுகிறவன் முதலாகப் பிறர் சுகத்தைக் கருதுவானாயின் அவன் கருதுஞ் சுகந்தானே கைக்கூடும். பிறர் சுகத்தைக் கருதாதவன் தன் சுகமடையமாட்டான். அவைபோல் பிறர்களது சுகத்தை நாடாது அவர்களை கெட்டழிக்க முயலுவோர் ஒருவர் கெடுப்பாரின்றி தாங்களே கெட்டழிவார்களென்பது நிலவரமேயாகும்.
இத்தகைய நீதிநெறி ஒழுக்கங்களை நோக்காது தங்கள் குடி ஒன்று பிழைக்க நூறு குடிகளை கெடுத்து பாழ்படுத்தும் சில மாந்தர் ஏதோ தற்காலம் நம்முடைய மித்திரபேதச் செயலால் முன்னேறிவிட்டோம், இனி உள்ளவர்களையும் பாழ்படுத்தி விட்டால் இன்னும் மேலாய சுகத்தையடையலாம் என்று எண்ணித் திரிகின்றார்கள். அவ்வளவும் கேட்டிற்கே விதை போடுகின்றார்களென்பது முடிவாம்.
- 7:34; சனவரி 28, 1914 -