அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/377-383
48. இந்திரர் தேச முற்கால சிறப்பும் தற்கால வெறுப்பும்
இந்திரர் என்னும் புத்தபிரானது சத்திய தன்மம் வட இந்தியம் தென்னிந்தியமெங்கும் பரவியிருந்த காலத்தில் இந்தியர் என்னும் பௌத்தர்கள் யாவரும் குருவிசுவாசம் இராஜவிசுவாசம் மக்கள் விசுவாசம் மூன்றிலும் நிலைத்து வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களாகிய நான்கையுங் கையாடி வந்தவற்றுள் ஜெகத்குருவாகிய புத்தரை விசுவாசித்து நின்றபடியால் அவரால் போதித்துள்ள சத்திய தன்மத்தைப் பின்பற்றி நீதிநெறியிலும் ஒழுக்கத்திலும் பிறழாது மாதம் மும்மாரி பெய்து நீர்வளம் நிலவளமோங்கி பயிறுகள் விருத்தி பெற்று மக்கள் சுகமுற்று அரசர்கள் ஆனந்த சுகத்திலிருந்தார்கள்.
வட இந்திய, தென்னிந்திய மக்கள் இராஜவிசுவாசத்திலிருந்து அரசர்களுக்கு ஓர் துன்பம் வருமாயின் அத்துன்பம் தங்களுக்கு வந்தது போல் கருதியும், அரசருக்கு ஓர் பிராண ஆபத்து நேரிடுமாயின் தங்கள் பிராணனை முன்பு கொடுத்தும், சுகநிலை தேடுவார்கள். காரணமோ வென்னில் குடிகள் யாவரும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களாகிய நற்சிந்தையிலேயே நிற்பவர்களாதலால் தங்களுக்கு அன்னிய நாட்டரசர் இடுக்கம் வாராமலும் காட்டுமிருகங்களின் துன்பம் அணுகாமலும் கள்ளர்களின் பயமுண்டாகாமலுங் காத்து ரட்சித்து வருவதினாலேயாம். இராஜ விசுவாசமில்லாமற் போமாயின் தங்களது வித்தை புத்திஈகை சன்மார்க்கமாகிய நான்குவகை நற்செயல்களுக்குங் கேடுண்டாகிப்போகுமென்பதேயாம்.
வடயிந்தியர் தென்னிந்தியர் யாவரும் மக்கள் விசுவாசத்திலேயே மிக்க நிலைத்திருந்தார்கள். அதாவது அரசருக்குள் சீனராசன் மகளை வங்களராசன் கட்டுகிறதும், வங்கள ராசன் மகளை திராவிடராசன் கட்டுகிறதும், திராவிடராசன் மகளை சிங்கள ராஜன் கட்டுகிறதுமாகிய சாதிபேதக்கேடு மதபேதக்கேடுகள் இன்றி வாழ்ந்துவந்த ஒற்றுமையால் அரசர் எவ்வெழியோ குடிகளும் அவ்வழியென்னும் முது மொழிக்கிணங்கக் குடிகளும் சாதிகேடு மதகேடுகள் என்பதின்றி அவரவர்கள் அந்தஸ்திற்குத் தக்கவாறும் வித்தைக்குத் தக்கவாறும் ஒற்றுமெக்கேடின்றி ஒருவர் வித்தையை மற்றவருக்குக் கற்பிக்கவும் ஒருவருக்குள்ள பொருளை மற்றவருக்கு உதவி செய்யவும் பயனைக் கருதாது ஈகையில் நிலைத்து சகல மக்களும் தங்களைப் போல் சுகம்பெற்று வாழ்கவேண்டுமென்னும் கருணையும் அன்பும் பெருக வாழ்ந்து வந்தார்கள். அதனால் இந்தியமக்கள் யாவருஞ் சுகச்சீர் பெற்று வித்தியாவிருத்தியிலும் விவசாய விருத்தியிலுங் கண்ணோக்கமுடையவர்களாய் ஆனந்தத்திலிருந்தார்கள்.
அவ்வழிகொண்டு சகல வித்தைகளும் பெருகி மக்களும் சுகமுற்று தேசமும் சிறப்புற்றிருந்தபடியால் அக்காலத்திய அன்னியதேச விவேகிகள் யாவரும் இந்தியதேசம் வந்து அவரவர்களுக்கு வேண்டிய வித்தைகளைக் கற்றுக்கொண்டு போனார்கள் என்பதற்குப் போதிய சரித்திர ஆதாரங்களும் உண்டு. இவற்றுள் ஒருமனிதனின் பூர்வகுல சிறப்பை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவனுக்குள்ள நல்லொழுக்கம் நன்னீதி, நல்வாழ்க்கை சீவகாருண்யம் அன்பு குலாபிமானம் முன்னேற்றம் முதலிய செயல்களால் அறிந்துக் கொள்ளலாம். அதுபோல் ஒரு தேசத்தின் பூர்வ சிறப்பை அறிந்துக்கொள்ளவேண்டுமாயின் பூர்வக் கட்டிடங்களினாலும் பூர்வ முதநூல், வழிநூல், சார்புநூற்களாலும் எளிதில் அறிந்துக் கொள்ளலாம். அதுகண்டு கருணை தங்கிய ராஜாங்கத்தார் பூர்வ தட்டிட பரிசோதகர்களைக்கொண்டு சோதிப்பவற்றுள் சிற்பா சாஸ்திரிகளின் வல்லபமும் புத்தியின் விசாலமும் ஒற்றுமெயின் செயலும் எளிதில் விளங்கி வருகின்றது. அவற்றிற்குப் பகரமாய் பௌத்த சித்தர்களும் ஞானிகளும் வித்துவான்களும் வரைந்துள்ள வைத்திய நூற்களும் ஞான நூற்களும் நீதி நூற்களும் கலை நூற்களுமே போதுஞ் சான்றாம்.
இத்தியாதி வித்தையும் புத்தியும் ஈகையும் சன்மார்க்கமும் ஒற்றுமெயும் நிறைந்திருந்த இந்திரர் தேசத்தில் சோம்பலும் பொறாமெயுமே ஓர் உருவாகவும் பொய்யையே ஒரு வித்தையாகவும் குடிகெடுப்பையே ஓர் புத்தியாகவும் வஞ்சினத்தையே ஓர் ஈகையாகவும், ஒரு குடி பிழைக்க நூறு குடிகளைக் கெடுப்பதே சன்மார்க்கமாகவுங் கொண்டொழுகும் வஞ்சினக் கூட்டத்தோர் வந்து தோன்றி தேசத்தோரிடம் பிச்சையிறந்துண்டே சீவனைக் காப்பாற்றிக் கொண்டதன்றி தேசத்தோர் செய் நன்றியை மறந்து தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய பொய் வேதங்களையும் பொய்ப் புராணங்களையும், பொய் மதங்களையும், பொய் தேவதைகளையும், பொய் சாதிகளையும் ஏற்படுத்தி அதில் தங்களை உயர்ந்த சாதிகள் என வகுத்துக் கொண்டு தங்களது பொய்யாயச் செயல்கள் யாவற்றிற்கும் எதிரடையாயிருந்து கண்டித்தும் அடித்து துரத்தியும் வந்த விவேகிகளாய மேன்மக்கள் யாவரையும் தாழ்ந்த சாதியாக வகுத்து அவர்களை எவ்வகையாலுந் தலையெடுக்க விடாமற் செய்துவந்தபடியால் தேசத்தின் ஞான பீடங்கள் அழிந்தும் வித்தியா பீடங்கள் ஒடிங்கியும் விவசாயத் தொழில்கள் நாசமடைந்தும் கருணை அன்பென்னும் சன்மார்க்கங்கள் ஒழிந்து ஒற்றுமெய்கேடுற்று தேச சிறப்புக்குன்றியும் மக்களது விவேக விருத்திக்கெட்டு பாழடைந்துகொண்டே வந்தது. அத்தகைய சீர்கேட்டிலேயே இதுகாருமிருக்குமாயின் சகல மக்களுக்குமுள்ள வித்தைகளுமற்று விதரணைகளுமற்று மக்கள் சீரழிவதுடன் தேசமும் சிறப்பழிந்து நாசமுற்றே நிற்கும். ஏதோ இவ்விந்திர தேசத்தோரின் பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றி தேச சிறப்பும் மக்கள் சுகமும் பெறும்படியான வழிவகைகளுண்டாகிக் கொண்டே வருகின்றது. இது காலத்தில் பூர்வ இந்தியர்கள் யாவரும் ஒருவர் சொன்னதை நம்பித்திரியும் அஞ்ஞானத்தை ஒழித்து சுயக்கியானத்தில் நிலைத்து பிரிட்டிஷ் ஆட்சியே சகல அதிகாரங்களிலும் நின்று ஆண்டுவரவேண்டும் என்றாசித்து அவர்களே நம்மெக் காத்து ரட்சிக்கும் அரசர்களென விசுவாசித்துத் தங்கள் தங்கள் காரியாதிகளில் முன்னேறும் வழிவகையைத் தேடுவார்களாயின் பூர்வ இந்திய தேசம் இந்திரர் லோகமாகவே விளங்கும், இந்தியர்கள் யாவரும் சுகச்சீர் பெறுவார்கள்.
அங்ஙனமின்றி வஞ்சகர்கள் வார்த்தைகளை நம்பி ராஜதுரோக சிந்தையை வளர்ப்பார்களாயின் இப்போது நேர்ந்துவரும் சுகச்சீர்களுங் கெட்டுப் பாழடைய வேண்டியதேயாம், நம்புங்கள், நம்புங்கள்.
- 7:19; அக்டோபர் 15, 1913 -