உலக வாழ்க்கையில் மனிதன் பெறக்கூடிய பேறுகள் பலவற்றுள்ளும் கம்பனுடைய ராமாயணத்தைப் படித்து அனுபவிப்பது மிகப் பிரதானமானவைகளில் ஒன்று என்பது எம்முடைய அபிப்பிராயம். ஏனெனில் ஆத்மானுபவத்துக்கு அடுத்தபடியில் கவிதானுபவம் தான் மனிதனுக்கு உன்னதமான ஆனந்தத்தைத் தருகிறது. கவிதையில், தமிழ்ப் பாஷையில் மாத்திரமில்லை, மற்றெந்தப் பாஷையிலும் கூட, கம்பராமாயணத்துக்கு மேலான கவிதை எங்கு காணலாகும்?
நமது முன்னோர் கம்பனுக்குக் கவிச் சக்ரவர்த்தி என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சியல்ல —— அது கேவலம் உண்மை உரைத்தலேயாகும். கவிதாலோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்களெல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான். மேல் நாட்டாருக்குள் கவி சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மோலியேர், கதே ஆகிய இவர்கள் கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதானிருக்கிறார்களே ஒழிய அவனை மீறவில்லை. நமது நாட்டிலும் கச்சியப்பர், இளங்கோவடிகள், சாத்தனார், நன்னைய பட்டன், சந்தபட்டன், துளசீதாசர், காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும் தராசு முனை கம்பன் பக்கம் தான் சாயுமே ஒழிய அவர்கள் பக்கம் சாயாது. வால்மீகி, வியாஸர் ஆகிய இவ்விரண்டு கவிகளைத்