பாரதியாரின் சின்னச் சங்கரன் கதை/4
நான்காம் அத்தியாயம் - சங்கரன் யமகம் பாடி அரங்கேற்றியது
மேலே கூறப்பட்ட போராட்டம் முடிந்து, ஒருவாறு கவுண்டர் சபை கலைந்தது. புலவர்களெல்லாம் போனபின், தனியாக இருக்கும்போது கவுண்டர் முத்திருளனை நோக்கி, “ஏதோ ஒரு நல்ல சமாச்சாரம் கொண்டு வந்தாயே, அது சொல்லி முடியு முன்பாக, அந்த இழவு பார்ப்பான் சண்டை தொடங்கி விட்டான். நீ நல்ல போடு போட்டாய். அந்தப் பாப்பானுக்கு வேணும். அது போகுது, சொல்ல வந்த சங்கதியைச் சொல்” என்றார்.
“நம்ம சுப்பிரமணிய அய்யர் மகன் சங்கரன் சமூகத்தின் மேலே ஒரு யமகம் பாடியிருக்கிறான். நல்ல பாட்டு; அடியேனால் கூட அவ்வளவு ‘ஷோக்’கான பாட்டுப் பாட முடியாது. அதைச் சமூகத்திலே அரங்கேற்ற வேணும். மகாராஜா! பையன் சிறுவனாக இருந்த போதிலும் புத்தி ரொம்ப கூர்மை. அரண்மனைக்கு இத்தனை புலவர்கள் வருகிறார்களே, அவர்களெல்லாரையும் விட்டு அடியேனிடத்திலே வந்தால்தான் இந்தக் காரியம் சாத்யமென்று தெரிந்து கொண்டான். அவன் வயதெவ்வளவு? நம்ம மகாராஜாவினுடைய கிருபை இன்னான் மேலே பரிபூர்ணமாக விழுந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்வதென்றால் அதென்ன சாமான்யமாகச் சிறு பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய விஷயமா? மகாராஜா காலுக்கு இந்த முத்திருளுதான் சரியான நாய்க்குட்டி; இவனிடத்திலே சொன்னால்தான் நமது கவி அரங்கேறுமென்று கண்டுபிடித்து விட்டான்.
”புத்திசாலி. அந்தப் பாட்டை ஒரு நாள் சபையிலே அரங்கேற்றும்படி உத்தரவானால், அப்போது இந்த அய்யங்கார்கள், புலவர்கள் இவர்களுடைய சாமர்த்தியங்களெல்லாம் வெளிப்பட்டுப் போகும். அடியேன் ஒருவனாலேதான் அந்தக் கவிக்குப் பொருள் சொல்ல முடியும். மற்றவர்களாலே குட்டிக்கரணம் போட்டால்கூட நடக்காது. அடியேனுக்குக்கூட அந்தப் பாட்டைக் கேட்டவுடனே இரண்டு நிமிஷம் திகைப்புண்டாய் விட்டது. பிறகுதான் அடியேனுக்கு மகாராஜா கடாக்ஷமும் சரஸ்வதி கடாக்ஷமும் கொஞ்சம் இருக்குதே – கொஞ்சம் நிதானித்துப் பார்த்தேன். அர்த்தம் தெளிவாகத் தெரிந்தது” என்று முத்திருளு சொன்னான்.
ஜமீன்தார், “அப்படியா! யமகமா பாடுகிறான்! உனக்குக்கூட அர்த்தம் கண்டுபிடிக்கத் திகைத்ததென்றால் வெகு நேர்த்தியான பாட்டாயிருக்குமே, பார்ப்போம், பார்ப்போம் நம்ம புலவர்களுடைய சாயமெல்லாம் நாளை வெளுத்துப் போகும். நாளைக்குச் சாயங்காலமே வைத்துக் கொள்ளுவோம். புலவர்களுக்கெல்லாம் சொல்லியனுப்பி விடு. ஒருவன் கூட தவறக்கூடாது. எல்லோரும் வந்து சேரவேணுமென்று.”
இந்த ஆக்கினையைக் கேட்டு முத்திருளு சந்தோஷமுடையவனாய் வணங்கிச் சென்றான். மகாராஜாவும் தமது நித்திய அநுஷ்டானங்களுக்குப் புறப்பட்டு விட்டார். ‘நித்திய கர்மானுஷ்டானங்கள்’ என்று எழுத உத்தேசித்தேன். ஆனால் கவுண்டர் அவர்களுக்குக் “கர்மம்” என்றுமே கிடையாது. அத்வைதிகள் சொல்லும் நிர்க்குண பிரம்மத்தின் ஜாதியைச் சேர்ந்த ஆசாமி.
யமகம் பாடிய காலத்தில் சின்ன சங்கரனுக்கு வயது மிகவும் கொஞ்சம். இவனுடைய தகப்பனார் சுப்பிரமணிய அய்யருக்கும் சமஸ்தான வித்வான் முத்திருளக் கவுண்டனுக்கும் மிகுந்த சிநேகமுண்டு. அவன் அடிக்கடி வந்து சுப்பிரமணிய அய்யரிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதுண்டு. கடனென்று சொல்லித்தான் வாங்குவான்.
ஆனால் முத்திருளன் தயவிருக்கும் வரையிலேதான் ஜமீன்தாருடைய தயவும் இருக்குமென்பதை நன்றாக அறிந்த சுப்பிரமணிய அய்யர் அவனிடம் பணத்தைத் திருப்பிக் கேட்கும் வழக்கமில்லை. அவனும் ராஜாங்க விவகாரங்களிலே புத்தியை அதிகமாக உழைப்பவனாதலால், மிக்க மறதிக் குணம் உடையவன். பணம் வாங்குவது அவனுக்குக் கொஞ்சமேனும் ஞாயகமிருப்பதில்லை.
சின்ன சங்கரன் விஷயத்தில் முத்திருளனுக்கு விசேஷ அன்பு ஏற்படுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. முத்திருளன் தகப்பன் எண்பது வயதுள்ள சோலையழகுக் கவுண்டன் என்பவன் கண்ணிழந்து வீட்டிலே உட்கார்ந்து கொண்டிருந்தான்.
இந்தச் சோலையழகு தமிழ்க் காவியங்களிலே சாக்ஷாத் நச்சினார்க்கினியருக்குச் சமமானவன் என்பது அந்தவூர்க் கவுண்டருடைய எண்ணம். சோலையழகுக் கவுண்டனிடத்தில் சங்கரன் தினம் பள்ளிக்கூடம் விட்டவுடனே போய்ப் பழைய புலவர்களின் சரித்திரங்களும், பழைய கடினமான விடுகவிகளுக்குப் பொருளும், கதைகளும் கேட்டுக் கொண்டிருப்பான். ஊரிலுள்ள பெரிய மனுஷ்யர்களிலே ஒருவராகிய சுப்பிரமணிய அய்யரின் பிள்ளை தன்னிடம் வந்து பாடம் கேட்டுக் கொள்வதைப் பற்றித் திருதராஷ்டிரக் கவுண்டனுக்கு அளவற்ற பூரிப்பு ஏற்பட்டிருந்தது. அந்தக் குடும்ப முழுதிற்குமே சங்கரன் மேல் ‘ஆசை’ அதிகம்.
மாலை ஐந்து மணி அடித்ததும் பள்ளிக்கூடத்திலிருந்து நேரே சங்கரன் ஜமீன்தாருடைய சபைக்கு வந்து விட்டான். மேலே சொல்லப்பட்ட வித்துவான் களெல்லாரும் வந்து சபையில் கூடியிருந்தனர். திவான் முருகப்ப முதலியார் தாசில் மாரிமுத்துப் பிள்ளை, இன்னும் சில கவுண்டப் பிரபுக்கள், உத்தியோகஸ்தர் எல்லோரும் வந்திருந்தனர்.
ஜமீன்தார் சங்கரனை நோக்கி, “எங்கே, தம்பி உன் பாட்டை வாசி, கேட்போம்!” என்றார்.
சங்கரன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே உருவிப் படிக்கத் தொடங்கினான்.
பையனுக்கு வாய் குழறுகிறது, உடம்பெல்லாம் வியர்க்கிறது.
சரஸ்வதிக்கு லஜ்ஜை அதிகம். லக்ஷ்மியைப் போல நாணமற்றவளன்று. சங்கரன் போன்றவர்களிடம் விளங்கும் போலி – சரஸ்வதிக்குக்கூட ஆரம்பங்களில் கொஞ்சம் லஜ்ஜை உண்டாகும். நாளாக, நாளாகத்தான் லஜ்ஜை, நாணம் எல்லாங் கெட்டுப் போய் தெருவேசிகளின் இயல்புண்டாகி விடும்.
சங்கரன் படும் அவஸ்தையைக் கண்டு முத்திருளக் கவுண்டன் அவனை உற்சாகப்படுத்தும் பொருட்டாகப் “பயப்படாதே, சாமி! தைரியமாய் வாசி. உயர்ந்த கவியாச்சுதே! இதிலென்ன வெட்கம்? மேலும் நம்ம மகாராஜாவின் முன்னிலையில் நம்முடைய படிப்பைக் காட்டாமல் யாரிடம் காட்டுவது? இதில் கூச்சப்படலாமா? என்றான்.
மகாராஜ ராஜஸ்ரீ, ராஜகுலதீப ராமசாமிக் கவுண்டர் மீது சங்கரய்யர் பாடிய யமக அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.
கவுண்டவுண்ட தெனமாரன் கணைபொழிய மிகச் சோர்ந்து கண்ணீராற்றிற் கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்னை நினைந்து மனங் கரையா நின்றாள் கவுண்டவுண்ட சீதையினை மாலையிட்ட பெருமானே கவுண்டனூரிற் கவுண்டவுண்ட ராமசாமித் துரையே விரைவினிற் கலவிசெய்யே”
இந்த யமக விருத்தம் பாடி முடிந்தவுடனே முத்திருளக் கவுண்டன் சபையோரைச் சுற்றித் திரும்பிக் காட்டிலே தனிச்சிங்கம் விழிப்பது போல ஆடம்பரமாக விழித்தான். புலவர்களுக்கெல்லாம் அடிவயிறு குழப்பமாயிற்று. ஒவ்வொருவனுக்கும் இந்தப் பாட்டுக்குத் தன்னிடம் பொருள் கேட்டு விடுவார்களோ என்ற பயமுண்டாயிற்று. யாரும் வாயைத் திறக்கவில்லை. கடைசியாக உபய வேதாந்தம் ரோதனாச்சாரியார் திருவாய் மலர்ந்து “முத்திருளக் கவுண்டா! இந்தப் பாட்டுக்கு நீதான் அர்த்தம் சொல்ல வேண்டும்” என்றார்.
முத்திருளக் கவுண்டன் பின்னும் ஒரு முறை ஒரு சுற்றுச் சுற்றி விழித்து விட்டுச் சங்கரனிடமிருந்து காகிதத்தைக் கையில் வாங்கிப் பார்த்துக் கொண்டு ஒரு முறை கனைத்ததன் பின்பு பின்வருமாறு வியாக்யானம் செய்யலானான்.
“இது நற்றாயிரங்கல் என்னும் துறை. (அதாவது, தன் மகள் காதல் துன்பத்தால் வருந்துவதைக் கண்ட தாயொருத்தி மனம் பொறுக்காமல் சொல்லுவது)
“கவுண்டவுண்ட தெனராமன் கணைபொழிய மிகச் சோர்ந்து கண்ணீராற்றிற்; கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்னை நினைந்து மனங்கரையா நின்றாள்; கவுண்டவுண்ட சீதையினை மாலையிட்ட பெருமானே கவுண்டனூரிற் கவுண்டவுண்ட ராமசாமித் துரையே விரைவினிற் கலவி செய்யே”
“கவுண்டவுண்டதென” – கவுண் தாவுண்டதென; கவுண் கற்கள் தாவி வருவது போல, இங்கு “கவுண்டாவுண்ட” என்றிருக்க வேண்டியது, குறுக்கல் விகாரத்தால் ‘கவுண்டவுண்ட’ என்றாயிற்று.
“மாரன்” – மன்மதன், காமவேள், “கணைபொழிய” – அம்புகளைப் பெய்ய, அதாவது பகழிகளைத் தூவ, அதனால் “மிகச் சோர்ந்தது” – மிகவும் சோர்வு எய்தி, சாலவும் துக்கமெய்தியவளாய், “கண்ணீராற்றில்”- கண்ணிலே உதிக்கும் நீரினாலாகிய நதியினால்.
“கவுண்டவுண்ட மார்பினளாய்” – கவ்வுண்டவுண்ட மார்பினளாய், அதாவது கவ்வப்பட்ட உருண்டை மார்பினை உடையவளாய், கண்ணீர் வெள்ளத்தாலே விழுங்கப்பட்ட பயோதரத்தினளாய். இங்கு ‘உருண்ட’ என்பதில் ருகரம் கெட்டது. தொல்காப்பியத்தில் கெடுதியதிகார விதிப்படி யென்க.
“மகள்” என்பது புதல்வி.
‘உன்னை நினைந்து மனங்கரையா நின்றாள்’ – இதன் பொருள் வெளிப்படை. ‘கவுண்டவுண்ட சீதையினை’ – இதனை, கா உண்டு, அவ் உண்டு, அ சீதையினை என்று பிரித்துப் பொருள் கொள்ளுக. இலங்கையிலே ஒரு கா (அசோகவனம்) உண்டு! அவ் – அவ்விடத்தில்; உண்டு – இருந்தாள்; ஆ – அந்த; சீதையினை – சீதா தேவியை; “காவுண்டு” என்பது ‘கவுண்டு’ எனக் குறுகியதும், ‘அச்சீதை’ யென்பதில் மெய் கெட்டதும் தொல்காப்பிய விதிப்படியே யென்க. ‘அவ்’ என்பதன் பிறகு இடத்தில் என்னும் சொல் வருவித்துக் கொள்ளப்பட்டது.
“மாலையிட்ட பெருமானே” – (சீதா தேவியின்) நாயகனாகிய ஸ்ரீராமபிரானுக்கு நிகரானவனே; இராமன் சூர்ய குலத்தவனாகவும் நமது மகாராஜா சந்திர குலத் திலகமாகவும் இருப்பினும் பெயரொற்றுமை கருதியும், வீரியம் முதலிய குணப் பெருமைகளின் ஒப்பைக் கருதியும் கவி இங்ஙனம் எழுதியிருக்கிறார். மேலும் அரசன் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று ‘வேதங்கள்’ முழங்குதலறிக. இராமனும் மகாவிஷ்ணுவின் அவதாரமென்றே கருதப்படுதலுணர்க.
‘கவுண்டனூரில்’ – கவுண்டமா நகரத்தின் கண்ணே; நீர்வளம், நிலவளம், பவளம் முதலியன பொருந்தியதாய், அஷ்டலக்ஷ்மிகளுக்குத் தாய் வீடாய் அமராபதி போல விளங்கும் நமது ராஜதானியிலே.
‘கவுண்டவுண்ட ராமசாமித் துரையே’ - ஏ! கவுண்டா!! (கவுண்ட வமிசத்தில் உதித்த மன்னா) உண்ட (அறுவகைச் சுவைகளும் பொருந்திய இனிய உணவை எப்போதும் சாப்பிடுகிற) ராமசாமித் துரையே! எல்லாரும் உண்பரேயாயினும் நமது மகாராஜாவுக்கு மாத்திரம் ‘உண்ட’ என்னும் அடைமொழி கொடுத்ததேனோ என்றால், எல்லாரும் உண்பது போலன்று. இவர் தேவர்களைப் போல அரிய உணவுகளை உண்ணும் பாக்கியவான் என்பதைக் குறிப்பிடும் பொருட்டே யென்க.
சின்ன சங்கரன் யமகம் பாடி அரங்கேற்றிய புகழ், கவுண்ட ராஜ்யம் முழுவதிலும் பரவித் தத்தளித்துப் போய்விட்டது. கவுண்டர் சபையில் வந்த வேடிக்கைகளை எல்லாம் மேல் அத்தியாயத்தில் நான் விஸ்தாரமாக எழுதவில்லை. கவுண்ட சபையின் வர்ணனை எனக்கே சலிப்படைந்து போய் விட்டது. படிப்பவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்? அதை உத்தேசித்து அதையே மாகாணி வேலைதான் செய்தேன்.
இப்போது சின்ன சங்கரனுடைய ‘காதல்’ விஷயம் சொல்லப் போகிறேன். சிரத்தையுடன் படிக்க வேண்டும். தேசமாகிய உடலுக்கு வித்துவானே உயிர். ஒரு ஜாதியாகிற கடிகாரத்துக்கு “சாஸ்திரம்” தேர்ந்தவனே ‘வில்’. நாகரிகமாகிய கங்கா நதிக்குக் ‘கவி’யின் உள்ளமே மூல ஊற்று. ஆகவே கவியின் ‘காதல்’ உலகமறியத் தக்கது. சின்ன சங்கரன் தமிழ் தேசத்திலே ஒரு ‘கவி’. இருபது முப்பது வருஷங்களுக்கு முன் இந்த நாட்டில் கவிகளெல்லோரும் சின்ன சங்கரன் மாதிரியாகத்தான் இருந்தார்கள். இப்போதுதான் ஓரிரண்டு பேர் தமிழில் கொஞ்சம் சரியான பாட்டுக்கள் எழுதத் தலைப்பட்டிருப்பதாகக் கேள்வி. அவர்களுடைய பெயர்கூட எனக்குத் தெரியாது. நான் தமிழ் தேசத்துப் பழக்கத்தை விட்டு நெடுநாளாகி விட்டது. (இப்போது வட ஆப்பிரிக்காவிலிருக்கிறேன்).
ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன் நான் தமிழ் நாட்டில் இருந்தபோது அங்கே சின்ன சங்கரனுக்கு மேலே உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த ‘கவி’ நான் பார்த்தது கிடையாது. தேசமோ உலகத்துக்குள்ளே ஏழை தேசமாச்சுதா? பதினாயிரம் ரூபாயிருந்தால் அவன் தமிழ் நாட்டிலே கோடீசுவரன். பத்து வேலி நிலமிருந்தால் அவன் ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்டன். ஒரு ஜமீனிருந்துவிட்டால் அவன் ‘சந்திரவம்சம்’, ‘சூரியவம்சம்’, ‘சனீசுர வம்சம்’, ‘மகாவிஷ்ணுவின் அவதாரம்’, ‘பழைய பன்றி அவதாரத்துக்குப் பக்கத்திலே சேர்க்க வேண்டியது.
இந்தத் தேசத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களெனக் கணக்குச் சொல்கிறார்கள். நான் நாலைந்து பேரைக்கூட பார்த்தது கிடையாது. அது எப்படி வேண்டுமென்றாலும் போகட்டும். ஆனால் இந்த முப்பத்து முக்கோடி தேவர்களிலே எனக்குத் தெரிந்தவரை நம்முடைய மகாவிஷ்ணுவுக்குத்தான் சிரமம் அதிகம். பன்றி விஷ்ணுவின் அவதாரம். ஆமை விஷ்ண்வின் அவதாரம். கவுண்டனூர் ஜமீன்தார் விஷ்ணு அவதாரம். அனிபெஸண்ட் வளர்க்கிற (நாராயணய்யர் இடங்கொடாத) கிருஷ்ணமூர்த்திப் பையன் அதே அவதாரம்.
மொத்தத்தில் மகாவிஷ்ணுவுக்குக் கஷ்டம் அதிகம். இப்படித் தெருவிலே கண்டவர்களையெல்லாம் மூன்று காசுக்காகப் புகழ்ந்து பாடுவது, பெண்களுடைய மூக்கைப் பார்த்தால் உருளைக்கிழங்கைப் போலிருக்கிறது; மோவாய்க்கட்டையைப் பார்த்தால் மாதுளம் பழத்தைப் போலிருக்கிறது; கிழவியுடைய மொட்டைத் தலையைப் பார்த்தால் திருப்பாற்கடலைப் போல் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் காது புளித்துப் போகிற வரையில் வர்ணிப்பது; யமகம், திரிபு, பசுமூத்ர பந்தம், நாக பந்தம், ரத பந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்ப்பந்தங்கள் கட்டி அவற்றை மூடர்களிடம் காட்டி சமர்த்தனென்று மனோராஜ்யம் செய்து கொள்வது – இவைதான் அந்தக் காலத்திலே கவிராயர்கள் செய்த தொழில்.
கவுண்டனூர் ஜமீன்தாரவர்களின் அடைப்பைக்காரன், மந்திரி, நண்பன், ஸ்தல வித்வான் முதலியனவாகிய முத்திருளக் கவுண்டனுக்கு ஒரு பெண் உண்டு. வயது பதினாறு. (இப்போதல்ல, சங்கரன் கதையிலே அவள் வந்து புகுந்த காலத்தில்)
நிறம் கறுப்பு; நேர்த்தியான மைக் கறுப்பு. பெரிய கண்கள், வெட்டுகின்ற புருவம். அதிக ஸ்தூலமுமில்லாமல், மெலிந்து ஏணி போலவுமில்லாமல், இலேசாக உருண்டு, நடுத்தரமான உயரத்துடன் ஒழுங்காக அமைந்திருந்த சரீரம். படபடப்பான பேச்சு. எடுத்த வார்த்தைக்கெல்லாம் கலீரென்று சிரிக்கும் சிரிப்பு. மதுரைச் சீட்டிச் சேலை, டோரியா ரவிக்கை, நீலக் குங்குமப் பொட்டு, காதிலே வயிரத் தோடு, கழுத்திலே வயிர அட்டிகை, கையிலே வயிரக் காப்பு, நகையெல்லாம் வயிரத்திலே, மாணிக்கம் ஒன்றுகூடக் கிடையாது. மேனி முழுதுமே நீலமணி. தலையைச் ‘சொருக்குப் போட்டு அதில் ஜாதி மல்லிகைப்பூ வைத்துக் கொள்வதிலேயே பிரியமுடையவள். கொஞ்சம் குலுங்கிக் குலுங்கி நடப்பாள். காலிலே மெட்டிகள் ‘டணீர்’ ‘டணீர்’ என்றடிக்கும். இவ்வளவு ‘ஷோக்’கான குட்டிக்குப் பெயர் அத்தனை நயமாக வைக்கவில்லை. ‘இருளாயி’ என்று பெயர் வைத்திருந்தார்கள்.
இவள் மேலே சங்கரனுக்குக் காதல் பிறந்து விட்டது. சங்கரனை இதற்கு முன் சரியாக வர்ணித்திருக்கிறேனோ, இல்லையோ! நேரே ஞாபகமில்லை. எனினும் இப்போது அவனுடைய காதல் கதை சொல்லத் தொடங்கும்போது மற்றொரு முறை வர்ணனை எழுதியாக வேண்டியிருக்கிறது.
கறுப்பு நிறம், குள்ள வடிவம், மூன்று விரல் அகலம் நெற்றி. கூடு கட்டின நெஞ்சு, குழிந்த கண்கள், இரத்தமற்ற இதழ்கள், நெரிந்த தொண்டை, பின்னுகிற கால்கள், அரையிலே அழுக்கு மல்வேஷ்டி, மேலே ஒரு அழுக்கான பட்டுக்கரைத் துண்டு. இவ்வளவையும் மீறிக் கொஞ்சம் புத்திக் கூர்மையுடையவன் போல் தோற்றுவிக்கும் முகம்.
இவ்விருவருக்குள்ளே ‘காதல்’ எப்படி ஏற்பட்டதென்பதின் மூலங்கள் எனக்குத் தெரியாது. ரிஷி மூலம், நதி மூலம் விசாரிக்கப்படாது என்பார்கள்; அதாவது சின்ன ஆரம்பங்களிலிருந்து பெரிய விளைவுகள் ஏற்படும் என்று அர்த்தம். காதல் சமாச்சாரமும் அப்படித்தான். ஒரு பார்வை, ஒரு தட்டு, ஒரே பார்வை, ஒரே தட்டாக முடிந்துவிடும். ஒரு பேச்சு, ஒரு சிரிப்பு மரண பரியந்தம் நீங்காத பந்தமேற்படுத்திவிடும். ஆனால் இருளாயிக்குச் சங்கரன் விஷயத்தில் அப்படி நிலைத்த காதல் இருந்ததென்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.
சங்கரனுக்கு மாத்திரம் அவளிடம் பரிபூரண மோகம் ஏற்பட்டிருக்கிறது. அது மரணத்திலே போய் நிற்கவில்லை. ஏறக்குறைய மரணத்திலே கொண்டு விட்டுவிடத் தெரிந்தது.
முத்திருளக் கவுண்டனுடைய தகப்பன் ஒரு தொண்டுக் கிழவன். கண் இல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தான். அவனை மனித விவகாரங்களில்லாத ஒரு தனித் தீவாந்திரத்திலே கொண்டு விட்டு இரண்டு காணி நிலம் மாத்திரம் கொடுத்துப் பயிரிட்டுக் கொள்ளும்படி சொன்னால் அதாவது, கண்களையும் திருப்பிக் கொடுத்த பிறகு – அந்த இரண்டு காணிகளில் முக்கால் காணியை வெற்றிலைத் தோட்டமாக்குவான். ஒரு முழுக் காணியிலே புகையிலைத் தோட்டம் போட்டு விடுவான். மிஞ்சின கால் காணியிலேதான் நெல் விதைப்பான் – பாக்கு மரம் வைத்தது போக, காய்கறிகள் கூட அவசியமில்லை. அந்த இரண்டு காணிக்கு ஒரு சின்னக் குளம் கொடுக்க மாட்டார்களா? அதில் மீன்கள், நண்டு அகப்படாதா? ஒரு பார்வை பார்த்துக் கொள்வான்.
கிழ ‘திருதராஷ்டிர’க் கவுண்டனுக்குப் புகையிலையிலே எவ்வளவு பிரியமோ அவ்வளவு பிரியம் கம்பராமாயணத்திலே யுமுண்டு.
யாரேனும் வந்து கம்ப ராமாயணத்திலே ஒரு பாட்டு வாசித்து அர்த்தம் சொல்லும்படி கேட்டால் சரியாகச் சொல்லுவான். அவனும் கவுண்டனூர்த் தமிழ்ப் புலவர்களிலே ஒருவன்.
ஆனால் சங்கரன் காலத்துப் புலவர்களைக் காட்டிலும் அவன் விசேஷந்தான். அவனுக்கு வெறொன்றுமில்லாவிட்டாலும் ஒரு பெரிய காவியத்துக்குப் பொருள் சரியாகச் சொல்லத் தெரியும். பின்னிட்ட புலவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. பாட்டுக் கட்டத்தான் தெரியும்.
முத்திருளக் கவுண்டனுடைய நட்புச் சங்கரனுக்கு ருசி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, கிழக் கவுண்டனிடம் கம்பராமாயணம் கேட்க ஆரம்பித்தான். மாலைதோறும் பள்ளிக்கூடம் விட்டவுடனேயே முத்திருளக் கவுண்டன் வீட்டுக்குப் போய்ப்பாடல் கேட்கத் தவறுவதில்லை. இரவு எட்டு மணிக்குத்தான் திரும்பி வருவான். ‘தாத்தனிடம் அர்த்தம் கேக்க வருது அய்யர் வீட்டுப் பிள்ளை’ என்று இருளாயிக்குச் சங்கரனிடம் கொஞ்சம் பிரியமேற்பட்டது.
அந்தப் பிரியம் நாளுக்குநாள் பலவிதங்களில் பக்குவமடையலாயிற்று. ராமாயண பாடத்துக்குப் போன இடத்திலே சங்கரன் ‘மன்மதக் கலை’ படிக்கத் தொடங்கினான். கிழவனுக்குக் குருட்டு விழிக்குக்கூட விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரகாசமாய் விட்டது.
ராமாயணக் கதை குறைகிறது. சிரிப்பும் வேடிக்கைக் கதையும் அதிகப்படுகிறது; கிழவனுக்கு அர்த்தமாகாதா? வீட்டில் அந்தப் பெண்ணைத் தவிர வேறு ஸ்திரீயே கிடையாது. முத்திருளக் கவுண்டன் மனைவி, கிழவன் மனைவி, இருவரும் செத்து நெடுங்காலமாய் விட்டது.
இருளாயியும் சங்கரனும் சிநேகமாக இருப்பதில் கிழவனுக்கு அதிருப்தியே கிடையாது. “அய்யர் வீட்டுப் பிள்ளை! ஐயோ பாவம்! அதுக்கு என்ன சூது தெரியுமா? வாது தெரியுமா? குழந்தைகள்தானே, விளையாடிக் கொண்டிருக்கட்டும். அதிலே தப்பிதம் வராது” என்று கிழவன் தனக்குத்தானே மனதறிந்த பொய் சொல்லிக் கொண்டு சும்மா இருந்து விடுவான். ‘தப்பிதம்’ நடந்தாலும் குடி முழுகிப் போய்விடாது என்பது ‘திருதராஷ்டிர’க் கவுண்டனுடைய தாத்பர்யம்.
இருளாயிக்குப் பதினாறு வயது என்று சொன்னோம். அப்போது சங்கரனுக்கு வயது பதினேழு. ‘ஜோடி’ சரியாகவே இராது.
ஆனால் ஐரோப்பியர் சொல்வது போல, மன்மதன் குருட்டுத் தெய்வம் (கண்ணில்லாமல், குறி பார்த்து அம்புகள் போடுவது கஷ்டம். ஆனால் தெய்வத்துக்கு எதுவும் பெரிதில்லையல்லவா? மேலும் கவிகளுக்கும் புராணக் காரர்களுக்கும் கூடப் பெரும்பாலும் கண் விஷயம் அந்த மன்மதனைப் போலவேதான்)
எப்படியோ அவர்களிடையே காதல் செடி பெரிதாக வளர்ந்து பூப்பூத்துக் காய் காய்த்துப் பழம் பழுக்கத் தொடங்கிவிட்டது.
பழங்களென்றால் யாரும் தப்பெண்ணங் கொண்டு விட வேண்டாம். இவர்களுடைய காதல் செடியிலே ஏராளமாகப் பழுத்துத் தொங்கிய பழங்கல் சங்கரன் செய்த கவிகளைத் தவிர வேறொன்றுமில்லை. இருளாயி விஷயமாகச் சங்கரன் சுமார் 2000 கவிகள் வரை பாடித் தீர்த்து விட்டான்.
இப்படியிருக்கையில் இவ்விருவரின் சுகத்துக்கு இடையூறான் ஒரு செய்தி வந்து விட்டது. இவர்களுடைய காதலாகிய மரத்திலே இடிபோல் விழுந்த செய்தி.
முற்றுப்பெறவில்லை.