பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

672

இந்தியா

கைப்பற்றி, அங்கு நிருவாகம் செய்த தோஸ்து அலியின் மருமகனான சந்தா சாகேபைச் சிறைப்படுத்தினார்கள். தோஸ்து அலியின் மகனான சப்தர் அலி கொலை செய்யப்பட்டார். நிஜாம்-உல்-மல்க் தெற்கே வந்து தம்முடைய பிரபுக்களில் ஒருவரான அன்வர் உத்தீனைக் கருநாடக (ஆர்க்காடு) நவாபாக நியமித்தார்.

1748-ல் அசப்ஜா நிஜாம் இறந்ததும் அன்வர், பிரபுக்களின் பகைமையை ஏற்படுத்திக் கொண்டார். சூழ்நிலையில் கலவரம் ஏற்பட்டது. ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கமுடையவராயிருந்தனர். இவர்களுக்குள் பெரும் போட்டி ஏற்பட்டது.

ஆங்கில-பிரெஞ்சுப்போட்டி : மர்த்தானுக்குப் பிறகு டூமா (Dumas) புதுச்சேரியில் கவர்னராக ஆட்சி புரிந்தார். திருச்சிராப்பள்ளியில் அதிகாரம் பெற்று ஆண்டுவந்த சந்தா சாகேபின் நட்பைப்பெற்று, அவர் மூலம் காரைக்காலைப் பெற்றார். 1741-ல் டூப்ளே கவர்னரானார். அவர் புத்தி நுட்பமும் அரச தந்திரமும் மிகுந்தவர். பலமிழந்த இந்திய மன்னர்களை வசப்படுத்திப் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கைப் பரப்பவும், இதற்கு விரோதமாயிருந்த ஆங்கிலேயரை அழிக்கவும் கருதினார். ஐரோப்பாவில் பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் யுத்தம் தொடங்கியது. அது இந்தியாவுக்கும் பரவியது. லபோர்தனே என்னும் பிரெஞ்சுக் கப்பற் படைத்தலைவர் 1746-ல் பாதுகாப்பற்ற நிலையிலிருந்த சென்னையைக் கைப்பற்றினார். டூப்ளேயை எதிர்க்கக் கருநாடக நவாபின் சேனை அனுப்பப்பட்டது. அது அடையாற்றினருகே தோல்வியடைந்தது. 1748-ல் ஐரோப்பாவில் சமாதானம் ஏற்பட்டது. சென்னை ஆங்கிலேயருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இச்சண்டையில் ஐரோப்பியப் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொண்ட சேனையின் பலம் வெளிப்பட்டது. நிஜாம்-உல்-முல்க் இறந்ததும் பட்டத்துக்குப் போட்டி ஏற்பட்டது என்பதும் நாசிர் ஜங்கின் கட்சிக்கு உதவியளித்தனர் என்பதும் முன்னரே கூறப்பட்டுள்ளன. சந்தா சாகேப் முசபருக்கு உதவி புரிந்தார். இவ்விருவரும் பிரெஞ்சுக்காரரின் உதவியைப் பெற்று, ஆம்பூர்ப் போரில் அன்வர்-உத்தீனைக் கொன்றார்கள். அன்வரின் புதல்வன் முகம்மது அலி திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் மறைந்திருந்தார். பின் முசபர் ஆர்க்காட்டைக் கைப்பற்றிக்கொண்டார். தம்மையே நிஜாமென்று சொல்லிக்கொண்டு, சந்தா சாகேபைக் கருநாடக நவாபாக நியமித்தார். டூப்ளேக்குப் புதுச்சேரிக்கருகிலுள்ள கிராமங்களையும் மசூலிப்பட்டினத்தையும் கொடுத்து அவரது நட்பைப் பெற்றார். ஆங்கிலேயரும் தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடு செய்துவந்தனர். தஞ்சாவூர் மன்னனிடமிருந்து கொள்ளிட சங்கமத்திலுள்ள தேவிக்கோட்டையைப் பெற்று முகம்மது அலிக்கு உதவி செய்வதாக வாக்களித்தார்கள்.

நாசிர் ஜங் தம்முடைய படையோடு கருநாடகத்துக்கு வந்தார். கடப்பை, கர்நூல், காவலூர் நவாபுகளால் ஏற்பட்ட சண்டையில் நாசிர் ஜங் கொல்லப்பட்டார். முஜபர் பிரெஞ்சுக்காரரின் உதவியால் நிஜாமானார். தமக்குதவியாக புஸ்ஸி என்ற தளகர்த்தரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். போகும் வழியில் அவர் கொல்லப்பட்டார். சலாபத் ஜங் நிஜாமானார். அவர் புஸ்ஸிக்கு வடசர்க்காரை அளித்தமை முன்னரே கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் முகம்மது அலியைக் காப்பாற்ற முன் வந்தனர். சந்தாசாகேப் திருச்சிராப்பள்ளிக் கோட்டையை முற்றுகையிட்டார். சென்னையில் சாதாரண உத்தியோகத்தில் அமர்ந்திருந்த ராபர்ட் கிளைவ் என்பவரின் யோசனை தான் வெற்றி அளித்தது. கிளைவ் ஆர்க்காட்டைக் கைப்பற்றி, அதை மீட்க வந்த சந்தா சாகேபின் படையைச் சிதற அடித்தார். ஆங்கிலேயப் படை ஒன்று திருச்சியை அடைந்தது. குத்தியைப் பரிபாலித்த முராரி ராவும் மைசூர் மன்னரும் உதவியளித்தார்கள். திருச்சிராப்பள்ளியை ஆங்கிலேயர் கைபபற்றியதும் சந்தா சாகேப் தஞ்சாவூரில் சரண் புகுந்தார். அங்குக் கொல்லப்பட்டார். 1751 முதல் 1753 வரை மூன்றாண்டுகள் முற்றுகை நடைபெற்றது. பிறகு போட்டியில்லாமல் முகம்மது அலி நவாப் ஆனார்.

பிரெஞ்சு வியாபாரக் கம்பெனியின் தலைவரான கோதயூ (Godehew) இந்தியாவுக்கு வந்தார். அவர் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் யுத்தம் செய்யாமல் தத்தம் வியாபாரத்தையே கவனித்து வரவேண்டுமென்று வற்புறுத்தி 1754-ல் சமாதானம் செய்தார். டூப்ளேயின் மனோரதம் வீணாயிற்று. அவர் பிரான்ஸ் சென்று, புகழ் இழந்து, வறுமையால் பீடிக்கப்பட்டு இறந்தார். அவர் பிரெஞ்சுக்காரரின் கௌரவத்தை நிலை நிறுத்தியவர். எனினும் அதைப் பாராட்டிப் பிரெஞ்சு அரசாங்கத்தார் அவரைக் கௌரவிக்கவில்லை.

ஆங்கிலேயர் உதவிபெற்று முகம்மது அலி மதுரை, திருநெல்வேலி நாடுகளைச் சேர்த்துக்கொண்டார். கோதயூவின் முயற்சி வீணாயிற்று. இரு திறத்தார்க்கும் போர் நிற்கவில்லை. ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் தொடங்கியது. இந்தியாவிலும் போர் நடந்தது. இந்த ஏழாண்டுகளிலும் வங்காளத்தில்தான் கிளைவ் இப்போரை நடத்தினார். அப்போது வட சர்க்கார் ஜில்லாக்களைப் பிரெஞ்சுக்காரரிடமிருந்து கவர்ந்து, அவற்றை ஆங்கில ஆட்சிக்கு உட்படுத்தினார். தெற்கில் லாலி (Lally) என்ற பிரெஞ்சு தளகர்த்தர் கூடலூருக்கருகில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்துச் சென்னையை முற்றுகையிட்டார். அது நிறைவேறவில்லை. ஆங்கிலச் சேனாபதியான கர்னல் கூட் வந்தவாசியில் லாலியைத் தோற்கடித்துப் புதுச்சேரியையும் செஞ்சியையும் பிடித்துக்கொண்டார். முடிவில் சமாதானம் ஏற்பட்டது. புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர் மீண்டும் பெற்றனர். இதற்குப் பின் பிரெஞ்சுக்காரரின் போட்டி முடிவுற்றது. கப்பற்படைப் பலமின்மையாலும், தாய் நாட்டரசாங்கத்தாரின் உதவியின்மையாலும், இந்தியாவில் பிரெஞ்சு அதிகாரிகட்கும் தளபதி கட்கும் ஒற்றுமையின்மையாலும் இந்தியாவில் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்குக் குன்றியது.

1762-1800-ல் தக்கணத்தின் நிலைமை : பானிப்பட்டு யுத்தத்துக்குப்பின் மகாராஷ்டிரர்கள் தாமிழந்த பலத்தை மீண்டும் பெறலானார்கள். 1761-1772 வரை ஆண்ட மாதவ ராவ் பேஷ்வாவுக்கும் அவர் சிறிய தந்தை இரகுநாத ராவுக்கும் போட்டி ஏற்பட்டது. மாதவ ராவ் மிக்க திறமை வாய்ந்தவர். மைசூரில் வெற்றி பெற்று, ராஜபுத்திர நாடுகளின் மீதும், ஜாட்டுக்களின் நாட்டின்மீதும், ரோஹில்லர் நாட்டின் மீதும் படை யெடுத்தார். அவர் பெருவெற்றி பெற்றுத் தம்மைப் பானிப்பட்டில் அவமானப்படுத்திய ரோஹில்லர் மீது பழிக்குப்பழி வாங்கி, ஆங்கிலேயரின் பாதுகாப்பிலிருந்த ஷாஆலம் சக்கரவர்த்தியை அவர்களிடமிருந்து மீட்டு அவரை டெல்லிக்கு வரச் செய்தார். பெரு வீரரான மாதவராவ் இளவயதிலேயே இறந்தார். அவருக்குப்பின் பேஷ்வா பதவியை வகித்த நாராயணராவ் சில மாதங்களுக்குள் துரோகிகள் சிலரால் கொல்லப்-