பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

671

இந்தியா

செய்யப்பட்டது. 1687-ல் சென்னை நகர பரிபாலன சபை தோன்றியது. மக்களின் தொகையும் அதிகரித்தது. ஜெரல்டு அஞ்சியரின் (Gerald Aungier) முயற்சியால் பம்பாயும் செல்வத்தில் அபிவிருத்தியடைந்தது. மக்கள் தொகையும் அதிகரித்தது. வில்லியம் ஹீத் (William Heath) சிட்டகாங் நகரைத் தாக்கி மொகலாயரால் தோல்வியடைந்தார். தங்கள் கப்பல்களை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் காரணமாக மொகலாயர் சூரத்திலுள்ள ஆங்கிலேயர்களைச் சிறைப்படுத்திப் பம்பாய் நகரைக் கைப்பற்றினார். 1690-ல் நடந்த சமாதானத்திற்குப் பிறகு ஆங்கிலேயரின் செல்வாக்கும் பலமும் உயர்ந்தன. டச்சுக்காரரின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.

18ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் மகாராஷ்டிர சாம்ராச்சியம் : சாஹு சத்திரபதி (1713-1720) பாலாஜி விசுவநாதரைத் தமக்குப் பேஷ்வாவாக அமைத்துக் கொண்டார். அதுமுதல் மன்னர்களின் அதிகாரம் குன்றியது. பேஷ்வாக்களே அரசியலை மேற்கொண்டு நடத்தி வந்தார்கள். பாலாஜி மகாராஷ்டிரரின் ஒற்றுமையைப் பலப்படுத்தினார். சௌத் வரி வசூலிக்கும் உரிமையை மொகலாயரிடமிருந்து பெற்றார். பாஜிராவ் (1720-40) இரண்டாவது பேஷ்வா. இவர் மிக்க திறமை வாய்ந்தவர். மொகலாய ஆட்சியை அடிப்படையில் தாக்கி அழிப்பதை நோக்கமாகக் கொண்டார். ஐதராபாத் நிஜாமைப் போபாலுக்கருகில் முறியடித்தார். கூர்ச்சரம், மாளவம், பேரார், நாகபுரி முதலியவற்றைக் கைப்பற்றி, ஆங்காங்கு மகாராஷ்டிரர்களை ஆட்சியில் அமர்த்தினார். கெயிக்வார், ஹோல்கர், சிந்தியா, போன்சலே என்னும் வமிசங்கள் தோன்றி ஆளத்தொடங்கின. மகாராஷ்டிரர் அயோத்தியையும், டெல்லிக்கருகிலுள்ள பிரதேசங்களையும் கொள்ளையடித்தனர். கருநாடகம், வங்காளம் முதலிய நாடுகளையும் மகாராஷ்டிரப் படைகள் கொள்ளையடித்து வந்தன. போர்ச்சுக்கேசியரின் வியாபார ஸ்தலமாகிய பேஸேன் என்னும் நகரையும் கைப்பற்றினர். மூன்றாம் பேஷ்வா பாஜிராவ் (1740-1761) இவர் காலத்திலும் மொகலாயர் பல இடங்களில் தாக்கப்பட்டனர். நாதர்ஷா, அகமத்ஷா அப்தாலி இவர்களின் படையெடுப்புக்குப் பின் மொகலாயரின் ஆட்சி மிகக் குன்றியது. மகாராஷ்டிரரின் செல்வாக்கின்கீழ் அவர்கள் முற்றிலும் ஒடுங்கிவிட்டனர். பஞ்சாபிலுள்ள மகாராஷ்டிரர் பாஜிராவின் உதவி பெற்று, அங்குத் தமது வீரத்தைக் காட்டி வந்தனர். 1759-ல் அகமத்ஷா அப்தாலி மீண்டும் இந்தியாவுக்கு வந்து ரோஹில்லரின் உதவியையும் அயோத்தி நவாபின் உதவியையும் பெற்று மகாராஷ்டிரரை எதிர்த்தார். 1761-ல் பானிப்பட்டில் சதாசிவராவின் தலைமையின்கீழ்ப் போர்புரிந்த மகாராஷ்டிர வீரர்கள் அகமத்ஷா அப்தாலியின் படையால் தோல்வியடைந்தனர். எனினும் இந்த வெற்றியால் முஸ்லிம்களின் ஆட்சிக்கு நன்மை ஏற்படவில்லை. மகாராஷ்டிரரின் பலம் சிறிது குன்றியது. எனினும் அவர்களின் ஆட்சிக்கு முடிவு வரவில்லை. 50 ஆண்டுகட்குப்பின் ஆங்கிலேயர் செல்வாக்கு ஓங்கியபின் தான் மகாராஷ்டிரர் பலம் ஒடுங்கி, அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஐதராபாத் இராச்சியம் : டெல்லியில் பாரூக்கியர் ஆட்சி புரிகையில் ஷீயா மதத்தைச் சேர்ந்த சையது சகோதரர்கள் இருவர் அரசியலில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தனர். இவர்களுக்கு விரோதமாக சீன்குலீச்கான், அசப்ஜா, நிஜாம்-உல்-முல்க் என்பவரின் தலைமையின்கீழ் ஒரு மொகலாயர் கட்சி தோன்றியது. இவர் மகாராஷ்டிரரின் முன்னேற்றத்தை வெறுத்தார். இவர் மாளவத்தின் அதிகாரியாக இருந்த போது தக்கணத்தைக் கைப்பற்றித் தம் பகைவர்களை முறியடித்தார். டெல்லியில் பாரூக்கியர் கொல்லப்பட்டபின் சையது சகோதரர்கள் இரு சிறுவர்களைச் சக்கரவர்த்திகளாக்கிப் பின் அவர்களைக் கொன்று முகம்மது ஷாவுக்குப் பட்டம் கட்டினார்கள். சையது சகோதரர்கள் இறந்ததும் முகம்மது ஷாவின் அதிகாரம் நிலைத்தது. எனினும் அவர் திறமையற்றவராக இருந்ததால் நிஜாம் வெறுப்பினால் டெல்லியில் தமக்கிருந்த பதவியைக் கைவிட்டு 1723-ல் தக்கணம் வந்து சேர்ந்தார். கான்தேசத்தின் அதிகாரியான முபாரிஸ்கான் நிஜாமுக்கு டெல்லியில் இருந்த பகைவர்களின் தூண்டுதலின்பேரில், நிஜாமை எதிர்த்தார். நிஜாம் முபாரிஸ்கானைப் போரில் கொன்று, பேரார் மாகாணத்தைத் தம் வயப்படுத்திக் கொண்டு, தக்கணத்தில் தமது ஆட்சியை நிலைநாட்டினார். இதுதான் ஐதராபாத் சமஸ்தானத்தின் ஆரம்பமாகும். சாஹுவுக்குப் போட்டியாகத் தோன்றியவர்களுக்குத் துணைபுரிய முற்பட்டு, அதையே நிமித்தமாக்கிக்கொண்டு மகாராஷ்டிரரை எதிர்த்துத் துன்புறுத்தி வந்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. ஆகவே அவர் பாஜிராவுடன் சமாதானம் செய்துகொண்டார். பாஜிராவ் டெல்லியின்மேல் படையெடுத்துச் செல்கையில், நிஜாம் சக்கரவர்த்திக்கு உதவியாகச் சென்று, போபாலுக்கருகே தோல்வியடைந்து, பேஷ்வாவோடு சமாதானம் செய்துகொண்டார். 1748-ல் நிஜாம் மரணமடைந்தார். இரண்டாம் மகன் நாசிர் ஜங்குக்கும், பேரனான முஜபர் ஜங்குக்கும் பட்டத்தைப் பெறும் உரிமைக்காகப் போட்டி ஏற்பட்டது. ஆங்கிலேயர் நாசிர் ஜங்குக்கு உதவியாக இருந்தனர். முஜபர் பிரெஞ்சுக்காரரின் உதவியைப் பெற்றார். நாசிர், முசபரைச் சிறை செய்தார். எனினும் பகைவனொருவனால் குத்திக் கொல்லப்பட்டார். பிறகு முசபர் நிஜாம் பதவியைப் பெற்ற போதிலும் பிரெஞ்சுக்காரரே உண்மையில் அரசியலை நிருவகித்து வந்தனர். சில குறுநில மன்னரால் முஜபர் கொல்லப்பட்டபின் நாசிரின் தம்பி சலாபத் ஜங் பிரெஞ்சுக்காரரின் உதவியால் அரசைப் பெற்றார். அவர் சேனைக்குப் பிரெஞ்சுக்காரர் சிறந்த பயிற்சியை அளித்தனர். அரசியல் நிலைமையும் அவர்களின் உதவியால் திருந்தியது. கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா முதலிய ஜில்லாக்களடங்கிய வடசர்க்கார் பகுதி நிஜாமால் பிரெஞ்சுக்காரருக்குக் கொடுக்கப்பட்டது. சலாபத்தின் தம்பி நிஜாம் அலி, உத்கீர் என்னுமிடத்தில் மகாராஷ்டிரருடன் போர்புரிந்து தோல்வியடைந்தார். நிஜாம் அலி ராய்ச்சூரைக் கைப்பற்றிப் பூனாவையும் பிடிப்பதற்காகச் செல்கையில் மகாராஷ்டிரரால் ஏற்பட்ட இன்னல்களைப் பொறுக்க முடியாமல், அவர்களோடு சமாதானம் செய்துகொண்டார். பிறகு, தம் தமையன் சலபத்தைச் சிறையிலிட்டுத் தாமே 1762-ல் பட்டமேறினார். டெல்லி சக்கரவர்த்தி ஷாஆலம் அவரைத் தக்கணத்தின் அதிபராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு இரண்டாம் ஆசப் ஜங் நிஜாம்-உல்-மல்க் என்னும் பட்டத்தையும் அளித்தார்.

தென்னாட்டின் நிலைமை : கன்னடப்பிரதேசத்தின் பெரும்பகுதி பேஷ்வாவின் அமலிலிருந்தது. சிரா, சவனூர், கர்நூல், கடப்பை என்னும் பகுதிகளை ஆண்ட நவாபுகளைப் பேஷ்வா அடக்கி வைத்தனர்.

ஆர்க்காடு நவாப் தோஸ்து அலி 1740-ல் மகாராஷ்டிரரால் முறியடித்துக் கொல்லப்பட்டார். பின்பு மகாராஷ்டிரர் திருச்சிராப்பள்ளிக்- கோட்டையைக்