பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 11
36.
ஞாலத்து முதலே! மக்கள் நன்னிலை வாழ்வுத் தாயே!
கோலத்து வரியே! உன்னைக் கொடுமொழிசொல்வார் கொண்ட
தாலத்துப் போகச் செய்யும் தனிமகன் வறுமை யேற்றுச்
சேலத்துள் வாழ்வான் கண்டு செம்மைசேர் சீலத் தாயே!
37.
ஞிமிறுநான் மலர்நீ ஊரும் எறும்புநான் கன்னல் நீயே
தமிழ்நெஞ்சக் கிழிஞல் நான்நீ தனிமுத்தா யதனுள் வாழ்வாய்
கமழ்நறு மாரம்நீ; என் ‘ கவி ’மன மாரக் கல்லே!
அமிழ்தெழு பரவைநீ நான் அதிலுறு மீனந் தாயே!
38.
ஞெமுக்கிடு மிடுக்கண்பட்ட ஏழையன் வறுமை யென்னும்
இமிழ்க்கிடு மாழி நீந்த வின்றமிழ்ப் படகை யாடா
தமுக்குவை; கரையே றிப்போய் ஆக்குந வாற்றிமீட்டே
உமக்கொளி மண்டு நீண்ட உயர்புகழ் சேர்ப்பன் காணாய்!
39.
ஞொள்கினைப் பெயரின்று! ஞாயிறு போந்து திங்கள்
நள்ளிர வோட்ட வாடும் வகையெனப் பண்டு சூழ்ந்த
தெள்புகழ் அஃகி ஈண்டுத் தண்ணொளி வந்த தெல்லாம்
வள்ளண்மை யில்லா வுன்றன் வகையென எண்ணிக் காப்பாய்!
40.
தனித்தகை மொழியே! இந்தத் தரையில்வாழ் மக்கட் கெல்லாம்
இனித்தநற் பொருளே! சொல்லின் எளிமைசேர் அழகே! இன்பக்
கனித்தமிழ் மொழிகூ ரன்னாய்! கடிதமிழ் கற்குங் கால்முன்
னினித்துப்பின் தீமை சேர்க்கும் முரண்பாடு கொண்டோய் வாழி!
41.
தாவில்மன் புகழைச் சேர்ப்பேன்; தனித்தமிழ் தமிழ்என் றார்ப்பேன்
பாவில்நன் கருத்தைச் சொல்லிப் பாரினுக் குதவி யன்பு
தூவிய நிலையில் வாழக் குறிக்கொண்டு வாழுங் காலை
மேவிலா தென்றன் போக்கில் மிடிசேர்த்தாய் தாயே வாழி!
42.
திரும்பிய திசைகள் தோறுந் தீந்தமிழ் பேசல் வேண்டும்
விரும்பிய கருத்தைக் கூறச் செந்தமிழ்ச் சொல்லே வேண்டும்
கரும்புதீஞ் சுவையே! வாழ்வின் கதிரொளி! இன்பம் யாண்டும்
அரும்பிய வாழ்வு வேண்டு மனத்தினை வாழ வைப்பாய்!