இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 35
19 தமிழில் கற்க முன்வருக!
பழக்குலை கோதும் கிளிக்குழாம் அன்ன
பசுந்தமிழ்த்தீம்
பழக்குலை உண்டிட முன்வரல் வேண்டும்
தமிழ் இளையோர்!
சழக்குளங் கொண்டவர் நாணும் படிக்குடன்
நண்ணியொன்றாய்
முழக்குக அன்னார் செவிப்பறை யில் “தமிழ்
வேண்டு” மென்றே!
-1963
20 தமிழ் உழவு செய்க !
எழுகதமிழ் மங்கையரே! நல்லிளைஞீர் உங்கள்
இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும்; முன்னே
தொழுகதமிழ் அன்னையினை; துலங்குகநும் ஆற்றல்!
துணிவுறவே ஊரூராய்த் தெருத் தெருவாய்ச் சென்றே
உழுகநறுஞ் சொல்லாலே! ஊன்றுகசெந் தமிழை;
உணர்வுமழை பொழிவிக்க; எண்ணஎரு ஊழ்க்க!
செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க! பின்னர்
செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றவழி செய்மே!
-1963