பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 63
39
தூயதமிழ் எழுதாத
இதழ்களைப் பொசுக்குங்கள்
ஆங்கிலத்தில் வடமொழியில் பிழையொன்று வரக்கண்டால்
அதைப்பொறுக்காப் பார்ப்பனர்தாம் அவர்நடத்தும்
தீங்கான தாள்களிலும் கதைகளிலும் தமிழ்க்கொலையை
நாள்தோறும் விடாப்பிடியாய்ச் செய்கின் றார்கள்!
ஈங்கிந்தத் தமிழர்களும் எதற்காகத் தாய்மொழியைத்
தாம்நடத்தும் இதழ்களில் இழிவு செய்வார்?
தூங்காதீர் தமிழர்களே! மொழியிழிவே இனஇழிவாம்!
முதன்முதலில் இதழ்ப்புரட்சி தொடங்கு வீரே!
ஏயதமிழ் வளர்க்கின்ற மாணவரீர்! ஆசிரியப்
பெருமாண்பீர்! எந்தமிழ்த்தாய் தந்தை யர்க்கே
சேயவர்தாம் நீவிரெனின் இதழ்களிலே தமிழ்நலத்தைச்
சிதைக்கின்ற சிறுமையினைப் பொறுக்க லாமோ?
தூயதமிழ் எழுதாத இதழொன்று தமிழகத்தின்
கடைகளிலே எழில்கொழிக்கத் தொங்கு மாயின்
போயதனைப் பறித்தெடுத்துக் கிழித்தொருங்கே புலங்குவித்துப்
புடைசூழ்ந்து தீமூட்டிப் பொசுக்கு வீரே!
-1974