பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 65
41 தமிழ்மொழி வாழ்க !
எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் - என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!
முப்படி நிலையில் முதற்படி தமிழ்ப்படி!
முறைப்படி அதன் நலம் வேண்டும்! - முழு
முயற்சியும் அதற்கிடல் வேண்டும்!
தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும்!
தாழ்நிலை இழிவுகள் மாறும்! - நம்
தலைவிலை எனின் - தரல் வேண்டும்!
தமிழின உரிமையே தமிழ்நில உரிமை
தருமெனில் மறுப்புரை உண்டோ? - இத்
தலைமுறைக்(கு) உழைப்பு(பு) - அது வன்றோ?
தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க!
தமிழ்மொழி வாழ்க - வென் றுரைப்போம்! - அதால்
தமிழினம் மலர்க - வென் றழைப்போம்!
தமிழினம் வாழ்க! தமிழினம் வாழ்க
தமிழினம் வாழ்க - வென்று ரைப்போம் - அதில்
தமிழ்நிலம் தழைக்க - வென்றுழைப்போம்!
எப்படி யேனும் இத்தமி ழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும்! - என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!
-1975