66 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
42 தமிழ் முழக்கஞ் செய்க !
தமிழரெல்லாம் ‘தமிழ்’ என்னும் ஒருகூட் டுக்குள்
தமையிணைத்துக் கொளல்வேண்டும்; தாம்தாம் கொண்ட
உமிழுநிலைப் பிறப்புக்கும் வேற்று மைக்கும்
உளமொப்பக் கூடாது; தமிழர் ஒன்றே!
கமழுமின வொற்றுமையை மொழியால் பேணிக்
காத்திடுதல் அன்றோயிவ் வியற்கைக் கொள்கை!
இமிழ்கடல்சூழ் உலகெங்கும் போய்வாழ்ந் தாலும்
எந்தமிழர் தமிழ்மொழியால் இணைந்து கொள்க!
ஆங்கிலத்தைப் பிறமொழியைத் தமிழ்கல் லாத
அயலவர்தம் பாங்கில்உரை யாடற் கன்றி,
ஈங்கினிமேல் தம்மவர்க்குள் பயன்படுத்தல்
இல்லையெனும் உறுதிமொழி தமிழர் கொள்க!
தூங்கியதால், மொழிதாழ்ந்தே இனத்தைத் தாழ்த்தும்
தொலையாத இடர்ப்பாடு போதும் என்க!
தேங்குவது கூடாது! பிறர்போல் நாமும்
தீங்கின்றித் தாய்மொழியைக் காத்தல் வேண்டும்.
தமிழர்க்குத் தமிழே தாய் மொழியாம்; அந்தத்
தாய்மொழியை நாம் துறந்தால் தமிழர் ஆமோ?
தமிழின்றித் தமிழினமும் இல்லை யன்றோ?
தமிழ்பற்றிக் கவலாதார் எண்ணிப் பார்க்க!
தமிழர்க்குப் பிறமொழியைக் கற்குந் தேவை
தள்ளாத தேவையெனில் கற்க! இந்தத்
தமிழினத்துள் தமிழ்நிலத்துள் தமிழ்கல் லாத
தமிழர்களை அயலார்க்கே பிறந்தார் என்க!
கட்சிகளைத் தவிர்த்திடுக! 'சாதி' என்னும்
கண்மூடிப் பிரிவுகளைப் புதைத்தொ ழிக்க!
எச்சமயத் தும்'தமிழர்' என்றே தம்மின்
இனப்பெயரை மொழியாலே தெரியச் சொல்க!
நச்சுயிர்கள் போலினத்தை அழிக்கும் மூட
நயவஞ்சக் கொள்கைகளை விழாக்கள் தம்மை -
எச்சிலிலை ஈக்களைப்போல் மொய்த்துக் கேட்கும் ,
'இதிகாசம்' 'புராண'த்தைத் - தவிர்த்தல் செய்க!