பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 67
தமிழ்மகளிர் செந்தமிழ்மேல் பற்றுக் கொண்ட
தமிழரையே மணஞ்செய்க! இளைஞர் தாமும்
தமிழ்நலஞ்செய் பெண்டிரையே மணந்து கொள்க!
தமிழறியார் தமிழ்க்குநலஞ் செய்யார் அன்றோ?
தமிழ்நலத்தைத் காவாத எழுத்தா ளர்கள்
தாமெழுதும் நூற்களையும் தவிர்த்தல் செய்க!
நமிலுயர்வு தாழ்வகற்றி ஒருங்கி ணைக்கும்
நல்லறிஞர் உரைகளையே போற்றிக் கொள்க!
வானொலியில் திரைப்படத்தில் தமிழ்பே ணாத
வரலாறு, கதை, பாடல் வருதல் கண்டால்,
கூனொலியைக் கேட்காமல், படம்பார்க் காமல்
கொள்கைக்குப் போரிடுக! தமிழைக் காக்க!
தேனளிக்குஞ் சுவையினையும் எள்ளல் செய்யும்
செந்தமிழின் தனிச்சுவையைப் பழிக்கு மாறு
வீணொலிக்கும் இரைச்சலுக்கும் பொழுதைப் போக்கும்
வீணர்தம் போக்கிற்குத் தடையாய் நிற்க!
தமிழ்மொழியைத் தாழ்த்துகின்ற வரலா றெல்லாம்
தவிடுபொடி யாக்கிடுக! தமிழர் பாங்கில்
தமிழ்நலத்தைப் பேணாத தலைவர் தம்மைத்
தமிழ்நிலத்துப் புறக்கணிக்க! பொதுமை பேசித்
தமிழ்மொழியைப் பழித்திடுவார் தம்மால் இங்குத்
தமிழர்க்குக் கேடல்லால் நலன்கள் இல்லை!
தமிழ்நாட்டின் தெருவெல்லாம் மனைகள் எல்லாம்
தமிழ்முழங்கச் செய்திடுவீர் தமிழ்நாட் டீரே!
-1975