பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

விடை : அன்பரே, தாம் வினாவிய சங்கை வீணதாயினும் அப்போதகர் தனது விசாரிணைக்குறைவாலும் அவிவேக நிறைவாலும் உலகெங்கும் நிறைந்துள்ள மனுமக்களின் அரையே அரைக்கால் பாக மக்கள் ஆனந்தமாகக் கொண்டாடி வரும் அருகக்கடவுளாம். புத்தபிரானை அவமறியாதையாயவர் கூறிய போதினும் தாமப்பேதை மொழிகளை மன்னித்து அன்னோர் தெய்வப்பெயரை மறியாதையுடன் கூறி ஆய சங்கையை வினாவியது மிக்க வானந்தமும் பௌத்தர்களது வறி குறியுமிதுவேயாம்.
அவை யாதென்னிலோ தற்கால மிவ்விந்திய தேசத்துள் தோன்றியுள்ள மதங்களும் ஓர் மனிதன் தலையின் மயிரை வெட்டிக்கொண்டு குல்லாமாட்டி நெற்றியிலேதொன்றும் பூசாதிருப்பானாயின் அவனைக் கிறீஸ்து மதத்தோனென்றும், நெற்றியில் சாம்பலைப் பூசியிருப்பானாயின் சைவ மதத்தோனென்றும் நெற்றியில் சிவப்பும் வெள்ளையுங் கலந்த வருணத்தைப் பூசிக்கொள்ளுவானாயின் வைணவ மதத்தோனென்று மோரறிகுறிக் கண்டுக் கொள்ளுவது இயல்பாம்.
பௌத்தர்களுக்கோ மதமென்னும் பெயருங் கிடையாது அறிகுறியாகவோர் சின்னமுங் கிடையாது புத்தரது தன்மத்தைப் பின்பற்றியவர்களாதலின் பௌத்தர்களென்னும் பொதுப் பெயரும் சாந்தம், அமைதி, நிதானம், நியாயவாதம் பயனுள்ள வார்த்தை பேசல், சகலருக்கும் பயன்படுஞ் செயலை யேற்றல் பயன்படாச் செயலை யகற்றலாய வறிகுறிகளே பௌத்தர்களது அடையாளமாகும். அதை அனுசரித்தே தாமும் வாதிட்டுளது தருக்க சாங்கிரமமாகும்.
புத்தர் விலாவெடித்துப் பிறந்தாரென்னுங் கூற்று போலி மதத்தர் பிரளியேயாகும் அதாவது புத்தமென்பது மகட பாஷா மொழி, சத்தியமென்பது சகட பாஷாமொழி, இதனையே மகட பாஷையில் புத்ததம்மாவென்றும், சகட பாஷையில் சத்தியதருமமென்றும், திராவிட பாஷையில் மெய்யறமென்றுங் கூறப்படும் இம் மெய்யறத்தைப் பற்றினோன், எத்தேச வெப்பாஷைக் காரணாயினும் அவன் புறம்பாய பொய்கள் யாவையு மகற்றி உண்மெயைக் கண்டடைவானாயின் அவனையே புத்தனென்று கூறப்படும் இதுவே புத்ததன்ம கருத்தாம்.
போலி மதத்தோர் கருத்தோ வென்னில், புத்தரென்றால் ஓரவதாரமாகப் பிறப்பவர்கள் என்றும், தாயின் விலாவெடித்துப் பிறப்பதில் வாழையானது காயை ஈன்றவுடன் மடிவதுபோலும், தேளானது குஞ்சு பொரித்தவுடன் மடிவது போலும், புத்தர்கள் பிறந்தவுடன் தாய் இறந்துபோவதியல்பென்று சில கற்பனா கதைகளை ஏற்படுத்தி போலிக்கவிகளையும் பாடி வைத்திருக்கின்றார்கள். அக்கதை புத்தரை சிறப்புப்படுத்துவதுபோல் கூறி தாழ்ச்சி செய்வதற்கேயாம். அதாவது புத்த பிரானால் அஹிம்ஸாதன்மத்தையே வற்புறுத்திக் கூறி அன்பைப் பரவச் செய்தவராதலின் அத்தன்மத்தை பௌத்தர்கள் சிறக்கக் கூறி பசுமாடுகளை நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்னும் மதத்தோரைக் கண்டிப்பார்களாயின் உங்கள் புத்தர் பிறக்கும் போதே தாயின் விலாவெடித்துக் கொன்றவர்தானே என்று தாழ்ச்சி செய்தற்கு அக்கற்பனா கதையை உண்டு செய்து வைத்திருக்கின்றார்களன்றி சித்தார்த்தி சக்கிரவர்த்தி யாருற்பவகாதையிலஃது கிடையவே கிடையாவாம்.
ஒரு காசு பத்திரிகையில் புத்தரைக் கண்டித்துள்ளவற்றை யாம் கண்டோமில்லை கிடைக்கு மேலச்சங்கைகளை விளக்குவோமாக.

-7:40; மார்ச் 11, 1914 -
 

129. அவதாரம்

வினா : வைஷ்ணவர்களென்னுமோர் கூட்டத்தார் விஷ்ணு வென்னுந்தேவன் வீரபோக வசந்தராயராக அவதாரமெடுத்துவிட்டா ரென்றும், எடுக்கப்போகிறார் என்றும், 10வது கலிக்காவதாரம் எடுப்பாரென்றும் வாய்க் கூச்சலிட்டு திரிகின்றனர். கிறீஸ்தவர்களென்னுங் கூட்டத்தார் மேசியா வருவார், மேசியா வருவார் என பிரசங்கித்து வருகின்றனர். மஹமதியர் என்போரும்