பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 99

அவர் யாரே எனக்குத் தெரியாதென்றேன். ஆ! ஈதென்ன, பானைகளை உண்டு செய்த ஓர் மனிதன் இருப்பானா யில்லையா வென்றார். பானைகளைச் செய்வதற்கு மண்ணானது மூலகாரண மாயிருந்தது. அது போல உலகத்தை உண்டு செய்வதற்கு எது மூலகாரணமென்றேன். அவ்வாறு தேவனைக் காணக்கூடாதென்றுதான் தேவனே கிறீஸ்துவாகப் பிறந்து மனிதர்கள் பாபத்திற்கு தன் உதிரஞ் சிந்த தன்னுயிரைக் கொடுத்து மன்னுயிர் காத்து பரலோகஞ் சென்றிருக்கின்றார். ஆதலால் அவரை நம்பினவர்களுக்குத்தான் மோட்சமுண்டு, மனிதனை நம்பினோருக்கு மோட்சமில்லை என்றார். கிறீஸ்துவை நம்பிய கிறீஸ்தவர்கள் பாவமெல்லாம் போய்விட்டதா என்றேன். ஆம் கிறீஸ்துவை நம்பியபோதே பாவம் போய்விட்டதாகுமென்றார். அதற்குப் பார்வைக்குறிப்பும் அனுபவமும் என்னவென்றேன். அது உலக முடிவில் தெரியுமே யல்லது இப்போது தெரியாதென்றார் அதை வற்புறுத்திச் சொல்லுவதற்குத் தாங்களெப்படி தெரிந்து கொண்டீரென்றேன் அது எங்கள் நம்பிக்கை என்றார். அவ்வகையான வீணான நம்பிக்கையை பௌத்தர்கள் நம்பமாட்டார்கள். கிறீஸ்துவானவர் பாடுபட்டாரென்பதை வொருவாறு நம்பிய போதிலும் மனிதர்கள் பாபமெல்லாம் நீங்கிப்போயிற்றென்பதை அநுபவக் காட்சியால் நம்பவே மாட்டார்கள். ஆனால் அவர் பிறந்த காலத்தில் அநுபவக் காட்சியாயுள்ளதை மட்டும் ஒன்றை சொல்லுவேன் அதாவது கிறிஸ்துவானவர் தன்னுயிரைக் கொடுத்து மன்னுயிரை ரட்சித்தாரென்று கூறினீர் தங்கள் வாக்குக்கு நேர் விரோதமாகத் தங்கள் வேத புத்தகத்திலிருக்கின்றது. அவை என்னவென்றால் கிறீஸ்துவானவர் பிறந்த போது சில சாஸ்திரிகள் அத்தேசத்தரசனிடஞ் சென்று பற்பல கற்பனைகளைக் கூற அவனதை மெய்யென்று நம்பி இக் குழந்தையைக் கொல்லுவதற்காக அத்தேசத்திலுள்ள மனுக்களின் இரண்டு வருடத்திற்குட்பட்டு அப்போது பிறந்துள்ளக் குழந்தைகள் யாவையுங் கொல்லும்படி உத்திரவளித்துவிட்டான். அப்போது கிறீஸ்துவென்னுங் குழந்தையை மட்டிலும் வேறு தேசங்கொண்டு போய் மறைத்துவிட்டார்கள் அத்தேசத்தின் வீடுகடோருந் தவிழ்ந்து விளையாடுங் குழந்தைகள் யாவற்றையுந் துடிக்கத் துடிக்கக் கொல்லுங்கால் பெற்றோரும் பிறந்தோரும் மற்றோரும் எவ்வகையாக வுடல் பதரவும் நாக்கதரவுந் துக்கங்கொண்டாடியிருப்பார்கள். வீட்டுக்கோர் பெரிய மனிதனைக் கொல்லும்படி உத்திரவு கொடுத்திருந்தால் அவ்வாறு துக்கமிருக்காதே. பாலுண்ணுங் குழந்தைகளையெல்லாம் பதைக்க பதைக்க வதைக்குங்கால் அத்தேசத்தோர் யாவரும் எவ்வகையான பரிதாப நிலையிலிருந்திருப்பார்கள் என்பதைத் தாங்களே தெரிந்துக் கொள்ளல் வேண்டும். இதனால் தங்கள் வேதத்தில் எழுதுயுள்ளபடி தன்னுயிரை ரட்சித்துக் கொண்டு மன்னுயிர்களை சிட்சித்ததே அநுபவமுங் காட்சியு மென்னப்படும். இவ்வகையன்றி தன்னுயிரைக் கொடுத்து மன்னுயிரை ரட்சித்தாரென்பதற்கு தகுந்த வனுபவமுங் காட்சியுங் கொடுப்பீராயின் யான் தங்களைப் பின்பற்றுவதற்கு ஆட்சேபனையில்லை என்றேன். உடனே அவர் சீறி நீங்கள் பொய் பல்லை வைத்துக் கும்பிடுகிறவர்கள் உங்களுக்கு வொன்றுந் தெரியாதென்று கூறி கடையில் கால் பீசு லாங்கிளாத் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவரிவ்வகை அவமரியாதையான வார்த்தைகள் பேசியவை யாவும் தன் பொறாமெயாலும் பற்கடிப்பாலும் பேசினாரென்று யான் தெரிந்துகொண்ட போதிலும் புத்தர் விலாவெடித்துப் பிறந்தாரென்று வோர் பாட்டு சொன்னார். அவ்வகையான நமது பௌத்த தர்மத்திலேயே தேனுங் கூறப்பட்டிருக்கின்றதா ஏதோ ஒரு காசு பத்திரிகையில் பௌத்தர்களைக் கண்டித்து விட்டதாகவுங் கூறினார். அப்பத்திரிகைத் தங்களுக்குக் கிடைத்திருக்கின்றதா. அது கிடைத்திருக்குமாயின் அதை நமது பத்திரிகையில் வெளியிட்டு அச்சங்கையைத் தெளிவித்து விடுவதுடன் விலாவெடித்துப் பிறந்த சங்கையையும் விளக்கி யாட்கொள்ளும்படி வேண்டுகின்றேன்.

வே. தனபால், இராயபுரம்.