பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 / அயோத்திதாசர் சிந்தனைகள்

விட்டு தேசத்தின் சுகதுக்க சங்கதிகள் யாதொன்றும் உள்ளுக்கு எட்டாமலிருக்கும் படியானக் காவலாளர்களை நியமித்து வைத்திருந்தான்.

பளிங்குகளாலிழைத்தக் கட்டிடத்தின் மகிமையாலும் பலபுட்பங்களின் கந்தத்தினாலும் நாட்டியப்பெண்களின் கீதத்தினாலும் சித்தார்த்தருக்கு சுகபோகம் பிறந்து அசோதரையுடன் கலந்திருக்குங்காலத்தில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது.

அக்குழந்தைக்கு இராகுலனென்னும் பெயரிட்டு வளர்த்துவருங்கால் சித்தார்த்தருக்கு தன் சுதேசிகளின் பேரில் நோக்கம் பிறந்து நாம் இவ்வளவு சுகபோகத்துடன் வாழ்ந்துவரும்போது நம்முடைய தேசத்துக்குடிகளும் இவ்வகை சுகங்களை அனுபவிக்கின்றார்களா, அதைப்பார்க்க வேண்டுமென்று தன் தந்தைக்குத் தெரிவித்தார்.

அந்த சங்கதிகளைக் கேள்விப்பட்ட அரசனுக்கு ஆனந்தம் பிறந்து பிள்ளை நகர் சோதனைக்குப் புறப்படுகிறபடியால் தேசமெங்கும் அலங்கரிக்கும் படியானத்திட்டஞ்செய்து சித்தார்த்தரை நகர்வலம் போம்படி உத்திரவளித்தான்.

சித்தார்த்தரும் தந்தை உத்திரவின்படி நகர்வலம் வரும்போது வீதிகள் தோரும் தோரணக்கம்பங்கள் நிருத்தி வாழைக்கமுகுகள் தொங்கவிட்டு வீடுகள் தோரும் கற்புடைய மங்கையர்கள் மயில் விசிரியுடன் கற்பூர ஆலார்த்தி ஏந்தி நிற்பதைக்கண்டு சந்தோஷமுண்டாகி நம்மைப்போல் குடிகளும் ஆனந்தமாக இருக்கின்றார்கள் என்று எண்ணி சற்று தூரம் போகையில் எலும்புந் தோலுமுள்ள ஓர்விருத்தன் தடியூன்றி தள்ளாடிக்கொண்டு வருவதைக்கண்டு சாரதியை நோக்கி - சன்னா! இதோ நம்முடைய முன்னிலையில் வருவது மநுடரூபமா என்று கேட்டார் அதற்கு சாரதி இறைவனே அது மநுடரூபந்தான் அவனுக்கு வயது முதிர்ந்து விட்டபடியால் தேகந்தளர்ந்து மரணத்துக்கு சமீபித்திருக்கின்றான் என்றான்.

அதைக்கேட்ட சித்தார்த்தர் திடுக்கிட்டு ஆ! ஆ! இதுதானோ மனிதன் முடிவில் அடையும்படியான சுகமென்று எண்ணிக்கொண்டு சற்று தூரம் போகையில் சில சனங்கள் அழுதுக்கொண்டு ஓர் பிரேதத்தைப்பாடையில் வளர்த்தி எடுத்து வந்தார்கள் அதை சித்தார்த்தர் கண்டு சாரதியை நோக்கி - சன்னா! இது என்ன என்றார்.

“இறைவனே இதைப்பிரேதமென்று சொல்லுவார்கள் ஆனால் நம்மைப்போன்ற மனித உருவந்தான். பிராணன் நீங்கிவிட்டபடியால் குடும்பத்தோர் அழுதுக்கொண்டு போய் உடலைத் தகனஞ் செய்யப் போகின்றார்களென்றான்”.

அதற்கு சித்தார்த்தர் சாரதியை நோக்கி-சன்னா! நாம் முன்பு கண்ட விருத்தாப்பியன் படும்படியான துக்கத்தைவிட இது அதிகமானதோவென்றார்.

"இறைவனே! அவன் தள்ளாடிய மூப்பு நிலமையிலிருந்தபோதிலும் நாடு நகரம் வீடு வாசல் பிள்ளை பெண்சாதி இவைகளைப்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இந்தப்பிரேதமோ என்றால் நாடு நகரம் வீடுவாசல் பிள்ளை பெண்சாதி சகலரையும் மறந்து அக்கினிக்கிறையாகி சாம்பலாகப் போகுதென்றான்

அதைக்கேட்ட சித்தார்த்தர் மனங்கலங்கி மனிதன் உலகத்தில் பிறந்து வளர்ந்து செய்து வந்த காரியங்களுக்கெல்லாம் இதுதானோ கடைசிக் கூலி என்று தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு சாரதியை நோக்கி சன்னா! நாம் உலகத்தில் கண்டசந்தோஷம் போதும் இரதத்தை அரண்மனைக்குத் திருப்புமென்று சொல்லி மாளிகை சேர்ந்தார்.

சேர்ந்த அன்று இரவு முழுவதும் நித்திரையில்லாமல் சிந்தனை உடையவராய் உலகிலுள்ள மநுடசீவர்களுக்கு முடிவுவரையில் துக்கவழிகள் திறந்திருக்கின்றபடியால் அதை அடைக்கும் எதிரிடையான சுகவழி ஒன்றிருக்கவேண்டும் அவ்வகையான வழியை நம்முடைய தேகந்தளர்ந்து தடியூன்றிக்கொள்ளுவதற்கு முன்பு அறிந்து உலகிலுள்ளோர்களை ஈடேற்ற வேண்டுமென்னும் அன்பு பிறந்து சகல பற்றுக்களையும் விட்டு வெளியில் புறப்படும்போது தன் மனைவி அசோதரையின் பாசக்கயிறு ஒருபக்கம்