பக்கம்:கனிச்சாறு 5.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  151


149

கனிந்து உதவுங்கள்!


காய் பருத் தென்ன,
கனியாது வெம்புமேல்?
தாய் ‘இருந்தாய்’ எனச்
சொல்வது போதுமோ?
நீ ‘இருந் தாய்’ என்று
உலகம் நினைக்கவே
ஏய நறும்பணி
என்றும் புரிகவே!

1967


150

பெரும்பயன் பெறு!


உலகம் பெரிது; வானம் பெரிதே;
உன்னுயிர் அவற்றுள் ஓர் அணுவே!
உலகப் பொருள் ஒவ்வொன்றும் அறிவே!
உன்அறிவு அவற்றுள் ஒருதுளியே!
உலகின் அசைவில் உன்னுடை அசைவோ
ஒருசிறு இயக்கம்; எனவே, நீ
உலகத் துயிர்ப்பில் பெரும்பயன் பெறவே
ஒருநொடிப் பொழுதும் ஓயாதே!

1968


151

உயர்வே கருதுக!


எண்ணிப் பேசுக! பேசிச் செய்க!
ஏற்றம் கருதி வாழ்ந்திடுக!
மண்ணின் உயிர்களை மதித்துப் போற்றுக!
மக்களுக் கென்றும் நலம் புரிக!
உண்ணல் சிறிதே ஆயினும் உன்றன்
உடல் நலம் கருதி உண்டிடுக!
கண்ணுள் ஒளியெனத் தாய்மொழி காக்க!
கடமை, ஒழுங்கைக் கைக்கொள்க!

1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/185&oldid=1444961" இலிருந்து மீள்விக்கப்பட்டது