உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அத்தியாயம் 6 கலை வளர்ச்சி நமது குலோத்துங்கனது சாஸனங்களாக இது வரையில் கிடைத்துள்ளவற்றிலிருந்து, இவன் நாற்பது ஆண்டுகள் வரை ஆட்சிபுரிந்து வாழ்ந்தான் என்று தெரிய வருகின்றது. மேற்கூறியபடி, 24 வருஷங்களாக அடைந்த வெற்றிகளுக்குப் பின்பு, இவன் புரிந்த வீரச் செயல்களாக எதனையும், இவனது பின் வாழ்வில் அமைந்த சாஸனங்கள் குறிப்பிடவில்லை. அதனால், நம் சோழனது ஆட்சியின் பிற்பகுதியில் அதாவது 16 வருஷகாலம் வரை - இவனது அறிவாற்றல்களால் சோழ ஏகாதிபத்தியம் யாதொரு குழப்பமும் இல்லாமல் அமைதி பெற்றிருந்தது என்பது அறியலாகும். இக் காலத்தில், கலைத்துறைகளை அறிந்து வளர்ப்பதிலும் பெரும்புலவர்களுடன் அளவளாவி இன்புறுவதிலும், நீதிமுறைகளை நிலை நிறுத்துவதிலும், அறச்செயல்கள் புரிவதிலும் தன் சிறந்த காலத்தின் பெரும்பகுதியைச் செலவிட்டவன் இவன் என்றே சொல்லலாம். இனி, இவன் காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர்களையும் அவர்கள் இவனைப்பற்றிக் கூறியுள்ள செய்திகளையும் நோக்கு வோம். 1. குலோத்துங்கன் கோவையாசிரியர் நம் சோழன் பேரில் அழகான கோவைப்பிரபந்த மொன்று பாடப்பட்டுள்ளது. இதனை இயற்றிய ஆசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. ஆயினும், இச்சோழனால் பெரிதும் அபிமானிக்கப்பட்ட புலவர்களுள் ஒருவராகவே இவரைக் கொள்ளலாகும். இக்கோவையை இயற்றியவர்