பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

பிறகு, அவைகளுக்குப் போதுமான பயிற்சி அளிக்காத நிலையில் போர் வீரர்கள் அவைகளின் மீது பிசாசுகளைப் போல் ஏறி அமருவர். இந்தக் காரணங்களினால் மிகவும் வலுவான வேகமான, துடிப்பான குதிரை கூட சிறு காலத்திற்குள் பலவீனமாகவும், சோம்பலுடையதாகவும் பயனற்றதாகவும் மாறி விடுகின்றன. இந்த நாட்டுக்கால நிலையில், சாட்டையின் சாடுதல் இல்லாமல், பாய்ந்து செல்லக்கூடிய வன்மைமிக்க இந்தக் குதிரைகளை, இலாயத்தில் நிழலான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவை பலவீனமுற்று சவாரிக்கு தகுதியற்றதாகி விடுகின்றன . இதன் காரணமாக ஆண்டு தோறும் புதிய குதிரைகளுக்கான தேவை எழுகிறது. இஸ்லாமிய நாட்டு வணிகர்கள் அவைகளை கொண்டு வருகின்றனர்" என அவர் வரைந்துள்ளார்.[1]

சுல்தான் ஜமால்தீன் வளம் சேர்க்கும் வணிகத்தில் மட்டு மல்லாமல், அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகியவை எஞ்சாதிருக்கும் அரசியலில் சிறப்புற்று விளங்கினார். "தம்மில்பெரி யார் தமரா ஒழுகுதல், வன்மையில் எல்லாம் தலை” என்றபொது மறைக்கேற்ப, பாண்டியன் குலசேகரன் சுல்தான் ஜமால்தீனிடம் அரசியல் பணிகளில் உதவிகளை அவாவினார். அப்பொழுது ஈழத்திற்கு அனுப்பப்பட்ட பாண்டியப் படையணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஈழத்திலிருந்து தமிழர் தளபதிகளான காலிங்கராயர், சோழகங்கன் ஆகியோர்களையும் பாண்டிய நாட்டு கரையிலிருந்து எதிர்கரையான ஈழ நாட்டிற் இயல்பாகச் சென்ற தமிழர்களை துரத்தியடித்த சிங்கள அரசர் புவனேக பாகுவைப் பொருதுவதற்காக பாண்டிய நாட்டுப் படைகள், கிழக்குக் கடற்கரை பட்டினம் ஒன்றிலிருந்த கப்பல்களில் புறப்பட்டன. அவை ஈழத்தையடைவதற்குள்ளாக மன்னர் புவனேகபாகு இறந்துவிட்டார். நாட்டில் அராஜகமும் பசிப் பிணியும் நிலவின. இந்தச் சூழ்நிலையில் சுல்தான் ஜமால்தின் ஈழத்தின் உறுதி மிக்க சுபகிரி கோட்டையைக் கைப்பற்றி அதனை நாசமுறச் செய்ததுடன் அங்கு புனிதப் பொருளாக காக்கப்பட்டு வந்த புத்தபிரானது பல்லையும் ஏனைய கொள்ளைப் பொருட்களையும் கவர்ந்து வந்து பாண்டியனிடம் ஒப்படைத்தார். பாண்


  1. Wassaff — Elliot and Dowson – Part II P.314.15