உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தேவலீலைகள்

முதலிய நற்குணம் விளங்குகின்றனவா என்று நாத்திகமென்றால் நடுங்கும் நமது ஆத்திக அன்பர்களைக் கேட்கிறேன்.

மற்றுமோர் வரலாறு! நமது புராண இலட்சணம் எப்படியெனில், ஒரு நிகழ்ச்சிக்குக் குறைந்தது ஒன்பது விதமான கதையாவது இருக்கும். புளுகர்கள் கூட்டம், போட்டியிட்டுக்கொண்டு வேலை செய்துள்ளது. விநாயகர், பார்வதியின் கர்ப்பத்திலே இருக்கையில் ஒரு அசுரன், காற்றுவடிவில் கருவிருக்கும் இடஞ்சென்று, குழந்தையின் தலையைக் கொய்துவிட, உடனே பரமன், அந்தத் தலை போனாலென்ன இதோ ஆனைத்தலை இருக்க அருள்கிறேன் என்று பாலித்திட, ஆனை முகத்தோடு குழந்தை பிறந்தது என்று விநாயக புராணம் கூறுகிறது. தக்கன் யாகத்தை அழிக்க, சிவனாரால் ஏவப்பட்ட விநாயகர் சிரம் அறுபட்டுவிழ, சிவனார் சிரமற்ற பிள்ளையைக்கண்டு, யானைச் சிரமொன்றை வைத்துப் பிள்ளையை உயிர்ப்பித்தாராம்! உயிர் வரச்செய்யும் உத்தமர், பழைய மனிதத் தலையை மட்டும் வரவழைக்க அறியார் போலும் என்ன மடமை!

வடநாட்டிலே ஒரு புராணம் விநாயகருக்கு! விசித்திரமானது. பிரமன் ஒருநாள் கொட்டாவிவிட, திறந்த வாயினின்றும் திடீரென்று தீ வண்ணமாக ஒரு திருக்குழவி தொப்பென்று வெளியே வந்து குதித்ததாம். கொட்டாவி பெற்ற குழந்தையை, பிரமன் தன் உள்ளங்கையிலே வைத்து உவகையோடு பார்த்துக்கொண்டிருக்கையில், குழந்தை தண்ணீரில் குதித்துப் பிசாசு வடிவாயிற்றாம்.