பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

இலங்கையில் ஒரு வாரம்

தல்லாத அம்சங்கள் பலவும் இருக்கக் கூடுந்தான். ஆனால் அவற்றை ஆராய்வது ஒரு வாரத்து விருந்தினராகப் போகும் நம்முடைய கடமையன்று. மிஸ் மேயோவின் வேலை செய்கிறவர்கள் வேறு யாராவது இல்லாமலா போகிறார்கள்? ஆகவே மனதிற்கு மகிழ்ச்சிதரக்கூடிய நல்ல அம்சங்களைப்பற்றி மட்டுமே இதுவரை எழுதி வந்திருக்கிறேன். ஆயினும் மிகவும் வருந்தத்தக்க ஒரு நிலைமையைப்பற்றிச் சொல்லித் தீரவேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டைக் காட்டிலும் பிற்போக்கான நிலைமை ஈழ நாட்டில் ஒரு துறையில் இருந்துவருகிறது. அதுதான் தீண்டாமை ஒழிக்கும் துறை. ஹரிஜனங்கள் என்று மகாத்மாவினால் புது நாமகரணம் செய்யப்பட்ட நம் தீன சகோதரர்களுக்குத் தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களையெல்லாம் மேளதாளத்துடன் திறந்து விட்டுவிட்டோம். நமது தார்மீக வாழ்க்கையின் கேந்திரஸ்தலங்களாகிய ஆலயங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் தீண்டாமையை ஒழித்துவிட்டோம். ஆழக்குழித் தோண்டிப் புதைத்து விட்டோம். ஆனால் ஈழ நாட்டில், கல்வியறிவில் சிறந்த தமிழ் மக்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதியில், இன்னமும் தீண்டாமை அரக்கன் ஆட்சி செலுத்திவருகிறான்! கோயில்களுக்குள் ஹரிஜனங்கள் புகக்கூடாது என்று வழி மறிக்கிறான். இந்த வெட்கக்கேட்டை என்ன வென்று சொல்வது?

யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்துக்கு இது எவ்வளவு பெரிய அவகேடு என்பது, பருத்தித்துறைக்குப் போகும் வழியில் உள்ள வதிரி என்னுமிடத்தில் எங்களுக்கு நன்கு தெரியலாயிற்று. அந்தக் கிராமத்தில் எங்களை வழிமறித்து நிறுத்தினார்கள். ஒரு பள்ளிக் கூடத்தில் வரவேற்பு உபசாரமும் நிகழ்த்தினார்கள்.