உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் ஆறு கதைகள்/006-006

விக்கிமூலம் இலிருந்து



“டே! மண்டூ! சாட்டாச்சேன்னோ? சரி கொஞ்சம் உட்கார். நேக்குக் கொஞ்சம் கையை வலிக்கிறது. நான் சொல்லிண்டு வர்ரேன். சமர்த்தா எழுது, தெரியறதோ”

“ஆகட்டும் மாமா! லெடரோ?”

“எதா இருந்தா என்னடா நோக்கு? சொல்வதை எழுதேண்டா!”

“ஆஹா! இதோ லெடர் பேபர் எடுத்துண்டு வர்ரேன்”

“பார்க்கணும் உன் சாமர்த்தியத்தை. எந்த லெடர் பேப்பர் எடுத்துண்டு வர்ரே”

“ஏன், ‘ஜர்னலிஸ்டு’ லெடர் பேப்பர் தான்”

“மண்டூன்னா சரியா இருக்கு. இப்ப திவான்பகதூர் தீர்த்தகிரி முதலியாருக்கு லெடர் எழுதணும். அதற்கு இந்த லெடர் பேப்பர் ஆகாது, போய் ராகவாச்சாரியார், பிரசிடெண்ட், ராம பக்தஜன சபான்னு இருக்கே, அந்த லெடர் பேபர் எடுத்துண்டு வாடா”

“அனுமார் பிளாக் போட்டிருக்கே!”

“அதுதாண்டா மண்டு! அதுதான்.”

மாமனும் மருமானும் அப்படித்தான் வேடிக்கையாகப் பேசிக் கொள்வது வழக்கம். எங்கேயும் என்று சொல்லவில்லை. ராகவாச்சாரியார் ‘ஆத்திலே’ அப்படித்தான் வழக்கம்.

“ஏண்டி! இன்னிக்கி நம்ம ருக்கு பலேபேஷா இருக்காளே. ஆத்துக்காரன் பார்த்தானானா, மயக்கமடிச்சி விழுந்துடுவன்” என்று ராகவாச்சாரியார், தன் குமாரி ருக்குவைப் பற்றிச் சகதர்மிணி சாந்தாவிடம் பேசுவார். ருக்குவையேக் கூடக் கேட்பார் சில சமயம், “என்னடி அது தாடையைத் தடவிண்டு நிற்கறே. சுந்தரம், கடிச்சுட்டானா?” என்று. சுந்தரம், ருக்குவின் புருஷன், அவன் “மாமனார் ஆடற விளையாட்டைப்போல நேக்குத் தெரியாதே” என்று மாமனாரிடம் வேடிக்கையாகத்தான் பேசுவான்.

“மண்டு” அதாவது மற்றோர் மருமான், உறவின் முறை பெண் கொடுத்து ஊர்ஜிதம் செய்யவில்லை, பெண் வேறே இல்லாததால் வேலை வாங்கித் தருவதாக, வர வழைத்திருந்தார். வரதனை. அவனுக்குத்தான் அந்த ‘மண்டு’ பட்டம்.

மண்டு, லெடர் பேபருடன் வந்து உட்கார்ந்தான். எழுதுவதற்கு, ஐயர், துவக்கினார்.

“சீமான் திவான்பகதூர் தீர்த்தகிரி முதலியாரவர்களுக்கு,” என்று கூறினார், மண்டு மளமளவென்று எழுதி “களுக்கு” என்று கூறினான், “டே! ஶ்ரீராமஜெயம் போட்டாயா?” என்று கேட்டார், ராகவாச்சாரியார். “இல்லையே! சொல்லலையே!” என்றான், மண்டு, “போடா இதைக் கூடச் சொல்வாளாக்கும்” என்றார், அதையும் எழுதிவிட்டு, மேலே கூறச்சொன்னான், “முதலியாரவர்களுக்குச், சர்வமங்களானி இஷ்ட சித்திரஸ்து” என்று கூறினார் ராகவாச்சாரியார், மண்டு. எழுதிக் கொண்டிருக்கையில் ராகவாச்சாரி, “அவன் இஷ்டம் என்ன, தெரியுமோ, ஊர்த்தாலியை அறுக்கணும். திவான் பகதூர் முதலியார் என்றால் தேசமே நடுங்கவேணும். கவர்னர் பங்களாவை விலைக்கு வாங்கணும், இப்படி எல்லாமிருக்கும்” என்று வர்ணித்தார். எழுதுவதை நிறுத்திவிட்டு, மண்டு “ஏம் மாமா! அவ்வளவு பேராசைக்காரனா! அப்படிப்பட்டவனுக்கு சர்வாபிஷ்ட சித்திரஸ்து சொல்றேளே?” என்று கேட்டான். “சொன்னதை நீ எழுதேண்டா. நான் சொன்னா அவன் ஆசை எல்லாம் சித்தி ஆகிவிடறதோ, அவனுக்கு அதனாலே இலாபம் இல்லை. அந்த வார்த்தையைச் சொல்றதாலே நமக்கு நஷ்டம் என்ன? சும்மா எழுதி அனுப்பினா, பய, பல்லிளிப்பான், வேறே என்ன? எழுது!” என்றார், எழுதினான். ராகவாச்சாரி மேலும் சொல்ல ஆரம்பித்தார், “நான் எவ்வளவு கஷ்டம் நேரிட்டாலும் பிறத்தியாரிடம் சொல்கிற வழக்கமே கிடையாது.” இதைச் சொன்னதும், மண்டு, எழுதவில்லை, சிரித்தான்.

“மாமா! என்ன போடு போடறீர். வாசல் கூட்டுகிறவளிடமிருந்து வருகிறவா போகிறவா ஒவ்வொருவரோடும் கஷ்ட சமாசாரம் சொல்லத்தானே உமக்குப் பொழுது இருக்கு. பிறத்தியாரிடம் சொல்றதே கிடையாதுன்னு எழுதச் சொல்றீரே” என்று மாமாவைக் கேட்டான். மண்டுதானே அவன்! மாமாவின் பிரத்யேக முறைகள் மாமி காதிலே வைர ஓலையாகவும், ருக்கு கழுத்தில் லாங் செயினாகவும், பெரிய மருமான் கையில் ரிஸ்ட் வாச்சாகவும், விளைந்ததை அவன் அறிவானா? மாமா, எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் அவனுக்கு விளக்க முடியும்! முறைத்துப் பார்த்தார், அவன் எழுதினான்.

“என் மகன், பஞ்சு, பி. ஏ. வகுப்பிலே படிக்கிறான் என்பது தங்களுக்குத் தெரியும்” என்றார், பேசாமல் எழுதினான். மண்டு. “ஏண்டா இதற்கு ஒண்ணும் கேட்கலையோ? எப்படிப் பஞ்சு என்று கூறலாம், அவன்தான் ஆர். பி. நாதன் என்று கையெழுத்துப் போடுகிறானே, எனக் கேட்பதுதானே” என்று கேலி செய்தார், ராகவாச்சாரி. பஞ்சநாதன், மகன் பெயர். இவர் அதைத்தான் பஞ்சு என்று குறிப்பிட்டார், அன்புச் சுருக்கமாக. நாகரிகச் சுருக்கமாக, பையன் ஆர். பி. நாதன் என்றுதான் எழுதுவது வழக்கம். விஷயம் அவ்வளவு பிரமாதமில்லை என்று, மண்டு தள்ளிவிட்டான். “மேலே சொல்லுங்க மாமா!” என்று கூறினான். “பஞ்சுவுக்குக் காலேஜ் செலவுக்குத் தருவதற்கு, நான் படுகிற சிரமம் இருக்கே. அது சாட்சாத் ஶ்ரீராமச்சந்திரமூர்த்திக்குத்தான் தெரியும்” என்றார் ராகவாச்சாரி. ‘உம்’ போட்டான் மண்டு, எழுதிக்கொண்டே “அதிலும் இந்த மாதம், ராமபக்தசபா வருஷாப்திக்காகச் செலவு ஏராளமாகப் பிடிச்சுவிட்டது” என்றார்; எழுதினான். அந்த வருஷ விழா சாக்கிலே வாங்கின திராட்சையும், பாதமும், முந்திரியும், பருப்பும், வேட்டியும், வெள்ளி வட்டிலும், வேறு பலப்பல சாமான்களும், வீட்டிலே எங்கெங்கும் உள்ளன என்பது மண்டுவுக்குத் தெரியும்! தெரிந்து என்ன செய்வது; ராகவாச்சாரி சொல்கிறபடி எழுதத்தானே வேண்டும்! ‘ஆகையாலே, என் மீது ரொம்பத் தயவு வைத்து, பையனிடம் ஒரு ஐம்பது ரூபாய் தரவேணும்’ என்றார். “ஐம்பதா?” என்று ஒரு முறை கேட்டுக்கொண்டான் மண்டு. ஏனெனில் அவனுக்குச் சந்தேகம், பஞ்சநாதனுக்குப் பணம் தேவையா என்பதிலேயே. “ரேடியோ” நாடகத்திலே நடித்ததற்காக, பஞ்சநாதனுக்குக் கிடைத்த இருபது ரூபாயைக்கூட அவன் அப்பாவுக்கு மணியார்டர் செய்திருந்தான், அந்தச் சந்தோஷத்திலே, பகவானுக்கு அக்ராவடசல் கூடச் செய்தார்கள். அப்படி இருக்க ஐம்பது ரூபாய் எதற்காகப் பஞ்சுக்கு, என்று சந்தேகம். “ஆமாம், ஐம்பதுதான் முட்டாளே, அவ்வளவு பெரிய ஆசாமியிடம் ஐந்து பத்துத் தான் கேழ்ப்பாளோ? நாமென்ன அவன் ஆத்திலே வண்டி ஓட்டறவாளா?” என்று விளக்கம் உரைத்தார் ராகவாச்சாரி. “இந்த ஐம்பது இந்தச் சமயம் எனக்கு ஐந்நூறுக்குச் சமானம்” என்று கூறினார் ராகவாச்சாரி. மண்டுவுக்கு இதுவும் புரியவில்லை. ராகவாச்சாரியின் அண்ணன் உள்ளூர்ப் புரோகிதர். அவர் எந்த வீட்டில் எவ்வளவு கொடுத்தாலும், கொடுத்தது கொஞ்சமாக இருந்தாலும் இதையே அதிகமாக எண்ணிக்கொள்ள வேண்டும் என்று கூறச் செய்பவர். ராகவாச்சாரியார், புதிய முறைப் புரோகிதர்தானே! “தங்களுடைய தர்ம சிந்தனையையும், தயாள குணத்தையும்.........” என்று சொன்னார் ராகவாச்சாரி, எழுதிவிட்டான் மண்டு, வாசகத்தை முடிக்காமல் யோசிக்கலானார் ராகவாச்சாரி. “ஏன் மாமா தயாள குணத்தையும், எழுதிவிட்டேன்” என்றான் மண்டு. “இரடா! ஸ்துதி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது, அதிலும் அந்தப் பயலுக்கு உச்சி குளிரும்; தர்ம சிந்தனை, தயாள குணம், போதாது, இன்னும் ஏதாவது சேர்க்கணும்; என்ன போடலாம், சொல்லேன் நீதான்” என்று மண்டுவையே கேட்டார். “பிராமண பக்தின்னு போடுவமா?” என்று யோசனை சொன்னான் மண்டு. “பித்துக் குளி! அந்த வார்த்தையைப் போடவேபடாது. இப்போ பிராமண பக்தின்னாலே, கேலி பேசறவா ஊரெல்லாம் அதிகமாகிவிட்ட காலம். இவன் கூடத்தான், ஏதோ நமக்கு சமயாசமயத்திலே ஒத்தாசை செய்கிறானே தவிர, மத்தவாளிடம் பேசறபோது, “இந்தப் பார்ப்பாரப் பயலுக” என்று தான் நம்ம சமூகத்தையே வைகிற வழக்கம். ஒரு தடவை, அவன் திமிரைப் பார்டா, என் எதிரிலேயே வைதான்” என்று திவான் பகதூரின் குணத்தை விளக்கினார் ராகவாச்சாரி. “உம்ம எதிரிலேயா? சும்மாவா இருந்தீர் மாமா?” என்று கேட்டான் மண்டு. “சும்மா. இராமே அவனிடம் சண்டைக்கு நிற்பாளா? காரியம் பெரிசா? வீரியம் பெரிசா? நான் பேசாமே கேட்டுண்டு தான் இருந்தேன். அவனுக்கே பிறகு, நான் இருக்கிறேனே, ஒரு சமயம் கோபிப்பனோன்னு சந்தேகம். உடனே என்னைப் பார்த்தான், சிரிச்சிண்டே “ஏன் சாமி! நம்ம சமூகத்தைக் கொறை பேசறானே இவன்னு கோவமா?” என்று கேட்டான். “அதெல்லாம் இல்லை, முதலியார்வாள்! லோகாச்சாரப்படிதானே சொன்னேள்” என்று ஒரு போடு போட்டேன். பயலுக்குப் பிரமாதமான திருப்தி. “உங்க விஷயம் தனி, சாமி. உங்களைப்போலவே குணமும் மனமும் உள்ள பிறாமணாளைக் குறை சொல்லலே, மத்ததுகளைத்தான் திட்டினேன்” என்று சமாதானம் பேசினான், வழக்கமாகத் தருவதைவிட அன்று ஒரு பத்து ரூபாய் அதிகமாகத் தந்தான். அதாவது நம்ம நரசிம்மாச்சாரியார் இங்கே “இராமாயணம்” படித்தாரே, அந்தப் பட்டாபிஷேகச் செலவுக்கு. அப்படிப்பட்டவன் அந்த திவான் பகதூர் என்று கூறினார் ராகவாச்சாரி. மேலும் சிறிது யோசனைக்குப் பிறகு, தருமசிந்தினை தயாள குணத்துடன், பகவத் கடாட்சம் பெற்ற என்ற பதத்தைச் சேர்த்தார், வாசகத்தைப் பூர்த்தி செய்ய. “பகவத் கடாட்சம் பெற்ற தங்களைப் போன்றவாளுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை” என்று கூறினார். கடிதம் முடிந்தது. மண்டு சோம்பல் முறித்தான். ராகவாச்சாரி, “கையோடு கையா இன்னும் ஒரு லெட்டர் எழுதி விடு, பஞ்சுவுக்கு” என்றார். மண்டு எழுத உட்கார்ந்தான். “ஜர்னலிஸ்டு” லெட்டர் பேப்பர் எடுடா” என்றார். “சிரஞ்சீவி பஞ்ச நாதனுக்கு, ஆசீர்வாதம். இன்று இதே தபாலில், திவான் பகதூர் தீர்த்தகிரி முதலிக்கு ஒரு லெட்டர் எழுதி இருக்கேன், உனக்கு அவசரமாக ஐம்பது ரூபாய் தரும்படி; தருவான். அதை வாங்கிக்கொண்டு, உனக்கு ஐந்தோ பத்தோ செலவுக்குத் தேவையானால் எடுத்துக் கொண்டு, மிகுதிப் பணத்துக்கு, ஆறு கெஜத்தில் ஆரஞ்சு கலரில் பெங்கால் சில்க் சேலை விற்கறதாமே சைனாபஜாரில், அதை உன் அக்காவுக்காக உடனே வாங்கி அனுப்பவும். அடுத்த வியாழக்கிழமை இங்கே ஜில்லா கலெக்டர் வருகிறார், என்னமோ சையன்யத்துக்கு நிதி திரட்டவாம். அதிலே நம்ம ருக்கு, எதிராத்து ராஜம், நம்ம கோடிவீடு செவிட்டுச் சீமாவின் பார்யா இருக்காளே சண்பகம், இவாளெல்லாம், பெங்கால் டான்ஸ் ஆடப்போறாளாம். ஆனதாலே புடவை அவசரம். தீர்த்தகிரி முதலி கொஞ்சம் முன்கோபி. வள்ளுன்னு விழுவான். சட்டை செய்யாமே, கொஞ்ச நேரம் இருந்தா, பணத்தைத் தந்துவிடுவான். பக்குமாப் பேசனும் அவனிடம்: முகஸ்துதியிலே ரொம்பப் பிரியம். பெரிய கர்மி. இருந்தாலும், நம்மிடம் பணம் தருவதற்கு மறுக்க மாட்டான். அவன் தான் நம்ம ராமபக்த ஜனசபாவுக்குப் போஷகன். திவான்பகதூர் பட்டம். அவனுக்குக் கிடைச்சதுக்கே, அதுதான் காரணம்னு சொல்லி வைச்சிருக்கேன். சமயம் வாய்ச்சா நீயும் சொல்லு. எப்படியும் பணத்தை வாங்கிவிடு, அசடாட்டம் இருந்து விடாதே.”

இது மகனுக்குத் தகப்பனார் அனுப்பும் கடிதம். இதனைச் சிரமமின்றி மண்டு எழுதிவிட்டான், குறுக்குக் கேள்வியே கேட்காமல். ராகவாச்சாரியாரின் “முறை”யைப் புரிந்து கொண்டான்.

“அடடே! மறந்துவிட்டேன், இன்னும் ஒருவரி ‘சேர்க்கணும் பஞ்சு லெடரில்’ என்று சொன்னார் ராகவாச்சாரி “சொல்லுமே, இடம் இருக்கு” என்றான் மண்டு. “தீர்த்தகிரி வீட்டுக்குப் போகும் போது, கொஞ்சம் உலர்ந்த உதிரி புஸ்பமும் மஞ்சத்தூளும் ஒரு காகிதப் பொட்டலத்தில் மடித்து எடுத்துக் கொண்டு போய், அப்பா ஊரிலிருந்து அனுப்பினார் என்று கொடு” என்று, கூறிக் கடிதத்தைப் பூர்த்தி செய்தார்.

ராகவாச்சாரியாரின் தபால்கள் பயணப்பட்டன. பெங்கால் சில்க் சேலையைப் பற்றிய நினைப்புடன் ருக்கு. நடை பழக ஆரம்பித்தாள், அதுவே ஒரு புது தினுசு டான்சாக இருந்தது. தபால்கள் போய்ச் சேர்ந்தன, ஆனால் முதலியாருக்குச் சேரவேண்டிய கடிதம் பஞ்சுவுக்கும், பஞ்சுவுக்குச் சேர வேண்டிய கடிதம் முதலியாருக்கும் போய்ச் சேர்ந்தன. பெங்கால் சில்க்கா கிடைக்கும்,? திவான் பகதூர் தீர்த்தகிரி முதலியார், ராகவாச்சாரியாரை, “அயோக்யன்? நன்றி கெட்டவன்! நயவஞ்சகன் ! அவனை என்ன செய்கிறேன் பார்” என்று ஏசி, பஞ்சுவையும் உதைப்பதாக மிரட்டியதையும் பற்றி விரிவாக எழுதி, முதலியார் விலாசமிட்ட கவரில், பஞ்சுவுக்கு எழுதிய கடிதத்தையும், பஞ்சுவுக்கு அனுப்பிய கவரில், முதலியாருக்கு எழுதிய கடிதத்தையும், மண்டு கைதவறி வைத்து அனுப்பிவிட்டதால் நேரிட்ட விபரீதத்தையும் விளக்கி, பஞ்சு தகப்பனாருக்கு விரிவாகக் கடிதம் எழுதினபிறகே, மண்டுவால் வந்த ஆபத்தை ராகவாச்சாரி உணர்ந்து சோகித்தார்.

“சொன்னதைத்தானே எழுதினேன்” என்று மண்டு முண முணத்தான். தலையில் அடித்துக்கொண்டு ராகவாச்சாரி “நீ இல்லையடா மண்டு. நான் மண்டு. உன்னைக் கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கினேனே என்னைச் சொல்லணும்” என்றார். கொஞ்ச நேரம், யோசனையில் ஆழ்ந்துவிட்டு, “டே ! மண்டு! வா! உன்னை விட்டாலும் வேறு கதி இல்லை எனக்கு. போய் ஜர்னலிஸ்டு லெடர் பேப்பர் எடுத்துவா” என்று கூப்பிட்டுச் சோகம் கப்பிய குரலிலே, ராகவாச்சாரியார் சொன்னார், மௌனமாக, மண்டு எழுதினான்.

ராம பக்தஜன சபா

‘இவ்வூர், ஶ்ரீராம பக்தஜன சபாவின் போஷகராக இருந்து வந்த திவான் பகதூர் தீர்த்தகிரி முதலியார், ஆச்சார விரோதமாக நடந்துவருவதால், ௸ சபா தலைவர் ஸ்ரீமான் ராகவாச்சாரியார் அவர்களுக்கு, மெம்பர்கள் புகார் செய்து கொண்டதன் பேரில், தலைவர் விஷயத்தைப் பரிசீலனை செய்து புகாருக்கு ஆதாரமிருப்பது தெரிய வந்ததால், மேற்படி சபாவின் போஷகர் ஸ்தானத்திலிருந்து, ௸ தீர்த்தகிரி முதலியாரை நீக்கிவிட்டார். அன்னார் மீது சாட்டப்பட்ட பல குற்றச்சாட்டுகளிலே முக்கியமானது, அவர் ஒரு பிராமண விதந்துவிடம் முறை தவறி நடந்து கொண்டிருக்கிறார் என்பதாகும்”

“யாருக்கு மாமா அனுப்ப. தெளிவாகச் சொல்லி விடும்” என்று பயந்து கேட்டான் மண்டு. “இது ஒரு பத்து காபி எடுத்து, மித்திரன், இந்து, விகடன், மணி, போன்ற சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிடு,” என்று உத்தரவிட்டார். மண்டு, அதை நிறைவேற்றினான். பிறகு மீண்டும் பயந்த குரலில் ராகவாச்சாரியாரை “மாமா! கோவிக்காமே இதை மட்டும் சொல்லிவிடும். அந்தப் பிராமண விதந்து யார்?” என்று கேட்டான். “நம்ம கமலிதான்” என்றார் ராகவாச்சாரியார். கமலி, அவருடைய சகதாமிணிக்கு ஒன்றுவிட்ட தங்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணாவின்_ஆறு_கதைகள்/006-006&oldid=1470945" இலிருந்து மீள்விக்கப்பட்டது