உள்ளடக்கத்துக்குச் செல்

ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு/II. விசேஷ இடங்கள்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 2
விசேஷ இடங்கள்

வேலூர் (Vellore) :-வட ஆற்காடு ஜில்லாவின் முக்கியமான ஊர்களில் ஒன்றாகிய வேலூர் ஒரு முனிஸிபல் நகரம். இதே வேலூரென்னும் பெயருள்ளதும் தென் ஆற்காடு ஜில்லா திண்டிவனம் தாலூகாவிலுள்ளது மான ஊரிலிருந்து இதைப்பிரிக்கவேண்டி அதற்கு உப்புவேலூர் என்றும் இதற்கு ராயவேலூரென்றும் பெயருண்டாயிற்று. உப்பு வேலூர் பண்டைய காலத்தில் ஓய்மாநாடு என்றும் ஏறுமாநாடு என்றும் வழங்கிவந்த தற்காலத்திய திண்டிவனத்தை சேர்ந்தது. நல்லியக்கோடன் எனப்படும் அரசன் காலத்தில் பகைவர்கள் வந்து அவனை எதிர்க்க, அவர்களைத் தோற்கடித்தது மன்னியில், அவர்களைத் துரத்தி தனது ராஜ்யத்தை சேர்ந்த உப்பு வேலூர் என்னும் பட்டணம் வரைக்கும் சென்றான் அவ்விடத்தில் இவ்வரசனது குலதெய்வமாகிய சுப்பிரமணியரது கிருபையால் ஒரு கிணற்றிலிருந்து புஷ்பரூபமாய் மாறியிருந்த ஒரு அம்பை எடுத்துப் பகைவரின் சைன்னியத்தின் பேரில் எறிய அவை பலவாகப் பரவி அவர்களை அழித்து விட்டதாம். பின்னர் நல்லியக்கோடன் தமது ராஜதானி சென்றான். இந்த யுத்தம் நடந்த இடத்திற்கு வேலூர் என்னும் பெயர் ஏற்பட்டது. இப்படி அகப்பட்ட புஷ்பம் வேல்போல் மாறியது பற்றியே!

இவ்வூர் இந்த ஜில்லாவிலேயே இருக்கும் ஊர்களுள் பெரிதென்பதுடன் ஜில்லாவின் பிரதான நகரமுமாகும். இது பெருந்த தானிய வியாபாரம் நடந்துவரும் ஸ்தலம். முதல் முதல் குடியேறின இடம் இப்பொழுது ஒரு மஜராவாக ஏற்பட்டிருக்கும் "வேலப்பாதி" என்ற ஊர், வேல மரக் காடுகளின் மத்தியில் அமைக்கப்பட் டிருந்ததால் ஏற்பட்ட காரணபெயரே வேலப்பாதி யென்ற பெயராம். வேலூருக்கும் அப்பெயர் வந்திருக்க வேண்டும். விஜயநகர மன்னர்களது துர்க்கமாக ஏற்பட்டிருந்த காரணம்பற்றி ராயவேலூர் என்றழைக்கப்பெற்ற தெனவும் கூறலாம்.

பாலாற்றிற்குத் தெற்கில் சுமார் ஒருமைல் தூரத்தில் இந்த ஊர் பல சிறிய கிராமங்கள் அடங்கியுள்ளனவாக அமைக்கப்பட்டுளது. அதன் கிழக்குப் பாகத்தில் சிறு குன்றுகள் சில ஏற்பட்டிருக்கின்றன. அவைகள் சம தரை மட்டத்திற்கு சுமார் ஐந்நூறடி உயரம் வாய்ந்துள்ளதாக ஏற்பட்டுத் தென் கிழக்கு வடமேற்காக ஓடியுள்ளன. அவைகளின் வடமேற்கு கோடியில்தான் ராணுவஸ்தலம் ஏற்பட்டிருக்கிறது. பேட்டை என்ற சுதேசிகளிருக்கும் ஊர் அதற்கும் அங்குள்ள குன்றுகளின் அடிவாரத்திற்கும் இடையில் இருக்கிறது. இன்னும் தெற்கில் ஐரோப்பியர்களது விடுதிகள் அமைக்கப்பட் டிருக்கின்றன. அவைகள் ஊரின் மத்தியில் போகும் ஆரணி பெரிய ரஸ்தாவிலும், ஜெயிலுக்கு போகும் தொரப்பாடி ரோட்டின் இரு பக்கங்களிலும் ஏற்பட்டிருக்கின்றன.

இவ்வூர் அழகாக அமைந்த ஊரென்று சொல்லலாம். எல்லாப் பக்கங்களிலும் குன்றுகள் வாய்ந் திருப்படதுன் அனேகம் மாந் தோப்பு, தென்னந் தோப்பு, நாரத்தை மரங்கள் பயிரிடப்பட்டுள்ள தோட்டம், திராக்ஷைத்தோட்டம் முதலியன உள்பிரதேசங்களிலும் எல்லைப்பிரதேசங்களிம் ஏற்பட்டிருக்கின்றன. நறுமணம் வாய்ந்துள்ள புஷ்பச் செடிகள் பயிர் செய்து புஷ்ப வியாபாரம் செய்தல் ஜனங்களின் முக்கியமான தொழில்களில் ஒன்று. ரயில் மார்க்கமாக இவைகள் ஏராளமாகச் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இவ்வூரில் முக்கியமானது கோட்டையும் அதற்குள்ளிருக்கும் கோவிலுமே. கோட்டையும் கோவிலும் தென் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிற்ப வேலைகளில் சிறந்தது. (படம் 2) கோட்டையின் புராதன வாசல், சுற்றிச் சுற்றிப் போவதுடன் பலமான கதவுகளுடனும் ஒரு தூக்குப் பாலத்துடனும் கூடியிருந்த ஒரு ரஸ்தாவின் வழியாக ஏற்பட்டிருந்தது. ஆனால் சில வருஷங்களுக்கு முன் சுவரின் வழியாகவே ஒரு நேரான பாதை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தெற்குப் பக்கத்தில் ஒரு காலடிப் பாதை ஏற்பட்டுளது அது அகழியை ஒரு கருங்கல் அணை மார்க்கமாய்க் கடக்க ஏற்பட்டுளது. இக் கோட்டையின் அகழியைத் தாண்ட வேறு யாதொரு மார்க்கமும் இல்லை. இந்த அகழிக்கு ஜலம் வருவது "சூரிய குண்டம்" என்ற ஒரு பெரிய குளத்திலிருந்து. ஊருக்குக் கிழக்கிலுள்ள குன்றுகளிலிருந்து வரும் ஜலம் அதை நிரப்புகிறது. இந்த அகழியில் முன் அனேகம் பெரிய முதலைகளிருந்தனவாம். ஆனால் காலக் கிரமத்தில் அவைகள் நாச மடைந்தன. கோட்டையி லிருந்து வந்த உத்தியோகஸ்தர்கள் அவைகளைச் சுட்டுக் கொன்று விட்டார்களாம். பின்னர் 879-வது வருஷம் மார்ச்சு மாதத்தில் திரும்பவும் சில முதலைக் குட்டிகள் கொண்டுவந்து விடப்பட்டனவாம்.
படம்2)-வேலூர் கோட்டையும், கோவிலும்
வேலூர்க் கோட்டையை கிருஷ்ணா நதியின் கரையிலுள்ள பத்திராசலத்து பொம்மி ரெட்டி என்றவன் கட்டி முடித்ததாக ஏற்பட்டிருக்கிறது. அவனும், தீம்மி நாயுடு என்றவனும் அவ்வூரைச் சேர்ந்த யாதவ நாயுடு என்றவனது குமாரர்கள் என்றும், அவர்களது மாற்றந் தாயின் குமாரர்களுக்கு பயந்து ஊரை விட்டு ஓடிப்போன அவர்கள் ராமேசுவரம் முதலிய புண்ணியஸ்தலங்களை தரிசித்துப் பின்னர் வேலப்பாதி என்ற இடத்தில் தங்க நேர்ந்தது. அப்பிராந்தியம் அவர்களுக்கு ரமணீயமானதென்று ஏற்பட வேலூருக்கு ஐந்து மைல் தூரத்தில் கைலாஸ பட்டணம் என்ற இடத்திலிருந்த கரிக்கால் சோழனிடம் அவர்கள் அங்கு தங்க அனுமதி பெற்று ஆடு மாடுகள் விருத்தி செய்து தனிகர்கள் ஆனார்கள். இறுதியில் ஆரணியில் தலைவனாக இருந்த ஒருவன் அவர்களை எதிர்த்தான். ஆனால் அவன் முற்றும் தோற்கடிக்கப் பட்டதால் சந்தோஷம் கொண்ட மன்னன் அந்த பொம்மி ரெட்டிக்கு அனேகம் வெகுமதிகளும், ஸவதந்திரங்களும் அளித்தான்.

இந்த பொம்மி ரெட்டி என்றவன் வேலூர்க்கோட்டையையும் கோவிலையும் கட்டிமுடித்ததாக ஏற்பட்டுள்ள கதை விசித்திர மானது. அவனுக்கு ஐந்து முலைகளுடன் கூடிய ஒரு பசு எப்படியோ கிடைத்திருந்ததாம். ஒரு நீர் ஊற்றின் மத்தியி லிருந்த புற்றில் வகித்துவந்த ஒரு ஐந்து தலை நாகத்திற்கு அது பாலூட்டினதை அவன் ஒரு சமயம் பார்த்தானாம். சிவபிரானே நாகமாய் வடிவெடுத் திருந்தாராம். அவர் பொம்மி ரெட்டிக்குக் கனவில் தோன்றி, அங்கு பூமியில் ஏதோ ஓரிடத்தில் புதைய லிருந்ததாகவும், அதை அவன் தோண்டி எடுத்துக்கொண்டு ஒரு கோவில் கட்டி முடிக்கவேண்டு மென்றும் கூறினாராம். புதையலிருந்து அகப்பட்ட இடத்தில் ஒரு சிவலிங்கமும் இருந்தது. பொம்பி ரெட்டியும் சிவபிரான் ஆக்ஞைப்படி கோவிலும் கட்டி லிங்கஸ்தாபனமும் செய்தான்.

கோவிலின் சுவர் ஏற்படவேண்டிய விடம் பொம்மி ரெட்டிக்குக் காட்டப்பட்டதும் ஆச்சரியமான ஸம்பவமே. ஒரு சமயம் இந்த பொம்மி ரெட்டியின் நாய்களை ஒரு முயல் துரத்திக் கொண்டு ஓட அவைகள் ஓடினமார்க்கம் அந்தப் புற்றைச்சுற்றி ஏற்பட்டிருந்தது. சிவபிரானும் ஆகாயத்திலிருந்து அசரீரியாக அவைகள் ஓடிய மார்க்கத்தை அநுசரித்துக் கோவில் சுவர்கள் ஏற்பட்டுக் கட்டப்பட வேண்டு மெனக் கூறியருளினார். சரியாக ஒன்பது வருஷகாலமாய் கோவில் கட்டி முடிவுபெற்று அதில் ஜலகண்டேசுவரர் ஸ்தாபிக்கப்பட்டார். இது நேரிட்டது 1274-ல். இந்த பொம்மி ரெட்டியின் மகன் வெங்கட்ட ரெட்டி 1398-ல் கோயில் கட்டிடங்களை விர்த்தி செய்தானாம். இக் கோயிலிலுள்ள மண்டபத்தில் தாமரை தளத்தை கிளிகள் கொத்துகிற மாதிரியும் அதைச்சுற்றி அஷ்டதிக்கு பாலகர்கள் பிம்பங்களும் வெகு நேர்த்தியாய் அமைக்கப்பட் டிருக்கிறது. இம் மண்டபத்திலுள்ள தூண்களும் அபூர்வ வேலைப்பாடுள்ளன. இந்த மண்டபத்தைப் பிரித்து இங்கிவீஷ்காரர் லண்டன் மா நகருக்கு எடுத்துப்போக எத்தனித்து பின்னர் அவ்வெண்ணத்தை விட்டு விட்டனராம்.

இக் கோவிலைக் கட்டிமுடித்த சில்பியினது மகன் அவனைத் தேடிக்கொண்டு வந்து அக்கோவில் கட்ட ஆரம்பித்தலக்கினம் நல்ல லக்கினமல்ல வெனக் கூறி ஒரு நல்ல லக்கினத்தில் அதைச்சுற்றி ஒரு கோட்டையைக் கட்ட ஏற்பாடு செய்ததாகவும் தெரிகிறது. கோட்டை கட்டி முடிவு பெற்றதும் சிவபிரான் திரும்பவும் பொம்மி ரெட்டிக்குக் கனவில் தோன்றி அக் கோட்டையை அவன் தெங்கணிக்- கோட்டை வெங்கடதேவ மகாராயலு விடம் ஒப்புவித்து விட வேண்டுமென்று கூறியதிலிருந்து அவ்வாறு செய்யப்பட்டு, "ராய வேலூர்" என்ற பெயரும் இடப்பெற்றதாம்.

பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் பீஜப்பூர் சுல்தான் வேலூரைப் பிடித்துக் கொண்டான். பிறகு இந்த ஊரின் முதல் முகம்மதிய அரசன் கான் கான் என்றவன் ஏற்பட்டான். அவனுக்குப் பிறகு முஹம்மத்கான் என்றவன் சிம்மாஸனம் ஏறினான். முகம்மத்கானுக்குப் பிறகு அப்தல் கான் என்றவன் வந்தான். அவன் காலத்தில் மஹாராஷ்டிரர்கள் துகோஜிராவ் என்ற ஒருவன் கீழ் இவ்வூர்க் கோட்டையை நெடுங்காலம் முற்றுகை போட்டதாகத் தெரிகிறது. இந்தத் துகோஜி ராவ் வேலூருக்கு ஒருமைல் தூரத்திலுள்ள சேம்பாக்கம் என்ற கிராமத்தில் ஒரு கல்லிலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டான்! அவனுக்கேற்பட்ட கனவிலிருந்து அக்கல்லில் செல்வ்வினாநாயகர் எழுந்தருளி யிருந்ததை அறிந்து அக்கிராமத்தில் அவரது கோவில் ஒன்றைக் கட்டிவைத்தாரரம். இப்பொழுது அக் கோவிலில் பூஜை முதலியன நடந்தேறிவரக் காணலாம். இந்த செல்வவிநாயகர் ஆக்ஞைப்படி இந்தத் துகோஜியும் பாலாற்றின் கரையில் இப்பொழுது பாலம் ஏற்பட்டிருக்கு மிடத்திற்கருகில் ஒரு விஷ்ணுவின் ஆலயத்தையும் பிருந்தா வனத்தையும் ஏற்படுத்திய பிறகு ஸர்ப்பயாகம் என்ற யாகத்தையும் செய்துமுடித்தனன். இவனது இச்செய்கையால் கோட்டையில் ஸர்ப்பங்கள் அதிகரித்து அவைகளால் நேர்ந்த ஹிம்ஸையைச் சகிக்க முடியாமல் அப்தல் கான் அவ்விடத்தை விட்டகன்று வேலூருக்கு மேற்கில் இரண்டரை மைல் தூரத்தில் அப்தல்லாபுர மென்ற ஊரையும் ஒரு அரண்மனையையும் ஏற்படுத்தினதாகவும், பெங்களூர்ப் பாதையின் தெற்குப் பக்கத்தில் அவைகளின் பாழ் இப்பொழுதும் காணப்படுகிறது.

கோட்டைக்குள்ளிருந்த கோவிலில் மறுபடியும் பூஜை முதலியன நடக்கும்படி துகோஜிராவ் ஏற்பாடு செய்தான். அவனுக்குப் பிறகு அவனது மகன் ஹிங்கோஜி பட்டத்திற்கு வர அவனை குல்பிகர்க்கான் என்றவன் எதிர்த்து இரண்டுவருஷ காலம் கோட்டையை முற்றுகை செய்தான். இறுதியில் நூற்று ஐம்பது தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு இந்த லிங்கோஜி கோட்டையை எதிரிக்கு விட்டு விட நேர்ந்தது. மறுபடியும் இக்கோவிலில் பூஜை நின்று போய் இருபத்தொரு வருஷங்களுக்குப் பிறகு ஸ்ரீநிவாச ராவ் என்ற மஹாராஷ்டிரன் மூன்று வருஷகாலம் முற்றுகை செய்து கோட்டையைப் பிடித்துக் கொண்டதும், நடைபெற்று வந்ததாம். இந்த ஸ்ரீநிவாச ராவ் பதினேழு வருஷகாலம் ஆண்டான். பிறகு அவனது மகன் ராமராவ் என்றவன் பதின்மூன்று வருஷம் ஆண்டான். பின்னர் கி.பி. 1708-வது வருஷத்தில் டாட்கான் என்ற முகம்மதியன் டெல்லியிலிருந்து வந்து மஹாராஷ்டிரர்களை இங்கிருந்து துரத்திவிட்டான். கொஞ்சகாலத்திற் கெல்லாம் ஆற்காடு கட்டப்பட நவாப் சாதத்உல்லாகான் வேரையும், பக்கத்து நாட்டையும் தனது சகோதரன் குலாம் அலி கான் என்றவனுக்கு ஜாகீராக அளித்தான். அவனுக்குப் பிறகு பாகிர் அலி என்ற அவனது மகன் பட்டம் பெற்றபொழுது ஏற்பட்ட ஒரு பஞ்சகாலத்தில் ஒரு லங்கர்கானாவை ஏற்பாடு செய்து அது நடை பெற்றுவர வேண்டிய பொருளும் ஏற்பாடு செய்தானாம். இந்த லங்கர்கானா இப் பொழுதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை (Tiruvannamalai):- இவ்வூர் இதே பெயருடன் கூடிய தாலூகாவின் பிரதான நகரம். இங்குள்ள குன்று சமுத்திர மட்டத்திற்கு 2,700 -அடி உயரம் வாய்ந் துள்ளது. சுற்றிலும் அனேகம் மைல் தூரத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு காட்சியாக இது ஏற்பட்டிருக்கிறது.

இதன் அடிவாரத்தில்தான் பெயர்பெற்ற திருவண்ணா- மலைக்கோவில் (படம் 3, 4) ஏற்பட்டிருக்கிறது, இந்த ஸ்தலத்தில் தேஜோமூர்த்தி ஏற்பட்டிருப்பதாக ஐதீகம். இங்கு முக்கியமான திருவிழா நடந்தேறுவது கார்த்தியை மாதத்தில். பௌர்ணமி திதியன்று மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும். சுவாமியும் மலையைச் சுற்றி சுமார் எட்டு மைல் தூரம் ஊர்கோலம் கொண்டுவரப் படுவதும் வழக்கம். இச்சம்பந்தமான ஒரு கதையும் ஏற்பட்டுளது.

கைலயங்கிரியில் ஒருநாள் பார்வதி தேவியார் வேடிக்கையாகச் சிவபிரானது கண்களைப் பின்பக்கமாகச் சென்று தனது கைகளால் மூடினார். உடனே எங்கு பார்த்தாலும் நாடாந்தகாமாக இருள் சூழ்ந்து கொண்டு விட்டது. தேவர்களது வேண்டுகோளின்மேல் சிலபிரான் யோசனை

(படம் 3)- திருவண்ணாமலை கோவில்

(படம் 4)- திருவண்ணாமலை கோவில்

யின்றி நடந்து எங்குமே இருள்மூடும்படி செய்ததற்காகப் பார்வதி தேவியாரைப் பூலோகத்திற்குச் சென்று தவம் புரியுமாறு கூற அவரும் காஞ்சீபுரத்தில் தவஞ் செய்து முடித்துப்பின்னர் கௌதமர் சிவபிரானைக்குறித்துத்தவம் செய்துகொண்டிருந்த இவ்விடத்திற்கு வந்தனர். அப்பொழுது சிவபிரான் அவ்வம்மைக்கு அக்நிஜ்வாலை ரூபமாகப் பிரத்தியக்ஷமான காரணம்பற்றி இவ்விடத்தில் தீபத் திரு விழா ஏற்பட்டு இந்த ஸ்தலமும் மகிமை பெற்றதாம்.

திருவண்ணாமலையி லுள்ள கோவிலின் ஆயிரக்கால் மண்டபம், இரண்டு திருக்குளங்கள், பதினொரு நிலைக் கோபுரம்,தேர் மாடவீதி முதலியன கிருஷ்ணதேவராயர் என்றவரால் ஏற்படுத்தப்பட்டன. இவர் சில ஸந்நதிகளைத் தங்கமுலாமும் இட்டனராம். பதினொரு நிலைக்கோபுரம் இவரது காலத்தில் கட்டி முடிவுபெறாமல் பின்னர் தஞ்சை மாநகரில் ஆண்ட விஜயநகர ஸமஸ்தான ஆட்சியின் ஆதீனத்திற் குட்பட்டிருந்த செவ்வப்ப நாயக்கர் என்றவர் காலத்தில் (கி.பி. 1574-1575-ல்) முடிவு செய்யப்பட்ட தாம். இவ் விடத்திலுள்ள கோவிலிலிருந்து விஜயநகர மன்னர் தனது ராச்சியத்தின் பிரதான நகரமாகிய விஜய நகரத்தை விட்டுச் சென்று, கீழ்திசையிலுள்ள நாடுகளை ஜெயித்து கிருஷ்ணா நதி தீரத்திலுள்ள அமராவதி என்ற நகரத்தில் துலாபார தானம் செய்த விஷயமும் காளஹஸ்தியில் நூற்றுக்கால் மண்டபம் ஏற்படுத்திய விஷயமும் தெரிகின்றன.

இது அருனகிரிநாத ரெனப்படும் மஹானது ஜன்ம ஸ்தலம். இவரே சுப்பிரமண்ணியர் மீது திருப்புகழ் பாடினவர். முத்தம்மை என்னும் மாதுக்கு இவ்வூரி லுள்ள அருணகிரிநாதரின் அருளால் பிறந்த அருணகிரிநாதருக்கு ஈஸ்வர அனுகிரகத்தினால் மகிமை உண்டாயிற்று. தான் பால்யத்தில் செய்த குற்றங்களை நினைத்து நினைத்து நொந்து ஆண்டவன் சந்நிதியில் முறையிட்டனர். பின்னர் பல ஸ்தலங்களை தரிசிக்கச் சென்றனர். இப்படியாகச் சென்று பின்னர் திருவண்ணாமலையை அடைந்து திருச்செந்தூரிலும் திருப்பரங்குன்றத்திலும் தான் கண்ட அதிசயங்களை இவ்விடத்தில் காண வேண்ட அந்தப்படி தன்னுடைய பிரார்த்தனை நிறைவேறாததின் நிமித்தம் கோபுரத்தின் மேலேறிக் கீழேவிழுந்து உயிர் துறக்க எத்தனிக்கையில் சுப்பிரமணியர் இவருக்கு பிரத்தியக்ஷ மானார். அச்சமயம் இந்நாட்டை ஆண்ட பிரபுடதேவன் இவரை அலக்ஷியம் செய்யவே தன்னுடைய யோகபலத்தால் கிளி உருவெடுத்து அவ்வரசனுக்கு நேரிட்ட ரோகத்தைத் தீர்த்தனராம்! ஆனது பற்றியே இப்பொழுதும் கிளி உருவமாய் இவர் இவ்விடத்தில் முருகனைத் தரிசிப்பதாக ஐதீகம். இவரது திருப்புகழ் வெகு அழகான நூல்.

1753-வது வருஷத்தில் இவ்விடம் மூர்த்திஸ் அலிக் கான் என்றவனாலும் மொராரிராவ் என்ற மஹாராஷ்டிரத் தலைவனாலும் முற்றுகை செய்யப்பட்ட பொழுது கர்னாடக நவாப்புக்காக பார்க்கத் உல்லா கான் என்றவன் மிக்க சௌகரியத்துடன் இதைப் பாதுகாத்த விஷயம் சரித்திர சம்பந்தமான விஷயம். 1757-வது வருஷத்தில் பிரெஞ்சுக்காரர்களது வரவினால் ராணுவம் இவ்விடத்தை விட்டு அகன்று விட்டதாயும் 1790-வது வருஷத்தில் திப்பு இதைப் பிடித்துக் கொண்டதாயும் சரித்திரங்களில் ஏற்பட்டிருக்கிறது.

சோளிங்கபுரம் (Sholingur):-- வட ஆற்காடு ஜில்லாவின் முக்கியமான நகரங்களில் ஒன்று சோளங்கிபுரம். ஊருக்கு எட்டு மைல் தூரத்தில் பாணாவர மெனப்படும் இடத்தில் ஏற்படுத்தப்பட்டுளது சோளிங்கபுரம் ரயில்வே ஸ்டேஷன்.

இவ்வூருக்கு ஏற்பட்ட சோழலிங்கபுரம் என்ற ஆதிப் பெயரைச் சுருக்கிச் சோளிங்கபுரம் என்று அழைத்து வருகிறார்கள். ஒருகாலத்தில் சோழமன்னன் ஒருவன் இங்கொரு சுயம்பு லிங்க மிருக்கக்கண்டு, அதற்கொரு கோவில் கட்டி அக்கோவிலுக்கு சோழேசுவரர் கோவில் என்ற பெயரை இட்டனன். அதுவும் ஊரின் மத்தியில் இருக்கக் காணலாம்.

இங்குதான் முதல்முதல் தோற்றுப்போன ஆதொண்டை மன்னனுக்குக் குரும்பர்களுடன் மறுபடியும் சண்டை துவக்கும்படி கன வேற்பட்டதாம். சோளிங்கபுரம் ஒரு பெரிய ஊர் என்றதுடன் ஜனங்களுள் பெரும்பான்மையோர் வியாபாரிகள், நெசவுக்காரர்கள், வாணியர்கள் முதலானவர்களே. பிரதிதினமும் கடைகளில் நல்ல வியாபாரம் நடந்தேறுவதுடன் வாரச் சந்தைகளில் நல்ல வியாபாரம் நடை பெறும். இவ்வூருக்கு மஹிமை முக்கியமாய்க் கோவில் ஏற்பட்டதால் தான்.

இச்சோழேசுவரர் கோவிலைத் தவிர பக்தவத்ஸல. கோவில் என்ற இன்னொரு கோவிலும் இவ்வூரிலிருக்கிறது. இது விஜயநகர மன்னர் ஒருவரால் கட்டப்பட் டிருக்கலாம். வேலூர், விரிஞ்சிபுரம் இவ்விடங்களிலுள்ள மண்டபத்தை ஞாபகத்திற்குக் கொண்டுவரக்கூடிய நேர்த்தியான மண்டபம் இக்கட்டிடத்திற்கு முன்பாகக் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அஸ்திவாரத்துடன் முடிவு பெறாமல் நின்றுவிட்டது. ஏராளமான கொத்து செதுக்கு வேலை செய்யப்பட்டுள்ள கல்தூண்கள் பூமியில் புதைந்து கிடப்பதைக் காணலாம்.

இன்னும் இதர முக்கியமான கோவில்கள் ஊருக்கு வெளியே ஏற்பட்டுள்ளன. அவைகளுள் அதிக முக்கியமானது ஒரு உன்னதமான குன்றின் சிகரத்தில் கட்டப்பட்டுள்ள நரசிம்மசுவாமி கோவில். ராயோஜியினால் கட்டப்பட்ட படிகளை ஏறி உச்சியை அடைந்ததும். அங்கு மிக்க குளிர்ச்சி பொருந்தியந ல்ல காற்று வீசி ஆரோக்கியமாக இருக்கக்காணலாம். தவிரவும் அங்கிருந்து பார்த்தால் நேர்த்தியான குளங்களுடன் கூடிப் பயிர் செய்யப்பட்டுள்ள சமவெளியின் காட்சியும் தென்படும்.

திருப்பதி, காஞ்சீபுரம் இவ்விடங் களுக்குப் போகும் யாத்திரீகர்கள் இரண்டு மூன்று தினங்க இவ்வூரில் தங்கியிருந்து இங்குள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்து போகிறார்கள். சித்திரை மாதத்தில் இந்த சுவாமிக்கு ஒரு உற்சவம் நடைபெறும். இங்குள்ள குன்று பைரவேசுவரரது கட்டளையின் மேல் சமவெளியி லிருந்து கிளம்பி மேன் மேலும் உயர்ந்து கொண்டே வந்ததைக்கண்ட தேவேந்திரன் கோபம்கொண்டு பலராமரை அதை நிறுத்தும்படி கேட்க அவரும் அதை அழுத்தினாராம். அதன் பிறகு இப்பொழு திருக்கும் மட்டத்திலேயே நின்றுவிட்டதாம்! இதன் அருகில் பதினான்கு புண்ணிய சிகரங்கலிருப்பதாகக் கூறப்பட்டிருக்கினும் மிகச் சிறந்தது இச் சிகரமேயாம்.

ராயோஜிப் படிகளின் அருகில் அவரால் ஏற்படுத்தப் பட்டுள்ள அன்னதான சத்திரம் ஒன்றுளது. முதலில் அவர் அந்த தர்மகைங்கரியம் நிறை வேறிவர பூமிமானியம் விட்டிருந்ததைக் கம்பெனியார் எடுத்துக் கொண்டு பிரதி வருஷமும் 1280-ரூபாய் கொடுத்து வந்தார்கள். இப் பொழுதும் அத்தொகை லோகல் பண்டாரால் செலவிடப் பட்டுவருகிறது. யாத்திரிகர்கள் இரண்டொரு தினங்கள் தங்கினால் அவர்களுக்கும் இங்கு சாதம் கிடைக்கும். கார்த்திகை மாதத்திய ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ஊரிலுள்ளவர்களுக்கு இங்கு அன்ன மளிக்கப்படும். கைங்கரியங்களுக்காக ஏற்பட்டிருக்கும் ஆள்களுள் ஒரு பூசாரியும் உண்டு. அவன் பிரதிதினமும் இதை ஸ்தாபித்தவர் பேரால் அர்ச்சனை செய்து வருவான். அவரது ஸாலிக் கிராமங்களும் இங்கு வைக்கப்பட் டிருக்கின்றன. இச் சத்திரத்திற் கருகில் ஒரு ஆழமான கிணறு உண்டு. அதன் ஆழம் கோவில் எவ்வளவு உயரமோ அவ்வளவு என்று கூறுவதுண்டு. அதை ராயோஜி தமது பணச்செலவில் வெட்டி வைத்தாராம்.


கிழக்காகவுள்ள இன்னொரு குன்றில் கிழக்கில் ஆஞ்ச- நேய சுவாமி கோவில் ஒன்றுளது. பக்கத்துக் கோவிலைப் போல அவ்வளவு சிறந்ததாகக் கட்டப்பட் டிராவிடினும் மிகப் பிரக்கியாதி பெற்றது. பேய் பிடித்துள்ள ஸ்திரீகள் அதன் உபாதி நீங்க இக்கோவிலுக்குக் கொண்டு வரப்படுவார்கள். இந்த ஆஞ்சநேயரது மகிமையால் சோளிங்கபுரத்திற்கு வருபவர்கள் இவரது ஆலயத்திற்குப் போகாமல் திரும்பிப் போவதில்லை. குன்றில் ஏறுகையில் பாதி வழியில் உள்ள ஊற்றில் ஸ்நானம் செய்துவிட்டுப் பேய் பிடித்துள்ளவர்கள் கோவிலுக்குட் சென்று மூர்த்தியின் முன்பாக உட்காருவார்கள். பிறகு அவர்கள் தலை விரித்தாட ஆரம்பிப்பதுடன் கீழே விழுந்து புரளுவதுமுண்டு. இரண்டொரு மணி நேரம் அவர்கள் புலம்புவார்கள். பின்னர் அவர்கள் மீது புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்படும். அவர்களும் பிரக்ஞையற்றுக் கிடப்பார்கள். பிரக்ஞை வந்ததும் அவர்களது சாதாரண இயற்கை நிலைமையும் வந்து விடும். பிசாசு நீங்குவதுடன் இன்னும் அனேகம் வியாதிகளும் இங்கு நீங்கி விடுமாம்! நோயாளிகள் அல்லும் பகலுமாக இரண்டொரு மாதம் இக்கோவிலிலேயே கிடந்து சுவப்நத்தில் கடவுள் அனுமதி பெற்றபிறகு தான் அங்கிருந்து அகல்வது வழக்கம்.

இச் சோளிங்கபுரத்தைச் சுற்றி அனேகம் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவைகளுள் முக்கியமானது பிரம தீர்த்தம் என்றது. அதில் ஜனங்கள் வியாழக்கிழமை தினங்களில் ஸ்நானம் செய்வது வழக்கம். ஒரு சமயம் பரமசிவன் பிரம்ஹாவின் ஐந்து தலைகளுள் ஒன்றைச் சேதித்துவிட அவர் இங்கு வந்து அந்தத் தலை மறுபடியும் வளரும்வரை தவம் செய்தாராம். மந்தராபுர மன்னன் இந்திரத்துயும்னன் சில ராக்ஷசர்களுடன் போர் புரிந்த பொழுது விஷ்ணு ஆஞ்சனேய சுவாமியை அவருக்கு உதவி புரியுமாறு அனுப்பினாராம். பிறகு ஆஞ்சநேயர் ஒரு குன்றில் தோண்டி ஹநுமந்த தீர்த்தத்தை உண்டாக்கினராம்.

இன்னு முள்ள பத்துப் பன்னிரண்டு தீர்த்தங்களைப் பற்றியும் கதைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகள் ஒன்றினருகில் வால்மீகி மஹரிஷி பல காலம் தவம் செய்த பிறகு ராமாயணத்தை எழுதும்படி கடவுளால் உத்திரவிடப்பட்டு அப்படியே செய்து முடித்தன ரென்றும் ஒரு கதையுண்டு.

1781-வது வருஷத்தில் சோளிங்கபுரத்திற் கருகில் கர்னல் கூட் ஹைதருடன் போர் புரிந்தான். அதில் ஹைதர் தோல்வி யடைந்ததாகச் சரித்திரம் கூறுகிறது.

வந்தவாசி (Wandiwash) : இவ்வூர் இப் பெயர் கொண்ட தாலூகாவின் பிரதான நகரம் என்றதுடன் தாசில்தார், சப் மாஜிஸ்டிரேட், போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலானோர்களது இருப்பிடமுமாக ஏற்பட்டுளது. வியவசாயிகளும் வர்த்தகர்களும் இங்கு அதிகம். போஸ்டாபீசும், தந்தி ஆபீசும் இங்கிருப்பதுடன், மருந்து கொடுக்கும் ஆஸ்பத்திரியும், பிரயாணிகள் தங்கும் பங்களாவும் சாத்திரங்களும் உள்ள ஒரு யூனியன். இவ்வூருக்கு வந்தவாசி யென்ற பெயர் வந்ததின் காரணமாவது ஜயகாந்தன் என்ற பாண்டிய மன்னன் நோயினால் பீடிக்கப்பட்டு வருந்திப் பற்பல இடங்களிலுள்ள கோவில்களை தரிசித்துக் கொண்டு வந்தும் பிரயோசனம் யாதும் ஏற்படாமலிருந்து வருந்துகையில் ஒரு கனவு கண்டனன். அதில் கண்டபடி ஒரு புற்றைத் தோண்டிப் பார்க்க அதற்குள் ஒரு சிவலிங்க மிருக்கக் கண்டு அதற்கொரு கோவில் கட்டி வைத்தனன். அதனால் நோய் நீங்கின காரணம்பற்றி அவ்விடத்திற்கு வந்தவாசி அதாவது ரோகம் வாசியாகி வந்த இடமென்ற பெயரை இட்டனராம். கல்லும்போது பாறைப்பட்டு நேர்ந்துள்ள குறி இப்பொழுதும் இந்த லிங்கத்தில் காணப்படும்! இவ்வூர் மத்தியிலுள்ள ஒரு சிறு குன்றின் பேரில் ஏற்பட்டிருக்கும் கோவில் விசேஷ பிரக்யாதி பெற்றது.

சரித்திர சம்பந்தமாக இவ்விடம் பெயர் பெற்றது. கர்நாடக முகம்மதியர்களது ராஜாங்கத்தில் ஏற்பட்டிருந்த முக்கியமான ராணுவ ஸ்தலங்களில் இது ஒன்றாக ஏற்பட்டிருந்தது. இப்பொழுதும் இவ்விடத்தில் அனேகம் முகம்மதியர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கோட்டையைக் கட்டியது மஹாராஷ்டிரர்களாக விருக்கலாம். அது பேட்டையென்று கூறப்படும் ஊருக்கு வடக்கிலிருக்கிறது. அதுவும் கூட உயரமான சுவர்களால் பந்தோபஸ்து பண்ணபட்டிருந்த தென்பதற்கு இப்பொழுதும் அடையாளங்கள் இருக்கின்றன. தென்கிழக்கு மூலையைத் தவிர மற்ற இடங்களில் இது ஒரு அகழியால் சூழப்பட் டிருக்கிறது. அம்மூலையில் பல பீரங்கிகள் ஏற்றப்பட்டு வெடிமருந்து முதலியன சேகரித்து வைக்க இடங்களும் வாய்ந்திருக்கின்றன.

கர்னாடக யுத்தத்தில் அதிகமாகச் சண்டை நடந்த இடம் இந்த வந்தவாசியே. 1752-வது வருஷத்தில் இக் கோட்டை மேஜர் லாரென்ஸ் என்றவரால் தாக்கப்பட் டது. ஆனால் அவர் மூன்று லக்ஷம் ரூபாய் விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு சென்று விட்டனராம். 1757-வது வருஷத்தில் கர்னல் ஆண்டெர்னன் என்றவன் ஊரை நாசப்படுத்திய போதிலும் கோட்டையைப் பிடித்துக் கொள்ள முடியாமற் போயிற்று. அப்பொழுது அது பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்த பாகத்தில் பிரதானமான இடமாக இருந்து வந்தது. அப்பொழுது பிரெஞ்சு சைனியம் இங்கிலீஷ்காரர்களை இரு முறை துரத்தி யடித்ததாகப் தெரிகிறது. 1759-வது வருஷத்தில் பிரிட்டன் என்றவர் எதிர்த்தும் பயன் பெறவில்லையாம். சில நாட்களுக்கெல்லாம் பிரெஞ்சுப் போர் வீரர்கள் கலகம் செய்ய ஆரம்பித்ததால் சீக்கிரத்தில் அவர்கள் திருப்தி செய்யப்பட்டிருந்தபோதிலும் அவ்வருஷம் முடிவு பெறுவகற்குள் அக்கோட்டை கூட என்றவர் வசப்பட்டு விட்டது. 1760- வது வருஷத்தில் பிரெஞ்சுக்காரர்கள் லாலியின் கீழாகவும், மூவாயிரம் மஹாராஷ்டிர வீரர்கள் புஸ்ஸி என்றவரின் கீழாகவுமாக இவ்வூருக்கு முன்வந்து தோன்றினார்கள் நேரிட்ட சண்டையில் பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியடைந்து புஸ்ஸி சிறை செய்யப்பட்டார். இந்த ஜெயம் இங்கிலீஷ்காரர்களுக்கு மிகவும் முக்கியமானது. 1780-வது வருஷத்தில் லெப்டினெண்ட் பிலிண்ட் என்றவர் லாகவமாய் வேலை செய்து கோட்டை ஹைதர் வசப்படாமல் காப்பாற்றிக் கொண்டார். சரித்திர சம்பந்தமான இவ் விஷயங்கள் இந்து தேச சரித்திரங்களில் விவரமாகக் காணலாம்.

படைவீடு (Padaved): இந்தப் பாழான ஊர் இந்த ஜில்லாவில் முக்கியமான இடங்களில் ஒன்று. இப்பொழுது இதன் ஜனத்தொகை சொல்பமெனினும் ஒரு காலத்தில் குரும்பர்களது வமிசத்திய ராஜதானிப் பிரதான நகரமாக இருந்தது. இவ்வூர் அப்பொழுது பதினாறு சுற்றளவு மைல் வாய்ந்து கோவில்களுடனும், சத்திரங்களுடனும் ஜனங்களது நேர்த்தியான வீடுகளுடனும் விளங்கிக்கொண்டிருந்தது. மண் கல் மாரியினால் இந்நகரம் மூடிவிடப்பட்தாக நினைக்கிறார்கள். புராதன நகரமிருந்தவிடம் கா டடர்ந்துளது. இவ்வூரிலுள்ள கோயில்களுள் ஒன்று ரேணுகாம்பாள் கோவில். மற்றது ராமஸ்வாமி கோவில். ரேணுகாம்பாள் கோவில் விசேஷமானது. ஆடி வெள்ளிக் கிழமை தினங்களில் ஏராளமான ஜனங்கள் இக்கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த ரேணுகாம்பாள் ரைவத ராஜன் என்ற மன்னனின் குமாரி அவள் தனது தந்தையின் அனுமதியின்மேல் ஒரு சைனியத்துடன் ஒரு தக்க புருஷனை நாடிச் செல்லுகையில் இப்படைவீட்டுக் குன்றுகளுக்கு வடக்கில் தங்கினாள். அப்பொழுது ஒரு அசரீரி வாக்கு அக்காட்டில் நதிக்கருகில் வசித்துக் கொண்டிருந்த ஜமதக்கி ரிஷியே அவளுக்குத் தக்க புருஷனெனக் கூறிற்றாம். சைனியத்துடனும் மாந்திரீகத்தில் சாமார்த்தியம் வாய்ந்திருந்த சாமுண்டி யென்ற சேடியுடனும் அவரைத் தேடிக் கொண்டு சென்றாள் அவ்வரச குமாரியும். இவர்களது வரவால் கோபம் கொண்ட ஜமதக்கியும் தனது மந்திர சக்தியால் சைனியங்களை சிருஷ்டித்தனுப்ப அவைகளைச் சாமுண்டி தனது நேத்திராக்கியால் தகிக்க ஆரம்பித்தாள். ஜமதக்கி ரிஷியும் எப்பொழுதும் குறையாத ஜலம் நிறைந்திருக்கும் சக்திவாய்ந்துள்ள தனது சுமண்டல் ஜலத்தை அவ்வக்கியை அணைக்க உபயோகிக்க அது படைவீடு அல்லது கமண்டல நதியாக ஏற்பட்டதாம். வெகு காலம் போராடிய பிறகும் அனேகம் படைகள் வெட்டப்பட்ட பிறகும், சாமுண்டி பிடித்துப் புஷ்பமாலையால் கரையில் கட்டிப் போட்டுவிடப் பட்டாள். சாமுண்டேசுவரியினது கோவில் அதே இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது படைகள் வெட்டுப்பட்ட காரணம்பற்றி இவ்விடம் படை வீடு என்ற பெயர் வாய்ந்ததாம்.

தான் வந்தது கலியாணம் செய்து கொள்வதற்கே ஒழியச் சண்டைபோட அல்லவென்றதை உணர்ந்த ரேணுகாம்பாளும் தனது சைனியத்தைத் திருப்பியழைத்துக் கொண்டு இன்பமாய் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தாள். இதைக் கேட்டு அங்கு வந்த ஜமதக்கியும் அவளைத் தொடர்ந்து சென்று அவளைக் கலியாணம் செய்து கொண்டார். இது நேர்ந்தது ஆடி மாதத்தில். ஆதலால் அந்த மாதத்திய வெள்ளிக் கிழமைகளில் விருந்து முக்கியமாய்க் கொண்டாடப்படுவது வழக்கம்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு தம்பதிகளுக்கு ஒரு புத்திரன் பிறக்க அவனுக்குப் பரசுராமனென்ற பெயரை இட்டார்கள். அக்குழந்தையும் மிக அற்புதமான குழந்தையாக ஏற்பட்டது. ரேணுகாம்பாளும் ஒரு உத்தமமான மனைவியாக ஏற்பட்டிருந்தாளாம். அவள் மஹாபதிவிரதா சிரோன்மணியாக ஏற்பட்டு ஸதா தனது புருஷனையே தெய்வமாக நினைத்துக் கொண்டிருந்த காரணம் பற்றி அவளிடம் அபாரமான அத்புத சக்தி ஏற்பட்டிருந்தது. அவள் வெறுங்கையோடு 'பத்ம ஸரஸ்' என்ற சுனைக்குப் போய்த் தனது சக்தியால் ஜலத்தையே ஒரு குடமாகச் செய்து அதில் தனது புருஷனது கர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய ஜலம் கொண்டுவருவாள் ! ஒரு நாள் அவள் அச்சுனைக்கு வழக்கப்படி தீர்த்தம் கொண்டுவரச் சென்ற பொழுது அங்கு ஆகாயமார்க்கமாய்ச் சென்ற மிக்க அழகுவாய்ந்த கந்தர்வன் ஒருவனைக் காண அவள் அவன் அப்படிச் சென்றதும் அவளது பதவிரத தர்மத்திற்கு பங்கம் ஏற்பட முன்போல் ஜலத்தைக் கொண்டு குடம் செய்து கொள்ள அவளால் முடியாமல் போயிற்று. இதை அறிந்த ஜமதக்நி கோபமூண்டு தனது குமாரன் பரசுராமனைக் கூப்பிட்டு அவனது தாயின் தலையை சேதிக்குமாறு கட்டளை யிட்டார். பரசுராமரும் அக்கட்டளையைச் சிரமேற் கொண்டு தனது தாயாரது தலையைச் சேதித்துப் பிதாவின் கட்டளையை நிறைவேற்றியதால் திருப்தியடைந்த ஜமதக்கியும் அவரைப்பார்த்து யாது வரம் வேண்டு மென அவர் தனது தாயார் உயிர் பெற வேண்டு மெனக் கேட்டார். ஜமதக்கியும் அவ்வாறே தனது அற்புத சக்தியால் கொஞ்சம் ஜலத்தை உபயோகித்து அவளை உயிர்ப்பித்தார்! ஆனால் பரசுராமர் தான் தனது தாயாரைக் கொல்லப் போன பொழுது தடுத்த ஒரு பறைச்சியையும் கொன்றிருந்த்தால் அங்குகிடந்த முண்டங்களையும் தலைகளையும் ஒன்று சேர்த்த போது தவறாகத் தனது தாயாரின் தலையைச் சண்டாள ஸ்திரீயின் உடலுடனும் சண்டாள ஸ்திரீயின் கலையைத் தனது தாயாரின் உடலுடனும் சேர்த்துவிட்டார். உயிர்பெற்ற இரண்டு ஸ்கிரிகளுள் யாரைத் தனது தயாராகக் கருதுவதெனத் தெரியாது தயங்கின பரசுராமரைப் பார்த்து ஜமதக்கியும் மானிட சரீரத்திலேயே முக்கியமானது சிரசாகையால் எந்த ஸ்திரீயின் தேகத்தில் தனது மனைவியின் தலையிருந்ததோ அவளையே அவன் தனது தாயாராகக் கொள்ள வேண்டு மெனக் கூறினார். மற்ற ஸ்திரீக்கு மாரியம்மன் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவளும் ரேணுகாம்பாளுக்கு வேலைக்காரியாக நியமிக்கப்பட்டாள். அவளுக்குப் படைவீட்டில் ஒரு கோவில் ஏற்பட்டுளது.

சில வருஷங்கள் கழிந்ததும் கார்த்தவீர்யார்ஜுனனென்ற அரசன் இந்த ரிஷியைக் காணவர இவரும் அவனை மிகவும் சிறப்பாய் உபசரித்தார். இந்த ரிஷியிடமிருந்த சகலத்தையும் கொடுக்க வல்லமை பொருந்தியுள்ள காமதேனு என்ற சுவர்க்கலோகத்துப் பசுவைக்கண்டு அதைத் தனக்குத் தரும்படி பிரார்த்தித்த அரசனது வேண்டுகோளுக்கு இணங்காததால் அந்த ரிஷியின் மேல் கோபம் கொண்ட அவ்வரசனும் அவரது தலையை வெட்டிவிட்டான். பின்னர் தனது புருஷனுடன் உடன்கட்டை ஏறப்போன ரேணுகாம்பாளை அவ்வாறு செய்யாமல் தடுக்கத் தேவர்கள் மழை பொழியும்படி செய்ய ரேணுகாம்பாளும் தேக மெல்லாம் ரணங்களுடன் கூடியவளாய் ஜதையிலிருந்து இறங்கித் தனது குமாரன் பரசுராமனை நினைத்தாள். அவனும் உடனே அங்குவந்து தேவதைகளின்மேல் கோபம் கொள்ள அத்தேவர்களும் தங்கள் மீது தவறில்லை யென்றும், அந்த ரேணுகாம்பாளது மகிமையை அதிகரிக்கச் செய்யவே தாங்கள் மழையைப் பொழியச் செய்த தெனவும் கூறி அவனைச் சமாதானப் படுத்தினார்கள். இந்த ரேணுகாம்பாளே இப்பொழுது மஹா மாரி அம்மன் என்று ஜனங்களால் பூஜிக்கப்படும் தேவதையாம். பெரியம்மை வந்தவர்களின் மீது இந்த அம்மன் வந்திருப்பதாகவும் அந்த அம்மைக் கொப்புளங்கள் சொஸ்தமாக வேப்பிலை ஒன்றேதான் மருந்தென்றும் கூறுகிறார்கள். இந்த அம்மனுடைய சிலை தலை மட்டுமேயுள்ளது. ஏனெனில் இந்த அம்மனது தேகத்தின் முண்டம் ஒரு பரஸ்திரீயினது தேகத்தின் முண்டமென்ற காரணம்பற்றியே போலும் இச்சம்பவங்கள் நேர்ந்த காலத்தில் படை வீட்டில் ஊரும் ஏற்பட்டிருக்க வில்லை. யாதொரு கோவிலும் ஏற்பட்டிருக்கவில்லை.

அயோத்தி சூரிய வமிச அரசர்களில் ஒருவனாகிய வீரஸ்வான் என்றவன் தான் இவ்வூரையும் கோவில்களையும் கட்டி வைத்தனனாம். ஒரு அரக்கனால் பீடிக்கப்பட்ட இவ்வரச குமாரன் வசிஷ்ட மகரிஷியை அணுகித் தான் யாதொரு இடையூறு மின்றித் தவம்செய்ய ஓரிடத்தைக் காட்டும்படி வேண்டிக்கொள்ள வசிஷ்டரும் இப்படை வீட்டின் சரித்திரத்தை எடுத்துக்கூறி அங்கு செல்லலாமெனத் தெரிவிக்க அவனும் அங்கு வந்து தங்கினனாம். அவனுக்குப்பிறகு அவனது மகன் ஹரிஹரனும் பேரன் ஹெமமாலி யென்றவனும் அங்கு மிகச்சிறப்புடன் ஆண்டிருந்தார்கள். இந்நகரம் அழிந்து போனதற்குக் காரணம் ஹனுமாரது சாபமேயாம். ராம ராவண யுத்தம் நடந்தபொழுது ராவணன் பிரார்த்தித்துக் கொண்டதால் இப்படைவீட்டுத் தேவி அவனது உயிரைப் பத்மஸரஸில் புஷ்பித்திருந்த ஒரு தாமரை மலரில் வைத்து அவனுக்கு உதவி புரிந்தாள். அம்மலரைக் கொண்டுபோக ஹனமார் முயன்றபொழுது அந்த தேவி தடுத்து அவரைச் சபித்ததால் அவருக்குக் கோபம் உண்டாயிற்று. ஆதலால் அவரும் அந்நகரம் அழிந்து போகக்கடவதென்று பிரதி சாபம் இட்டார். அவ்வம்மன் ஸ்ரீராமரிடம் விஷயங்களை முறையிட்டுக்கொண்டதன் மேல் அவள் ராவணனைத் தன்னிடம் ஒப்புவித்தால் சாபத்தின் உக்கிரத்தைக் குறைப்பதாகக் கூறினார். அப்படி மாற்றப்பட்ட சாபம் இந்தப்படை வீடு பத்தாயிரம் வருஷம் அழிபடாமலிருந்து பாவியாயும் துன்மார்க்கனாயுமிருந்த நந்தன் என்ற அரசன் ஆள வந்ததுமே க்ஷீணிக்கத் தலைப்படும் என்றதே. அவ்வரசனது துர்நடத்தையின் காரணமாக அவ்வூர் மண்மாரியினால் நாசப்படுத்தப் பட்டதாம். ஸ்ரீராமரும் இந்த ஊர் தேவதையின் பக்கம் அமர்ந்திருக்குமாறு ஏற்பட்டு இவருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுளது. ஸ்ரீராமரது அறிகுறியாக 'ஸ்ரீராம தீர்த்தம்' என்ற ஒரு புண்ணிய தீர்த்தமும் இங்குளது.

துன்மார்க்க அரசனாகிய நந்தனைப்பற்றி அனேகம் கதைகள் ஏற்பட்டிருக்கின்றன. நந்தன்படைவீடென்ற பெயர் இதற்கு அவனாலேயே ஏற்பட்டதாம். உத்துங்க ராஜனென்றவனது மகனாகிய இவன் மிகக் கொடியவனும் கெட்டவனுமாக விருந்தான். குரும்பர்களது ஜெயத்திற்குப்பிறகு இவன் பக்கத்திலுள்ள அரசனாகப் படை வீட்டில் ஏற்படுத்தப்பட் டிருக்கினும் இருக்கலாம். உத்துங்கனும் பிரக்கியாதி பெற்ற குலோத்துங்க சோழ மன்னனேயாம். வேலூர்த் தாலூகாவிலுள்ள விரிஞ்சிபுரத்துச் சிலா லிகிதங்களி லிருந்தும், படை வீட்டிலேயே ஏற்பட்டுள்ள சிலாலிகிதங்களி லிருந்தும் இப்படை வீடு தொண்டை மண்டல நாட்டில் சேர்ந்திருந்ததென்ற விஷயம் ஏற்படுகிறது.

தக்கோலம் (Takkolam) :- தக்கோலம் அரக்கோணத்திலிருந்து செங்கற்பட்டு செல்லும் தென் இந்தியக் கிளை இருப்புப்பாதையில் ஒரு ரயில் ஸ்டேஷன். இது அறக்கோணத்திற்கு ஏழு மைல் தென் கிழக்கிலுள்ளது. இவ்வூருக்குப் புராணங்களில் "ஊறல்" என்றும் "நந்தி தீர்த்தம்" என்றும் பெயர். இவ்விடத்திலுள்ள நந்தி தேவரின் வாயிலிருந்து அகோராத்திரம் ஜலம் பெருகுவது ஒரு விசேஷம்! ஆனது பற்றித்தான் இதற்குத் திரு ஊறலெனப் பெயருண்டாயிற்று. பெரிய புராணம் இதைப்பற்றிப் பின்வருமாறு கூறுகிறது:-

"நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடி மேல்
:மாறில்கங்கைதா னவர்க்குமஞ் சனந்தர வணைந்தே
ஊறுநீர் வருமொளிமலர்க் கலிகைமா நகரை
வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை"

இந்த க்ஷேத்திரம் விருத்தக்ஷீர நதி எனப்படும் குசஸ்தலை நதியின் கரையிலுள்ளது. இவ்விடத்தில் தான் சுரர் குருவுக் கிளைய முனிவனான சம்வர்த்த ரிஷி ஈஸ்வரனைப் பூஜித்து அருள் பெற்றனராம்.

முன்னர் இது தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த மணயில் கோட்டத்து பந்மா நாட்டைச் சேர்ந்திருந்தது இவ்விடத்தில் தான் கி.பி. 949 (சகம் 8:1)யில் இந்த தேசத்தைத் தென் ஆற்காடு ஜில்லாவிலுள்ள ராஜாத்திய புரமெனப்படும் திருநாமநல்லூரிலிருந்து கொண்டு ஆண்ட முதலாவது பராந்தக சோழன் மகன் ராஜாதித்தன் ராஷ்டிர கூட மன்னனாகிய மூன்றாவது கிருஷ்ணனால் தோற்கடிக்கப்பட்டான். பராந்தகன் தெற்கே மதுரை, இலங்கை இவ்விடங்களில் தனது சைன்னியத்தை நடத்திக் கொண்டு அந்த இடங்களை பிடித்துக் கொண்டிருக்கையில் மூன்றாவது கிருஷ்ணன் தனக்குள் கங்க தேசத்தை ஆண்ட பூதுங்கனைக்கொண்டு இந்த தக்கோலச்சண்டையில் ராஜாதித்தனைத் தோற்கடித்தது மன்னியில் அச்சமயம் ராஜாதித்தன் யானையின் மேலிருந்தபடியே இறந்ததால் அவனுக்கு "யானைமேல் தூங்கினவன்" எனப்பெயருண்டாயிற்று. இந்த சண்டையில் ஜயம் பெற்றதைக்கொண்டே கிருஷ்ண ராஜாவும் "கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவர்" எனப்பட்டப் பெயர்கொண்டு கி.பி.945 முதல் 970- வரையில் காஞ்சிமா நகரை ஆண்டான். ராஜாதித்தன் இச்சண்டையின் முன்னர் திருநாமநல்லூரில் மலையாள தேசத்திய ஜனங்களைக்கொண்டு பெரிய சைன்னியத்தை வைத்துப் பரிபாலித்து வந்தனனாம்.