உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/71 சிறப்புப் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—71

சிறப்புப் பாடல்கள்

ருமபுர ஆதீனத்து அடியவருள் ஒருவரும் சிறந்த தமிழ் வித்துவானும் காசியில் சில வருஷங்கள் வசித்தவருமான ஸ்ரீ பரம சிவத் தம்பிரான் என்பவர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் மிக்க பக்தியுடையவராகித் தருமபுர ஆதீனகர்த்தருடைய அனுமதி பெற்றுப் பெரும்பாலும் திருவாவடுதுறையிலேயே இருந்து வந்தனர். அவரிடத்தில் சுப்பிரமணிய தேசிகருக்கு விசேஷமான அன்பு உண்டு. அவர் திருவாவடுதுறையில் இருந்த பொழுது சிறந்த நூல்களைப் படித்து ஆராய்ந்தும், மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டும் வந்தார்.

அவர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் சில தமிழ் நூல்களையும், சைவ சாஸ்திரங்களையும், மடத்தைச் சார்ந்த வடமொழி வித்துவான்களிடத்தில் வியாகரண நூலையும் படித்து வந்தார். அவர் நன்றாகப் பிரசங்கம் செய்வார். தமிழிற் செய்யுள் இயற்றும் ஆற்றல் அவர்பால் அமைந்திருந்தது. நுட்பமான அறிவுடையவர். மனத்தைக் கவரும் தோற்றமுடையவர். அவரிடம் நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் நன்னூல் விருத்தியுரை முழுவதையும் ஒரு முறை பாடம் கேட்டோம் ஸம்ஸ்கிருத வியாகரணம் படித்தவராதலின் சில நுட்பமான விஷயங்களை விளக்கிச் சொன்னார். எவ்வளவு கற்றாலும் பூரணமாக அறிந்து கொண்டதாக யாரும் சொல்லிக் கொள்ள முடியாதென்பதை அவரிடம் பாடம் கேட்டபோது நாங்கள் தெரிந்து கொண்டோம்.

மும்மணிக் கோவை

சுப்பிரமணிய தேசிகரிடத்தில் ஈடுபட்ட பரமசிவத் தம்பிரான் அவர் மீது ஒரு மும்மணிக் கோவை இயற்றினார். தேசிகருடைய முன்னிலையில் அப்பிரபந்தம் அரங்கேற்றப்பெற்றது. அது காப்புச் செய்யுளுடன் 31- பாடல்களை உடையது. அம்மும்மணிக் கோவைக்குப் பத்துப் பேர்கள் அளித்த சிறப்புப் பாயிரச் செய்யுட்கள்-2.6 அவை அப்பிரபந்தத்தோடு சேர்த்துத் தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரால் அச்சிடப் பெற்றன.

அக்காலத்தில் மடத்தில் இருந்த தம்பிரான்களும் மாணாக்கர்களும் சிறப்புப்பாயிரமளித்தனர். அந்த அந்தச் சிறப்புப் பாயிரத்திற்கு முன்பு அதனை அளித்தார் பெயர் அவருக்குரிய சிறப்புக்களோடு வெளியிடப்பட்டது.

‘திருவாவடுதுறை யாதீனத்துச் சிஷ்ய வர்க்கத்துள் ஒருவரும் பாண்டிய நாட்டுள்ள மேலகரம் திரிகூட ராஜப்பக் கவிராயரவர்கள் வம்சஸ்தருமாகிய சண்பகக் குற்றாலக் கவிராயரவர்களியற்றிய அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்’ என்பது போலத் தலைப்புக்கள் அமைக்கப்பட்டன.

என் பாடல்கள்

நானும் இரண்டு செய்யுட்கள் சிறப்புப் பாயிரமாகச் செய்தேன். சுப்பிரமணிய தேசிகருடைய பேரன்பினால் எல்லா வகையான அனுகூலங்களையும் அடைந்த நான் அவர்பால் எனக்குள்ள நன்றியறிவைப் புலப்படுத்த வழிதெரியாமல் இருந்தேன். நல்ல வேளையாக இச்சிறப்புப் பாயிரம் அதற்குரிய சந்தர்ப்பத்தை உண்டாக்கியது. கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே உதவி வந்த தேசிகர் பெருமையை இரண்டாம் செய்யுளில் வெளியிட்டேன். அது வருமாறு:

“தேனாட்டு மலர்பொழிற்கோ முத்தியிற்சுப் பிரமணிய
     தேவனென்னைத்
தானாட்ட விருபொருளு மொருங்கருள்த யாநிதியின்
     சலசத் தாண்மேல்
வானாட்டி னமுதேய்ப்ப மும்மணிக்கோ வையைநவிற்றி
     வனைந்தான் யாரும்
மேனாட்டு நயசுகுணப் பரமசிவ முனிவரவித்
     துவசிங் கேறே”

[கோமுத்தி - திருவாவடுதுறை. என்னைத்தான் நாட்ட, இரு பொருள் - கல்வி, செல்வம். சலசம் - தாமரை. வித்துவசிங்க ஏறு - புலமையில் ஆண் சிங்கம் போன்றவன்.]

‘ஆதீன வித்துவான்‘

சிறப்புப் பாயிரத்திற்கு முன் என் பெயரை அமைக்கும் பொழுது ‘திருவாவடுதுறை ஆதீன வித்துவான்’ என்றும் போடும்படி சுப்பிரமணிய தேசிகர் சொன்னார். அவ்வாறு அமைப்பதில் எனக்குச் சம்மதம் இல்லை. “பிள்ளையவர்கள் ஆதீன வித்துவானாக விளங்கிய இந்த இடத்தில் நான் இப்பட்டத்தை வகிப்பதற்குச் சிறிதும் தகுதியுடையவனல்லன். ஸந்நிதானத்திடம் படிப்பவன் என்று போட்டால் அதனையே பெரிய பாக்கியமாகக் கருதுவேன்” என்றேன்.

“இப்பட்டத்தை அமைக்க நீர் தடை செய்தாலும் மற்றொரு விஷயத்தை நீர் தடை செய்யமுடியாது” என்று தேசிகர் சொன்னார்.

“அந்த விஷயம் என்ன?” என்று நான் கேட்டேன்.

“உம் பெயரைத் திருவாவடுதுறைச் சாமிநாதையரென்றுதான் அமைக்க வேண்டும்.”

“அதற்குத் தக்கவாறு ஸந்நிதானத்தில் என்னை ஆக்கிவிட்ட பிறகு அந்தப்படியே அமைப்பதில் என்ன குற்றம்?” என்று நான் கூறினேன்.

என் சிறப்புப் பாயிரத்திற்கு மேல், திருவாவடுதுறை ஆதீன மகா சந்நிதானத்திடத்துக் கல்வி கற்கின்றவரும், வேங்கடசுப்ப ஐயரவர்கள் புத்திரருமாகிய திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரவர்களியற்றிய அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்’ என்னும் தலைப்பு அமைக்கப்பட்டது.

என்னைத் திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரென்று வழங்குவது உறுதியாயிற்று. திருவாவடுதுறையென்பது ஊர்ப் பெயராக இருந்தாலும் அதை என் பெயரோடு சேர்த்தபோது எனக்கு ஒரு கௌரவப் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று.

சுப்பிரமணிய தேசிகர், ஆதீன வித்துவான் என்று போடவேண்டுமென்று சொன்னதே எனக்கு உத்ஸாகத்தை உண்டாக்கிற்று. அவர் என்னைப் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயத்தை அறிந்தேன். அப்பெயரை அப்பொழுது மும்மணிக் கோவைப் புஸ்தகத்தில் அச்சிடாவிட்டாலும், தேசிகர் பிற்காலத்தில் தம் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார். நான் கும்பகோணம் காலேஜில் உத்தியோகம் பெற்ற பிறகு அவர் எனக்கு எழுதிய கடிதங்களிலும், அனுப்பிய புஸ்தகங்களின் முன் பக்கங்களிலும், “நமது ஆதீன வித்துவான்”, “ஆதீன மகா வித்துவான்” என்றெல்லாம் எழுதுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.

வேணுவன லிங்க விலாசம்

அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்திலுள்ள கொலுமண்டபத்தின் முற்றவெளியானது கீற்றுப் பந்தலாகவே விசாலமாகவும் அழகாகவும் போடப்பட்டிருக்கும். அதைக் கோவிற் பட்டியிலிருப்பது போலவே மரக் கொட்டகையாகப் போடவேண்டுமென்று ஜவந்திபுரத்திலிருந்த பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் நினைத்து அதற்கு ஆக வேண்டிய முயற்சி செய்தார். அதையறிந்த சேற்றூர் ஜமீன்தாரும், சிவகிரி ஜமீன்தாரும் அதற்கு வேண்டிய தேக்க மரங்களையெல்லாம் அனுப்பினார். திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல தச்சர்கள் வருவிக்கப்பெற்றனர். அவர்களுக்கெல்லாம் தலைவராக ’புதியவன் ஆசாரியார்’ என்பவர் இருந்து மிக்க கருத்தோடு எல்லாவற்றையும் நடத்தி வந்தார். ஒரு வருஷம் அவ்வேலை நடைபெற்றது. தூண்கள் நாட்டாமல் ஒரே கவிப்பாக அம்மண்டபம் அமைந்தது. அம்மண்டபத்தைக் கட்டி முடிக்க வேண்டுமென்று ஊக்கத்தோடு முயன்றவர் வேணுவன லிங்கத் தம்பிரானாகையால் அதற்கு, ‘வேணுவன லிங்க விலாசம்’ என்னும் பெயர் வைக்கப்பட்டது.

ஈசுவர வருஷம் தை மாதம் முதல் தேதி அதன் பிரவேச விழா நடைபெற்றது. அயலூர்களிலிருந்து பல கனவான்களும் வித்துவான்களும் அவ்விசேஷத்திற்கு வந்திருந்தனர். அத்தகைய மண்டபம் சோழ தேசத்தில் இல்லாமையால் பலர் அதனைப் பார்க்கும் பொருட்டே வந்தனர். மண்டபத்தின் மேல் தட்டின் உட்பாகத்தில் நாயன்மார்கள் வரலாறுகளையும், திருவிளையாடற் கதைகளையும் புலப்படுத்தும் சித்திரங்கள் எழுதப்பெற்றன.

விசேஷம் நடந்த தினத்தன்று மத்தியானத்தில் பிராமண போஜனமும் மகேசுவர பூஜை முதலியனவும், இரவில் பட்டணப் பிரவேசமும் நிகழ்ந்தன. தம்பிரான்களும் பிறரும் அம்மண்டபத்தைப் பாராட்டிச் செய்யுட்கள் இயற்றினர். பட்டணப் பிரவேசம் ஆனபிறகு சுப்பிரமணிய தேசிகர் ஒடுக்கத்திற்கு வந்து அமர்ந்தார். அப்போது அவர் விருப்பத்தின்படி வேணுவன லிங்க விலாசச் சிறப்புப் பாடல்களை நான் படித்துக் காட்டினேன். தம்பிரான்கள் முதலியோர் அங்கே கூடியிருந்தார்கள். அக்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்தில் தலைவராக இருந்த ஸ்ரீ ராமலிங்கத் தம்பிரானென்பவரும் அங்கே வந்து உடனிருந்தார்.

பாராட்டுப் பாடல்கள்

தம்பிரான்களும் பிறரும் தனித் தனியே பாடல்கள் இயற்றியிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் யாருக்கும் தோற்றாத நயம் அமையப் பாட வேண்டுமென்று முயன்று பாடினார்கள். ஒவ்வொருவரும் தாம்தாம் இயற்றிய பாடல்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் கடைசி வரையில் மறைவாகவே வைத்திருந்தனர். திடீரென்று சபையில் வாசிக்கும் போது எல்லோரும் கேட்டு நயங்களை அறிந்து பாராட்டவேண்டு மென்பது அவர்கள் கருத்து. நானும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனே.

பரமசிவத் தம்பிரான், குமாரசாமித் தம்பிரான் முதலிய தம்பிரான்களும், மதுரை இராமசாமி பிள்ளை முதலியவர்களும் தாம் தாம் இயற்றிய செய்யுட்களை என்னிடம் கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டு நான் படித்துக்காட்டத் தொடங்கினேன். முப்பது பாடல்கள் இருந்தன. ஒவ்வொரு செய்யுளையும் இசையுடன் படித்து எனக்குத் தோற்றிய நயங்களையும் எடுத்துச் சொன்னேன். நான் இயற்றியிருந்த மூன்று செய்யுட்களையும் படித்துக் காட்டினேன். அவற்றுள் ஒரு பாடலில், “இந்த மண்டபத்தைக் காலில்லா மண்டபமென்று யாவரும் கூறுவார். அங்கே தென்கால் (தென்றற்காற்று) பலகாலும் விரவுதலால் நான் அங்ஙனம் கூறேன்” என்ற கருத்தை அமைத்திருந்தேன். கால் என்பதற்குத் தூண், காற்று என்று இரண்டு பொருள் படும்படி பாடிய அச் செய்யுளைக் கேட்டு யாவரும் இன்புற்றனர்.

எல்லாவற்றையும் கேட்ட சுப்பிரமணிய தேசிகர், “நன்றாயிருக்கின்றன; எல்லாம் பிள்ளையவர்களுடைய செய்யுட்களின் போக்கு” என்று தம் திருப்தியைத் தெரிவித்தார். அதைக்காட்டிலும் உயர்ந்த மதிப்புரை வேறு இருப்பதாக எங்களுக்குத் தோற்றவில்லை. அச்சபையில் பலர் முன்னிலையில் கிடைத்த மதிப்பு எங்களுக்கு அளவற்ற இன்பத்தை அளித்தது. பிள்ளையவர்களைப் பற்றிய நினைவுடனே அன்றிரவு நாங்கள் துயிலச் சென்றோம்.