உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/60 அம்பரில் தீர்ந்த பசி

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—60

அம்பரில் தீர்ந்த பசி

செங்கணத்திலிருந்து காரைக்குப் புறப்படுகையில் விருத்தாசல ரெட்டியாரிடம் பாகவதம், கம்பராமாயணம், திருக்கோவையார். திருக்குறள் ஆகியபுஸ்தகங்களை இரவலாக வாங்கிப் போயிருந்தேன். பாகவதம் மாத்திரம் ஏட்டுப் பிரதியாக இருந்தது. காரையில் பகல் வேளைகளில் அவற்றையும் என்னிடமிருந்த வேறு நூல்களையும் படித்து இன்புற்றேன். பாகவதம் படித்தபோது முதல் ஸ்கந்தமும் தசம ஸ்கந்தமும் என் மனத்தைக் கவர்ந்தன. கிருஷ்ணசாமி ரெட்டியார் தெலுங்கு பாகவதத்தைப் படித்து அதிலுள்ள விஷயங்களைச் சொல்வார். தமிழ்ப் பாகவதத்திலுள்ள சில சந்தேகங்களை அவர் கூறிய செய்திகளால் நீக்கிக்கொண்டேன் கம்பராமாயணத்தைப் படிக்கப் படிக்க அதில் என் மனம் பதிந்தது. திருவிளையாடற் புராணப் பிரசங்கம் செய்யும்போது இடையிடையே மேற்கோளாகக் கம்பராமாயணத்திலிருந்து பாடல்களைச் சொல்லிப் பொருள் உரைப்பேன். இப்பழக்கத்தால் இராமாயணத்தில் எனக்கு ஊற்றம் உண்டாயிற்று. என் ஆசிரியரிடம் மீண்டும் போய்ச் சேர்ந்தவுடன் எப்படியேனும் இராமாயண முழுவதையும் பாடங் கேட்டுவிட வேண்டும் என்று உறுதிகொண்டேன்.

களத்தூர் முகம்மதியர்

சிலநாட்களில் அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று முன்பே பழக்கமானவர்களைப் பார்த்து வருவேன். ஒருநாள் களத்தூருக்குச் சென்றேன். அங்கே தமிழ் படித்த முகம்மதிய வயோதிகர் சிலர் இருந்தனர். அவர்களோடு பேசுகையில் அவர்களுக்கிருந்த தமிழபிமானத்தின் மிகுதியை உணர்ந்து வியந்தேன். கம்பராமாயணம், அரிச்சந்திர புராணம் முதலிய நூல்களிற் பல அரிய பாடல்களை அவர்கள் தங்கு தடையின்றிச் சொல்லி மகிழ்ந்தார்கள். பாடல்களை அவர்கள் சொல்லும்போதே அவர்களுக்கு அப்பாடல்களில் எவ்வளவு ஈடுபாடு உண்டென்பது புலப்படும். நான் பிள்ளையவர்களிடத்தில் இருந்ததை அறிந்தவர்களாதலின் என்பால் வந்து அவர்கள் மொய்த்துக்கொண்டார்கள்; ஆசிரியர் புகழையும் கவித்துவ சக்தியையும் கேட்டுக்கேட்டு மகிழ்ந்தனர். சாதி, மதம் முதலிய வேறுபாடுகள் அவர்களுடைய தமிழனுபவத்துக்கு இடையூறாக நிற்கவில்லை. தமிழ்ச்சுவையை நுகர்வதில் அவர்கள் உள்ளம் என் உள்ளத்தைக் காட்டிலும் அதிக முதிர்ச்சியைப் பெற்றிருந்தது.

புராணப் பிரசங்கம் நடந்தது. நாளுக்கு நாள் ஜனங்களுடைய உத்ஸாகமும் ஆதரவும் அதிகமாயின. எனக்குப் பிரசங்கம் செய்யும் பழக்கம் வன்மை பெற்றது. இந்நிலையில் என் மனம் மாத்திரம் இடையிடையே வருத்தமடைந்தது; ஆசிரியரைப் பிரிந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

சூரியமூலையிலிருந்து புறப்பட்டபோதே பிள்ளையவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். செங்கணத்துக்குப் புறப்படும் செய்தியை அதில் தெரிவித்திருந்தேன், காரைக்கு வந்த பிறகும் ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் தலைப்பில் ஒரு செய்யுள் எழுதியிருந்தேன். திருவிளையாடற் புராணத்தின் நினைவு என்னுள்ளத்தே பதிந்திருந்தது. அதனால், சொல்வடிவாக ஸ்ரீ மீனாட்சியும் பொருள் வடிவாக ஸ்ரீ சுந்தரேசக் கடவுளும் எழுந்தருளியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லும் பொருளும் ஒருங்கே தோற்றியது போன்ற வடிவத்தோடும் அவ்விருவர் திருநாமங்களும் இயைந்த மீனாட்சி சுந்தரம் என்ற பெயரோடும் விளங்குபவர் ஆசிரியர் என்ற கருத்து நான் எழுதிய செய்யுளில் அமைந்திருந்தது.

பிரிவுத் துன்பம்

என் கடிதத்தில் நான் திருவிளையாடற் புராணம் வாசித்து வருவதாகவும், விரைவில் முடித்துவிட்டுப் பாடம் கேட்க வர எண்ணி இருப்பதாகவும் எழுதியிருந்தேன். ஆசிரியர் விடைக் கடிதம் எழுதுவாரென்று நம்பியிருந்தேன். அவரிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. நான் பல மாதங்கள் பிரிந்திருப்பதனால் என் மேல் கோபம்கொண்டாரோ, அல்லது நான் வருவதாக எழுதியிருந்ததை அவர் நம்பவில்லையோ என்று எண்ணலானேன். நான் ஆசிரியரைக் கண்ட முதல் நாளில், “எவ்வளவோ பேர்கள் வந்து படிக்கிறார்கள். சில காலம் இருந்துவிட்டுப் போய்விடுகிறார்கள்” என்று அவர் சொன்னது என் நினைவுக்கு வந்தது. “அவ்வாறு போனவர்களில் என்னையும் ஒருவனாகக் கருதிவிட்டார்களோ!” என்று நினைத்தபோது எனக்கு இன்னதென்று சொல்ல முடியாத துக்கம் எழுந்தது. “நாம் இங்கே வந்தது பிழை. அவர்களைப் பிரிந்து இவ்வளவு மாதங்கள் தங்கியிருப்பது உண்மை அன்புக்கு அழகன்று” என்று எண்ணினேன். இவ்வெண்ணம் என் மனத்தில் உண்டாகவே காரையில் நிகழ்ந்த பிரசங்கம், அங்குள்ளவர்களது அன்பு, இயற்கைக் காட்சிகள் எல்லாவற்றையும் மறந்தேன். என்ன இருந்து என்ன! ஆசிரியர் அன்பு இல்லாத இடம் சொர்க்கலோகமாக இருந்தால்தான் என்ன? ஆசிரியர் பிரிவாகிய வெப்பம் அந்த இடத்தைப் பாலைவனமாக்கிவிட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் அன்பு வைத்துப் பழகினாலும் அந்த ஒருவர் இல்லாத குறையே பெரிதாக இருந்தது. எல்லோருக்கும் முன்னே உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து பிரசங்கம் செய்தபோதிலும் என் ஆசிரியருக்குப் பின்னே ஏடும் எழுத்தாணியுமாக நின்று அவர் ஏவல் கேட்டு ஒழுகுவதில் இருந்த இன்பத்தைக் காட்டிலும் அது பெரிதாகத் தோற்றவில்லை.

“விரைவில் புராணத்தை முடித்துக்கொண்டு பிள்ளையவர்களிடம் போகவேண்டும்” என்று என் தந்தையாரிடம் சொல்லத் தொடங்கினேன்.

அவர் இன்னும் சில மாதங்கள் அங்கே தங்கியிருக்க வேண்டுமென்று விரும்பினார். எனது கல்வி அந்த அளவிலே என் ஜீவனத்திற்குப் போதுமானதென்றுகூட அவர் எண்ணியிருக்கலாம், என் கருத்தை அவர் மறுக்கவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை.

பிரசங்க நிறுத்தம்

திருவிளையாடல் ஒருவாறு நிறைவேறியது. ஒரு புராணம் முடிவுபெற்றால் கடைசி நாளன்று பெரிய உத்ஸவம்போலக் கொண்டாடிப் புராணிகருக்கு எல்லோரும் சம்மானம் செய்வது வழக்கம். காரையிலும் அயலூர்களிலும் உள்ளவர்கள் தங்கள் தங்களால் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யச் சித்தமாக இருந்தார்கள். கிருஷ்ணசாமி ரெட்டியார் எல்லோரிடமிருந்தும் பொருள் தொகுத்து வந்தார். முற்றும் தொகுப்பதற்குச் சில தினங்கள் சென்றன. அதனால் புராணத்தில் கடைசிப் படலத்தை மட்டும் சொல்லாமல் அதற்கு முன்புள்ள படலம் வரையில் நான் சொல்லி முடிந்தபிறகு சில நாள் பிரசங்கம் நின்றிருந்தது.

பிரயாணம்

பிள்ளையவர்கள் கடிதம் எழுதவில்லையே என்ற கவலை என் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. பிரசங்கத்தைச் சில நாட்கள் நிறுத்தும் சமயம் நேர்ந்தவுடன், ஆசிரியரைப் போய்ப் பார்த்து வர அதுதான் சமயமென்றெண்ணி என் தாய், தந்தையரைக் காரையிலே விட்டுவிட்டு நான் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டேன். என் வேகத்தைக் கண்ட என் தந்தையார் என்னைத் தடுக்கவில்லை. “போய்ச் சீக்கிரம் வந்து விடு; புராணப் பூர்த்தியை அதிக நாள் நிறுத்தி வைக்கக்கூடாது” என்று மட்டும் சொல்லி அனுப்பினார்.

அங்கே இல்லை

என்றைக்குப் புறப்பட்டேன், எப்படி நடந்தேன் முதலியவைகளில் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆவேசம் வந்தவனைப்போல காரையில் புறப்பட்டவன் திருவாவடுதுறைக்குச் சென்று நின்றேன். திருவாவடுதுறை எல்லையை மிதித்தபோதுதான் என் இயல்பான உணர்வு எனக்கு வந்தது. நேரே மடத்துக்குச் சென்றேன். முதலில் ஓர் அன்பர் என்னைக் கண்டதும் என் க்ஷேம சமாசாரத்தை விசாரித்தார். நான் அவருக்குப் பதில் சொல்லவில்லை. “பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று அவரை விசாரித்தேன்.

“அவர்கள் இங்கே இல்லை” என்று பதில் வந்தது. எனக்குத் திடுக்கிட்டது. அடுத்தபடி ஒரு தம்பிரானைக் கண்டேன். அவர் என்னோடு பேசுவதற்கு முன்பே அவரை, “பிள்ளையவர்கள் எங்கே?” என்று கேட்டேன். “அவர்கள் அம்பருக்குப் போயிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.

பத்து மாதங்களுக்கு மேலாக நான் பிரிந்திருந்தமையால் என்னைக் கண்டவர்களெல்லாம் என் க்ஷேம சமாசாரத்தைப் பற்றி விசாரித்தார்கள். குமாரசாமித் தம்பிரானைக் கண்டேன். அவர் பிள்ளையவர்கள் திருப்பெருந்துறையில் இருந்தபோது இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழைப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். திருப்பெருந்துறையில் அரங்கேற்றம் நிறைவேறியவுடன் ஆசிரியர் புதுக்கோட்டை முதலிய பல ஊர்களுக்குச் சென்றனரென்றும் அப்பால் திருவாவடுதுறைக்கு வந்தாரென்றும் பவ வருஷம் பங்குனி மாதம் அவருக்கு ஷஷ்டியப்தபூர்த்தி மிகச் சிறப்பாக நடைபெற்றதென்றும் சொன்னார். ஒரு வாரத்திற்கு முன்புதான் அம்பர்ப் புராணத்தை அரங்கேற்றும்பொருட்டு ஆசிரியர் அத்தலத்திற்குச் சென்றனரென்றும் அறிந்தேன். அறிந்தது முதல் எனக்குத் திருவாவடுதுறையில் இருப்புக்கொள்ளவில்லை. அம்பரை நோக்கிப் புறப்பட்டேன்.

அம்பரை அடைந்தது

காலையிற் புறப்பட்டுப் பிற்பகல் ஒரு மணி அளவுக்கு அம்பரை அடைந்தேன். வழியில் வேலுப்பிள்ளை என்ற கனவான் எதிர்ப்பட்டார். அம்பர்ப் புராணம் செய்வித்தவர் அவரே. அவரிடம் பிள்ளையவர்களைப் பற்றி விசாரித்தேன். பிள்ளையவர்கள் சொர்க்கபுர மடத்தில் தங்கி இருப்பதாக அவர் சொல்லவே, நான் அவ்விடம் போனேன். அங்கே என் ஆசிரியர் மத்தியான்ன போஜனம் செய்த பிறகு வழக்கம்போல் நித்திரை செய்திருந்தார். காலை முதல் ஆகாரம் இல்லாமையாலும் நெடுந்தூரம் நடந்து வந்தமையாலும் எனக்கு மிக்கபசியும் சோர்வும் இருந்தன. ஆனால் ஆசிரியரைக் கண்டு பேச வேண்டுமென்ற பசி அவற்றை மீறி நின்றது. என்னை வழியில் சந்தித்த வேலுப்பிள்ளை என் தோற்றத்திலிருந்து நான் ஆகாரம் செய்யவில்லை என்று அறிந்து உடனே தம் காரியஸ்தர் ஒருவரிடம் சொல்லி நான் ஆகாரம் செய்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்துவிட்டார். அக்காரியஸ்தர் என்னிடம் வந்து, போஜனம் செய்துகொண்டு பிறகு பிள்ளையவர்களோடு பேசலாமென்று சொன்னார். எனக்கு ஆகாரத்தில புத்தி செல்லவில்லை. பிள்ளையவர்களோடு ஒரு வார்த்தையாவது பேசிவிட்டுத்தான் சாப்பிட வேண்டுமென்ற உறுதியுடன் இருந்தேன்.

‘பிரிந்தவர் கூடினால்’


ஆசிரியர் விழித்துக்கொண்டார். அவருடைய குளிர்ந்த அன்புப்பார்வை என் மேல் விழுந்தது.

“சாமிநாதையரா?”

“ஆம்.”

அப்பால் சில நிமிஷங்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை; பேச முடியவில்லை. கண்கள் பேசிக்கொண்டன. என் கண்களில் நீர்த்துளிகள் மிதந்து பார்வையை மறைத்தன.

“சௌக்கியமா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“சௌக்கியம்” என்றேன். நான் ஒரு குற்றவாளியைப் போலத் தீனமான குரலில் பதில் சொன்னேன்.

“போய் அதிகநாள் இருந்துவிட்டீரே!” என்று ஆசிரியர் சொன்னார்.

அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்! குடும்பக் கஷ்டத்தால் அவ்வாறு செய்ய நேர்ந்ததென்றும் ஒவ்வொரு நாளும் அவரை நினைந்து நினைந்து வருந்தினேனென்றும் சொன்னேன்.

“இவர் இன்னும் சாப்பிடவில்லை” என்று காரியஸ்தர் இடையே தெரிவித்தார். நான் சாப்பிடவில்லையென்பது அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

“சாப்பிடவில்லையா! முன்பே சொல்லக் கூடாதா? முதலிலே போய்ச் சாப்பிட்டு வாரும்” என்று ஆசிரியர் கட்டளையிட்டார். போய் விரைவில் போஜனத்தை முடித்துக்கொண்டு வந்தேன்.

பிறகு இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். பத்து மாதங்களாக அடக்கி வைத்திருந்த அன்பு கரைபுரண்டு பொங்கி வழிந்தது. என் உள்ளத்தே இருந்த பசி ஒருவாறு அடங்கியது. ஆசிரியர் கடன்தொல்லையிலிருந்து நீங்கவில்லை என்று நான் தெரிந்துகொண்டேன். அம்பர்ப் புராணம் அரங்கேற்ற வந்ததற்கு அங்கே பொருளுதவி பெறலாமென்ற எண்ணமே காரணம் என்று ஊகித்து உணர்ந்தேன்.

அவரது கஷ்டம்

காரையிலும் அயலூர்களிலும் உள்ள அன்பர்களுடைய உத்தம குணங்களை நான் எடுத்துச் சொன்னேன். ஆசிரியர் கவனத்துடன் கேட்டார். அவருக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. திடீரென்று, “நான் அங்கே வரலாமா?” என்று கேட்டார். அதைக் கேட்டதும் எனக்குத் துணுக்கென்றது. அவருக்கு இருந்த கஷ்டம், “எங்காவது உபகாரம் செய்பவர்கள் இருக்கிறார்களா?” என்று எண்ணச் செய்தது போலும்.

“ஐயா அவர்கள் அங்கே வருவதாக இருந்தால் எல்லோரும் தலைமேல் வைத்துத் தாங்குவார்கள். அங்கே உள்ளவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தாலும் அவர்களுடைய அன்புக்கு இணையாக எந்தப் பொருளும் இல்லை. விருத்தாசல ரெட்டியார் முதலிய செல்வர்கள் ஐயா அவர்களைப் பாராமல் இருந்தாலும் ஐயா அவர்களிடம் பக்தியும் பாடங் கேட்க வேண்டுமென்னும் ஆவலும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஐயா அவர்களின் பெயரைச் சொல்லித்தான் நாங்கள் பிழைத்து வருகிறோம்” என்றேன் நான்.

தலச்சிறப்புகள்

அன்று மாலை பிள்ளையவர்கள் என்னை அத்தலத்திலுள்ள சிவாலயத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே உள்ள மூர்த்திகளையும் தீர்த்தங்களையும் பற்றிய செய்திகளை எடுத்துரைத்தார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயம் கோச்செங்கட் சோழராற் கட்டப்பெற்றதென்றும், தேவாரத்தில் அதனைப் புலப்படுத்தும் குறிப்பு இருக்கிறதென்றும் கூறினார். திவாகரத்திற் பாராட்டப் பெறுபவனும் ஒளவையாராற் புகழப்படுபவனுமாகிய சேந்தன் என்னும் உபகாரி வாழ்ந்து வந்தது அவ்வூரே என்று தெரிந்துகொண்டேன்.

பாடம் கேட்டலும் சொல்லுதலும்

அம்பரில் சில தினங்கள் ஆசிரியரிடம் சில நூல்களைப் பாடங் கேட்டேன். அம்பர்ப் புராண அரங்கேற்றம் அப்போது ஆரம்பமாகவில்லை. ஆதனால் இடையே ஆசிரியருடன் கொங்குராயநல்லூர், சொர்க்கபுரம் என்னும் ஊர்களுக்குப் போய் வந்தேன். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டதோடு வேலுப்பிள்ளையின் தம்பியாகிய குழந்தைவேலுப் பிள்ளைக்குச் சேக்கிழார் பிள்ளைத் தமிழும் திருவிடைமருதூருலாவும் சொன்னேன்.

நான் பாடம் சொல்லுகையில் கவனித்த ஆசிரியர், “சாமிநாதையர் புராணப் பிரசங்கம் செய்த பழக்கத்தால் நன்றாக விஷயங்களை விளக்குகிறார்” என்று அருகிலிருந்தவர்களிடம் கூறினார்.

விடைபெற்று மீண்டது

அம்பரில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். அப்பால், “நான் காரைக்குப்போய்ப் புராணத்தைப் பூர்த்திசெய்துகொண்டு வந்துவிடுகிறேன்” என்று ஆசிரியரிடம் சொன்னேன். அவருக்கு விடைகொடுக்க மனம் வரவில்லை; என் பிரயாணத்தைத் தடுக்கவும் மனமில்லை. “சரி, போய்வாரும், சீக்கிரம் வந்துவிடும்” என்றார். அன்றியும், “வழிச் செலவுக்கு வைத்துக்கொள்ளும்” என்று என் கையில் ஒரு ரூபாயை அளித்தார். பிறகு காரைக் கிருஷ்ணசாமி ரெட்டியாருக்கு, “சாமிநாதையரைக்கொண்டு புராணத்தை விரைவில் நிறைவேற்றித் தாமதிக்காமல் அனுப்பி விடுக” என்று ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தார். வழக்கம்போல் அதன் தலைப்பில் அவர் விஷயமாக ஒருபாடலை இயற்றி எழுதுவித்தார்.

நான் அவரைப் பிரிதற்கு மனமில்லாமலே விடைபெற்றுக் காரை வந்து சேர்ந்தேன்.