என் சரித்திரம்/92 சிந்தாமணி ஆராய்ச்சி
அத்தியாயம்—92
சிந்தாமணி ஆராய்ச்சி
நச்சினார்க்கினியர் இடையிடையே மேற்கோளாகக் காட்டும் செய்யுட் பகுதிகள் இன்ன நூலைச் சார்ந்தவையென்று சீவக சிந்தாமணியை நான் ஆராய்ந்து வந்தபோது தெரிந்துகொள்ளவே முடியவில்லை. தொல்காப்பியச் சூத்திரங்களை மாத்திரம் தெரிந்து கொண்டேன். திருக்கோவையாரிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் சில செய்யுட் பகுதிகளை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவற்றையும் அறிந்து கொண்டேன். மற்ற மேற்கோள்களைப் படித்தபோது ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதாக இருந்ததே ஒழிய, இன்ன நூலில் உள்ளது, இன்ன விஷயத்திற்காக மேற்கோள் என்ற செய்திகள் தெளிவாகவில்லை.
வேறு பழைய தமிழ் நூல்கள்
சிந்தாமணியைப்போலத் தமிழ்நாட்டில் வழங்காத வேறு நூல்கள் என்ன என்ன உள்ளன என்ற ஆராய்ச்சியிலே என் மனம் சென்றது. இராமசுவாமி முதலியார் சென்னைக்குப் போகும்போது என்னிடம் சிலப்பதிகாரப் பிரதியைக் கொடுத்துச் சென்றார். சென்னைக்குச் சென்ற பிறகு நான் கேட்டுக் கொண்டபடி மணிமேகலைப் பிரதியை அனுப்பினார்.
பழைய நூல்களைத் தொகுத்துப் பார்க்கும் விஷயத்தில் கவனம் சென்ற போது திருவாவடுதுறைப் புஸ்தக சாலையின் நினைவு வந்தது. மடத்தில் என்ன என்ன பழைய நூல்கள் உள்ளனவென்று தேடிப் பார்க்க எண்ணி ஒரு சனி ஞாயிறு விடுமுறையில் நான் திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் என் கருத்தைத் தெரிவித்தேன். அவர், “எல்லாவற்றையும் பார்த்து வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளலாமென்று முன்பே சொல்லியிருக்கிறோமே” என்றார்.
நான் அங்கிருந்த பழஞ் சுவடிக் கட்டுக்களைப் புரட்டிப் பார்க்கலானேன். ஏடுகளெல்லாம் மிகப் பழமையானவை; எடுத்தால் கையில் ஒட்டிக் கொள்ளக் கூடியவை. ஒரு கட்டில் ‘ஏட்டுத் தொகை’ என்றும் ‘சங்க நூல்போல் தோற்றுகிறது’ என்றும் எழுதிக் குமாரசாமித் தம்பிரான் கட்டி வைத்திருந்தார். அதை எடுத்துப் பார்க்கையில் நற்றிணை முதலிய சங்க நூல்களின் மூலம் என்று தெரிந்தது. எட்டுத் தொகையென்பது தான் ஏட்டுத் தொகை ஆயிற்றென்று உணர்ந்தேன். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அக நானூறு, புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத் தொகையாகும். ஒரு பழைய பாட்டிலிருந்து அந்த எட்டின் பெயர்களும் எனக்குத் தெரியவந்தன. எல்லாவற்றின் மூலத்தையும் சேர்த் தெழுதிய ஏட்டுச் சுவடி ஒன்று அக்கட்டில் அகப்பட்டது. அதில் கலித்தொகையும், பரிபாடலும் இல்லை.
எட்டுத் தொகையோடு பிள்ளையவர்கள் வைத்துக் கெண்டிருந்த வேறு ஓர் ஏட்டுச் சுவடி கிடைத்தது. அவர்கள் காலத்தில் அந்தச் சுவடியை எப்பொழுதாவது வெயிலில் எடுத்துப் போடுவார். முதலில் பொருநராற்றுப் படை என்று அதில் இருந்தது. “என்ன நூல் இது?” என்று கேட்டபோது, “இது திருமுருகாற்றுப் படையைப் போன்ற ஓர் ஆற்றுப்படை” என்று மாத்திரம் ஆசிரியர் சொன்னார். அதற்கு மேலே என்ன என்ன உள்ளனவென்று பார்க்கும் முயற்சி அக்காலத்தில் உண்டாகவில்லை. அந்தப் பிரதி தான் மடத்துப் புத்தக சாலையிலிருந்து கிடைத்தது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்து நூல்கள் சேர்ந்த தொகுதிக்குப் பத்துப் பாட்டு என்று பெயர். கடைச் சங்க காலத்தைச் சார்ந்த நூல்களுள் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் முக்கியமானவை. பத்துப் பாட்டு என்ற பெயரோ, அதில் அடங்கியவை இன்ன பாட்டுக்கள் என்பதோ அக்காலத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.
பொருநராற்றுப்படை என்று இருந்த சுவடியை நான் அதிகமாகப் பார்க்கவில்லை. பதினெண் கீழ்க் கணக்கு அடங்கிய அபூர்த்தியான சுவடி ஒன்றும் கிடைத்தது. சிந்தாமணிப் பிரதி பழையதாக ஒன்று இருந்தது. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன்.
ஒரு தனிப் பிரபஞ்சம்
சீவகசிந்தாமணியை மாத்திரம் படித்து ஆராய்வதனால் அந்த நூலைப் பதிப்பிக்க இயலாதென்றும் மற்றப் பழைய நூல்களையும் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிந்தாமணியின் பொருள் விளக்கமாகுமென்றும் நான் உணர்ந்தேன். சிந்தாமணி உரையில் காணப்பட்ட மேற்கோள்களைத் தனியே எழுதி வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பார்த்து வருவேன். அதனால் அவை மனப் பாடமாகவே இருந்தன. அவற்றிற் சில அந்தப் பழைய ஏடுகளில் காணப்பட்டன. அவற்றைக் கண்டபோது பெரிய புதையல் கிடைத்தது போன்ற சந்தோஷம் எனக்கு உண்டாயிற்று. மேலும் படிக்கத் தொடங்கினேன்.
படித்தால் எளிதில் விளங்கக்கூடிய நூல்களாக அவை தோற்றவில்லை. அவற்றில் உள்ளது வேறு ஒரு தனிப்பாஷை போலவே இருந்தது. ஆனாலும் நான் விடவில்லை. படித்துப் பார்த்தேன். தொல்காப்பிய உரைகளில் வரும் பல செய்யுட்கள் அவற்றில் இருந்தன. ‘இந்த நூல் தொகுதியே ஒரு தனிப் பிரபஞ்சம்’ என்ற எண்ணம் எனக்கு வரவர வலிவடைந்தது.
அகநானூற்றைப் படித்து அதில் உள்ள செய்யுட்களுக்கு இலக்கமிட்டு அவற்றிலுள்ள அரும்பதங்களையும் தொடர்களையும் அந்த அகராதியிலே பார்ப்பேன். ஒன்று இரண்டு கிடைக்கும். அந்தப் பாட்டை எடுத்துப் பார்ப்பேன். சிந்தாமணியில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரையால் அந்தச் செய்யுள் ஒருவாறு விளங்கும். அதிலே ஈடுபட்டு ஒரு முறை இரண்டு முறை மூன்று முறை படித்துப் பார்ப்பேன். சங்க நூல்களாகிய புதிய உலகத்தின் காட்சிகள் பனிமூடிய மலைபோல என் கண்ணுக்குத் தோற்றலாயின. பனிப்படலம் படர்ந்திருந்தாலும் மலையினுடைய உயரமும் பருமையும் கண்ணுக்குப் புலப்படுதல் போலத் தெளிவாக விளங்காவிட்டாலும் அந்தச் சங்க நூற் செய்யுட்கள் பொருளமைதியால், ‘நிலத்தினும் பெரியனவாகவும், வானிலும் உயர்ந்தனவாகவும், கடல் நீரினும் ஆழமுடையனவாகவும்’ தோற்றின. சிந்தாமணி உரையில், ‘என்றார் அகத்திலும்’ என்று முற்பகுதியில் வருகிறது. அங்கே உள்ள செய்யுட்பகுதி அகநானூற்றில் இருந்தது.
இப்படி ஆராய்ந்த போது எல்லாவற்றையும் ஒரு வகையாகத் தெரிந்து கொண்ட பிறகே சிந்தாமணியை அச்சிடத் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. சிந்தாமணியைப் பல முறை திரும்பத் திரும்பப் படித்தேன்; மற்ற நூல்களை இடையிடையே படித்துக் குறிப்பெடுத்தேன்.
தஞ்சைப் பிரதி
சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள் வேறு கிடைக்குமாவென்று எனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் விசாரித்துக்கொண்டேயிருந்தேன். சந்தேகமான இடங்கள் பல இருந்தமையால் நல்ல பாடமுள்ள பிரதி கிடைத்தால் பார்த்துப் பயன் பெறலாமேயென்ற கருத்தோடு பலரிடம் விசாரித்தேன்; பலருக்குக் கடிதம் எழுதினேன். தஞ்சாவூரில் பெரிய செல்வராக இருந்த விருஷபதாச முதலியாரென்பவர் வீட்டிற் பல பழைய ஏட்டுச் சுவடிகள் உள்ளனவென்று தெரிய வந்தது. சுவடிகள் தேடும் யாத்திரையை அப்பொழுது தொடங்கினேன்; இன்னும் ஓயவில்லை. தஞ்சாவூருக்குச் சென்று எனக்குத் தெரிந்த கனவான்களை உடனழைத்துக் கொண்டு முதலியார் வீட்டிற்குச் சென்றேன். அவர் ஜைனர். ஜைனமதக் கிரந்தங்கள் பல அவரிடம் இருந்தன. சீவக சிந்தாமணிப் பிரதியையும் வைத்துப் பூஜித்து வந்தார். நான் போய்க் கேட்டபோது முதலில் அதைப் பூஜையிலிருந்து எடுக்கக்கூடாதென்று சொல்லிவிட்டார். நான் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டேன். “ஜைனர்களுக்குத்தான் கொடுப்பேனேயன்றி மற்றவர்களுக்குத் தரமாட்டேன்; அப்படித் தருவது எங்கள் சம்பிரதாயத்துக்கு விரோதம்; எவ்வளவோ ரகஸ்யங்கள் பொருந்திய சிந்தாமணியை வெகு சுலபமாக நீங்கள் படித்துப் பார்க்க முடியாது. ஆசாரியர்கள் மூலமாக உபதேசம் பெற்று விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அன்னிய மதத்தினராகிய உங்களுக்குக் கொடுப்பதனால் எங்களுக்கு பாவம் சம்பவிக்கும்” என்றார்.
அவருக்கு என்ன என்னவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். தமிழுலக முழுவதும் படித்து இன்புறும் விஷயங்கள் சிந்தாமணியில் இருக்க, “ஒரு மதத்திற்கே உரியது, மற்றவர்கள் கண்ணிற் படக்கூடாது” என்று எண்ணி மூடி வைத்திருக்கும் இயல்பை உணர்ந்து நான் வருந்தினேன். “இப்படிச் சமய வேறு பாட்டால் மறைத்தமையால் உலகத்துக்கு வெளிப்படாத நூல்கள் எத்தனை இறந்து போயினவோ! தமிழுக்குப் பெருமை உண்டாக்கப் பெரியவர்கள் நூல்கள் இயற்றி வைத்திருக்க, அவற்றை மறைத்துத் தமக்கும் தம்மைச் சார்ந்தவருக்கும் சிறுமை உண்டாக்கிக் கொள்ளும் இயல்பினர் மனம் திருந்தும் காலம் வருமா?” என்று ஏங்கினேன்.
என்னுடன் வந்திருந்த ஒருவர் விருஷபதாச முதலியாரிடம், நான் கும்பகோணம் காலேஜில் வேலை பார்ப்பவனென்றும், திருவாவடுதுறை மடத்திற்கு மிகவும் வேண்டியவனென்றும் சொன்னார். என் நிலைமை தெரிந்து கொண்ட பிறகாவது முதலியார் சுவடியைக் கொடுக்கக் கூடுமென்பது சொன்னவரது அபிப்பிராயம். ஆனால் அது நேர் விரோதமாக முடிந்தது. “அப்படியா! சைவ மடத்திற் பழகினவருக்கு ஜைன கிரந்தங்களில் அன்பு ஏற்படுவதற்கு நியாயமே இல்லை. சைவர் ஜைனர்களைத் துச்சமாக எண்ணுபவர்கள். நான் கொடுக்கவே மாட்டேன்” என்று என்று அவர் சொன்னபோது, “ஏதடா விபரீதமாகப் போய் விட்டது!” என்று என் நண்பர் தம்மைத் தாமே நொந்து கொண்டார்.
மறுபடியும் வருவதாகச் சொல்லிவிட்டுத் தஞ்சையில் யாரைக் கொண்டு முயன்றால் முதலியாரின் பிரதியைப் பெறலாமென்று விசாரித்தேன். கடைசியில் துக்காராம் ஹோல்கார் என்னும் மகாராஷ்டிர தனவானாகிய என் நண்பரை அழைத்துக் கொண்டு மீட்டும் விருஷபதாச முதலியாரை அணுகினேன். நல்ல வேளையாக அவர் மனம் இளகியது. தம்மிடமிருந்த பிரதியை உதவினார். இவ்வளவு நயந்து வாங்கிய அப்பிரதி சிறந்த பிரதியன்று; விசேஷ உரையில்லாதது.
மயக்கம் தந்த விஷயங்கள்
இவ்வாறு பல வகையில் முயன்று தேடியதில் சிந்தாமணிப் பிரதிகள் 23 கிடைத்தன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்கலானேன். பார்க்கப் பார்க்கப் பல விஷயங்கள் தெளிவாயின. ஆனால் பாடபேதக் கடலுக்குக் கரைகாணவே முடியவில்லை. மனம் போன போக்கிலே எழுதிய கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு.
இது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாகத் தோற்றும், சாபம் சரபமாகத் தோற்றும். ஓரிடத்தில் சரடு என்று வந்திருந்த வார்த்தையை நான் சாடு என்றே பலகாலம் எண்ணியிருந்தேன், தரனென்பதைத் தானென்று நினைத்தேன். ‘யானை நாகத்திற்றோற்றுதலின்’ என்று ஓரிடத்தில் இருந்தது. யோசித்து யோசித்துப் பார்த்தேன். யானைகளில் வனசரம், நதிசரம் கிரிசரம் என்று மூன்று வகையுண்டென்று கேட்டிருக்கிறேன். நாகமென்பது மலையாக இருக்குமென்றும் கிரிசரமாகிய யானையைக் குறித்ததாகக் கொள்ளலாமென்றும் தோற்றியது. ஒரு நண்பர், “ஜைன சம்பிரதாயத்தில் நாகத்தின் வயிற்றில் யானை முதலில் பிறந்ததென்று இருக்கலாமோ என்னவோ!” என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். “அது நாகத்தில் பிறந்ததோ, அல்லது நரகத்திற் பிறந்ததோ, ஒன்றும் விளங்கவில்லையே!” என்று சொல்லிச் சிரித்தேன்.
“யானை நரகத்தில் தோற்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்பு” என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார். காந்தருவதத்தையோடு இசை பாடித் தோல்வியுற்றவர்களை நோக்கி,“இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால்
வேறு மென்னின் இசைவதொன் றன்று கண்டீர்”
என்று ஒருவன் சொன்னதாக வரும் சந்தர்ப்பத்தில், யானையால் வெல்லுதல் அரிது என்பதை விளக்குவதன் பொருட்டு நச்சினார்க்கினியர் அந்த வாக்கியத்தை எழுதியிருக்கிறார். ஆகவே அங்கே இசையோடு சம்பந்தமுடைய விஷயம் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். இவற்றையெல்லாம் யோசிக்கையில் “யானை நாதத்தில் தோற்றுதலின்” என்று இருக்க வேண்டுமென நிச்சயித்தேன். பல பிரதிகளில் தெளிவாக “நாகத்தில்” என்றே இருந்தது. ஒரு பிரதியில் மாத்திரம் “நாதத்தில்” என்ற பாடம் காணப்பட்டது.
இப்படியே குருதி என்பதைக் குந்தியென்றெண்ணித் தடுமாறினேன். ஓரிடத்திலே, ‘திருத்தங்குமார்பன், புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்’ என்று இருந்தது. ‘இது ஜைன நூலாயிற்றே; பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் புகுந்துகொண்டது?’ என்ற சந்தேகம் வந்தது. மூலத்தில் “ஞமலிக் கமிர் தீர்ந்தவாறும்” என்று இருக்கிறது. ‘அமிர்து’ என்பதற்கு, ‘பஞ்சாட்சரமாகிய மந்திரம்’ என்பது உரையாக இருந்தது. ‘மந்திரத்தை யென்றிருந்திருக்க வேண்டும்: யாரோ பிரதியைப் பார்த்து எழுதின சைவர் பஞ்சாட்சரம் என்று சேர்த்தெழுதி விட்டார்’ என்று முதலில் கருதினேன். பின்னாலே வாசித்து வருகையில் “ஐம்பத வமிர்த முண்டால்” (946) என்று வந்தது. வேறிடங்களில் உள்ள உரையால் பஞ்ச நமஸ்கார மந்திரமென்று தெரிந்தது. ஜைன நண்பர்களை விசாரித்தேன். அவர்கள் மிகவும் எளிதில், “அருகர், ஸித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், ஸாதுக்களென்னும் பஞ்ச பரமேஷ்டிகளை வணங்குதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமஸ்காரமென்று சொல்வது ஸம்பிரதாயம்” என்று தெளிவுறுத்தினார்கள்.
இப்படித் தடுமாறித் தடுமாறிச் சிரமப்படுவதில் எனக்கு அலுப்புத் தோன்றவில்லை, மேலும், மேலும் உத்ஸாகமே உண்டாயிற்று. ஏதேனும் ஒரு மேற்கோளோ, ஒரு விஷயமோ, ஒரு பாடமோ தெரியாமல் மயங்கித் தவித்து நின்று பிறகு விளங்கினால் அதற்கு முன்பு பட்ட சிரமங்களெல்லாம் மறந்துபோகும்; பின்னும் பதின்மடங்கு ஊக்கம் ஏற்படும்.
இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் பேதந்தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள் பல. உரை இது, மூலம் இது, மேற்கோள் இது என்ற வேறுபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள் பல. நச்சினார்க்கினியருடைய அன்வயத்திலே வரும் பாடற் பகுதிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் மயங்கிய சமயங்கள் பல. ஓர் ஏட்டுக்கும் மற்றோர் ஏட்டுக்கும் இடையே உள்ள பாட பேதங்களால் அடைந்த கலக்கத்திலிருந்து மீள வழியின்றி மயங்கிய நிகழ்ச்சிகள் பல. உரைக்கு மூலமும் மூலத்துக்கு உரையும் கிடைக்காமல் பலமுறை இடர்ப்பட்டேன். மேற்கோள் எதற்காக உரையாசிரியர் காட்டுகிறாரென்பது விளங்காமல் பல தடவை தயங்கினேன். ஜைன விஷயங்களில் நுணுக்கமான சில செய்திகள் விளங்காமையால் மேலே வாசிக்க முடியாமல் பலகாலம் தடுமாறி நின்றேன். இலக்கணச் செய்திகளை அமைத்துக்கொள்ள வகை தெரியாமல் பலவாறு யோசித்துப் பல சமயங்களில் குழம்பினேன்.
இப்படிச் சிந்தாமணி யென்னும் காவியச்சோலையில் நான் சஞ்சாரம் செய்கையில் நேர்ந்த கலக்கங்களும் இடர்ப்பாடுகளும் தடைகளும் மயக்கங்களும் நாளடைவில் இறைவனருளால் சிறிது சிறிதாகத் தெளியலாயின. பதிப்பிக்கலாமென்ற எனது சங்கற்பம் நிறைவேறுமென்னும் நம்பிக்கை உறுதியாயிற்று.