உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/101 அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—101

அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி

சிந்தாமணியைச் சேர்ந்த முகவுரை, கதைச் சுருக்கம் முதலியன அச்சிட்டு நிறைவேறின. அச்சுக்கூடத்தில் புத்தகத்தைப் பைண்டு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு இல்லை. விசாரித்ததில் முருகேசமுதலியார் என்பவர் திறமை உடையவரென்றும் நாணயமாக நடப்பவரென்றும் தெரிந்தமையால் அச்சிட்ட பாரங்களையெல்லாம் அவரிடம் அச்சுக்கூடத்தாரைக் கொண்டு ஒப்பிக்க நினைத்தேன். அச்சுக்கூடத்திற்கு அப்போது பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்துவிட்டே பாரங்களைப் பைண்டரிடம் ஒப்பிக்கச் செய்வதுதான் நலம் என்று தெரிந்தது. ஆனால், கையிற் பணமில்லாமையால் திருவல்லிக்கேணி சென்று, என் நண்பரும் நார்ட்டன் துரை குமாஸ்தாவுமான விசுவநாத சாஸ்திரிகளைக் கண்டு ரூபாய் முந்நூறு கடனாக வேண்டுமென்றும் சில வாரங்களில் வட்டியுடன் செலுத்தி விடுவேன் என்றும் விஷயத்தைச் சொல்லித் தெரிவித்தேன். அவர் அங்ஙனமே அந்தத் தொகையைக் கொடுத்து உதவினார். உடனே அச்சுக்கூடத் தலைவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன். அவர் அச்சிட்ட பாரங்களையெல்லாம் பைண்டரிடம் ஒப்பித்து விட்டார்.

பெருமாள் தரிசனம்

அன்று சனிக்கிழமையாதலால் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாளைத் தரிசனம் செய்தேன். அந்தக் கோயிலில் சில ஸ்ரீ வைஷ்ணவ வித்துவான்களைக் கண்டு சம்பாஷித்தேன். அவர்கள் சிந்தாமணி நிறைவேறியது குறித்து என்னைப் பாராட்டினார்கள். அவர்களுள் வை.மு. சடகோபராமானுஜாசாரியரும் ஒருவர். முதன்முதலாக அப்பொழுதுதான் அவரைக் கண்டேன், அக்காலத்தில் அவருக்குப் பதினாறு பிராயம் இருக்கும். நல்ல சுறுசுறுப்புடையவராகவும் புத்திசாலியாகவும் தோற்றினார். ‘பிற்காலத்தில் சிறந்த நிலைக்கு வருவார்’ என்று கருதினேன். அது முதல் அவருடைய பழக்கம் விருத்தியாகி வந்தது.

இராமசுவாமி முதலியார் பாராட்டு

பெருமாள் தரிசனம் செய்து கொண்டு ஜாகைக்குப்போய் மனக்கவலையின்றித் துயின்றேன்.

அச்சிட்ட சிந்தாமணிப்பிரதிகள் ஐந்நூறு. அவற்றிலும் ஏறக்குறைய நூறு பிரதிகள் அச்சுக்கூடத்தாருடைய கவனக்குறைவால் வீணாகிவிட்டன.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பைண்டர் மாதிரிக்காக ஒரு பிரதியைப் பைண்டு செய்து கொடுத்தார். அதைக் கையில் எடுத்துக்கொண்டு இராமசுவாமி முதலியாரிடம் சென்றேன்.

அவரிடம் புஸ்தகத்தைக் காட்டினபோது அவர் அடைந்த ஆனந்தம் இவ்வளவென்று சொல்லி முடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு நிறைவேற்றி விட்டீர்கள். இனி, சிலப்பதிகாரம் முதலியவற்றையும் இப்படியே அச்சிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று சொன்னார்.

“எல்லாம் செய்யலாம், எல்லாவற்றிற்கும் பணம் வேண்டியிருக்கிறதே, அதற்கு நான் எங்கே போவேன்! நேற்று நான் விசுவநாத சாஸ்திரிகளிடம் முந்நூறு ரூபாய் கடன் வாங்கிச் சிந்தாமணிப் பிரதிகளை அச்சுக்கூடத்திலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது” என்று முதல் நாள் நிகழ்ச்சிகளை விரிவாகச் சொன்னேன்.

முதலியார் மிகவும் வருந்தி, “கையொப்பமிட்ட கனவான்களிடம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கடனுக்கு ஈடுசெய்து விடலாமே” என்றார்.

“நான் இன்றிரவே புறப்பட்டு நாளைப்பகலில் கும்பகோணம் காலேஜு க்குப் போக வேண்டியவனாக இருக்கிறேன். இந்த அவசரத்தில் நான் யாரிடம் போய்ப் பணம் கேட்பது?” என்றேன்.

“அப்படியானால் மற்ற நண்பர்களிடம் நான் கேட்டு வாங்கிச் சாஸ்திரியாரிடம் கொடுத்து விடுகிறேன். அரங்கநாத முதலியாரை மாத்திரம் நீங்களே போய்ப் பாருங்கள், அவர் கொடுக்க வேண்டிய பணத்தைத் தருவார்” என்றார்.

‘அவர் இந்தப் புஸ்தகத்தைக் கண்டால் மிகவும் சந்தோஷமடைவார்; நிச்சயமாகத் தாம் வாக்களித்தப்படி உதவி செய்வார்’ என்ற எண்ணத்தோடு அரங்கநாத முதலியார் வீட்டை அடைந்தேன். அவர் தம்முடைய அறையில் இருந்தார். அப்போது பிற்பகல் நான்கு மணியிருக்கும். என் வரவை அறிந்த முதலியார், “நான் இப்போது பரீட்சைக்குரிய வேலையில் இருக்கிறேன், அவகாசம் சிறிதும் இல்லை. பார்க்க முடியாததற்கு வருந்துகிறேன். நாளைக் காலையில் வந்தால் பார்த்துப் போகலாம்” என்று சொல்லியனுப்பினார். மிக்க ஆவலோடு சென்ற நான் எதிர்பாராத வருத்தத்தை அடைந்தேன். ‘அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் மனிதர்களுக்குச் சேர்ந்தே வருகின்றன, என்றெண்ணி இராமசுவாமி முதலியாரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு அன்றிரவே கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன்.

பறப்பாடு

இந்த அலைச்சலினால் அன்று முழுவதும் நான் ஆகாரம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் என் கையில் இருந்த பைண்டான சிந்தாமணிப் பிரதியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்து கொண்டிருந்தேன். ரெயில்வே ஸ்டேஷனில் ஸி.எஸ்.எம்.பள்ளிக்கூடத்துத் தமிழ்ப் பண்டிதராகிய பு. மா. ஸ்ரீநிவாஸாசாரியரென்பவர் என்னைச் சந்தித்துச் சிந்தாமணி நிறைவேறியது பற்றிப் பாராட்டினார். “இந்தத் தேசத்தில் கம்பெனியாருடைய பிரதிநிதியாக இருந்த கிளைவ் துரை தம்முடைய எதிரிகளை அடக்கி வென்று பல பிரதேசங்களைக் கம்பெனியாருக்கு உரியமையாக்கி மீட்டும் தம் நாடு செல்லும்போது கம்பெனி உத்தியோகஸ்தர் யாவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு அவரை வழியனுப்பினார்களாம். உங்களைக் காணும்போது எனக்கு அவருடைய ஞாபகம் வருகிறது” என்று சொல்லித் தம் உவகையைப் புலப்படுத்தினார்.

அரங்கநாத முதலியாருக்கு எழுதிய பாடல்கள்

மறுநாட் காலையில் கும்பகோணம் வந்து இறங்கினேன். என்னுடைய அன்பர்களெல்லாம் சிந்தாமணி பூர்த்தியான சந்தோஷத்தை விசாரித்தார்கள். அடுத்த நாள் எனக்கு அரங்கநாத முதலியார் ஞாபகம் வந்தது. ‘மறுநாள் நம்மை வரச் சொன்னாரே? அவரைப் பாராமல் வந்து விட்டோமே; என்ன நினைப்பாரோ?’ என்று நினைந்து விஷயத்தை விளக்கி அவருக்கு ஒரு கடிதம் எழுதத்தொடங்கினேன்: கடிதம் பாடல்களாகவே அமைந்தது.

1. “குலத்தினாற் புலவர் மெச்சும் குணத்தினாற் பலநூ லாயும்
    புலத்தினாற் றிசைய ளக்கும் புகழினாற் புரையில் வாய்மை
    வலத்தினா லடுத்தோர்த் தாங்கும் வன்மையால் வன்மை மிக்க
    நலத்தினாற் றிகழ ரங்க நாதமா முகிலீ தோர்க.”

[புலம் - அறிவு. புரை - குற்றம், தாங்கும் - ஆதரிக்கும், நலம் - குணம்.]

2. “திருத்தகுமா முனிவனருள் தெள்ளியசிந் தாமணியைத்
           திருவி லாதேன்
    வருத்தமிக வாய்ந்தச்சிற் பதிப்பித்து முடித்தபெரு
           மகிழ்வை யோதும்
    கருத்துடையே னாகியந்த நூலையுங்கைக் கொடுநின்னைக்
          காண வந்தும்
     பெருத்தவபாக் கியமென்னைத் தடுத்தமையால் நினைக்காணப்
          பெற்றி லேனால்.”

[திருத்தகுமா முனிவன் - திருத்தக்க தேவர் திருவிலாதேன் -

பொருளில்லாத வறியவனாகிய யான்.]

3. “ஆயினுநின் அன்புடைமை யென்னளவு மகலாதென்
           றகத்திற் கொண்டே
     தாயினுமன் பமைந்திலகு மிராமசா மிக்குரிசில்
           தன்பாற் பின்னர்
     மேயினனின் பால்விளம்ப வெண்ணியவெலா மவன்பால்
           விளம்பி வந்தேன்
     நீயிரிரு வீர்களுமோர் மனமுடையீ ரென்பதனை
           நினைந்தே மன்னோ.”
[மேயினன் - சென்றேன்.]

4. “இது பொழுதி லெனக்கின்றி யமையாத தின்னதென
            இயல்பா லோர்ந்த
     மதுவிரவுந் தொடப்புயத்து வள்ளலே வெளிப்படையா
            வழங்க வென்னெஞ்
     சதுதுணிவுற் றிலதானின் றிருமுகமாற் றங்கேட்கும்
            ஆசை யேற்குக்
     கதுமெனவே மகிழ்வுமிக நினதுதிரு முகமாற்றம்
            காணச் செய்யே.”

[தொடை - மாலை திருமுக மாற்றம் - வாய்ச் சொல், கடித வாக்கியம் கதுமென - விரைவில்]

கடிதம் எழுதி இரண்டு நாளுக்குப் பின் நான் எதிர்பார்த்தபடியே அரங்கநாத முதலியார் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஏழு பாடல்களும் ஒரு குறிப்பும் ஐம்பது ரூபாய்க்கு ஓர் உண்டியலும் இருந்தன. குறிப்பில் சேலம் இராமசுவாமி முதலியாரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டதாகவும் எழுதியிருந்தார். அவர் பாடல்களில் உண்மையன்பு ததும்பியது.

“அன்றெனைக் காண நயந்தனை யைய
        அமயமொவ் வாமையா லமைவாய்ச்
சென்றனை நின்னைக் கண்டிலாக் குறைய
        தென்னதே சிற்றறி வுடையேன்
ஒன்றல பலவாம் பிழைசெயத் தகுமே
        உத்தம குணமொருங் குடையாய்
கன்றினைக் காராக் களியுறக் காக்கும்
        கனிவொடு கமித்தனின் கடனே.”

[நயந்தனை - விரும்பினை. அமயம் - சமயம் காரா – கார் காலத்திற்குரிய பசு; ஒருவகைப் பசு, கமித்தல் - பொறுத்தல்]

என்னும் செய்யுளால் என்னைப் பார்க்க முடியாமற் போனது பற்றிய வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

“மருந்தனசீ வகசிந்தா மணிக்குரையை மாண்புலவர்
விருந்தெனக்கொள் வகையளித்தாய் வேறியம்பல் வேண்டும்
பெருந்திமிரம் போக்குவித்தாய் பேரறிவி னாதவனைப் [தோ பொருந்தீரம் பெற்றனையே புத்தகமும் பெற்றேனே.”

[மருந்து - அமிர்தம், திமிரம் - இருள், அறியாமை, ஆதவனைப் பொரும் - சூரியனை ஒக்கும். புஸ்தகம் கடிதம் எழுதுகையில் பெறாவிடினும் துணிவு பற்றிப் பெற்றேனென்று எழுதினார்.]

அந்தக் கடிதங் கண்டு என் உள்ளம் உவகையால் பொங்கியது. உடனே என் நன்றியறிவைத் தெரிவித்து எட்டுப் பாடல்கள்[1] அமைந்த விடைக் கடிதத்தை எழுதியனுப்பினேன். முதலியார் தாம் எழுதிய பாடல்கள் பொருளில்லாப் பாடல்களென்று தம் கடிதத்தில் குறித்திருந்தார். அதற்கு விடையாக, ‘தங்கள் பாடலோடு பணம் வந்தமையால் அவையே பொருளமைந்த பாடல்கள்; என்னுடையனவே பொருளிலாப் பாடல்கள் என்னும் கருத்தமைய,

“பொருளிலாப் பாட்டென்று புகன்றனைநீ நவின்றசுவை
      பொழியும் பாவைப்
பொருளிலாப் பாடல்களென் பாடல்பொரு ளுளபாடல்
      புகழ்நின் பாடல்
பொருளுடனே விரவியஞ்சல் வழிவந்த செயலொன்றே
      பொருந்து சான்றாம்
பொருளிலா வெனையுமொரு பொருளாக்கொள் நயசுகுணப்
      புகழ்க்கோ மானே”

[பொருள் - நல்ல கருத்து, பணம். அஞ்சல் - தபால். சான்று - சாட்சி]

என்னும் பாடலை எழுதினேன்.

ஒரு வாரத்துக்கெல்லாம் சென்னையிலிருந்து பைண்டர் நூறு பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சாத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்.

அன்று மழை நன்றாகப் பெய்தது. ஆயினும், கும்பகோணத்திற் கையொப்பம் செய்தவர்களுக்குப் புஸ்தகங்களைக் கொடுக்க வேண்டுமென்று ஒரு வண்டியில் சில பிரதிகளை ஏற்றிக் கொண்டு முதலில் சாது சேஷையரிடம் சென்று கொடுத்தேன். அவர் வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் செய்தார். பிறகு மற்ற அன்பர்களை ஒவ்வொருவராகக் கண்டு புத்தகத்தை கொடுத்து விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

இராமலிங்க தேசிகர் வரவு

அன்று மாலை ஆறு மணிக்கு இராமலிங்க தேசிகர் என்பவர் வந்தார். அவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்தவர்; கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சைவப் பிரசங்கங்கள் செய்து பொருளீட்டிக் கொண்டு வந்தார். அங்கிருந்து கொணர்ந்த சில பொருள்களை எனக்கு அளித்ததோடு கருங்காலியாற் செய்த யானையொன்றையும் வழங்கினார். அவர் கொடுத்த மற்றப் பொருள்களை விட அந்த யானையினிடத்து அதிக விருப்பம் எனக்கு உண்டாயிற்று. என்னை உடனிருந்து பாதுகாக்கும் யானைமுகக் கடவுளே அந்த அடையாளத்தில் வந்ததாக நான் எண்ணிக் கொண்டேன்.

அவர் தமது பிரயாணத்தைப் பற்றியும் இலங்கையிலுள்ள கனவான்களைப் பற்றியும் சொல்லி, “ஸ்ரீ பொ. குமாரசுவாமி முதலியார் தமக்குச் சிந்தாமணிப் பிரதிகள் 15 அனுப்பினால் விற்றுப் பணம் அனுப்புவதாகச் சொன்னார். அவர் பெரிய செல்வர்; தமிழன்பிற் சிறந்தவர்” என்றார். நான் அவ்வாறே குமாரசாமி முதலியாருக்குப் பிரதிகளை அனுப்பிக் கடிதமும் எழுதினேன்.

சுப்பிரமணிய தேசிகர் மகிழ்ச்சி

மறு நாள் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் சேர்ப்பித்தேன். அவர் புஸ்தகங்களை மிக்க விருப்பத்தோடு பெற்று முகப்புப் பக்கத்தையும், முகவுரையையும், நூலாசிரியர் வரலாறு முதலியவற்றையும், நூலையும், உரையையும் பார்த்து மகிழ்ந்தார்.

அப்போது அவ்வூரிலுள்ளவர்களாகிய பொன்னோதுவார், மகாலிங்கம் பிள்ளை என்னும் இருவர் வந்து தேசிகரை வணங்கினர். அவ்விருவரும் யாழ்ப்பாணம் சென்று ஸ்ரீ ஆறுமுக நாவலர் மருகராகிய பொன்னையா பிள்ளையிடம் சில நாட்கள் இருந்து கம்பராமாயணம் முதலியவற்றைப் பாடங் கேட்டு விட்டு வந்தவர்கள். அவர்களைப் பார்த்துத் தேசிகர், “பொன்னையா பிள்ளை சிந்தாமணி பதிப்பிப்பதாக எழுதியிருந்தாரே; எந்த அளவில் இருக்கிறது? முற்றுப் பெற்றதா?” என்று கேட்டார்.

“அந்த பிரஸ்தாவமே அங்கில்லை. இரகுவம்சம் மாத்திரம் அவரால் அச்சிடப்பட்டு முடிந்தது. சந்நிதானத்தினிடம் ஒரு பிரதியையும் இவர்களிடம் ஒரு பிரதியையும் ஒரு கடிதத்தையும் சேர்ப்பிக்கும்படி கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி விட்டு இரகுவம்சத்தையும் கடிதத்தையும் என்னிடம் கொடுத்தார்கள். அக்கடிதத்தில் பொன்னையா பிள்ளை, சிந்தாமணியைப் பார்ப்பதில் மிக்க ஆவலுடையவராக இருப்பதாகவும் ஒரு பிரதி அனுப்ப வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.

நான் தேசிகரோடு பேசியிருந்து விடை பெற்றுக் கும்பகோணம் வந்து பொன்னையா பிள்ளைக்குச் சிந்தாமணிப் பிரதி ஒன்றும் ஒரு கடிதமும் அனுப்பினேன். அக்கடிதத்தில், “பாற்கடலின் ஆழம் மந்தர மலைக்குத் தெரியுமே யன்றி வேறு எந்த மலைக்கும் தெரியாது. அது போலச் சீவகசிந்தாமணியின் ஆழம் உங்களுக்குத்தான் தெரியும். ஏதோ ஒருவாறு நான் பதிப்பித்திருக்கிறேன். தாங்கள் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்” என்று எழுதினேன்.

பிறகு வெளியூரிலுள்ள கையொப்பக்காரர்களுக்குப் பிரதிகளை அனுப்பிக் கடிதங்களும் எழுதினேன். பலர் என்னைப் பாராட்டி விடை எழுதினர். பலர் பாடல்கள் அனுப்பினர். பலர் தாம் அளிப்பதாகச் சொன்ன பணத்தை அனுப்பினர். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி என்னும் இரண்டு ஊர்களுக்கும் நானே நேரில் சென்று கையொப்பமிட்ட அன்பர்களுக்குப் புத்தகம் கொடுக்க எண்ணினேன்.

ஸ்ரீநிவாச பிள்ளை பாராட்டு

முதலில் தஞ்சாவூருக்குப் போய் அங்குள்ள என் அன்பரும் வக்கீலுமாகிய ஸ்ரீநிவாச பிள்ளையையும், கல்யாண சுந்தர ஐயர் முதலியவர்களையும் கண்டு பிரதிகளைச் சேர்ப்பித்தேன். ஸ்ரீநிவாஸ பிள்ளை சிந்தாமணியைப் பார்த்தார். அதில் நச்சினார்க்கினியர் வரலாற்றில் எட்டுக் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு என்னும் மூன்று தொகுதிகளில் அடங்கிய நூல்கள் இன்னவையென்று புலப்படுத்தும் பாடல்களைப் பார்த்து அவர் பிரமித்துவிட்டார். “பெரிய வித்துவான்களெல்லாம் படித்த நூல்களுக்கு மேற்பட்டனவாக வல்லவோ இருக்கின்றன இவை? தமிழென்பது கரை காணாத அமுத சமுத்திரமோ!” என்று ஆனந்தம் தாங்காமல் துள்ளினார். “உங்கள் பாக்கியமே பாக்கியம்!” என்று பாராட்டினார். “நான் செட்டியாரைப் போய்ப் பார்க்கப் போகிறேன்” என்றேன். ஸ்ரீநிவாச பிள்ளை, தியாகராச செட்டியாரிடம் பாடம் கேட்டவர்; தெய்வம் போல அவரை மதிப்பவர். ஆதலின் உடனே, “அவசியம் செய்ய வேண்டும்; இதன் அருமையையும், உங்கள் அருமையையும் அவரே பாராட்டவேண்டும்” என்று சொல்லி விடை கொடுத்தார். நான் திருச்சிராப்பள்ளியை நோக்கிப் புறப்பட்டேன்.


  1. இவற்றை நான் வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை முதற்பாகத்தில் விரிவாக எழுதியுள்ள அரங்கநாத முதலியார் சரித்திரத்திற் காணலாம்.