உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/005-150

விக்கிமூலம் இலிருந்து

குவளை-செங்கழுநீர்
நிம்பேயா நௌசாலியா
(Nymphaea nouchalia, Burm.f)

‘தண் கயக்குவளை’ என்ற கபிலரின் கூற்றுக்கு (குறிஞ். 63) ‘குளிர்ந்த குளத்தில் பூத்த செங்கழுநீர்ப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.

சங்க இலக்கியப் பெயர் : குவளை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : நீலம், செங்குவளை, காவி
பிற்கால இலக்கியப் பெயர் : செங்கழுநீர், கழுநீர், நீலம், காவி, செங்குவளை, நீலோற்பலம்.
உலக வழக்குப் பெயர் : நீலத்தாமரை, நீலோற்பலம்.நீல அல்லி, செங்கழுநீர்.
தாவரப் பெயர் : நிம்பேயா ஸ்டெல்லேட்டா என்று குறிப்பிடப்பட்டது. இப்போது இதனை நிம்பேயா நௌசாலியா என்று மாற்றியுள்ளதாகக் கூறுவர். ஆகலின் இது Nymphaea nouchalia, Burm.f. எனப்படும்.

குவளை செங்கழுநீர் இலக்கியம்

குவளை என்பது பொதுவாகச் செங்குவளையாகும். இதனை செங்கழுநீர் எனவும் நீலோற்பலம் எனவும் கூறுவர் .

தண்கயக் குவளை-குறிஞ். 63
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்

-மதுரைக் . 566

என வரும் அடிகளுக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முறையே, ‘குளிர்ந்த குளத்திற் பூத்த செங்கழுநீர்ப்பூ’ எனவும், ‘பெரிய பலவாகிய செங்கழுநீரில் சுரும்புகளுக்கு அலர்கின்ற பலபூக்கள்’ எனவும் உரை கூறியுள்ளார். இவர் இங்ஙனம் உரை கூறுதற்குக் காரணம் என்ன எனின், கூறுதும்.

‘அரக்கிதழ்க் குவளையொடு’ என்று பெரும்பாணாற்றுப் படை (293) கூறுமாதலின், இதற்கு இவர் ‘சாதிலிங்கம் போன்ற இதழையுடைய குவளையோடு’ என்று உரை கண்டார். இதனால், குவளை என்பதைச் செங்குவளை எனக் கொள்வது போதரும். மேலும், நெய்தல் என்பதைக் கருங்குவளை எனப் பிரித்து இவர் உரை காண்பர். இதற்குக் காரணம் நெய்தலை ‘நீல நிற நெய்தல்’ ‘கரு நெய்தல்’ எனப் புலவர்கள் கூறுவதேயாம். கருங்குவளையை நீலமென்றும் காவியென்றும் கூறுப. இதன் விரிவை நெய்தலிற் காண்க.

“கழிய காவி குற்றும் கடல
 வெண்டலைப் புணரியாடியும்”
-குறுந். 144

“கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப
 எறி திரை ஓதம் தரல் ஆனாதே”
-அகநா. 350:1-2

என்பவாதலின் உப்பங்கழியில் வாழும் நெய்தலுடன் ‘காவி’ என்ற மலரும் உண்டென்பதை அறியலாம். இதனைப் பிற்காலத்தில் கருங்குவளை என்றழைத்தனர் என்பர்.[1]

“அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்”-கலி. 91.1

நீலம் என்பது பிற்காலத்தில் கருங்குவளை மலருக்கு உரியதாயிற்று என்பர்.

குவளை என்பதைச் செங்கழுநீர் என்று புறநானூற்று உரைகாரரும் கூறுவர்.

“. . . . . . . . . . . . . . . . . . பெருங்துறை
 நீர்தரு மகளிர் குற்ற குவளையும்”
-புறநா. 42.16

என்பதற்குப் ‘பெரிய துறைக்கண் நீரை முகந்து கொள்ளும் பெண் பறித்த செங்கழுநீரும்’ என்று பொருள் கண்டார். “கழுநீர் என்பது நீண்டு நுனி கூர்மையான நீர்ப்பூ” என்பர். இது ஒக்கும்.

“தீநீர்ப் பெருங் குண்டுசுனை பூத்த குவளைக்
 கூம்பவிழ் முழு நெறிபுரள் வரும் அல்குல்”

-புறநா. 116:1-2

என்பதற்கும் ‘இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப் பூவால் செய்யப்பட்ட தழையசையும் அல்குலையும்’ என்றார். அன்றி ‘முழுநெறிக் குவளை’[2] என்ற சிலப்பதிகார அடிக்கு ‘இதழ் ஒடிக்கப்படாத குவளை’ என்று பொருள் கூறி மேற்கண்ட புறப்பாட்டை மேற்கோள் காட்டினர் அடியார்க்கு நல்லார். ஆதலின், செங்கழுநீர் முகையின் புறவிதழ்களை மட்டும் நீக்கித் தழை உடை புனைந்தனர் என்று அறியலாம்.

குவளைக்கண் :

நெய்தலாகிய கருங்குவளை மலரையும் செங்குவளையாகிய செங்கழுநீர் மலரையும் மகளிரது கண்களுக்கு உவமிப்பது புலவர் தம் மரபாகும்.

“பசலை யார்ந்த நம் குவளையங் கண்ணே”-குறு. 13 : 5

“கண் போல் பூத்தமை கண்டு நுண்பல்
 சிறுபா சடைய நெய்தல்”

(கருங்குவளை) -நற். 27 : 9-10
மேலும் கருங்குவளை மலர் போன்ற பிராட்டியின் கண்கள் செங்குவளை மலர் போன்று சிவந்து கருணை பூத்தன என்று குமரகுருபரர் கூறுவர்.[3]

செங்கழுநீர்ப்பூ என்பதற்குச் செவ்விய நீண்டு நுனி கூர்மையான நீர்ப்பூ என்பர் (கழு - நீண்டு வளர்ந்த வேல் போன்ற கூர்மை). இதன் அரும்பே சற்றுச் சிவந்த நிறமானது.

“கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு”

-திருமுரு. 29

செங்குவளை மலர் நல்ல கருஞ்சிவப்பு நிறமானது. கருங்குவளை மலர் வெளிர் நீல நிறமானது.

குவளைக்குப் பறியாக் குவளை என்றொரு சிறப்பு உண்டு.

“கடவுள் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
 பறியாக் குவளை மலரொடு”
-நற். 34 :1-2


முருகன் உறையும் குன்றுகளின் உள்ள சுனையைக் கடவுட்சுனை என்பர். அச்சுனையிற் பூக்கும் பூக்களை மாந்தர் சூடுவதற்குப் பறிக்காது விடுப்பர். அவற்றைச் சூர் அர மகளிர் கொய்து மாலையாக்கி முருகனுக்கு அணிவிப்பர். இக்குவளை மலர் முருகனுக்கு விருப்பமானது. ‘அதனை அறியாது தொட்டால் நடுங்கு துயர் உண்டாகும்’ என்று மலைபடுகடாம் (189-191) உரை கூறுகின்றது. அதனால், இதனைப் பறியாக் குவளை என்பர்.

மேலும், குவளையைப் பூவாக் குவளை என்று கூறுவதையுங் காணலாம். பரிசிலர்க்கு வழங்கப்படும் பரிசில்களில் விருதுடன் வழங்கப்படுவது பொன்னாற் செய்யப்பட்ட பூக்கள். இப்பொன்னுருவில் குவளை மலரும் இடம் பெற்றது. இவ்வாறு குவளை மலரின் உருவிற் செய்யப்படுவது பூவாக் குவளை என்பதாகும்.

“பனிநீர்ப் பூவா மணமிடை குவளை
 வால்நார்த் தொடுத்த கண்ணியுங் கலனும்”

-புறநா. 153: 7–8

மேலும், இக்குவளை மலரின் வடிவம் கட்டடங்களிலும், சிற்பங்களிலும் வடிக்கப்படும். பெரும் வளமனைகளிலும், அரண்மனைகளிலும் இரட்டைக் கதவுகளின் பிடியாக இவ்வடிவம் செய்யப்பட்டதை நெடுநல்வாடை கூறுகின்றது . அதிலும் புதிதாக மலர்ந்த குவளை மலரின் தோற்றத்தில் வடிக்கப்படுமென்பர்.

“நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து
 போதுஅவிழ் குவளைப் பிடியால் அமைத்து”

-நெடுநல்வாடை: 82-83
செங்குவளை மலர் மிக அழகானது. மணமுள்ளது செவ்வல்லி மலரைப் போன்றது. ஆனால், சற்றுக் கருஞ்சிவப்பாக இருக்கும். இதன் அகவிதழ்கள் செவ்வல்லியின் அகவிதழ்களைக் காட்டிலும் நீளத்திற் குறைந்தவை. இதனை மகளிர் சூடிக் கொள்வர்.

குவளை மலரின் மணத்தைத் தலைவியின் கூந்தல் கொண்டிருக்கும்.

“குவளை நாறுங் குவையிருங் கூந்தல்”-குறுந் : 300

“பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
 திறந்து மோந்தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
 கொண்டல் மலர்ப்புதல் மானப் பூவேய்ந்து”

-மதுரைக் : 566-568

“தொடர்ந்த குவளை தூநெறி அடைச்சி”-பதிற். 27-2

செங்குவளையாகிய செங்கழுநீர் மலரைச் சிவபெருமானுக்குரிய மலராகப் போற்றுவர் மணிவாசகர்.[4]

இம்மலர், இறைவன் சென்னிமிசையிருப்பதைப் பார்த்து இறைக் காதல் கொண்ட ஒருத்தி, அவன் தானேயாகும் தன்மையுன்னி,

“இன்னியல் செங்கழு நீர்மலர் என்தலை
 எய்துவ தாகாதே”
[5] என்கிறாள்.

குவளைச் செடிக்கு அடியில் வேருடன் கூடிய கிழங்கும் உண்டு. இதனை அடிமட்டத்தண்டு என்பர் தாவரவியலார். புலவரும் கிழங்கின் துணை கொண்டு இச்செடி நீர் வற்றிப் போனாலும் அழிவதில்லை என்பர்.

“நீர்கால் யாத்த நிறை இதழ்க் குவளை
 கோடை ஒற்றினும் வாடா தாகும்”
-குறுந். 388

இதனால் இதனைத் ‘தொடர்ந்த குவளை’ என்பர்.

(பதிற். 27)

குவளையின் இலைகளும், மலர்களும் பசிய நீண்ட காம்புடையன. குவளைப் பசுந்தண்டு (காம்பு) கொண்டு மகளிர் கைகளில் காப்புகளாக அணிவர்.

“பவள வளைசெறித்தாட் கண்டுஅணிந்தாள் பச்சைக்
 குவளைப் பசுங்தண்டு கொண்டு;
 கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை
 நில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே
 மல்லிகா மாலை வளாய்”
-பரி. 11: 101-105

மேலும் பெண்கள் குவளை மலருடன், நெய்தல்பூ, கல்லகாரப்பூ (நீர்க்குளிரி) மல்லிகைப்பூ முதலியவற்றை விரவிக் கண்ணியாகப் புனைவர் என்கிறார் நல்லந்துவனார்.

செங்குவளை, ஆம்பல், தாமரை முதலிய கொடிகள் சுனையில் வளர்வன. இவற்றின் இலைகள நீர் மட்டத்தின் மேலே காணப்

காவி
(Nymphaea nouchalia)

படும். மலர்கள் இலை மட்டத்திற்குச் சற்று உயர வளர்ந்து பூக்கும் இயல்பின. இவற்றுள் குவளைப்பூ இவ்வாறு மலர்தலை ஒரு நற்றிணைப் பாடல் கூறும்

“கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
 பறியாக் குவளை மலரொடு”
-நற். 1-2

இங்ஙனம் குவளை மலர் அடையிறந்தெழுந்து மலர்வதைக் கண்டறிந்து எழுதிய புலவர் திறம் போற்றற்குரியது.


குவளை—செங்கழுநீர் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : நிம்பேயசி (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிம்பேயா (Nymphaea)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்டெல்லேட்டா (stellata) எனப்பட்டது. இப்போது இதனை நௌசாலியா (nouchalia Burm.f.) என்று தாவரவியலார் குறிப்பிடுகின்றனர்.
தாவர இயல்பு : பல பருவ நீர்த்தாவரம்,நீர்வாழ்செடி.
தாவர வளரியல்பு : குளம் குட்டைகளில் நன்னீரிலும், அருவி ஓடைகளிலும் பல்லாண்டு வாழும் நீர்ச்செடி.
வேர்த் தொகுதி : சேற்றில் அடிமட்டத்தண்டு (கிழங்கு) நீண்டு வளரும். அதிலிருந்து சிறு வேர்கள் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலை உண்டாகும்.
அடி மட்டத் தண்டு : இக்கிழங்கிலிருந்து இலைக்கோணத்தின் தனிமலர் உண்டாகும். இலையும், அரும்பும், மலரும் நீர்மட்டத்திற்கு மேல் வளர்ந்து நீரில் மிதந்து காணப்படும்.
இலை : தனி இலை; முட்டை வடிவானது. பசுமையானது. நுண்மயிர் இல்லாதது. அடியில் நீண்ட பிளவுபட்டிருக்கும். இலைக் காம்பு அடியில் ஒட்டியிருக்கும்.
இலைக்காம்பு : நீளமானது.
இலை விளிம்பு : கூரிய சிறு பற்களை உடையது.
மலர் : தனி மலர். ஒழுங்கானது. இருபாலானது. மிக அழகானது. இளஞ் சிவப்பும், கருஞ்சிவப்புமானது. மலர்க் காம்பு இலைக் கோணத்தில் தோன்றும்.
புல்லி வட்டம் : 4 புறவிதழ்கள் புறத்தில் பசுமையாகவும் உட்புறத்தில் இளஞ்சிவப்பாகவும் இருக்கும், திருகு அமைப்பு.
அல்லி வட்டம் : எண்ணற்றவை; 8-12 வளவிய நீண்ட அகவிதழ்களை வெளி அடுக்கில் காணலாம். உள்ளடுக்கில் உள்ள சிறிய பல அல்லிகள் சிறிது சிறிதாக மகரந்தத் தாள்களாக மாறும் நிலையில் காணப்படும்.
மகரந்த வட்டம் : எண்ணற்ற இதழ் போன்ற மகரந்தத் தாள்களுடன் சிறிய உள்நோக்கி அமைந்த மகரந்தப் பைகளை உடையது.
சூலக வட்டம் : 3 சூலிலைகள் இணைந்து பல அறைகள் கொண்ட சூற்பையாக இருக்கும். இவை பல அறைகளைக் கொண்ட சூற்பையினை உண்டாக்கி, அதன் சூல் முடி பல ஆரங்களில் கதிர்களாகப் பிரிந்திருப்பது போல் அமைந்திருக்கும்.
சூல்கனி : அதிகமானவை. அனட்ரோபஸ் வகையிலானவை.
கனி : பல விதைகள் கொண்ட வழவழப்பான சதைக் கனி. அடிப்புறத்திலிருந்து கனியக் கூடியது; விதைகள் மிகச் சிறியவை. சதையினுள்ளேயும் விதை சூழ் தசையினுள்ளும் புதைந்தவை.

இக்கொடி பூசனைக்காகத் தில்லையிலும், அழகுக்காவும் ஆய்வுக்காகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தாவரத்தோட்டத்தின் சிறு குட்டையிலும் வளர்க்கப்பட்டு வந்தது. இதனுடன் கருங்குவளையாகிய நெய்தலும் சேர்த்தே வளர்க்கப்பட்டது. இம்மலர்களில் நல்லதொரு மணமுண்டு. இவை மிக அழகான மலர்கள்.

கழுநீர்மாலை கடவுளுக்கு அணிவிக்கச் செங்கழுநீர் மலரையும், ‘குவளைக்கண்ணி’யாகிய அம்மைக்கு அணிவிக்கக் கருங்குவளையையும் விரும்பி இக்கொடிகள் தக்க கண்காணிப்புடன் வளர்க்கப்பட்டன.

திருவாரூரில் கோயில் கொண்டருளிய கடவுளர் திருமேனிக்கு நாளும் ஒவ்வொரு செங்கழுநீர்ப் பூச்சூட்டி வழிபாடு நிகழ்கின்றது. அதற்கென்று பண்டைய நாளில் அக்கோயிலின் புறத்தே செங்கழுநீர் ஓடை ஒன்றிருந்ததாம். அது இப்போது இல்லாமையால் அண்மையிலுள்ள செங்கழுநீர்ச் சிற்றோடையிலிருந்து நாள்தோறும் ஒரு செங்கழுநீர்ப் பூவைக் கொணர்ந்து சூட்டுகின்றனர்.

நீலமும் காவியும்

கருங்குவளையாகிய நெய்தலின் வேறு பெயர்களே நீலமும், காவியும் என்ப.

“அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி”-பெரும்பா. 293

“அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்”-கலி. 91:1

என நீலப்பூவும்,

“கழியகாவி குற்றும் கடல
 வெண்டலைப் புணரி ஆடியும்”
-குறுந். 144

“கழியே சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப”

-அகநா. 350 : 1

“காவியங் கண்ணியாய்”[6]

“காவியங் கண்ணார் கட்டுரை”[7]

“சீர்வளர் காவிகள்”[8]

எனக் காவி மலரும் சுனைப் பூக்களாகக் குறிப்பிடப்படுகின்றன

நெய்தலையும் காவியையும் தனித்தனிப் பேசுவார் சேந்தன் கண்ணனார் (அகநா. 350) காவியின் மலர் மகளிர் கண்களுக்கு உவமிக்கப்படுகின்றது.

“வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

-திருமுரு. 73-77

என்புழி நெய்தலாகிய கருங்குவளையே பேசப்படுகின்றது. ஆயினும் பிற்காலத்தில் கருங்குவளையை நீலமென்றும், காவி என்றும் கொண்டனர் போலும்.

  1. இலக்கியம் ஒரு பூக்காடு: 183
  2. சிலப் : 2 : 14
  3. “கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
     செங்குவளை பூத்தாள் செயலென்னே-எங்கோமான்
     பங்குற்றும் தீராப் பசப்பு”
    -சிதம்பர செய். கோவை : 24
  4. “கழுநீர் மாலைக் கடவுள் போற்றி”-திருவா. 4:217
  5. திருவா. 49 : 4
  6. சீ. சிந். 316
  7. சிலம்பு. 14-138
  8. திருக்கோ. 1