சங்க இலக்கியத் தாவரங்கள்/036-150
பலாசம்–புழகு–புரசு
பூட்டியா பிராண்டோசா (Butea frondosa,Koen.)
கபிலர், “பகன்றை பலாசம் பல்பூம்பிண்டி” (குறி. 88) என்று புரசு எனப்படும் பலாசம் பூவினையும், “அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்” (குறிஞ். 96) என்று புனமுருங்கையாகிய புழகின் பூவையும், தனித்தனியே குறிப்பிட்டுப் பாடுகின்றார். பிற்கால இலக்கியங்கள், பலாசம் என்பதைப் புரசு, முருக்கு, புன முருக்கு, புழகு, புனமுருங்கை, மலை எருக்கு என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றன.பலாசம் வலியற்ற ஒரு சிறுமரம். இதன் மலர்கள் செக்கச் சிவந்தவை.
சங்க இலக்கியப் பெயர் | : | பலாசம் |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | புழகு, முருக்கு |
பிற்கால இலக்கியப் பெயர் | : | புரசு, புரசை, புனமுருக்கு, புனமுருங்கை, மலை எருக்கு. |
உலக வழக்குப் பெயர் | : | புரசு, பொரசு, புனமுருங்கை, முருக்கமரம், செம்பூ மரம். |
ஆங்கிலப் பெயர் | : | காட்டுத்தீ மரம், பிளேம் ஆப் தி பாரஸ்டு—(Flame of the Forest) |
தாவரப் பெயர் | : | பூட்டியா பிராண்டோசா (Butea frondosa,Koen.) |
பலாசம்-புழகு-புரசு இலக்கியம்
“பகன்றை பலாசம் பல்பூம்பிண்டி”-குறிஞ். 88
என்றார் கபிலர். இவ்வடியில் குறிப்பிடப்படும் ‘பலாசம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பலாசம்பூ’ என்றார். ஆயினும், “துன்னிணர் பலாசிற் செய்த துடும்பின்” என்ற சீவகசிந்தாமணிப் பாடலில்[1] ‘பலாசின்’ என்பதற்குப் ‘புரசமர’மெனப் பொருள் கூறியுள்ளார். பிங்கல நிகண்டு[2], இதனைப் ‘புரசு’ எனவும் ‘புனமுருக்கு’ எனவும் கூறும். சூடாமணி நிகண்டு[3] ‘பலாசம்’ என்பது புனமுருக்கு என்று கூறும்.
மேலும், கபிலர் குறிஞ்சிப் பாட்டில், (‘பரேரம் புழகுடன்‘)-குறிஞ். 96
‘புழகு’ என்ற பூவினைக் கூறுகின்றார். இதற்கு நச்சினார்க்கினியர் ‘பருத்த அழகினை உடைய மலை எருக்கம் பூவுடனே’ என்று கூறியதோடமையாமல், ‘செம்பூவுமாம்’ என்றும், ‘புனமுருங்கையுமாம்’ என்றும் உரை கூறியுள்ளார்.
இவையன்றி, ‘பொங்கழல் முருக்’கென மிகச் சிவந்த முருக்கு மலர் சங்கவிலக்கியங்களில், அதிலும் அகநானூற்றில் மிகுத்துப் பேசப்படுகிறது. இதுவே, பிற்காலத்தில் புனமுருக்கு, புனமுருங்கை, புரசு, பலாசம் எனப்பட்டது.
இங்ஙனமெல்லாம் பேசப்படும் சங்க இலக்கிய மலர்ப் பெயர்களையும், அவற்றின் இயல்புகளையும் சங்கச் சான்றோர் உவமிக்கு முகத்தான் அறிவுறுக்கும் குறிப்புகளையும், மலர்ப் பெயர்களுக்கு உரையாசிரியர்கள் கூறும் விளக்கவுரைகளையும், நிகண்டுகளின் விளக்கத்தையும், கலைக்களஞ்சிய உரைகளையும், ஆழச் சிந்தித்துப் பார்த்தால், பலாசம் என்பது புரசு, புரசை, புனமுருக்கு, முருக்கு, புனமுருங்கை, புழகு என்ற பலவேறு சங்க இலக்கிய மரப் பெயர்களால் குறிக்கப்படும் என்று உணரலாம். ‘புரசு’ ஆகிய பலாசம் என்பதைத் தாவரவியலில், பூட்டியா பிராண்டோசா என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதனை (பிளேம் ஆப் தி பாரஸ்டு) (Flame of the forest) ‘காட்டுத்தீ மரம்’ என்பர். மருத்துவ நூல்கள் புரச மரத்தையே பலாசமெனக் கொள்ளும். ‘புரசு’ என்பது ஆற்றுப் பூவரசன்று. ஆற்றுப் பூவரசின் மலர் மஞ்சள் நிறமானது புரச மலர் எரி ஒத்த நிறமுடையது.
இக்காலத்தில் உலக வழக்கில் கூறப்படும் புரச மலர் எரியழல் போன்றது. பலாசமும் இதுவே. இதற்குப் பிங்கலமும், சூளாமணி நிகண்டும் கூறும் வேறு பெயர் ‘புனமுருக்கு’ என்பதாகும். இப்
பலாசம்–புரசு
(Butea frondosa)
புனமுருக்குத்தான் அகநானூற்றிலும், பிற சங்க இலக்கியங்களிலும் பயிலப்படும் ‘முருக்கு’ எனக் கோடல் பொருந்தும். இதனைச் ‘செம்பூமுருக்கு’ என்றார், நெடுங்கண்ணனார் (குறுந். 156). இதிலுள்ள முருக்கு என்றது புரச மரத்தை; இது பலாசமென்றும் கூறப்படும் என்று உ. வே. சா. உரை கூறுவர். ஆகவே பலாசம் என்பது புரசு எனவும் முருக்கு எனவும் கூறப்படுமாறு கண்டு கொள்ளலாம்.
இனி, புழகு என்பது மலை எருக்கு எனவும், செம்பூவுமாம், புனமுருங்கையுமாம் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். கலைக் களஞ்சியமும்[4] புழகு என்பது புனமுருங்கை என்றும் கூறும். ஆகவே புழகு என்பது புனமுருக்காதல் வலியுறும். பலாசத்திற்கு நிகண்டுகள் கூறும் பிறபெயரான புனமுருக்கு நெடுங்கண்ணனார் கூறும் செம்பூ முருக்கு ஆதலும், புழகு என்பது நச்சினார்க்கினியர் கூறியாங்கு, புனமுருங்கையாதலும் கூடும். ஆகவே, பலாசம் என்பதற்குச் சங்க இலக்கியம் கூறும் வேறு பெயர்கள் முருக்கு , புழகு எனவும், பிற்கால இலக்கியப் பெயர்கள் புரசு, புனமுருக்கு, புனமுருங்கை, புரசை எனவும், உலக வழக்குப் பெயர் புரசு எனவும் ஒருவாறு கூர்ந்து கண்டறியலாம்.
பலாசம் ஓர் அழகிய மரம். அடிமரம் பருத்திருக்குமாயினும், வலிய மரமன்று. ‘நாரில முருங்கை’யை ஒத்தது. இதனால், இதனைப் புனமுருக்கு, புனமுருங்கை, புழகு என்று கூறுவது பொருந்தும். இம்மரம் ஏறக்குறைய 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை உயர்ந்து வளரும். சேலம் மாவட்டத்தில் மாதேவ மலைக்குச் செல்லும் வழியிலுள்ள சிறுபுறவில் 1000 மீட்டர் உயரமுள்ள மலைப்பாங்கில் பலாசம் மிகுத்து வளர்கிறது. இம்மரம் மூன்று அகன்ற பெரிய சிற்றிலைகள் கொண்ட கூட்டிலைகளை உடையது. இம்மரம் பூக்கும் போது இதன் இலைகள் உதிர்ந்து விடுகின்றன. அதனால், இதனை மிக அழகிய செந்நிற, முருக்கென்று கூறுவது ஒக்கும்.
பலாசம் ஆகிய முருக்கில் அரும்பு-கரும்பச்சை நிறமான புறவிதழ்களை உடையது. கிளைகளில் பூக்கும் இதன் மலர்கள் ‘செந்தீயை மருளச் செய்யும்’ என்றார் குன்றியனார்.
“கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப”-அகநா. 41 : 1-3
நனை முற்றிய அரும்பின் புறவிதழ், பசிய நிறமாகும். இது முகையாம் போது அகவிதழில் செம்மை தோன்றும்.
“பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கினை”-அகநா. 229 : 16
இதன் அரும்பினைப் புலியின் நகத்திற்கு உவமை கூறுவர். “முருக்கு அரும்பன்ன வள்ளுகிர் வயப்பிணவு”-அகநா. 362 : 5
மேலும், குருதிக் கறை படிந்த புலி நகத்தை இதன் அரும்பிற்கு உவமையாக்குவதோடு, இம்மரம் இளவேனிற் காலத்தில் பூக்கும் என்பர் ஒரு புலவர்.
“உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்
எதிரி முருக்கு அரும்ப .... .... ....
இன்பம் பயந்த இளவேனில்”
மேலும். இதன் குவிமுகையைச் செவ்வண்ணம் ஊட்டிய மகளிரின் கை நகத்திற்கு உவமித்தார் மற்றொரு புலவர்.
“குவிமுகை முருக்கின் கூர்நுனை வைஎயிற்று
நகை முகமகளிர் ஊட்டுஉகிர் கடுக்கும்”
-அகநா 317 : 4-5
இதனுடைய முகை அவிழ்ந்தால், அகவிதழ்களின் செம்மை நிறம் விளங்கும். இதன் மலரைச் ‘செம்பூ முருக்கு’ என்றார் நெடுங்கண்ணனார் (குறுந். 156 : 2) என முன்னரே கூறினோம்.
செக்கச் சிவந்த இம்மலரின் செம்மையை, எரியின் செம்மையாகக் கூறுவர். விரிந்த அகவிதழ்கள் தீயின் நாக்குகளாகவும், சிற்றிதழ்கள் தீப்பிழம்புகளாகவும், மகரந்தங்கள் சிதறும் தீப்பொறிகளாகவும் கூறப்படும்.
முருக்க மரக் கிளையில் இதன் செவ்விய பூந்துணர் காணப்படும். இதனை ‘எரிமருள் பூஞ்சினை’ (அகநா. 41 : 3) என்பர் குன்றியனார். அழல் ஒத்துப் பூத்த முருக்க மரங்களைக் கொண்ட நீர்த்துறைக் கரை என்றார் கௌதமனார்:
“மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குதாழ்பு எழிலிய நெருப்புஉறழ் அடைகரை”
-பதிற். 23 : 19-20
பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு வியத்தகு செய்தி கூறுகின்றார். யானையைப் போன்றதொரு துறுகல் கிடந்தது. அதன் மேல் சிவந்த மலர் விரிந்த முருக்க மரக் கிளைகள் படிந்திருந்தன. கடுங்காற்று வீசியதால் செம்மலர்கள் அசைந்தாடின. அக்கல் அழல்பொழி யானையின், ‘ஐ’ என்னும்படி வியப்பைத் தந்தது.
“நனைமுதிர் முருக்கின் சினைசேர் பொங்கர்
காய்சினக் கடுவளி எடுத்தலின் வெங்காட்டு
அழல்பொழி யானையின் ‘ஐ’எனத் தோன்றும்”
-அகநா. 223 : 5-7
மிக உயர்ந்த மரக் கிளையில் உண்டான இம்மலரின் செம்மைக்கு நெருப்பை அன்றி, அரக்கையும் உவமையாக்குவர்:
“சிதர்நனை முருக்கின் சேண்ஓங்கு நெடுஞ்சினை
ததர்பிணி அவிழ்ந்த தோற்றம் போல
உள்அரக்கு எரிந்த உருக்குறு போர்வை”
(சிதர்-சிந்தல், ததர்-கொத்து)-சிறுபா. 254-256
“அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்”-குறிஞ். 96
இம்மலரின் செவ்விய இதழ்களுக்குப் பவளத்தை உவமை கூறுவாரும் உளர். குளத்து நீரில் இதன் சிவந்த இதழ் உதிர்ந்தது. இதனை ‘மணி போன்ற கண்ணாடிக்குள்ளே பவளத்தை எறிந்ததைப் போன்ற’தென்பர், கணிமேதாவியார்.
“மணிபுரை வயங்கலுள் துப்புஎறிந்தவை போல
பிணிவிடு முருக்கிதழ் அணியகத்து உதிர்ந்துஉக”
-கலி. 33 : 3-4
முருக்க மலரின் பசிய புறவிதழ் முதிர்ந்து மஞ்சள் நிறமாகி, அதன் உள்ளுறையும் செவ்விய அகவிதழை மூடிக் கொண்டு இருப்பதைக் கணிமேதாவியார்,
“பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம்”[7]
என்பர். மேலும், இதன் பவள இதழை மகளிரது செவ்வாய்க்கு உவமிப்பர். அதிலும் தம்பலந்தின்று சிவப்பேறிய செவ்வாய்க்கு உவமையாக்குவர் திருத்தக்கதேவர்.
“முருக்கிதழ்க் குவிகமூட்டி வைத்தன முறுவற் செவ்வாய்”[8]
இத்துணைச் சிறப்பிற்றாய இச்செம்மலரில் மணமில்லை. இதனை மக்கள் சூடிக் கொண்டதாக அறிகிலம். எனினும், ‘நாறாப் பூவும் தேவருக்காம்’ என்ற வண்ணம், எம்மலரையும் தம்மலராகக் கொள்ளும் சிவன் முடியில் இம்மலரைச் சேர்த்த ஞானசம்பந்தர்,
“எருக்கொடு முருக்கு சடைமேல் அணிந்த எம்அடிகள்”[9]
என்றார்.
பலாச மரம் உறுதியற்றது; பருத்த அடி மரத்தை உடையது; அகன்ற இலைகளை உடையது. வேல் வீசியும், அம்பெய்தும் பயிற்சி பெறுபவர், இம்மரத்தைக் குறிபொருளாகக் கொண்டனர். கோசர் இவ்வாறு பயின்றதைக் காரிக்கண்ணனார்:
“. . . . . . . . . . . . . . . . வெல்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போல”-புறநா. 169 : 8-11
இதன் மரத்தால் செய்த கைத்தண்டைக் கமண்டலத்துடன் பிடித்த படிவ உண்டிப் பார்ப்பன மகனைப் பற்றிக் குறுந்தொகை (156) கூறும். தன்கருமஞ் செய்யும் தவ யோகியரின் கைத்தண்டு புரசமரத்திற் செய்யப்படுவது உலக வழக்காதலின், பலாச மரத்தைப் புரசு எனக் கூறுவது பொருந்தும்.
‘பலாசம்’ தாவரவியலில் பாப்பிலியோனேட்டே என்ற துணைக் குடும்பத்தையும், பூட்டியா என்ற பேரினத்தையும் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 59 பேரினங்கள் தமிழ் நாட்டில் வளர்வதாகக் ‘காம்பிள்’ கூறுவர். பூட்டியா என்ற பேரினத்தில், 2 சிற்றினங்களே உள்ளன. பூட்டியா பிராண்டோசா என்ற இவ்விலையுதிர் பலாச மரம் (புரசு) தமிழ் நாட்டின் எல்லா வறண்ட மாநிலங்களிலும், காடுகளிலும் வளர்வதைக் காணலாம். கரிய மண்ணிலும், ஓரளவு உப்பளரான நிலத்திலும் வளர்கிறது.
இம்மரம், மலருங்கால் இலைகளெல்லாம் உதிர்ந்து விடும். இதனை எரியழல் மரமென்பதற்கேற்ப, இது ஆங்கிலத்தில் (பிளேம் ஆப் தி பாரஸ்டு) ‘காட்டுத் தீ மர’மெனப்படும்,
குரோமோசோம் எண்ணிக்கை பூட்டியா மானோஸ்பெர்மா என்பதற்கு, 2n=18 என இராகவன் (1958) முதலியோரால் கண்டு சொல்லப்பட்டதன்றி, பூட்டியா பிராண்டோசாவுக்குக் கணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
பலாசம்–புழகு–புரசு தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுப்பு | : | அல்லியிதழ்கள் இணையாதவை-பை கார்ப்பலேட்டே |
தாவரக் குடும்பம் | : | வெகுமினோசி |
தாவரத் துணைக் குடும்பம் | : | பாப்பிலியோனேட்டே (Papilionatae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பூட்டியா (Butea) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பிராண்டோசா (frondosa) |
தாவர இயல்பு | : | மரம் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை உயர்ந்து வளரும் இலையுதிர் பெருமரம். பெரிதும் காடுகளில் காணப்படும். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட், 600 மீட்டர் உயரமான மலைப்பாங்கில் கருமண் காடுகளில் வளரும். |
இலை | : | இலையடிச் செதில்கள் சிறியன. விரைவில் உதிரும். அகன்று பெரிய மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. சிற்றிலை 10-14 செ.மீ. 8-12 செ.மீ. ஏறக் குறைய நாற்சதுரமானது. |
பலாசம்–புரசு
(Butea frondosa)
மஞ்சரி | : | இலைக் கோணத்திலும் கிளை, நுனியிலும் நுனி வளரும் பூந்துணர். |
மலர் | : | மலரடிச் செதிலும், சிறு செதில்களும் உள. மலர் பெரியது. நெருப்பை ஒத்த செந்நிறமானது. அழகானது. இருபாலானது. குடும்பப் பெயருக்கேற்றது. |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் இணைந்த அகன்ற குவளை வடிவானது. கரும் பச்சை நிறமானது. அரும்பில் அகவிதழ்களை மூடியிருக்கும். மேற்புற இரு புல்லியிதழ்கள் சற்று நீளமானவை. கூம்பு போன்றது. அடிப்புறப் புல்லியிதழ் மிகச் சிறியது. |
அல்லி வட்டம் | : | பதாகை இதழ் அகன்ற நீளமான கூரிய கத்தி போன்றது. சிறகிதழ்கள் இரண்டும் பக்கவாட்டில் இருக்கும்; இணைந்த அடியிதழ்களை ஒட்டியிருக்கும். |
மகரந்த வட்டம் | : | இரு தொகுதியானவை (9 + 1) மகரந்தப் பைகள் ஒரே மாதிரியானவை. |
சூலக வட்டம் | : | ஒரு சூலக ஓரறைச் சூல். சூல் தண்டு நீளமானது. உள் வளைவானது. சூல் முடி மிகச் சிறியது. |
கனி | : | ஒரு புற வெடிகனி. 3-4 செ.மீ. நீளம் அடியில் பட்டையானது. மேலே சிறகு போன்றது. நுனியில் வட்டமான துளை வழியாக ஒரு விதை வெளிப்படும். |
விதை | : | சற்று அமுங்கிய முட்டை வடிவானது. |